02/10/2025
#சளி, #இருமல், #காய்ச்சல் #குணமாக #ஆயுர்வேத #கசாயம்
பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து இந்தியாவில் உள்ள ஒரு மருத்துவ முறை தான் ஆயுர்வேதம். இந்த ஆயுர்வேத மருத்துவ முறையில் இயற்கை மூலிகைகளைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த ஆயுர்வேத மருத்துவமானது ஒரு நோய்க்கு சிகிச்சை மட்டும் அளிக்க உதவுவதில்லை. ஒரு சீரான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வதற்கான வழிகளையும் அளிக்கிறது.
இப்படிப்பட்ட ஆயுர்வேத மருத்துவத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மருத்துவத்தின் இந்து கடவுளான தன்வந்திரியின் பிறந்தநாளின் போது ஆயுர்வேத தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆயுர்வேத தினமானது செப்டம்பர் 23 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
தற்போது அவ்வப்போது மழை கடுமையாக பெய்து, காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் நிறைய பேர் அவதிப்பட்டு கொண்டிருக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், வயதானவர்கள் மற்றும் ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் இந்த சளி, இருமல் பிரச்சனைகளை அதிகம் சந்திப்பார்கள்.
இதற்கு அவர்களின் நோயெதிர்ப்பு சக்தி பலவீனமாக இருப்பது தான். இந்த நோயெதிர்ப்பு சக்தியை மழைக்காலங்களில் அதிகரித்தாலே, சளி, இருமலைத் தடுக்கலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மூலிகைகள் பெரிதும் உதவி புரிகின்றன. இந்த மூலிகைகளைக் கொண்டு கசாயத்தை தயாரித்து குடித்து வந்தால், மழைக்காலத்தில் சந்திக்கும் சளி, இருமலில் இருந்து விடுபடலாம்.
இந்த மழைக்கால சளி, இருமல், காய்ச்சல் குணமாக ஆயுர்வேத ஒரு அருமையான மூலிகை கசாயம். அதுவும் இது சுலபமாக கிடைக்கக்கூடிய மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கக்கூடியது என்றும் டாக்டர் கூறினார். இப்போது இந்த கசாயத்தை எப்படி செய்வதென்று காண்போம்.
கசாயம் தயாரிக்க தேவையான பொருட்கள்:
* வெற்றிலை - 1
* கற்பூரவள்ளி இலை - 3
* துளசி இலை - 5-6
* தண்ணீர் - 1 1/2 டம்ளர்
* மிளகு - 2
* கிராம்பு - 2
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தயாரிக்கும் முறை:
* முதலில் வெற்றிலையின் காம்பை நீக்கிவிட்டு, நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின் கற்பூரவள்ளி இலை மற்றும் துளசி இலைகளை நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு இடி உரல் அல்லது மிக்சர் ஜாரில், இந்த இலைகளைப் போட்டு, ஒருமுறை இடித்து அல்லது அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு பாத்திரத்தில் 1 1/2 டம்ளர் நீரை ஊற்றி, அத்துடன் இடித்த இலைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அதன் பின் அதில் மிளகு, கிராம்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் வைத்து, 3/4 டம்ளராக வரும் வரை கொதிக்க வைத்து இறக்க வேண்டும்.
எப்போது குடிக்க வேண்டும்?
* இந்த மூலிகை கசாயத்தை காலை உணவுக்கு 30 நிமிடத்திற்கு முன்பும், இரவு உணவுக்கு 30 நிமிடத்திற்கு முன்பும் குடிக்க வேண்டும்.
* இப்படி தொடர்ந்து 4-5 நாட்கள் குடித்து வர வேண்டும் என்று டாக்டர் கூறினார்.
கசாயம் குடிப்பதால் பெறும் நன்மைகள்
* மழை நேரத்தில் இந்த மூலிகை கசாயத்தை குடித்தால், அது நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளியை முறித்து வெளியேற்றுவதோடு, நுரையீரலை தூய்மைப்படுத்தி ஆரோக்கியமாக செயல்பட வைக்கும்.
* ஆஸ்துமா, சைனஸ் பிரச்சனை, நிமோனியா, நுரையீரல் அழற்சி போன்ற பிரச்சனை இருப்பவர்களுக்கு மழைக்காலத்தில் அந்த நிலைமை தீவிரமாகும் வாய்ப்புள்ளது. இதை இயற்கையாகவே சரிசெய்ய இந்த மூலிகை கசாயம் பெரிதும் உதவி புரியும்.
* காய்ச்சல் உள்ளவர்களும் இந்த கசாயத்தைக் குடிக்கலாம். அதுவும் இந்த கசாயத்தை ஆன்டி-பயாடிக் எடுத்தாலும், குடிக்கலாம். இப்படி குடிக்கும் போது, அது காய்ச்சலைக் குறைக்கும்.