02/11/2024
நவம்பர் மாதம் 2ம் தேதி கந்தசஷ்டி விரதம் ஆரம்பமாகிறது.. இரவு 08.06 மணி வரை பிரதமை திதியும் உள்ளது. அதனால் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்கள், விடிகாலையிலேயே குளித்து முடித்து முருகனுக்கு பூஜை செய்து உங்களின் விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.
வழிபாடு முறை: முருகன் படங்களை சுத்தப்படுத்தி சந்தனம், குங்குமம் வைத்து மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.. வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், நைவேத்தியமாக காய்ச்சிய பால், தேன் கலந்து வைத்து, விளக்கேற்றி வழிபட வேண்டும்.
குழந்தை வரம் பெற விரும்புபவர்கள் சஷ்டி தினங்களில் விரதமிருக்கலாம்... கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை மகா சஷ்டியில் 6 நாள் விரதம் கடைப்பிடிப்பது மிக மிக விசேஷம் என்பார்கள்.. இந்த நேரத்தில், தம்பதி இருவருமே விரதம் கடைப்பிடித்தால், குழந்தை பலன் கிடைக்கும் என்பார்கள்.. பக்தர்கள் விரதத்தின்போது முருகனின் மந்திரங்களை பாராயணம் செய்வது, கந்த சஷ்டி கவசம் படிப்பது, திருப்புகழ் உள்ளிட்டவைகளை படிப்பது போன்றவற்றை செய்யலாம்.
பால் பழங்கள்: விரதம் இருப்பவர்கள் வீட்டிலும் இருக்கலாம்.. முருகர் கோயிலும் இருக்கலாம்.. வேலைக்கும் சென்று அலுவலகத்தில் இருக்கலாம்.. சிலர் தண்ணீர் மட்டும் குடிப்பார்கள், சிலர் பால்பழம் மட்டும் சாப்பிடுவார்கள்.
இந்த 6 நாட்களும் உமிழ் நீரும் உள்ளே விழுங்காதவாறு நோன்பிருந்து விரதத்தை கடைப்பிடிக்கலாம், அப்படி முடியாதபட்சத்தில், ஒருமுறை வீதம் 6 மிளகையும் 6 கை நீரையும் குடிக்கலாம். ஆனால், எக்காரணம் கொண்டும், உப்பு நீர், எலுமிச்சம் சாறு, நார்த்தம்பழச்சாறு, இளநீர் போன்றவற்றை சஷ்டி விரதம் இருப்பவர்கள் குடிக்கக்கூடாது.
மஞ்சள் கயிறு: காப்பு கட்டுபவர்களும், சூரிய உதயத்திற்கு முன்பாகவே காப்பு கட்டிக் கொண்டு விரதத்தை ஆரம்பித்துவிட வேண்டும். காப்பு கட்டி விரதம் இருப்பவர்கள் மஞ்சள் தடவிய நூலில், விரலி மஞ்சள் வைத்து கைகளில் கட்டிக்கொள்ளலாம். அல்லது வெறும் மஞ்சள் கயிறும் மட்டும் கட்டிக்கொண்டு விரதம் மேற்கொள்ளலாம். பெரியவர்களிடம் இந்த கயிறு கொடுத்து கைகளில் கட்டிக் கொண்டால், ஆசீர்வாதம் பெருகும். காலை, மாலை என 2 வேளையும் குளித்து விட்டு முருகனுக்கு பூஜை செய்ய வேண்டும்..
மருந்து மாத்திரைகளை எடுப்பவர்களாக இருந்தால், விரதம் மேற்கொள்வதை பற்றி யோசித்து முடிவெடுக்கலாம்.. பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் இந்த விரதத்தை தவிர்க்கலாம்.. மாதவிடாய் இருப்பவர்கள், பூஜையறைக்குள் செல்லாமல், விரதம் இருக்கலாம்..
அதேபோல, விரதம் மேற்கொள்பவர்கள், பகல் நேரத்தில் தூங்கக் கூடாது... முடிந்தவரை பேச்சை குறைத்து, அமைதியுடன் முருக சிந்தனையில் இருப்பது நல்லது. அல்லது ஓம் சரவண பவா என்று ஒரு நோட்டுபுத்தகத்தில் எழுதி கொண்டே இருக்கலாம். 7 நாள் கந்தசஷ்டி விரதம் இருப்பது மிகமிக சிறப்பு.
பலன்கள்: குழந்தை இல்லாதவர்கள் மட்டுமல்ல, நோயால் பாதிக்கப்பட்டவர்கள், வேலை கிடைக்கவில்லை, எதிரிகள் தொல்லையால் இன்னலுக்கு ஆளாகுபவர்கள், வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாமல் தவிப்பவர்கள் கந்தசஷ்டியில் விரதம் இருக்கலாம்.