
01/02/2025
Book no:03/ year 2025
இன்று பி.சி.கணேசன் அவர்கள் எழுதிய சிவ தாண்டவம் என்ற நாவலை வாசித்து முடித்தேன்.
இது 1995இல் கங்கை புத்தக நிலையம் மூலம் வெளிவந்த நாவல். இப்பொழுது நடந்து முடிந்த சென்னை புத்தகக் கண்காட்சியில் எனக்கு கிடைத்த மிக முக்கியமான புத்தகமாக கருதுகிறேன். ஏனெனில் 1995இல் முதல் பதிப்பில் வந்த புத்தகம் இது. இன்று நாமோ 2025-ல் இருக்கிறோம். ஏறக்குறைய 30 ஆண்டுகள் பழைய புத்தகம்.
என்னடா புத்தகத்தை பத்தி பேசிட்டு இருக்க புத்தகத்தில் இருக்கிற கதைய பற்றி சொல்லு அப்படித்தானே கேக்குறீங்க. புத்தகம் வேண்டுமானால் 30 வருடம் பழைய புத்தகமாக இருக்கலாம். ஆனால் இதில் இருக்கக்கூடிய கதை இன்றும் என்றும் புதிதாகவும் சுவாரசியமாகவும் இளமையாகவும் இன்பமாகவும் இருக்கும்.
ஆனந்த தாண்டவ புறத்தின் ரயிலடியில் ஆரம்பிக்கும் கதை. ஒவ்வொரு ஊராக பயணித்து வெவ்வேறு மக்களை காட்டி இந்தியாவின் கடல் எல்லைக்கு அழைத்துச் சென்று மீண்டும் அதே ஆனந்த தாண்டவபுரத்தின் ரயிலடியில் நம்மை அழைத்து வந்து திருவேள்விக்குடியில் இருக்கக்கூடிய சிவன் கோயிலுக்குள் நம்மை ஐக்கியம் செய்துவிடும்.
அனைவருக்கும் பரீட்ச்சைய பட்ட ஒரு வரி கதை தான் இந்த 243 பக்க நாவல். ஆனால் 30 வருடம் கழித்து படிக்கக்கூடிய நமக்கு எந்த வகையிலும் கதையில் தொய்வோ அல்லது சுவாரஸ்யம் இன்மையோ இல்லாமல் அழகாக கதையை எடுத்துச் சென்றிருக்கிறார் எழுத்தாளர். தஞ்சாவூர் கும்பகோணம் மாயவரம் பம்பாய் லண்டன் கோவா என இதைச் சுற்றியே கதை நகர்ந்தாலும் கதையில் வரக்கூடிய அனைத்து கதாபாத்திரமும் நம் மனதில் உலகளாவி உலாவி வரும்.
இக்கதையில் ஏறக்குறைய 20 கதாபாத்திரங்கள் இருக்கிறது. கதை முழுக்க இந்த 20 கதாபாத்திரமும் செய்யக்கூடிய வேலைகளும் அதை பின் தொடர்ந்து நடக்கக்கூடிய நிகழ்வுகளும் அற்புதம். ஒரு திருட்டு, அந்த திருட்டை ஒட்டி நடக்கக்கூடிய சம்பவம் என அனைத்தையும் மாலையாக கோர்த்து நம் கரங்களுக்கு விலங்காக பூட்டி விடுகிறார் இந்த எழுத்தாளர். கதையைப் படித்து முடிக்கும் போது தான் கையில் பூட்டப்பட்ட விலங்கின் சாவி கிடைக்கும். அப்போதுதான் அந்தப் புத்தகத்தை நீங்கள் கீழே வைக்க இயலும்.
என்னைப் பொறுத்தவரை தற்காலத்தில் கதை எழுதக்கூடிய அனைவரும் இந்த நாவலை படிக்க வேண்டும் என்று எண்ணுகிறேன். கதை எழுதுபவர்கள் மட்டும் படித்தால் போதுமா என்று கேட்டீர்கள் எனில் இல்லை இல்லை இல்லை.... அனைவரும் இந்த புத்தகத்தை வாசிக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை ஒரு கதையில் எப்பொழுதும் 2S இருக்க வேண்டும் ஒன்று Suspense மற்றொன்று Surprise. இது இரண்டுமே இந்தக் கதையில் இருக்கிறது. நிச்சயம் இந்த புத்தகத்தை வாங்கி படியுங்கள்.
-சிரா.
புத்தகத்தின் பெயர்: சிவதாண்டவம்
எழுத்தாளர்: பி.சி.கணேசன்
பதிப்பாளர்: கங்கை புத்தக நிலையம்
விலை: 37/- ரூபாய்.
#இந்தியன்வரலாற்றுக்களஞ்சியம் #சிரா #மித்ரன் #எழுத்தாளர்_சிரா #மகாரதன் #சோழன்தலைகொண்டவீரபாண்டியன் #செம்பியன்கிழாலடிகள் #சோழஎல்லை #சோழ_சூரியன்_பாகம்_3 #சிவதாண்டவம் #பி_சி_கணேசன் #கங்கைபுத்தகநிலையம்