02/11/2025
சீதையை விமர்சித்த சலவைக்காரனின் பூர்வ ஜன்மம்...
மிதிலா நகரத்து மன்னர் ஜனகர் ஆட்சி செய்து வந்தார். ஒரு முறை அவர் ஒரு யாகத்திற்காக நிலத்தை உழுது கொண்டிருந்தபோது, கலப்பைக் கட்டிய ஆழமான கோட்டிலிருந்து ஒரு பெண் குழந்தை தோன்றியது. அழகான ஒரு பெண்ணைக் கண்டதில் மன்னன் மிகவும் மகிழ்ச்சி யடைந்து, அந்தப் பெண்ணுக்கு சீதா என்று பெயரிட்டார்.
ஒரு நாள், சீதை தன் தோழிகளுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தாள். அங்கே அவள் ஒரு ஜோடி கிளிகளைக் கண்டாள், அவை மிகவும் அழகாக இருந்தன. இரண்டு பறவைகளும் ஒரு மலையின் உச்சியில் அமர்ந்து இப்படிப் பேசிக் கொண்டிருந்தன,
"பூமியில் ஸ்ரீ ராம் என்று அழைக்கப்படும் ஒரு அழகான ராஜா இருப்பார். அவருடைய ராணி சீதா என்று அழைக்கப்படுவார். ஸ்ரீ ராம் பதினொன்றாயிரம் ஆண்டுகள் சீதையுடன் ஆட்சி செய்வார். ஜானகி தேவி ஆசீர்வதிக்கப்பட்டவர், ஸ்ரீ ராமரும் ஆசீர்வதிக்கப்பட்டவர்."
கிளிகள் இப்படிப் பேசுவதைப் பார்த்த சீதா, அவை இரண்டும் தன் வாழ்க்கைக் கதையைச் சொல்கின்றன என்று நினைத்தாள், நான் அவற்றைப் பிடித்து எல்லாவற்றையும் கேட்க வேண்டும் என்று நினைத்து தன் தோழிகளிடம், 'இந்தப் பறவை ஜோடி அழகாக இருக்கிறது, நீங்கள் ரகசியமாகப் போய் அவற்றைப் பிடியுங்கள்' என்றாள்.
தோழிகளும் அந்த மலைக்குச் சென்று இரண்டு அழகான பறவைகளையும் பிடித்தனர்.
சீதை அந்தப் பறவைகளிடம், 'நீங்கள் இருவரும் மிகவும் அழகாக இருக்கிறீர்கள்; நீங்கள் யார், எங்கிருந்து வந்தீர்கள்? ராமர் யார்? சீதை யார்? அவர்களைப் பற்றிய தகவல் உங்களுக்கு எப்படிக் கிடைத்தது? எல்லாவற்றையும் சீக்கிரம் சொல்லுங்கள். பயப்படாதீர்கள்' என்றாள்.
சீதையின் கேள்வியைக் கேட்டதும், இரண்டு பறவைகளும் எல்லாவற்றையும் சொல்ல ஆரம்பித்தன, 'தேவி! வால்மீகி என்ற ஒரு பெரிய முனிவர் இருக்கிறார். நாங்கள் இருவரும் அவருடைய ஆசிரமத்தில் வசிக்கிறோம். அந்த முனிவர் ராமாயணம் என்ற புத்தகத்தை எழுதியுள்ளார், அது எப்போதும் மனதிற்கு மகிழ்ச்சியைத் தருகிறது.'
அவர் தனது சீடர்களையும் அந்த ராமாயணத்தைப் படிக்க வைத்துள்ளார். ராமாயணத்தின் நோக்கம் மிகப் பெரியது. நாங்கள் அதை முழுமையாகக் கேட்டிருக்கிறோம்.
ராமரும் ஜானகியும் யார் என்பதை நாங்கள் உங்களுக்குச் சொல்வோம், ஜானகியைப் பற்றி என்ன விவாதிக்கப் போகிறோம் என்பதையும் உங்களுக்குத் தெரிவிப்போம்; கவனமாகக் கேளுங்கள்.
மகரிஷி ரிஷ்யசிருங்கர் செய்த புத்ரகாமேஷ்டி யாகத்தின் பலனால், விஷ்ணு பகவான் ராமராகத், தோன்றுவார்.
ஸ்ரீ ராமர் மகரிஷி விஸ்வாமித்திரருடனும் அவரது சகோதரர் லட்சுமணனுடனும் கையில் வில்லுடன் மிதிலாவுக்கு வருவார். அந்த நேரத்தில், அவர் சிவபெருமானின் வில்லை உடைத்து, மிகவும் அழகான சீதையை தனது மனைவியாக ஏற்றுக்கொள்வார்.
பின்னர், ஸ்ரீ ராமர் அவர்களுடன் தனது பரந்த ராஜ்யத்தை ஆள்வார். நாங்கள் இவற்றையும் இன்னும் பல விஷயங்களையும் அங்கே கேள்விப்பட்டிருக்கிறோம். அழகான பெண்ணே! நாங்கள் உங்களிடம் எல்லாவற்றையும் சொல்லி விட்டோம். இப்போது நாங்கள் செல்ல விரும்புகிறோம், தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள்.
பறவைகளின் இனிமையான வார்த்தைகளைக் கேட்டு, சீதை அவற்றை மனதில் பதிய வைத்துக் கொண்டு, 'ராமர் எங்கே இருப்பார்? அவர் யாருடைய மகன், அவர் எப்படி வந்து ஜானகியை ஏற்றுக்கொள்வார்? மனித உருவில் அவரது வடிவம் எப்படி இருக்கும்?' என்று மீண்டும் கேட்டாள்.
அந்தக் கேள்விகளைக் கேட்ட சுகி, இவள்தான் சீதை என்று உணர்ந்தாள். அவள் முன்னால் வந்து அவள் காலில் விழுந்து, "ஸ்ரீ ராமசந்திரரின் முகம் தாமரை மொட்டு போல அழகாக இருக்கும். கண்கள் பெரியதாகவும், மலர்ந்ததாகவும் இருக்கும், மூக்கு உயர்ந்ததாகவும், மெல்லியதாகவும், வசீகரமாகவும் இருக்கும்" என்றாள்.
கைகள் முழங்கால் வரை இருக்கும், கழுத்து சங்கு போல இருக்கும். மார்பு சிறப்பாகவும் அகல மாகவும் இருக்கும். ஸ்ரீராமர் அவ்வளவு அழகான வடிவத்தை எடுக்கப் போகிறார். அவரைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? நூறு முகங்களைக் கொண்ட ஒருவரால் கூட அவரது குணங்களை விவரிக்க முடியாது. ரகுநாத்ஜியுடன் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் விரைவில் மகிழ்ச்சியாக வாழப் போகும் அந்த ஜானகி தேவி பாக்கியசாலி. ஆனால், நீங்கள் யார்?’
பறவைகளின் சத்தத்தைக் கேட்டுக்கொண்டே, சீதை தன் பிறப்பைப் பற்றிப் பேசி, 'ஜானகி என்று நீ அழைப்பது நான்தான். ஜனகரின் மகள். ஸ்ரீ ராமர் இங்கு வந்து என்னை ஏற்றுக்கொண்டால்தான் உங்கள் இருவரையும் விட்டுச் செல்வேன். நீங்கள் என் வீட்டில் உங்கள் விருப்பப்படி விளை யாடிக் கொண்டே மகிழ்ச்சியாக வாழலாம்' என்றாள்.
இதைக் கேட்ட சுகி என்ற அந்தப் பெண் கிளி ஜானகியிடம், 'சாத்வி! நாங்கள் காட்டுப் பறவைகள். உங்கள் வீட்டில் எங்களுக்கு மகிழ்ச்சி கிடைக்காது. நான் கர்ப்பமாக இருக்கிறேன், நான் என் இடத்திற்குச் சென்று குழந்தைகளைப் பெற்றெடுப்பேன். அதன் பிறகு நான் மீண்டும் இங்கு வருவேன்' என்றது.
சீதை அந்தக் கிளியை விடவில்லை. ஆண்கிளி சீதையிடம், 'சீதா! என் மனைவியை விட்டுவிடு. அவள் கர்ப்பமாக இருக்கிறாள். அவள் குழந்தைகளைப் பெற்றெடுத்ததும் நான் அவளை உன்னிடம் திரும்ப அழைத்து வருகிறேன்' என்றது.
கிளி இதைச் சொன்னதும், ஜானகி, ‘இந்தக் கிளியை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. நான் அதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வேன்.’ என்று சொல்லி கிளியை விட மறுத்தாள்.
ஆண்கிளி பெண்கிளியிடம், ‘நாம் பொதுவான இடத்தில் இருந்து கொண்டு உண்மைகளைச் சொல்லியதால்தான் இந்தச் சிக்கல் வந்தது’ என்றது.
தொடர்ந்து 'அழகான பெண்ணே! என் மனைவி இல்லாமல் என்னால் வாழ முடியாது, எனவே அவளை விட்டுவிடு.’ சீதை மசியவில்லை. இப்போது பெண்கிளி, ‘நீ என்னை என் துணையிடம் இருந்து பிரிப்பது போல், நீயும் உன் கர்ப்பக் காலத்தில் ஶ்ரீராமரிடமிருந்து பிரிந்து செல்லவேண்டி வரும்’ என்று சபித்துவிட்டது.
இப்படிச் சொல்லி, அந்தக் கிளி தன் துணையைப் பிரிந்து இறந்தாள். ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தியை நினைத்துக்கொண்டும், ராம நாமத்தை மீண்டும் மீண்டும் உச்சரித்துக்கொண்டும் அந்தப் பெண்கிளி இறந்துவிட்டது. எனவே, அவளை அழைத்துச் செல்ல ஒரு அழகான விமானம் வந்தது, பறவை அதன் மீது அமர்ந்து கடவுளின் இருப்பிடத்திற்குச் சென்றது.
மனைவி இறந்த போது, துக்கத்தில் மூழ்கிய ஆண்கிளி 'நான் மனிதர்கள் நிறைந்த ஸ்ரீராமரின் நகரமான அயோத்தியில் பிறப்பேன், என் வார்த்தைகளால், சீதை தன் கணவனைப் பிரிந்து பெரும் துக்கத்தை அனுபவிக்க வேண்டியிருக்கும்' என்று கூறியது.
இதைச் சொல்லிவிட்டு அந்தக் கிளி சென்றுவிட்டது. சீதாவை அவமதித்ததாலும், கோபத்தாலும், அவன் ஒரு சலவைத் தொழிலாளியாகப் பிறந்தான்.
அந்த சலவைக்காரனின் கூற்றால் சீதை அவமானப் படுத்தப்பட்டாள், அவள் தன் கணவனிட மிருந்து பிரிக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. சலவைக்காரனாகப் பிறந்த அந்தக் கிளியின் சாபமே சீதை தன் கணவனிடமிருந்து பிரிவதற்குக் காரணமாக அமைந்தது, அவள் காட்டுக்குச் சென்றாள்.
#சீதா #சீதாதேவி