12/10/2024
விஜயதசமி அன்று வடபழனி ஆண்டவன் கொடுத்த பெரிய புண்ணியம்.
தினமலர் நாளிதழ் ஆண்டு தோறும் விஜயதசமி அன்று மழலைக் குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்யும் புண்ணிய செயலைச் செய்து வருகிறது. இன்றும் வடபழனி முருகன் கோவிலில் அந்த வைபவம் நடைபெற்றது.அதற்கு முக்கிய விருந்தினராக நானும் அழைக்கப் பட்டது பெரும் பாக்கியம்.
பழங்காலத்தில் மாணவ, மாணவிகளுக்கு அரிச்சுவடி கற்பிக்கத் தொடங்கும்போது ‘ஹரி நமோத்து சிந்தம்' என்று முதலில் கூறிய பின்னர்தான், ஆசிரியர் குழந்தைகளுக்குக் கற்பிக்கத் தொடங்குவார்.
பழைய மாம்பலம் ராஜாஜி தெருவில் குடியிருந்த போது எதிரில் இருந்த தேவி பாடசாலைக்கு என்னை அழைத்துப் போய் ,பட்டுப் பாவாடை சட்டையுடன் இருந்த என்னை குடும்பமே கூட வந்து "ஹரி நமோத்து சிந்தம் " என்று சொல்லி நெல்லில் "அ" எழுத வைத்து ஆரம்பித்த கல்விக் கடாக்ஷம் தான் இன்றும் தொடர்கிறது.
பழங்காலத்தில் இருந்துவந்த இந்தப் பழக்கத்தில் ‘சிந்தம்' என்று கூறப்பட்டது, ‘சித்தம்' என்பதன் திரிபு வடிவம்தான். இப்படிச் சொல்வது சமணர்கள் ஆரம்பித்த வழக்கம் என்றும் கூறுவர்.
தமிழகத்தில் சித்தர் வணக்கம் செய்த பிறகு கற்பிக்க ஆரம்பித்தது போலவே, கர்நாடகத்தில் ‘சித்தம் நம' என்று கூறியே எழுத்துகளைக் கற்பிக்கத் தொடங்கியுள்ளனர் என்று புராணம் கூறுகிறது.
நான் இன்று ஆரம்பிக்கும் காரியம் “பெருமாள் சித்தம்”,அதாவது “பெருமாள் நினைத்தபடி” என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம்.
குட்டிப் பூக்களாய்,சின்னக் குழந்தைகளை மடியில் அமர்த்திக் கொண்டு, நெல்லில் விரளி மஞ்சள் நுனி கொண்டு "அ" எழுத வைத்து, ஒவ்வொரு குழந்தைக்கும் ஹரி நமோத்து சிந்தம்" என்று சொல்லி வித்யாரம்பம் செய்தது , மனதைக் குளிர வைத்தது.
தினமலர் வருடந்தோறும் செய்யும் மஹா பெரிய புண்ணிய காரியம் இது. கிட்டத்தட்ட 700 க்கும் மேற்பட்ட குழந்தைகள்!!! பெற்றோர்,பாட்டி,தாத்தாவுடன் வந்திருந்தது கண் கொள்ளாக் காட்சி. காட்பரீஸ் சாக்கலேட்டுடன் வரவேற்ற குழந்தைகளுக்கு பை நிறைய கை கொள்ளாத பரிசுப் பொருட்களுடன் அனுப்பி வைத்தது தினமலர்.
தினமலர் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் ஒவ்வொருவரையும் இன்முகத்துடன் அன்புடன் வரவேற்று,அமர வைத்து, வரிசையில் அனுப்பி, குழந்தைகளுடன் புகைப்படம் எடுத்துத் தந்து என்று மிகச் சிறப்பாகச் செயல் பட்டனர்.
இப்படி ஒரு நல்ல நாளில் கூப்பிட்டு தரிசனமும் தந்து புண்ணிய காரியமும் செய்ய வைத்த வடபழனி முருகனின் அருளை என்னவென்று சொல்வது !!!
இதன் கருவியாய் அழைத்து கௌரவித்த தினமலருக்குத்தான் அளவில்லாத நன்றியைத் தெரிவிக்க வேண்டும்.