News South India

News South India News South India

01/08/2026

2019ஆம் ஆண்டு இலங்கையை உலுக்கிய ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கில், முன்னாள் காவல்துறைத் தலைவர் பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ ஆகியோருக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

உளவுத்துறையிலிருந்து தொடர்ந்து விடுக்கப்பட்ட எச்சரிக்கைகளை உரிய முறையில் எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டியதே இந்த தீர்ப்புக்குக் காரணம் என விசாரணைக் குழுவின் அறிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.

எனினும், இலங்கையில் தற்போது மரண தண்டனை நடைமுறையில் அமல்படுத்தப்படாததால், இந்த தண்டனை நடைமுறையில் ஆயுள் தண்டனைக்கு இணையாக இருக்கும்.

குறிப்பாக, 2019 ஈஸ்டர் குண்டுவெடிப்பு தாக்குதல்களில் 279 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். இந்த வழக்கின் தீர்ப்பு இலங்கையில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

01/08/2026

கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டு 2026 தொடரில் இந்திய வீரர்கள் தொடர்ந்து பதக்கங்களை குவித்து அசத்தி வருகின்றனர்.

ஆண்கள் டி47 100 மீட்டர் பாரா தடகளத்தில், திலிப் மகாது கவித் 10.71 விநாடிகளில் பந்தயத்தை முடித்து காமன்வெல்த் சாதனை நேரத்துடன் தங்கப் பதக்கம் வென்றார். முகமது பாசில் மோர்சிங்கனகத் 10.83 விநாடிகளில் இலக்கை எட்டி வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு வரலாற்று 1–2 வெற்றியை பெற்றுத் தந்தார். மேலும், காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற முதல் இந்திய ஆண் பாரா தடகள வீரர் என்ற பெருமையையும் திலிப் மகாது கவித் பெற்றார்.

ஜூடோவில் இந்தியாவுக்கு ஒரே நாளில் 2 தங்கப் பதக்கங்கள் கிடைத்தன. மகளிர் 48 கிலோ எடைப்பிரிவில் அஷ்மிதா தங்கம் வென்றதுடன், ஆடவர் பிரிவில் ஹரீஷ் சிங்வும் தங்கம் கைப்பற்றினார்.

ஈட்டி எறிதலில், இலங்கையின் ரமேஷ் தாரங்கா பத்திரகே தங்கம் வென்ற நிலையில், இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கமும், யாஷ் வீர் சிங் வெண்கலப் பதக்கமும் வென்று இந்தியாவுக்கு மேலும் பெருமை சேர்த்தனர்.

110 கிலோ பளுதூக்கும் போட்டியில், இந்திய வீரர் லவ்பிரீத் சிங் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

டிரிபிள் ஜம்ப் பிரிவில் தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவேல் (16.41 மீ.) மற்றும் செல்வபிரவு திருமாறன் (16.26 மீ.) ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

01/08/2026

சென்னை கே.கே. நகர் காவல் நிலைய குற்றப்பிரிவில் பணியாற்றி வந்த காவலர், இன்று உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுவதையடுத்து, சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழப்புக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அதன் முடிவின் அடிப்படையில் கூடுதல் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

01/08/2026

தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட் 1) முதல் வீடு வீடாகச் சென்று மக்கள் தொகை கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டமாக, வீடுகளில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் தொடர்பாக 33 கேள்விகள் கேட்கப்பட உள்ளன.

தமிழ்நாட்டில் ஆகஸ்ட் 30 வரை நடைபெறும் இந்த கணக்கெடுப்புப் பணியில் 1.15 லட்சம் கணக்கெடுப்பாளர்கள் மற்றும் 19,000 மேற்பார்வையாளர்கள் ஈடுபடுகின்றனர். இந்த கணக்கெடுப்பு, நாட்டின் திட்டமிடல் மற்றும் நலத்திட்டங்களை மேம்படுத்துவதற்கான முக்கிய தரவுகளை சேகரிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்படுகிறது.

01/08/2026

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசின் பிடிவாதமான அணுகுமுறையை கடுமையாக விமர்சித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "ஒரு சொட்டு நீர் கூட தரக் கூடாது என்ற மனநிலையில் இருக்கும் கர்நாடகத்திடம் பேசி எதை சாதிக்கப் போறீங்க?" என கேள்வி எழுப்பினார்.

மேலும், கர்நாடக அரசு திட்டமிட்டு காவிரி பிரச்சினையில் பதற்றத்தை உருவாக்குவதாகவும், இதை தமிழக அரசு சட்டப்பூர்வமாக அணுக வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காவிரி விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தை உடனடியாக கூட்ட வேண்டும் என்றும், அதில் அரசுக்கு என்ன தயக்கம் என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே, கர்நாடக முதல்வர் தமிழக முதல்வரை கர்நாடகா வர வேண்டாம் என கூறியிருப்பது தமிழகத்திற்கு அவமதிப்பாக இருப்பதாக மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி எம்எல்ஏவும் விமர்சித்துள்ளார்.

#காவிரி #அன்புமணிராமதாஸ் #தமிழகம் #கர்நாடகம் #தமிழகஅரசு #அனைத்துக்கட்சிகூட்டம்

01/08/2026

மேகதாது விவகாரம் தொடர்பாக நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை முன்னிட்டு, "கர்நாடகத்தில் தற்போதைய சூழல் சரியில்லை; வேறு ஒரு தேதியில் சந்திக்கலாம்" என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம் என்றும், தமிழ்நாட்டுக்கு தற்போது தண்ணீர் திறக்க இயலாது என்றும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இரு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களும் ஆலோசனை நடத்தியுள்ளதாகவும், தமிழ்நாடு முதலமைச்சரும் நானும் தத்தமது மாநில நலனில் அக்கறையுடன் செயல்படுகிறோம் என்றும் டி.கே. சிவக்குமார் தெரிவித்தார்.

அணைகளின் தற்போதைய நீர்மட்டம் குறித்து பேசிய அவர், ஹாரங்கி – 95%, கபிணி – 83%, கே.ஆர்.எஸ் – 36%, ஹேமாவதி – 61% நீர் இருப்பு உள்ளதாகவும் கூறினார்.

01/08/2026

டாஸ்மாக் மதுபான கொள்முதல் மற்றும் டெண்டர்களில் முறைகேடு நடைபெற்றதாகக் கூறப்படும் வழக்கில், அமைச்சர் செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் உள்ளிட்ட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை எப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளது. முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரை, முருகன், பன்னீர்செல்வம் மற்றும் செந்தில் பாலாஜியின் முன்னாள் தனி உதவியாளர் பாஸ்கர் ஆகியோரும் வழக்கில் இடம்பெற்றுள்ளனர்.

2020 முதல் 2025 வரை விதிமுறைகளை மீறி அதிகாரிகளுடன் இணைந்து ரூ.17.27 கோடி முறைகேடு நடந்ததாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்த வழக்கில் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. விசாரணை ஆரம்ப நிலையில் இருப்பதால், ரூ.100 கோடி வரை முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும், விரிவான விசாரணை அவசியம் என்றும் அரசுத் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது. மேலும், முறைகேடு மற்றும் அரசுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக ஆதாரங்கள் உள்ளதாகவும், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்கத் தேவையுள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரத்தில், முதல் தகவல் அறிக்கையில் செந்தில் பாலாஜிக்கு எதிராக நேரடி குற்றச்சாட்டு இல்லை; டாஸ்மாக் அதிகாரிகள் செய்ததாகக் கூறப்படும் செயல்களுக்கு செந்தில் பாலாஜிக்கு தொடர்பில்லை என்று அவரது தரப்பு விளக்கம் அளித்துள்ளது.

டாஸ்மாக் முறைகேடு வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய கூட்டாளிகளாகக் கூறப்படும் கார்த்திக் மற்றும் ரமேஷை லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்துள்ளனர்.

முன்னதாக, தவெக ஆட்சிக் கவிழ்ப்பு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்திருந்த இருவரையும், தற்போது டாஸ்மாக் முறைகேடு தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் மீண்டும் கைது செய்துள்ளனர்.

01/08/2026

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள பூம்பாறை பகுதியில் விவசாயம் செய்து வந்த ராமர், நேற்று இரவு கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது பெற்றோர் பூம்பாறை ஊராட்சியில் தூய்மை காவலர்களாக பணியாற்றி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கொடைக்கானல் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறை அருகே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. ராமர் கொலை வழக்கில் உண்மை குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யவும், உயிரிழந்த ராமரின் பெற்றோர்களை மிரட்டுவதாக கூறப்படும் சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

#கொடைக்கானல் #பூம்பாறை #ராமர்கொலை #திண்டுக்கல்

01/08/2026

நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், திருக்குறுங்குடி நீரோடையில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, மலைநம்பி கோயிலுக்கு பக்தர்கள் செல்வதற்கும், நீரோடையில் குளிப்பதற்கும் மறு உத்தரவு வரும் வரை வனத்துறையினர் தடை விதித்துள்ளனர்.

இதனிடையே, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் 200 மி.மீ.க்கு மேல் மழை பதிவாக வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

மேலும், தென்காசி மாவட்டம் குற்றாலம், செங்கோட்டை, புளியரை, மேக்கரை, கடனாநதி, ராமநதி உள்ளிட்ட பகுதிகளில் மிக கனமழை பதிவாகியுள்ளது. இதன் காரணமாக குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலாப் பயணிகள் குளிக்க இரண்டாவது நாளாக தடை தொடர்கிறது.

#திருக்குறுங்குடி #மலைநம்பிகோயில் #நெல்லை #தென்காசி #கன்னியாகுமரி #குற்றாலம் #கனமழை #வெள்ளப்பெருக்கு

01/08/2026

கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். வாகமண், ஏலப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் வீடுகள் மீது மண்சரிவு ஏற்பட்ட நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும், பம்பை மற்றும் கக்கட்டார் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், இடுக்கியின் பல பகுதிகளில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.

கனமழை தொடரும் அபாயம் காரணமாக அடுத்த சில மணி நேரங்களுக்கு 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து கோட்டயம், பத்தனம்திட்டா உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளத்துடன் குஜராத் மாநிலத்திற்கும் இன்று அதிக கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Address

Saravanampatty
Coimbatore
641035

Alerts

Be the first to know and let us send you an email when News South India posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share