01/12/2024
இனி இந்தியால பென்ஸ், ஆடி கார்கள் விற்பனையாகாது! சொகுசு கார்களுக்கே டஃப் கொடுக்குது எக்ஸ்இவி 9இ.. ரைடு ரிவியூ!
மஹிந்திரா (Mahindra) நிறுவனம், 'பார்ன் எலெக்ட்ரிக்' (Born Electric) எனும் புதிய பிராண்டின்கீழ் சில எலெக்ட்ரிக் கார் மாடல்களை கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இங்கிலாந்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக இந்த உலகிற்கு அறிமுகம் செய்து வைத்தது. நிறுவனத்தின் புதிய டிசைனிங் தலைவர் பிரதாப் போஸ்-ஆல் வடிவமைக்கப்பட்ட கார் மாடல்களே அவை ஆகும். கான்செப்ட் மாடலாகவே அவை அப்போது காட்சிப்படுத்தப்பட்டன. இந்நிலையிலேயே, 2ஆண்டுகள் இடைவேளைக்கு பின்னர் எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6இ (BE 6e) ஆகிய இரண்டு இ-கார் மாடல்களை மஹிந்திரா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கின்றது.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாக இது அறிமுகம் அரங்கேற்றப்பட்டது. மேலும், இந்த இரண்டு மின்சார கார்களையும் டிரைவ் செய்து பார்க்கும் வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. இந்த பதிவில் எக்ஸ்இவி 9இ மாடலின் ஃபர்ஸ்ட் டிரைவிங் அனுபவம் பற்றிய தகவலையே பகிர்ந்திருக்கின்றோம். இதைபோலவே விரைவில் பிஇ 6இ எலெக்ட்ரிக காரின் டிரைவ் ரிவியூ பற்றிய தகவலையும் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
Mahindra xev 9e ride review
மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் வெளிப்புற தோற்றம்: கான்செப்ட் கார் மாடலாக காட்சிப்படுத்தப்பட்டபோது இந்த வாகனம் எப்படி தென்பட்டதோ அதைபோலவே மிகவும் அட்டகாசமான ஸ்டைலில் இது இப்போதும் காட்சியளிக்கின்றது. ஆகையால், நிஜ வாழ்க்கையிலும் இது ஓர் கான்செப்ட் கார் மாடலைபோலவே இருக்கும்.
அந்த அளவிற்கே நம்ப முடியாத ஓர் ஸ்டைலை இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது. விலை உயர்ந்த ஆடம்பர மற்றும் சொகுசு கார்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் இதன் ஸ்டைல் இருக்கின்றது. இந்த காருக்கு அழகு சேர்க்கும் விதமாக அதில் இடம் பெற்றிருக்கும் அனைத்தும் உள்ளது.
Mahindra xev 9e dashboard
உதாரணமாக இதன் கிரில் முழுமையாக அடைக்கப்பட்ட நிலையில் இருப்பது அதற்கு புதிய லுக்கை வழங்கும் வகையில் உள்ளது. இத்துடன், 'எல்' வடிவ டிஆர்எல் லைட் பெரிய அளவில் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் அரவணைப்பில் இருக்கும் வகையிலேயே ஹெட்லைட் மற்றும் பனி மின் விளக்குகள் ஆகியவை இடம் பெற்றிருக்கின்றன.
இந்த இரண்டும்கூட புதிய ஸ்டைலிலேயே காட்சியளிக்கின்றன. அதேவேளையில், இந்த டிஆர்எல் லைட்டே இண்டிகேட்டராகவும் செயல்படும் என்பது இங்கே கவனிக்கத்தகுந்தது. மேலும், இதில் இடம் பெற்றிருக்கும் ஹெட்லைட் உள்ளிட்டவை டிரான்ஸ்ஃபார்மர் படத்தில் வரும் ரோபோக்களின் கண்களைப் போல இருக்கின்றன. தொடர்ந்து, இந்த காரின் அடிப்பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் பியான கருப்பு நிறத்திலான அணிகலன் காரை சுற்றிலும் இருக்கும் வகையில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
Mahindra xev 9e tail-gate
அது அக்காருக்கு கூடுதல் அழகான லுக்கை வழங்கும் வகையில் உள்ளது. இதேபோல், இந்த காரின் பக்கவாட்டு பகுதியையும் அழகானதாக காண்பிக்கக் கூடிய வேலைகள் நிறைய பார்க்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், பக்கவாட்டு பகுதிக்கு செதுக்கி வைத்ததை போன்ற ஸ்டைல் பக்கவாட்டு பகுதிக்கு கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, 19 அங்குல அலாய் வீல்கள், டோருடன் டோராக இருக்கும் கை பிடிகள், கூபே ஸ்டைல் ரூஃப் ஆகியவற்றையே இந்த காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. இந்த காரில் 19 அங்குல அலாய் வீல் பிடிக்கவில்லை என்றால் வாடிக்கையாளர்கள்20 அங்குல அலாய் வீலுக்கு மாற்றிக் கொள்ள முடியும்.
எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் முன் பக்கம் மற்றும் பக்கவாட்டு பகுதியைப் போலவே பின் பக்கமும் மிகவும் கவர்ச்சியானதாகக் காட்சியளிக்கின்றது. விலை உயர்ந்த கூபே வகை கார்களை மிகுந்த சாய்வான பின் பக்கத்தை இது கொண்டிருக்கின்றது. இத்துடன், ஸ்டாப் லைட் காரின் பின் பக்கத்தின் முழு அகலத்தையும் ஆளும் வகையில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது.
ஆகையால், கார் நிற்கின்றது அது துள்ளியமாக சக வாகன ஓட்டிகளுக்கு தெரியும். தொடர்ந்து காரின் பக்கத்தின் மேல் பகுதியில் சிறிய ஸ்பாய்ளர் அமைப்பும், சுறாவின் துடுப்பு போன்ற அமைப்புடைய ஆன்டென்னாவும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவையே இந்த காரின் பின் பக்கத்திற்கு அதிக அழகை வழங்கும் விதமாக உள்ளது.
இந்த காரை சார்ஜ் செய்வதற்கான இடம் இடது பக்கம் டெயில்லைட்டுக்கு பக்கத்திலேயே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது இருக்கும் இடமே தெரியாது. காருக்குள் இருக்கும் பட்டனை அழுத்தினால் மட்டுமே அது தெரிய வரும். அந்த அளவிற்கு பிரத்யேக பேனலால் அது மூடப்பட்டு இருக்கும்.
இதுதவிர, காரின் பின் பக்க அடிப்பக்கத்தில் பனி மின் விளக்கு, ரெஃப்ளக்டர்கள் மற்றும் டிஃப்யூசர்கள் உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கும். இதன் பூட் லிட்டை எலெக்ட்ரிக்கலாக திறக்கும் வசதியே வழங்கப்பட்டு இருக்கின்றது. 663 லிட்டர் பூட் ஸ்பேஸையே இந்த கார் மாடல் கொண்டிருக்கின்றது.
ஓர் குடும்பம் ஒரு வாரத்திற்கு தேவையான உடைமைகளை எடுத்துச் செல்லவே இதுவே போதுமானது ஆகும். இதுபோதாது கூடுதல் ஸ்டோரேஜ் வசதி வேண்டும் என நினைப்பவர்களுக்கு கூடுதலாக 150 லிட்டர் அளவில் ஸ்பேஸை முன் பக்கத்தில் வழங்குகின்றது. இந்த வசதியை டெஸ்லா மற்றும் ஃபோர்டு மேக்-இ போன்ற விலை உயர்ந்த ஆடம்பர கார்களில் மட்டுமே பார்க்க முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.
மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் உள்பக்கம் மற்றும் சிறப்பம்சங்கள் விபரம்: இந்த காரை வெளிப்பக்கத்தைப் போலவே உள்பக்கமும் நம்மை மிரட்டும் வகையில் உள்ளது. அந்த அளவிற்கு சிறப்பு வசதிகளை வாரி வாரி வழங்கி இருக்கின்றது மஹிந்திரா நிறுவனம். மிக முக்கியமாக விலை உயர்ந்த ஆடம்பர கார்களுக்கு இணையான அம்சங்கள் பலவற்றை இந்த காரில் அது வழங்கி இருக்கின்றது.
மூன்று திரைகள் செட்-அப்பையே இந்த காரில் மஹிந்திரா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. அது டேஷ்போர்டு முழுக்க நீண்டிருக்கும். பயணி, இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் டிரைவருக்கான திரை ஆகிய அனைத்திற்குமான திரையே இதுவாகும். இந்த திரை டிரைவிங் மோடுக்கு நிறம் மாறும். ரேஞ்ச் மோடிற்கு பச்சை நிறத்திலும், எவ்ரிடே மோடுக்கு ஊதா நிறத்திலும் மற்றும் ரேஸ் மோடுக்கு சிவப்பு நிறத்திலும் அது இருக்கும்.
இந்த திரையின் முக்கிய அம்சமாக மஹிந்திராவின் அட்ரினோ எக்ஸ் (AdrenoX) ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ளது. இது எம்ஏஐஏ (MAIA) உதவியுடன் இயங்கும். இது ஓர் ஏஐ (AI) தொழில்நுட்பம் ஆகும். மஹிந்திரா நிறுவனம் அதன் கார்களுக்காக தயாரித்த சொந்த தொழில்நுட்பம் இதுவாகும். இதன் வாயிலாக பலதரப்பட்ட கார் இணைப்பு வசதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இத்துடன், வயர் இணைப்பு தேவைப்படா ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே இணைப்பு வசதியும் எக்ஸ்இவி 9இ காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், 5ஜி இணைப்பு வசதியும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. எனவே மிகவும் வேகமான இணைய வசதியை இந்த காரில் பெற்றுக் கொள்ள முடியும்.
இத்துடன், மஹிந்திரா நிறுவனம் பெரும்பாலான முக்கிய கன்ட்ரோல் வசதிகளை இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கு மாற்றி இருக்கின்றது. அந்தவையில், க்ளைமேட் கன்ட்ரோல், ஆடியோ மற்றும் டிரைவிங் மோடை மாற்றுவது உள்ளிட்டவற்றையே அதற்கு மாற்றியிருக்கின்றனர். இத்துடன், சில பட்டன்களையும் இந்த காரில் வழங்கி இருக்கின்றனர். ஆகையால், அனைத்திற்கும் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்திற்கு ஓட வேண்டும் என்கிற அவசியம் தவிர்க்கப்பட்டு இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, சொகுசாக அமர்ந்து பயணிக்கும் விதமாக மிகவும் வசதியான இருக்கைகளையே இந்த காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. மிக முக்கியமாக டிரைவருக்கான இருக்கைக்கு பவர் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஒவ்வொரு இருக்கையாளர்களுக்கு என தனி யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்டும் இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், ஒரே நேரத்தில் காரில் பயணிக்கும் அனைவரும் தங்களின் செல்போனை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இது 65W வாட் சார்ஜிங் போர்ட் ஆகும். ஆகையால், அதிக வேகத்திலும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இந்த காரின் இருக்கைகள் உயரமானவர்களுக்கும் ஏற்றதாகக் காட்சியளிக்கின்றது. 6 அடி உயரம் கொண்டவர்களும் சௌகரியமாக அமர்ந்து பயணிக்க முடியும்.
குறிப்பாக, நெருக்கமான உணர்வுடன் பயணிக்கும் நிலை இந்த காரில் இருக்காது. மேலும், இந்த கூபே ஸ்டைல் காரில் பெரிய சன்ரூஃப்-ம் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்கு அடுத்தபடியாக சோகமான மன நிலையையும் மாற்றும் திறன் கொண்ட ஆம்பியன் லைட்டை இந்த காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது.
மேலும், பின் இருக்கையாளர்கள் சூரிய ஒளியால் பாதிக்காத வண்ணம் இருக்க ஒளி தடுப்பான்களையும் இந்த காரில் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. இத்துடன், அனைத்து டோர்களிலும் தண்ணீர் பாட்டிலை வைப்பதற்கான இட வசதியையும், முக்கிய பொருட்களை வைப்பதற்கான இட வசதியையும் வழங்கி இருக்கின்றனர்.
இந்த காரில் 16 ஸ்பீக்கர்கள் கொண்ட ஹர்மேன் கர்டோன் சவுண்டு சிஸ்டமே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அவுட்புட் திறன் 1400 வாட் ஆகும். டால்ஃபி அட்மாஸ் சப்போர்ட் வசதிக் கொண்டதும் கூட. ஆகையால், மினி பார்ட்டி கொண்டாடும் அளவிற்கு இந்த மியூசிக் சிஸ்டம் இருக்கின்றது.
இத்துடன், எக்ஸ்இவி 9இ காரில் வயர்லெஸ் செல்போன் சார்ஜரும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஸ்டியரிங் வீலை பொருத்த வரை இரண்டு ஸ்போக்குகள் மற்றும் பன்முக கன்ட்ரோல்களைக் கொண்ட ஸ்டியரிங் வீலே வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் இன்ஃபோடெயின்மென்ட் திரைக்கான கன்ட்ரோல்களும் இடம் பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இவற்றுடன் சேர்த்து ஹெட்ஸ்-அப் திரை, 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா ஆகியவையும் வழங்கப்பட்டு இருக்கின்றன. கூடுதலாக பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக இந்த எலெக்ட்ரிக் காரில் பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை மஹிந்திரா வழங்கி இருக்கின்றது.
6 ஏர் பேக்குகளை ஸ்டாண்டர்டாகவும், 7 ஏர் பேக்குகளை உயர்நிலை தேர்விலும் மஹிந்திரா வழங்கி இருக்கின்றது. இதுதவிர, டிரைவர் தூங்கினால் எச்சரிக்கும் வசதி, லெவல் 2 அடாஸ் அம்சம், பிளைண்டு ஸ்பாட் மானிட்டரிங் அம்சம், ஆட்டோ பார்க்கிங் உள்ளிட்டவற்றையும் மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரில் வழங்கி இருக்கின்றது.
மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரின் பேட்டரி பேக், மின்சார மோட்டார் மற்றும் ரேஞ்ச் விபரம்: மஹிந்திரா நிறுவனம் இந்த காரை தன்னுடைய புதிய இங்க்ளோ ஸ்கேட்போர்டு பிளாட்பாரத்தை பயன்படுத்தி தயார் செய்திருக்கின்றது. இந்த பிளாட்பாரம் ஃப்ளாட்-பேக் பேட்டரி பேக் மற்றும் ரியர் ஆக்ஸில் மோட்டாரை பொருத்தும் வசதிக் கொண்டது ஆகும்.
புதிய மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார் இரண்டு விதமான பேட்டரி பேக் தேர்வுகளுடன் விற்பனைக்கு வந்திருக்கின்றது. 59 kWh மற்று 79 kWh ஆகியவையே அவை ஆகும். பிஒய்டி (BYD) பிராண்டின் பிளேட் பேட்டரி டெக் (Blade battery tech) மற்றும் எல்எஃப்பி (LFP) வகை பேட்டரி பேக் ஆகும்.
இதில் 79 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 656 கிமீ ரேஞ்சையும், 59 kWh பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 542 கிமீ ரேஞ்சையும் வழங்கும். இந்த பேட்டரி பேக்குகளை 20 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக சார்ஜேற்ற வெறும் 80 நிமிடங்களே போதுமானது.
ஆனால், டிசி ஃபாஸ்ட் சார்ஜிங் பாயிண்டில் வைத்து மட்டுமே இந்த அளவு அதிக வேகத்தில் சார்ஜ் செய்ய முடியும். 79 kWh பேட்டரி பேக் 175 kW டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கையும், 59 kWh 140 டிசி ஃபாஸ்ட் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்யும் என்பது கவனிக்கத்தகுந்தது.
அதேவேளையில், இந்த இரண்டு பேட்டரி பேக்குகளையும் 8.7kW மற்றும் 11kW திறன் கொண்ட வீட்டு சார்ஜிங் பாயிண்டில் வைத்தும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். ஆனால், இதை பயன்படுத்தி சார்ஜ் செய்தால் 8.7 மணி நேரம் முதல் 11.7 மணி நேரம் வரை முழுமையாக சார்ஜாக ஆகும்.
எக்ஸ்இவி 9இ ஓர் சிங்கிள் எலெக்ட்ரிக் மோட்டார் கொண்ட இ-கார் ஆகும். இது 59 kWh பேட்டரி பேக் தேர்வில் 228 பிஎச்பி மற்றும் 380 என்எம் டார்க்கையும், 79kWh பேட்டரி பேக் தேர்வில் 281.6 பிஎச்பி ஆற்றலையும் உருவாக்கும். மேலும், 6.8 செகண்டுகளில் இந்த கார் பூஜ்ஜியத்தில் இருந்து 100கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும்.
இந்த காரில் சிறந்த இயக்க அனுபவத்திற்காக செமி-ஆக்டீவ் சஸ்பென்ஷனை மஹிந்திரா நிறுவனம் வழங்கி இருக்கின்றது. மெக்பெர்ஷன் ஸ்ட்ரட் ஐ-லிங்க் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டெபிளிசைர் பார்-ரே முன் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதேபோல், பின் பக்கத்தில் 5 லிங்க் இன்டிபென்டன்ட் சஸ்பென்ஷன் மற்றும் ஸ்டெபிளைசர் பார் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவையே சிறு குலுங்கல் கூட இல்லாமல் பயணத்தை மேற்கொள்ள உதவியாக இருக்கும். தொடர்ந்து சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக இந்த காரின் அனைத்து வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இத்துடன் ரீ-ஜெனரேட்டிங் பிரேக்கிங் சிஸ்டமும் இந்த காரில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இது மின்சார இழப்பை லேசாக மீட்டெடுக்க உதவியாக இருக்கும்.
மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் கார் ஓட்டி பார்க்க எப்படி இருந்தது? இந்த கார் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க துளியளவும் தவறவில்லை. தனித்துவமான தோற்றத்தைக் கொண்டிருந்த காரணத்தினால் சென்னையில் சாலையில் அனைவரின் கவனத்தையும் இந்த கார் கவர்ந்தது. முக்கியமாக இந்த காரை ஓட்டி பார்த்தபோது, தன்னுடை அற்புதமான முடுக்கத்தின் வாயிலாக வியக்க வைக்கும் ஓட்டும் அனுபவத்தை எக்ஸ்இவி 9இ எங்களுக்கு வழங்கியது.
முக்கியமாக, வெறும் 6.75 வினாடிகளில் 0-100 கிமீ/மணி வேகத்தை அது எட்டி எங்களை மிரள செய்துவிட்டது. இந்த திறனை மஹிந்திராவின் ஆராய்ச்சி மையத்தில் வைத்தே செய்து பார்த்தோம். எக்ஸ்இவி 9இ ரேஸ் மோடில் தனித்துவமாக செயல்படுகின்றது. இது ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான வேகத்தை வெளியிடாவிட்டாலும், எலக்ட்ரிக் மோட்டரின் உடனடி முறுக்கு விசை நம்மை மெய்சிலிர்க்கச் செய்யும் வகையிலேயே உள்ளது.
முக்கியமாக, ஸ்போர்ட்ஸ் மோடில் இந்த காரின் செயல்திறன் எங்களை சீட்டுக்கு தள்ளும் வகையில் இருந்தது. மேலும், எக்ஸ்இவி 9இ காரில் வழங்கப்பட்டு இருக்கும் ஸ்டீயரிங் வீலும் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. வளைவுகளில் திருப்பும்போதுகூட பெரிய அளவில் சிரமத்தை அது வழங்கவில்லை. மக்கள் நெரிசல் மிகுந்த நகர தெருக்களில் பயணிக்கம்போதும்கூட அது எளிமையாகவே இருந்தது.
காரின் திசையை மாற்ற சிறிய முயற்சி மட்டுமே போதுமானதாக இருந்தது. ஆனால், நெடுஞ்சாலையில் இந்த எளிமை மாறுபட்டு, அங்கு ஸ்டீயரிங் வீல் லேசாக இறுக்கப்படுகின்றது. அதிக கட்டுப்பாட்டுடன், அதிக நம்பிக்கையான அனுபவத்தை வழங்க இவ்வாறு அது செயல்படுகிறது. அதிவேக இயக்கத்திற்கு இந்த நிலையே இங்கு தேவைப்படுகின்றது.
இதுமட்டுமில்லைங்க, இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கும் செமி-ஆக்டீவ் சஸ்பென்ஷன் இந்த காரின் ரைடு அனுபவத்தை வேற லெவலுக்கு எடுத்துச் செல்லும் வகையில் உள்ளது. மேலும், சிறிய சிறிய பள்ளங்களுக்காக பிரேக் போட வேண்டும் என்கிற சூழலையும் இந்த சஸ்பென்ஷன் தவிர்த்திருக்கின்றது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் விலை உயர்ந்த ஆடி, பென்ஸ் கார்களைப் போல அலுங்கல் குலுங்கல் இல்லா பயணத்தை மேற்கொள்ள இந்த சஸ்பென்ஷன் பெரும் உதவியாக இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க காருக்குள் கேட்கும் வெளிப்பக்க சத்தத்தின் அளவையும் மிகப் பெரிய அளவில் மஹிந்திரா நிறுவனம் குறைத்திருக்கின்றது. ஆகையால் ஆகையால் மிகவும் அமைதியான பயணத்தையும் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரில் கிடைக்கும். முக்கியமாக, வாகனத்தை திருப்பும்போது ஏற்படும் பாடி ரோலிங் பெரிய அளவில் இந்த காரில் ஏற்படவில்லை. ஆகையால், இந்த காரில் பயணிக்கும் போது மஹிந்திரா காரில்தான் பயணிக்கிறோமா அல்லது பென்ஸ், ஆடி காரில் ஏதேனும் பயணிக்கின்றோமா என்கிற எண்ணமே தோன்றும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்இவி 9இ எலெக்ட்ரிக் காரை சொகுசு கார்களுக்கு இணையான வசதிக் கொண்டதாக தயார் செய்திருக்கின்றது. இதற்கு சான்றாகவே அந்த காரின் ஓட்டும் அனுபவம் இருக்கின்றது. இந்த காரை விரைவில் மஹிந்திரா டெஸ்ட் டிரைவ் செய்ய வழங்க இருக்கின்றது. அப்போது நாங்கள் சொன்னதைவிட மிக சிறந்த ரைடு அனுபவத்தை நீங்கள் இந்த காரில் பெறலாம் என்பதே எங்களின் கருத்தாகும்.