08/08/2025
ஸ்ரீரங்கத்திலே பெருமாளுக்கு அர்ச்சனை பண்ணும் பிள்ளைப் பெருமாள் ஐயங்காருக்கு இந்தப் பானை மோக்ஷமடைந்த சரித்திரம் நடையாடுகிறது.
அர்ச்சனைத் தட்டை கீழே வைத்து விட்டு,
"ரங்கநாதா! எனக்கு மோக்ஷம் கொடேன்" என்று கேட்கிறார்
அந்த ரங்கநாதனும் அவரோடு பேசுகிறான்.
"பிள்ளைப் பெருமாள் ஐயங்காரே.. உனக்கு என்ன இன்றைய தினம் மோக்ஷத்திலே அதிக ருசி.."?
"இன்றைக்கே போக வேண்டும் போலிருக்கிறதே சுவாமி" என்கிறார் அவர்.
"அப்படியானால், நீர் என்ன கர்மயோகம் பண்ணியிருக்கிறீரா"?
"தெரியாது"
"ஞானயோகம் பண்ணியிருக்கிறீரோ"?
"அறவே ஞான சூன்யம் நான்"
"பக்தி யோகம் பண்ணியிருக்கிறீரா"?
"அந்தப் பக்கமே போனதில்லை"
"சரணாகதி பண்ணியிருக்கிறீரா"?
"தெரியாதே"
"இதெல்லாம் எப்படியாவது போகட்டும். என் பக்தனுக்கு ஒரு நாளாவது அன்னமிட்டிருக்கிறீரா"?
"இல்லையே"
"என் பக்தன் தங்க இடம் கொடுத்திருக்கிறீரா"?
"இல்லை"
"எதற்கெடுத்தாலும் இல்லையே, இல்லையே என்கிறீரே"? என்று ரங்கநாதனுக்கு கோபம் வந்ததாம்.
படுத்துக் கொண்டிருந்த பெருமாள் எழுந்து உட்கார்ந்தார்.
அப்படி ரங்கநாதர் உட்கார்ந்த கோலத்தில் சேவித்தவர் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் மட்டும்தான்.
நாமெல்லாம் சயனத் திருக்கோலம்தானே பார்த்திருக்கிறோம்
"என்ன அக்கிரமம்! மோக்ஷத்தை நீர் இவ்வளவு சுலபமாக விரும்புகிறீரே! மோக்ஷம் என்றால் ஏதோ கிள்ளுக்கீரை என நினைத்தீரோ?
எதையாவது கேட்டால் "இல்லையே, தெரியாது" என்கிறீர்.
எதற்காவது "ஆமாம், பண்ணியுள்ளேன்" என்று பதில் சொன்னால்தானே மோக்ஷம் தரலாம்.
ஒன்றுமே பண்ணாத உமக்கு மோக்ஷத்தை எப்படிக் கொடுப்பது?"
இதைக் கேட்ட பிள்ளைப் பெருமாள் ஐயங்காருக்குக் கோபம் வந்து விட்டது
இடுப்பில் வஸ்திரத்தை இழுத்துக் கட்டிக் கொண்டார்.
ரங்கநாதரிடம் அச்சமயம் அவர் கேட்ட கேள்வி இருக்கிறதே..?
அந்தக் கேள்வியைக் கேட்டு மீண்டும் படுத்த ரங்கநாதன் படுத்தவன்தான்
இன்று வரைக்கும் அவன் எழுந்திருக்கவேயில்லை
அப்படியென்ன கேட்டாரம் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்..?
ஐயங்காரும் சளைக்காமல், 'ஏ பெருமாளே... என்னை இத்தனை கேள்விகள் கேட்கிறாயே... ஒரு பானைக்கு, எதை வைத்து மோட்சம் கொடுத்தாய்... அதற்கென்ன பக்தியோகம், கர்மயோகம் எல்லாம் தெரியுமா... ஒரு ஜடப் பொருளுக்கே மோட்சம் தந்த நீ, எனக்கு தர மறுப்பதேன்?' என்றார் விடாக்கண்டனாய்.ரங்கநாதனுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. திரும்பவும் படுத்து விட்டார்.இந்தச் சம்பவம் மூலம் நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன ?
தெய்வங்களின் வரலாறை நாம் நிறைய தெரிந்து கொள்ள வேண்டும். இதன் மூலம், 'இவன், உலகியல் வாழ்வில் என்ன தான் நாட்டம் கொண்டவனாக இருந்தாலும், பக்தி சமாசாரங்களையும் காது கொடுத்து கேட்டிருக்கிறான். இவனை மோட்சத்துக்கு அனுப்பலாம்' என்று, பரந்தாமன் முடிவு செய்வான். எனவே, ஆன்மிக நூல்களை நிறைய படியுங்கள்