04/01/2025
என் பொண்ணு என்ன வேலக்காரியா அவிங்களுக்கு சேவகம் செய்ய?
''என்னக்கா.. இந்த சினிமாக்காரங்க ஒருத்தர் மாத்தி ஒருத்தர் டைவர்ஸ் பண்ணிகிட்டே இருக்காங்க. இவுகளுக்குத் தான் காசு பணம் இருக்கே.. வச்சிட்டு சொகுசா சேர்ந்து வாழ்ந்தா என்னவாம்?" என வீட்டை துடைத்துக்கொண்டே டி.வி-யில் ஒளிபரப்பான செய்தியைக் கேட்டுவிட்டு, சம்பளம் தரும் திவ்யாவிடம் பேசிக் கொண்டிருந்தாள் கவிதா.
"அப்ப காசு இருந்தா சகிச்சிட்டு வாழ்ந்துரலாம்னு நம்புறியா கவி?" வியப்பாகக் கேட்டாள் திவ்யா.
"அட, அப்படி இல்லக்கா! எங்களப் போல இல்லாதப்பட்டவங்கதான் காசுக்காக பொழுதன் னிக்கும் சண்ட போட்டுப்போம். காசு இருந்தா சண்ட நடக்காதுல்ல? அதான் அப்டி சொன்னேன்!""
"அதுவும் சரிதான் கவிதா! எது நம்மகிட்ட இல்லையோ, அதுதான் நம்மோட நிம்மதியை தீர்மானிக்குது. சிலர் கிட்ட காசில்ல.. சிலர் கிட்ட குழந்தையில்ல.. சிலர் கிட்ட எதிலயும் நம்பிக்கையில்லை. இங்க ஆணும் பொண்ணும் சேர்ந்து வாழ அவங்க ரெண்டு பேரும் இருந்தாலே போதுங்கிற திருப்தி யாருக்குமே எட்டுறதும் இல்ல!"
"அட, நீங்க சொன்னதும் நல்லா இருக்கு. ஆனா, புருசன் பொஞ்சாதிங்க பிரியுறதுக்கு, அவங்கக்கூட இருக்கிற உறவு ஆளுகளும் சதி பண்ணுறாங்களே! இந்தா.. எங்க பக்கத்து வூட்ல தன்னோட பொண்ணக் கட்டிக்குடுத்த கையோட திரும்ப வூட்ல கொண்டு வந்து வச்சிக்கிட்டானுக. நான் போயி கேட்டேன்.. 'ஏம்மா புள்ளைய திரும்பக் கூட்டியாந்திக?'னு. அதுக்கு அந்தம்மா.. 'என் பொண்ணு என்ன வேலக்காரியா அவிங்களுக்கு சேவகம் செய்ய? சவுகரியமா வாழ வைக்கத் தெரியாதவனுக்கு பொண்டாட்டி இன்னாத்துக்குன்னு கூட்டி வந்துட்டேன்'னு
சொல்லிச்சே பார்க்கணும்!" எனக்கூறி மோவாயில் கை வைத்துக்கொண்டாள் கவிதா.
"அவங்களோட நெனப்பும் தப்பில்லதானே கவி. இவ்வளவு நகையும் பணமும் செலவும் செய்ய வச்ச மாப்பிளை வீடு, ஒரு சொகுசான இடமா இருக்கணும்னு எதிர்பார்க்கறது நியாயம்தான்! செய்முறைகளற்ற கல்யாண சம்பிரதாயங்கள் வர்றப்பதான் சகிச்சுக்கிட்டு வாழுற மனநிலையும் பெண் வீட்டாருக்கு வரும்.. அதுவரைக்கும் பதிலுக்குப் பதிலான வியாபாரமாத்தான் இந்த வாழ்க்கை இருக்கும்.."
இருவரும் பேசிக்கொண்டிருக்கும்போதே எதிர் வீட்டு காயத்ரி கதவைத் தட்டினாள். “ஏய்.. ஸாரி திவ்யா, ஒரு எமர்ஜன்சி.. டூ தெளசன்டு ருப்பிஸ் பணம் தர்றியா? ஒன் வீக்ல திரும்பக் கொடுத்துடறேன்!"
"மொதல்ல உள்ள வந்து உட்காரு காயத்ரி.. ஏன் இப்படி பரபரன்னு இருக்க?" என வந்தவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்தாள். திவ்யா.
"இல்ல திவ்யா.. அம்மாக்கு கொஞ்சம் முடியல. அதான் ஒரு எட்டு பார்த்துட்டு கைல கொஞ்சம் காசு கொடுத்துட்டு வந்துரலாம்னு நினைக்கறேன். அவருக்குத் தெரியாம பண்ணனும்.. அதான்! அடுத்த வாரம் திருப்பித் தர்றேன்.. டூ தௌசன் மட்டும் ரெடி கேஷா குடேன்.."
"சரி சரி, இரு வர்றேன்.." என பீரோவில் இருந்து எடுத்து வந்து கொடுக்க, "தேங்க்ஸ் திவ்யா. என சொல்லிவிட்டு ஓட்டமாய் ஓடினாள் காயத்ரி.
"என்னக்கா, இந்த காயத்ரி அக்கா வேலைக்கு போறவங்கதானே? அவங்களுக்கே இம்புட்டு கஷ்டமா? அதுவும் வீட்டுக்காரருக்கு தெரியாம பண்ற அளவுக்கு பிரச்னையா என்ன?".............
- #மல்லிகைமகள் - ஜனவரி 2025 - புத்தாண்டு இதழில் மதுரை சத்யா # எழுதும் சிறகுகள் தேடும் உறவுகள் தொடரிலிருந்து..
-----------------------------------------
மேலும் படிக்கவும், இதுபோன்ற
வாழ்வியல், ஆரோக்கியம், உணவுமுறை சார்ந்த பயனுள்ள தகவல்களை அறிந்துகொள்ளவும்..
மல்லிகை மகள் மாத இதழ் படியுங்கள்..
ஓர் ஆண்டு சந்தா ரூ. 480 மட்டுமே / -
ஆன்லைன் முகவரி: www.malligaimagal.com
சந்தாதாரர் ஆக இங்கு க்ளிக் செய்க- https://malligaimagal.com/product/%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%88_%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d_%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be/