18/05/2020
பாடம் படிப்போம் கேரளாவிடம்!
டாக்டர் க.பழனித்துரை. காந்தி கிராமப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் பேராசிரியர். சமூக நலத்திட்டங்கள் சார்ந்த 82 நூல்களை ஆங்கிலத்திலும், தமிழிலும் எழுதியிருப்பவர்.
126 ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித்திருப்பவர். ஊடகங்களில் 189 கட்டுரைகளை எழுதியிருக்கிற இவர் எழுபது சிறப்பு வெளியீடுகளையும் கொண்டு வந்திருக்கிறார்.
தற்போது ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக் கழகத்தின் வருகைதரு பேராசிரியர். பஞ்சாயத்து ராஜ் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் வெளிவருவதற்குத் தன்னுழைப்பைத் தந்திருப்பவர்.
கொரோனாவில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடம் குறித்து அவருடைய கட்டுரை இதோ:
கொரோனா வைரஸ் தடுப்பில் கேரளா செய்திருக்கும் பணிகளைப் பற்றிய கட்டுரைகள் உலகளாவிய அளவில் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
சிலர் அதை எதோ இடதுசாரி அரசாங்கம் சாதித்தது என்று பேசுவதாக நினைத்து எதிர் வினையும் ஆற்றுகின்றனர். அது ஒரு புரிதலற்ற எதிர் வினையாற்றல்.
கேரளாவில் நடந்த மாற்றங்கள் என்பது ஒரு இருபது அல்லது முப்பது ஆண்டுகால சாதனைகள் அல்ல. இந்தச் சாதனைகளுக்கு ஒரு நூற்றாண்டைத் தாண்டிய வரலாறு உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அடிப்படையில் கேரளாவின் சமத்துவ மற்றும் மேம்பாட்டுச் சாதனைகள் என்பது ஒரு கட்சியின் அரசாங்கச் சாதனைகள் அல்ல. ஒட்டுமொத்த கேரள மக்களின் கூட்டுச் சாதனை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த மாநிலத்தில் ஆட்சி என்பது மாறி மாறி இடதுசாரி இயக்கமும் காங்கிரஸ் கட்சியும் பொருளாதார சமத்துவத்திற்கும், சமூக சமத்துவத்திற்கும் பாடுபட்டிருக்கின்றன என்பதுதான் வரலாறு. அதை யாரும் மறைக்கவோ அல்லது மறுக்கவோ முடியாது.
அம்பேத்கார் கூறியதுபோல் சமூக சமத்துவம் இல்லாது அரசியல் சமத்துவத்தால் நமக்கு எந்த உபயோகமும் இல்லை என்பதை உணர்ந்தவர்கள்தான் கேரளாவின் அரசியல் மற்றும் சமூக இயக்கத் தலைவர்கள் மக்கள் இயக்கம் கட்ட ஆரம்பித்தார்கள்.
1930 ஆம் ஆண்டு வைக்கம் போராட்டத்தில் ஆரம்பித்து, அதனைத் தொடர்ந்து 1950 மற்றும் 1960-களில் விவசாயிகள் மற்றும் உழைப்பாளிகள் இயக்கங்களை நடத்தி சமூக சமத்துவத்தையும், நிலச் சீர்திருத்தத்தின் மூலம் பொருளாதார சமத்துவத்திற்கும் அடிகோலினர்.
அத்துடன் அவர்கள் நின்று விடவில்லை. தொடர்ந்து 1970 மற்றும் 1980-களில் எழுத்தறிவு மற்றும் அறிவியல் இயக்கங்களை நடத்தி மக்களின் சிந்தனைப் போக்கிலும் நடத்தையிலும் மாபெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.
அதன் பின் மக்களுக்கு அதிகாரமளிக்கவும் மக்களை வளர்ச்சிப் பணிகளில் பங்கேற்கச் செய்யவும் மக்கள் திட்டமிடுதலுக்கான இயக்கத்தை 1990-களில் நடத்தி 73வது மற்றும் 74வது அரசியல் சாசன சட்டத் திருத்தங்களை நடைமுறைப்படுத்துவதில் முன்னணி மாநிலம் என உலகளவில் பெயர் வாங்கிவிட்டது கேரளா.
ஒவ்வொரு பத்தாண்டும் ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்கி பொதுமக்கள் சிந்தனைப் போக்கிலும் மக்களின் பொதுச் செயல்பாடுகளிலும் மாற்றங்களைக் கொண்டு வந்தனர் கேரள அரசியல் இயக்கங்கள்.
இந்தச் செயல்பாடுகளில் ஒட்டுமொத்த கேரளமும் செயல்பட்டுள்ளது என்பதை யாரும் மறுக்க இயலாது.
இதன் விளைவு எந்தச் செயல்பாடும் அரசாங்கம் செய்யட்டும் நாம் பார்வையாளராக இருப்போம், அரசு தரும் பயன்களைப் பெற்று பயனாளிகளாக இருப்போம் என்ற சராசரி சிந்தனைப் போக்கிலிருந்து மாறுபட்டவர்களாக கேரள மக்கள் அரசாங்கத்தின் பங்காளிகளாக வளர்க்கப்பட்டு விட்டனர்.
இதன் விளைவுதான் இந்தக் கொரோனா நோய் தடுப்பில் கேரளா என்பது உலகுக்கு வழிகாட்டும் ஒரு சமுதாயமாக எழுந்து நிற்கிறது.
அங்கு நடப்பது ஒரு கட்சியின் ஆட்சியாக இருக்கலாம். ஆனால் அரசியல் என்பது மக்கள் நலன் சார்ந்த மக்கள் அரசியலாகவே நடந்து வருகிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
நம் தமிழ்நாடு போல் தலைவர்களுக்கு ஏங்கி நிற்பதல்ல கேரளக் கலாச்சாரம். அங்கு கட்சிகளின் உறுப்பினர்கள் முடிவு செய்யும் அரசியலாக செயல்பட்டு வருகிறது.
1930-ல் துவங்கிய வைக்கம் போராட்டத்திலிருந்து 1990-ல் நடந்த மக்கள் திட்டமிடுதலுக்கான இயக்கம் வரை அனைத்திலும் எல்லாக் கட்சிகளின் பங்களிப்பும் இருந்துள்ளது.
இந்தியாவிலேயே அதிக அதிகாரங்களைக் கொண்ட உள்ளாட்சியை கேரளா கொண்டுள்ளது என்பதையும் உலகம் பாராட்டுகிறது.
இதற்கு இடதுசாரிகளுடன் காங்கிரஸ் கைகோர்த்து செயல்பட்டது ஒரு செய்தியை நமக்குத் தருகிறது. அது வேறொன்றும் அல்ல, காந்தியச் சிந்தனையும் மார்க்ஸ்சியச் சிந்தனையும் ஒன்றிணையும் வாய்ப்பு இருக்கிறது என்பதை நமக்கு தெளிவுபடுத்துகிறது.
இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வந்தபோதும், அதிகாரப் பரவல் என்பது தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு உள்ளாட்சிகள் வலுவாக்கப்பட்டுள்ளன.
அரசியல் என்பது கேரளத்தில் மக்கள் பிடியில் அகப்பட்டிருக்கிறது, கட்சிகளின் பிடியில் அல்ல. எனவே தான் அங்கு மக்கள் அரசியலாகவே நடத்தப்படுகிறது.
அங்கு தொடர்ந்து ஆட்சியில் கட்சிகள் மாறினாலும் மக்களுக்கான அடிப்படை நலன்களை வழங்கி மக்களுடன் ஒரு பந்தத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டது அரசாங்கம்.
கேரளத்து மக்கள் அரசு நிறுவனங்களை நம்புகின்ற அளவுக்கு அந்தப் பொது நிறுவனங்கள் செயல்படுகின்றன. அங்கு ஊழியர் சங்கங்கள் எல்லா இடத்தையும் விட அதிகமாகத்தான் இருக்கின்றன.
அரசு நிறுவனங்கள் என்பது மக்களுக்கு சேவை செய்ய உருவாக்கப்பட்டது, அதைக் கண்காணிக்க வேண்டிய பொறுப்பு தம்மிடம் இருப்பதாக உணர்ந்து தொடர்ந்து அரசு நிறுவனங்களை வலுப்படுத்தி தங்களுக்குத் தேவையான சேவைகளை பெற்றுக் கொள்கின்றனர் கேரள மக்கள்.
அதேபோல் கேரளத்தில் உள்ள அரசு அலுவலர்கள் எவ்வளவு அடிப்படையில் சங்கவாதிகளாக இருந்தபோதும், மக்களுக்கு பணியாற்றும்போது, மக்களை பயனாளிக் கூட்டமாகப் பார்த்து இயங்குவது கிடையாது.
ஏனென்றால் அங்கு மக்களின் மேம்பாடு என்பதை அடிப்படை உரிமையாக்கி செயல்பட வைத்துவிட்ட காரணத்தால்.
கல்வியும் சுகாதாரமும் கேரள மக்களுடைய இரண்டு கண்கள். அவைகளை அரசு தரவேண்டியது அடிப்படைக் கடமைகள் என்பதை மக்கள் உணர்ந்த காரணத்தால்தான் அந்த இரண்டு பணியும் தரமான பணியாக அரசுப் பள்ளிகளும் அரசு மருத்துவமனைகளும் செய்து வருகின்றன.
ஒரு வித்தியாசமான செயல்பாட்டை கேரள அரசுகள் கேரளத்தில் கொண்டு வந்துள்ளது. அதாவது கேரள அரசு நிறுவனங்களை மக்களை நோக்கி மனிதத்துவமாக்கி (Humanizing) உள்ளது.
அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் உள்ள உறவு என்பது ஒரு சமூக பந்தமாக (Social Contract) உருவாக்கப்பட்டுள்ளது. அங்கு தமிழகத்தில் உள்ளதுபோல் கொடையாளர் பயனாளி உறவுமுறை இல்லை.
ஏனென்றால் தமிழகத்தில் நடப்பதுபோல் அரசியலுக்கான மக்கள் தயாரிப்பை மட்டும் கேரள அரசியல் கட்சிகள் செய்யவில்லை. ஒட்டுமொத்த சமூக பொருளாதார அரசியல் மாற்றத்திற்கான மக்கள் தயாரிப்பு செய்துவிட்டனர்.
தேர்தலின்போது மட்டுமே அந்த அரசியல் திரட்டும், மக்கள் அரசியல் தயாரிப்பும் நடைபெறுகின்றன கேரளத்தில். எனவே கேரளாவைப் பற்றி நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் நம் தமிழகத்திற்கும் சில படிப்பினைகள் கிடைக்கும்.
இன்று கேரளாவில் தினந்தோறும் அந்த மாநில முதல்வர் ஊடகங்களைச் சந்திக்கிறார் என்றால், அது பொதுமக்களுக்கு செய்திகளைத் தருவதற்காக மட்டுமல்ல, கள நிலவரத்தை அறிந்து தங்கள் செயல்பாடுகளை சீராய்வு செய்து பார்ப்பதற்கும் சேர்த்தே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அது மட்டுமல்ல அங்கு எந்த ஒளிவு மறைவும் கிடையாது என்பதனால் அச்சமின்றி எல்லா விவாதங்களையும் எந்த கோபமும் இன்றி எதார்த்த நிலையில் எதிர் கொள்கிறார் கேரள முதலமைச்சர்.
இந்த நேரத்தில் இங்கு நடப்பதுபோல் அங்கு அரசியல் நடைபெறவில்லை. ஏனென்றால் அங்கு இயங்குவது இடதுசாரி அரசாங்கம் மட்டுமல்ல. எல்லாக் கட்சிகளைச் சேர்ந்த உள்ளாட்சி அமைப்புக்கள் மற்றும் இரண்டு லட்சம் தன்னார்வத் தொண்டர்கள் இணைந்து நடத்தும் ஓர் மக்கள் செயல்பாடு தான் நாம் களத்தில் காணுகின்றோம் கேரளாவில்.
கேரளாவில் இந்த நேரத்தில் நடைபெறுவது மற்ற மாநிலங்களில் நடைபெறுவதுபோல் அரசு ஆணையிடுகிறது, மக்கள் கேட்டு நடக்க வேண்டும் என்ற கலாச்சாரம் அல்ல, அரசுடன் சேர்ந்து குடிமக்களாக கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயல்பாடுகளில் பங்கேற்புச் செயல்பாடுகள்.
அந்த அளவுக்கு குடிமக்கள் கலாச்சாரம் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
அங்கு, சுயஉதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உள்ளாட்சிகளுடன் இணைந்து, 14000 சமூக உணவு தயாரிப்புக் கூடங்களை வைத்து 3 லட்சம் பேருக்கு உணவு தயாரித்து வழங்குகின்றனர்.
அது மட்டுமல்ல உள்ளாட்சியில் உள்ள மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் களத்தில் மக்களைக் காக்கும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர். அடிப்படையில் நம் அரசியல் கட்சிகள் ஒரு பாடத்தை அவர்களிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
மக்கள் மேம்பாட்டுக்காக மக்களைத் திரட்டுவதில் கட்சிகள் அரசியல் செய்வதில்லை. அதில் எல்லாக் கட்சிகளும் இணைந்து கொள்கின்றன.
கேரள உள்ளாட்சியில் இடதுசாரிகள் மட்டுமே இடம்பெறவில்லை, காங்கிரஸ் கட்சியும் இருக்கிறது. ஏன் பி.ஜே.பி-கூட இயங்குகிறது. இவைகள் அனைத்தும் மக்கள் மேம்பாட்டுச் செயல்பாடுகளில் களத்தில் உள்ளன.
பொதுவாக அந்த சமூகப் பொருளாதார மேம்பாட்டு இயக்கங்கள் நடத்தித்தான் கேரள மக்களின் குடிமைப் பண்புகளை வளர்த்துள்ளனர்.
ஆனால் நாம் இன்னும் பயனாளிகளை வளர்ப்பதிலேயே நம் அரசியல் கட்சிகள் காலத்தைத் தள்ளி வருகின்றன. கேரளத்தில் நடப்பது இடதுசாரி ஆட்சி மட்டுமல்ல மேம்பாட்டுக்கான ஒரு மக்கள் இயக்கம்.
அதில் விவாதங்கள் உண்டு, விமர்சனங்கள் உண்டு, கருத்து மோதல்கள் உண்டு. தவறுகளை ஒப்புக்கொள்ள ஆட்சியில் உள்ளவர்களும், எதிர்க் கட்சிக்காரர்களும் எந்த சங்கடமும் படுவதில்லை.
இதற்கு ஒரு உதாரணம் கேரளத்தில் உள்ள பட்டியல் இன மக்களின் வாழ்க்கைச் சூழல். ஏன் இந்த சமூகத்தின் வாழ்நிலை இவ்வளவு தாழ்நிலையில் உள்ளது என்று கேட்டபோது, தவறுதான், சரி செய்து விடுவோம் என்று கூறி செயல்பட ஆரம்பித்துள்ளனர்.
அதேபோல் வருமான ஏற்றத்தாழ்வு அதிகமாக உள்ள மாநிலமாக கேரளா உள்ளதாக கூறப்படுகிறதே என்று கேட்பதற்கும் இல்லை என்று மழுப்பலான பதில் கூறாமல் ஆய்வு செய்து ஆவன செய்கின்றோம் என்று ஆட்சியாளர் கூறுவதற்கான தைரியம் அவர்களிடம் உள்ளது.
நாம் கேரளாவுக்குப் பக்கத்தில்தான் வாழ்கிறோம் நாமும் பொருளாதாரத்தில் வளர்ந்துள்ளோம், சமூக மேம்பாட்டில் எவ்வளவோ உயர்ந்துள்ளோம்.
ஆனால் குடிமக்கள் கலாச்சாரத்தை உருவாக்குவதில், சமூக சமத்துவத்தைக் கொண்டு வருவதில் பங்கேற்பு ஜனநாயகத்தை உருவாக்குவதில், விவாத ஜனநாயகத்தை உருவாக்குவதில், மேம்பாட்டுச் செயல்பாடுகளில் மக்களை பங்கெடுக்க வைப்பதில்,
உள்ளாட்சியை அதிகாரப்படுத்துவதில், நாம் பின்தங்கியுள்ளோம் என்பதை நாம் தயக்கமில்லாமல் ஏற்றுக்கொண்டு ஒரு மேம்பாட்டு அரசியலுக்கான முன்னெடுப்பை ஆளுங்கட்சி மட்டுமல்ல அனைத்துக் கட்சிகளும் செய்ய வேண்டும்.
கேரளாவில் நடப்பதை கேரள முதல்வரை பாராட்டுவதற்காக அல்ல, கேரள மக்கள் செயல்பாட்டை முன்னெடுத்து மற்ற மாநிலங்களுக்கு மட்டுமல்ல, மற்ற நாடுகளுக்கும் வழிகாட்டுவதற்காக என்பதை நாம் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.
-டாக்டர் க.பழனித்துரை
#வைக்கம் #பிஜேபி #இடதுசாரி_அரசு #பினராயி_விஜயன் #ஷைலஜா #சுகாதாரத்துறை #காங்கிரஸ் #அம்பேத்கர் #கொரோனா #வைரஸ் #கேரளா #டாக்டர்_க_பழனித்துரை #காந்தி_கிராமப்_பல்கலைக்_கழகம் #கொலோன்_பல்கலைக்_கழகம்