31/10/2025
திமுகவில் யாருக்கு கிடைக்கும் ஆம்பூர்..? மாற்றத்தை நோக்கி காத்திருக்கும் நிர்வாகிகள்..! ஆளை மாற்றுகிறதா அறிவாலயம்..?
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் தொகுதிகளை தன் வசமாக்கியது திமுக. கடந்த தேர்தலில் வாணியம்பாடி தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்ததால் திமுக தோற்றது.
திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, ஆம்பூர் தொகுதிகளை தன் வசமாக்கியது திமுக. கடந்த தேர்தலில் வாணியம்பாடி தொகுதி கூட்டணிக்கு ஒதுக்கீடு செய்ததாலும் அந்த கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிட்டதாலே திமுக தோற்றது. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டிருந்தால் வாணியம்பாடியும் திமுக வசமாகியிருக்கும் என அப்போதே இஸ்லாமியர்கள் மத்தியில் விமர்சனம் எழுந்தது.
அதுபோல்தான் ஆம்பூர் தொகுதியும், இங்கு திமுகவே இடைத்தேர்தல், 2021 பொதுத்தேர்தல் என தொடர்ந்து போட்டியிடுவதால் உதயசூரியன் வெற்றி பெற்று வருகிறது. இந்த முறையும் இங்கு உதயசூரியன் சின்னத்திலே போட்டியிட வேண்டுமென திமுக கூட்டணி கட்சியினரின் விருப்பமாக உள்ளது. திமுக சிட்டிங் எம்எல்ஏ வில்வநாதன் மீண்டும் மூன்றாவது முறையாக போட்டியிட்டால் வாய்ப்பு எப்படி இருக்கும்? இவரைத் தவிர யார் யாருக்கு இங்கு வாய்ப்புள்ளது என்று தொகுதி உள்ள திமுகவினரிடம் விசாரித்தபோது பலரும் வில்வநாதனுக்கு எதிராகவே கொதித்து எழுந்தனர். தொகுதி மக்களும் கொட்டித் தீர்த்து விட்டனர்.
திமுகவிலிருந்து வைகோ பிரிந்து சென்றபோது (நாயுடு) சாதி உணர்வோடு மதிமுகவுக்கு சென்ற வில்வநாதன் மீண்டும் 1996-ல் திமுகவுக்கு திரும்பி ஊராட்சி மன்ற தலைவரானார். பேர்னாம்பட்டு ஆசிரியர் கோவிந்தனுக்கு சில வேலைகள் செய்து ஒன்றிய செயலாளர் பதவியை பிடித்தார். அப்படியே இராணிப்பேட்டை காந்தியிடம் நெருக்கமாகி 2011-ல் மனைவி பத்மாவதியை யூனியன் சேர்மன் ஆக்கினார். அதனைத்தொடர்ந்து மாவட்டம் பிரிந்து திருப்பத்தூர் மாவட்டம் உதயமானபோது 2016-ல் ஆம்பூர் தொகுதி அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணிக்கு ஆர்வமாக தேர்தல் வேலை செய்தது தெரிந்து திமுக தலைமை நடவடிக்கை எடுக்க தயாராக, இராணிப்பேட்டை காந்தியை வைத்து தப்பித்து விட்டார்.
டிடிவி.தினகரன் பக்கம் போனதால் ஆம்பூர் பாலசுப்பிரமணி இரண்டே ஆண்டில் பதவி இழக்க, இடைத்தேர்தலில், நாயுடு நின்ற தொகுதியில் நாயுடுவுக்கே சீட் என வில்வநாதன் சவுண்டு விட, பின்னணியில் இராணிப்பேட்டை காந்தியும், அணைக்கட்டு நந்தகுமாரும் துணைக்கு நின்றார்கள். அப்போது அணைக்கட்டு நந்தகுமாருடன சிறிய ஒப்பந்தம்கூட போட்டுக்கொண்டார். இடைத்தேர்தல் உனக்கு, அடுத்து வரும் பொதுத்தேர்தலில் எனக்கு என்பதுதான் அந்த ஒப்பந்தம். இடைத்தேர்தல் பதவிக்காலம் முடிந்து மீண்டும் வந்த சட்டமன்ற தேர்தலில் வேட்டியை மடிடததுக்கட்டிய வில்வநாதன், ‘‘பக்கத்து மாவட்டகாரர் ஆம்பூருக்கு வரக்கூடாது. மண்ணின் மைந்தருக்குதான் வாய்ப்பு தரவேண்டும்’’ என்று கோஷம் போட ஆரம்பித்தார்.
அதற்கு ஆதரவாக பொதுச் செயலாளர் துரைமுருகனும், தொழிலதிபர் பரிதா பாபுவும் இருந்தனர். 2021-ல் மீண்டும் ஆம்பூர் தொகுதிக்கு எம்எல்ஏ சீட்டு வாங்கி மீண்டும் வென்றவுடன், திருப்பத்தூர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவுடன் ஐக்கியமாகிவிட்டார் எம்.எல்.ஏ வில்வநாதன். மொழி (தெலுங்கு) உணர்வால் எ.வ.வேலுவையும் , கே.என்.நேருவையும், நெருக்கமாக்கிக்கொண்டு இருவரின் பக்க பலத்தில் ஆம்பூர் தொகுதியில் உள்ள திமுகவினரை ஒருவழி பண்ணிவிட்டார் வில்வநாதன்.
அடுத்து வந்த உள்ளாட்சி தேர்தலில் மாதனூர் யூனியனில் மச்சானின் மனைவி சாந்தியை துணை சேர்மன் ஆக்கியதோடு, மாவட்ட துணை செயலாளராகவும் ஆக்கிவிட்டார். மச்சான் சீனிவாசனை பத்து ஊராட்சிக்கு ஒன்றிய செயலாளராக்கிவிட்டார். மாமன் , மச்சான் வெளியே மட்டும் எதிரி போல காட்டிக் கொள்வார்கள். வில்வநாதனின் இந்த பாலிடிக்ஸை பக்கத்திலிருந்து வேடிக்கை பார்த்த மகன் அசோக்குமார், அப்பாவிடமிருந்த எம்எல்ஏ பவரை பிடுங்கி கொண்டு கையெழுத்து போட மட்டுமே பயன்படுத்தி வருகிறார்.
அப்புறமென்ன, ஆம்பூர் தொகுதியில் அசோக்குமார் மயமானது. காவல்நிலையம், வருவாய்த்துறை, நகராட்சி, யூனியன், பத்திர பதிவு அலுவலகம் மணல் டெண்டர் இதர கனிமவளங்கள் என அனைத்தும் ஆக்டிங் எம்எல்ஏ அசோக்குமார் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது. சட்டப்பூர்வமாக இருந்தாலும் சரி, சட்டத்துக்கு புறம்பாக இருந்தாலும் சரி, மகன் அசோக்குமாரைத்தான் தொடர்புகொள்ள வேண்டும். ஆம்பூர் தொகுதியில் உள்ள திமுகவினர் பொதுமக்கள் அனைவரும் தன்னை சின்னவர் என்று அழைக்குமாறு வாய்மொழி உத்தரவு போட்டவர்தான் அசோக்குமார்’’ என்கின்றனர்
அப்படி வரும் பணத்தை வில்வநாதனோ, ஆக்டிங் எம்எல்ஏ அசோக்குமாரோ வீணடிக்காமல் ஆம்பூர் தொகுதிக்குள் நிலங்கள், சுற்றியுள்ள பகுதிகளில் எங்கு பிளாட் போட்டாலும் முதல் ஆளாக ஆஜராகி டோக்கன் அட்வான்ஸ் போட்டு இரண்டு பிளாட் வாங்கி விடுவார்கள். இதையெல்லாம்விட சென்னை , பெங்களுர்ருவில் சொத்துக்கள் ஏராளமாய் வாங்கி குவித்திருக்கிறார்கள். தன் மகனை ஒன்றிய செயலாளர் பதவியில் உட்கார வைத்துவிட்டு, இரண்டு தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் பிரிக்கும்போது அதில் வாணியம்பாடி, ஆம்பூர் தொகுதிகளை இணைத்து புதியதாக உருவாகும் மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளர் ஆக்கிவிட வேண்டும் என்பதே வில்வநாதனின் தீராத ஆசை. அதற்குண்டான வேலைகளை பார்த்தவரின் கனவு காணல் நீராகிபோனது.
திமுக நிர்வாகிகளை தன்னுடன் நெருங்க விடுவதில்லையே தவிர, அதிமுக , பாஜகவிலுள்ள தன் சமுதாயா (நாயூடு) உறவுகளோடு நட்பு பாராட்டுகிறார். தன்னை எதிர்த்து வளரும் ஆம்பூர் தொகுதிக்குட்பட்ட ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஞானவேலனோடு நட்புறவு பாரட்டியும், அகரம்சேரி சண்முகம் மகன் ஒன்றிய சேர்மன் சுரேஷ்குமாரையும் பொறுப்பு அமைச்சர் எ.வ.வேலுவிடம் தப்பு தப்பாக வத்தி வைத்து தனக்கு எதிராக இவர்களை வளரந்துவிடாதவாறு பார்த்துக் கொண்டார். தனது 6,500 மதிப்புள்ள செருப்பை சேற்றில் படாதவாறு திமுக பட்டியலின ஒன்றிய செயலாளரை விட்டு கையில் தூக்க வைத்த சம்பவத்தால் பட்டியலின மக்களிடையே கடும் கோபத்திற்கு ஆளாகினார்.
தனது தொகுதிக்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவவர்களிடம் 60% கமிஷன் கேட்டு வெளியான ஆடியோ, 3 சென்ட் இடத்தை அபகரித்துக் கொண்டார் எம்எல்ஏ என கலெக்டர் அலுவலகத்தில் நந்தன் என்பவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம், நிலம் வாங்கியவருக்கு தெரியாமலே விற்ற வரை மிரட்டி, தனது மனைவி பெயரில் நிலத்தை கிரையம் செய்து கொண்ட விவகாரம், இப்படி எம்எல்ஏ வில்வநாதன் வில்லங்கநாதன் ஆனதை தலைமை கூப்பிட்டு கடுமையாக எச்சரித்ததால் தற்போது பவ்யமாக செயல்பட்டு வருகிறார் என்கின்றார்கள்
தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் மறந்துபோச்சி, தொகுதிக்கென்று எம்எல்ஏ அலுவலகம் இல்ல, சொல்லும்படியான திட்டங்கள் எதுவும் கொண்டுவரல, எப்படி ஓட்டு கேட்கபோவதென்று வெறுப்பின் உச்சத்தில் ஆம்பூர் திமுகவினர் இருக்க மூன்றாவது முறையும் எனக்குதான் எம்எல்ஏ சீட்டு என வலம் வரும் வில்வநாதன் , தொகுதிக்குள் தனியாக நடந்து போகமுடியாது என்பதே தற்போது அவருடைய ஒரிஜினல் செல்வாக்காக இருக்கிறது.
அரக்கோணம் எம்பி ஜெகத்ரட்சகன் தீவிர ஆதரவாளரும் , ஆலங்காயம் மேற்கு ஒன்றிய செயலாளருமான ஞானவேலன், தொழிலதிபர் ஆர்.டி.சரவணன், மாதனூர் யூனியன் சேர்மன் சுரேஷ்குமார், ஆம்பூர் நகரமன்ற தலைவர் ஏஜாஸ் அகமது உள்ளிட்டவர்கள் எம்எல்ஏ சீட் தனக்குதான் என்கிற நம்பிக்கையோடு காத்திருக்கிறார்கள். ஆனால், ஞானவேலனுக்கு தான் சீட் உறுதி என்கின்றனர் சீனியர் உடன்பிறப்புகள். அதிமுகவில் தொகுதி மாறி வரும் மாஜி மந்திரி நிலேபர் கபில், பொறியாளர் வெங்கடேசன், கூட்டணியில் இணைந்தால் தேமுதிகவை சேர்ந்த எல்.கே.சுதீஷ் ஆகியோரில் ஒருவருக்கு வழங்கப்படலாம் எனக்கூறப்படுகிறது. ஆம்பூர் தொகுதியில் ஆதிதிராவிடர்களும், இஸ்லாமியர்களும் வெற்றியை தீர்மானிக்க கூடியவர்களாக இருக்கின்றார்கள். இவர்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பதால் திமுகவுக்கு பலம் என்கின்றனர்.
இந்த முறை திமுகவில் ஆம்பூர் தொகுதி யாருக்கு கிடைக்கப்போகிறதோ..?