
05/11/2022
திண்டுக்கல்லில் தமிழக ஆசிரியர் கூட்டணி சாணார்பட்டி வட்டார கிளை சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா, தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, ஆசிரியர் பணியில் 25 ஆண்டுகள் பணியாற்றி வெள்ளி விழா காணும் ஆசிரியர்களுக்கு பாராட்டு, என முப்பெரும் விழா திண்டுக்கல் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டாரத் தலைவர் கார்த்திகேயன் தலைமை வகித்தார்.
மகளிர் அணி செயலாளர் ரீத்தா மேரி முன்னிலை வகித்தார். வட்டாரச் செயலாளர் கோபால் வரவேற்புரையும், வட்டாரப் பொருளாளர் ஜெயச்சந்திரன் நிதி நிலை அறிக்கை வாசித்தார்.
இதில் மாநில தலைவர் நம்பிராஜ், பொதுச் செயலாளர் வின்சென்ட் பால்ராஜ், மாநில பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் பேசினர். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற 8 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழும், தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற 1 ஆசிரியருக்கு கேடயம் வழங்கியும், ஆசிரியர் பணியில் 25 ஆண்டுகள் பணியாற்றிய 64 ஆசிரியர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி பொன்னாடை அணிவித்து தங்கம் நாணயம் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்ச்சியில் திண்டுக்கல் வருவாய் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜான் பீட்டர் திண்டுக்கல் முருகேசன், சாணார்பட்டி வட்டார கல்வி அலுவலர் முத்தம்மாள், ஜான்சன், வட்டாரத் துணைச் செயலாளர் ஆர்டர் ஜீவராஜி நன்றியுரை வழங்கினார். முப்பெரும் விழாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.