25/09/2025
அடிமை போல நடத்தும் திமுக; கொந்தளிக்கும் ஜோதிமணி, சைலண்ட்மோடில் காங்கிரஸ் ...
2014ம் ஆண்டு காங்கிரஸ் மத்தியில் ஆட்சியை இழந்த பிறகு, அந்தக் கட்சி மாநிலக் கட்சிகளின் அடிமையாகவே மாறிவிட்டது. இண்டி கூட்டணியில் இருக்கும் மாநிலக் கட்சிகளுக்கு காங்கிரஸ் தான் முக்கியத்துவம் கொடுத்து நடந்து கொள்கிறது. ஆனால் அந்தக் கட்சிகள் ராகுல்காந்தியையோ, காங்கிரசையோ மதிப்பதாக தெரியவில்லை. பாஜக எதிர்ப்பு அரசியல் மட்டுமே அவர்களை ஓரணியில் வைத்திருக்கிறது.
உதாரணமாக அண்மையில் ராகுல்காந்தி பீகார் சென்று, பிரச்சாரம் செய்தார். அந்த மாநிலத்தில் லல்லு பிரசாத் யாதவ் கட்சி வலிமையாக இருக்கிறது. இந்நிலையில் ராகுல்காந்தி பிரச்சாரத்தை முடித்து விட்டு கிளம்பிய மறுநாள், அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் தங்கள் கட்சியே போட்டியிடும் என லல்லு பிரசாத் யாதவ்வின் மகனும், தற்போதையை எதிர்க்கட்சி தலைவருமான தேஜஸ்வி யாதவ் அறிவித்துள்ளார். திரிணாமுல் காங்கிரசும், ஆம் ஆத்மியும் காங்கிரசை சீண்டுவது கூட இல்லை.
இப்படிப்பட்ட தருணத்தில் தான், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியினர் திமுகவின் அடிமைகளாக தங்களை மாற்றி கொண்டனர். அதற்கு மிகச் சிறந்த உதாரணம் செல்வப்பெருந்தகை. திமுக பெருந்தலைவர் காமராஜரை எப்படியெல்லாம் அவமதித்து, பொய்களை பரப்பி தோற்கடித்தது என்பதை நன்கு அறிந்தும், ஸ்டாலினை, தமிழ்நாட்டின் தற்போதைய காமராஜர் என வர்ணித்தார். மற்றொரு முறை, காமராஜர் ஏசி இல்லாமல் தூங்க மாட்டார் என திருச்சி சிவா கூறிய போது, மொத்த காங்கிரஸ் கூடாரமும் பதுங்கி கொண்டது. காங்கிரசின் கடந்த கால உறுப்பினர்களும், கட்சியால் ஒதுக்கப்பட்ட சிலரும் மட்டுமே திமுகவுக்கு எதிராக குரல் கொடுத்தனர்.
காங்கிரசுக்குள் திமுக வைத்ததே சட்டம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. அண்மையில் கூட கரூரில் காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி தலைவர் அக்கட்சியில் இருந்து விலகி, திமுகவில் இணைந்தார். அது கரூர் எம்.பி ஜோதிமணியை மட்டுமே கொந்தளிக்க வைத்தது. அக்கட்சியை சேர்ந்த மற்ற யாரும் அதனைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. ஜோதிமணி மட்டுமே அறிக்கைகளை விட்டு கொண்டிருக்கும் நிலையில் திமுகவும் அதை சீண்டவில்லை.
இந்த நிலையில் தான், தவெகவும், காங்கிரசும் ரகசியமாக கூட்டணி அமைத்து செயல்படுகிறதா என்கிற கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கின்றனர். நாகை சென்று இலங்கை மீனவர்கள் பற்றியும், இந்திய மீனவர்கள் பற்றியும் பேசிய விஜய், ஈழத்தில் இனப் படுகொலை நிகழ்த்திய காங்கிரஸ் கட்சி குறித்து பேசவே இல்லையே ? என்பது தான் அவர்கள் எழுப்பும் சந்தேகம். மேலும் விக்கிரவாண்டியில் தொடங்கி தற்போது வரை எந்த இடத்திலும் மறந்தும் கூட ராகுல்காந்தியையோ, காங்கிரசையோ விஜய் விமர்சிக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதையெல்லாம் சுட்டிக்காட்டும் அரசியல் நிபுணர்கள், திமுகவின் ஆணவப் போக்கு, காங்கிரஸ் கட்சியை விஜயை நோக்கி நகர்த்துவதாக கூறுகின்றனர்.