
29/07/2025
ரா. கிருஷ்ணையா
(26.2.1923 - 23.03.1996)
புதுச்சேரியின் காரைக்கால் அருகிலுள்ள நெடுங்காடு கிராமத்தில் பிறந்தவர். இவர் பிறந்தபோதே தாயார் ராஜாமணி இறந்துவிட, தாத்தா, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். தந்தையார் ராமதாஸ் திருவாரூரில் வழக்கறிஞர்.
கிருஷ்ணையாவின் பள்ளிப் படிப்பு நாகப்பட்டினம், திருவாரூரில் கழிந்தது. கல்லூரிப் படிப்பு திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி, சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் முதுகலை பொருளாதாரம் பச்சையப்பன் கல்லூரியிலும் தொடர்ந்தது. பின்னர் மேலும் சட்டம் படித்தார்.
1951 – 52 ல் ‘விடிவெள்ளி’ வார இதழை நடத்தினார். 1953 – 54 ல் ‘ஜனசக்தி’ பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் செயல்பட்டார். அப்போது அவர் கம்யூனிஸ்ட் கட்சியின் முழு நேர ஊழியர் மற்றும் சென்னை மாகாணக் குழுவில் உறுப்பினர் ஆவார்.
1954 ல் ‘சோவியத் நாடு’ இதழில் கிருஷ்ணையா 9 ஆண்டுகள் டெல்லியில் பணிபுரிந்தார். அப்போது ஏராளமான சிறுகதைகள் மற்றும் கட்டுரைகளை மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். 1963 க்குப் பின் சென்னையில் இயங்கிய சோவியத் நாடு அலுவலகத்தில் 6 ஆண்டுகள் பணியாற்றினார்.
1968 முதல் 1978 வரை முன்னேற்றப் பதிப்பகத்தில் தமிழ் மொழிபெயர்ப்பாளராகப் பணிபுரிய மாஸ்கோ சென்றார். அந்தப் பத்தாண்டுகள் ரா. கிருஷ்ணையாவுக்கு ருஷ்ய இலக்கியங்களை நேரடியாக மொழிபெயர்ப்பதில் பொற்காலமாக அமைந்திருந்தது. அதனால்தான் அவருடைய மொழிபெயர்ப்பு மனதுக்கு மிக நெருக்கமானதாக அமைந்தது.
சென்னை திரும்பிய பின் ஆங்கிலம் - தமிழ் அகராதி ஒன்றினை உருவாக்கும் பணியில் இறங்கினார். பின்னர் தியாகுவின் மொழிபெயர்ப்பில் மார்க்ஸின் ‘மூலதனம்’ மொழிபெயர்ப்பு பதிப்புப் பணியில் ஐந்தாண்டுகள் ஈடுபட்டார்.
தீவிரமான காசநோயின் பாதிப்பால், மாரடைப்பு ஏற்பட்டு 23.03.1996 அன்று பகத்சிங் நினைவு நாளில் கிருஷ்ணையாவின் உயிர் பிரிந்தது.
தன் வாழ்நாள் முழுவதையும் அவர் தான் நம்பிய மார்க்சியம் சார்ந்தே வாழ்ந்தார்; மறைந்தார். அவரது மொழியாக்கப் பணிகள் வழியாக நினைவுகூரப்படுகிறார்..
தமிழ்வெளி