15/09/2025
திண்டுக்கல் மாவட்டத்தின் வரலாறு, வளர்ச்சியை தெரிந்து கொள்வோம்.♥️😍😍 & 🔥
#வரலாறு: ஆரம்ப கட்டத்தில் திண்டுக்கல் மதுரை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. திண்டுக்கல் பகுதிக்கு அதிகாரிகளால் தனி கவனம் செலுத்த முடியாதநிலை இருந்தது.இதனால் திண்டுக்கல் தனி மாவட்ட கோரிக்கை எழுந்தது. 1985 செப்.,15 ல் அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால் திண்டுக்கல் தனி மாவட்டமானது.
திண்டுக்கல், பழநி, நிலக்கோட்டை, கொடைக்கானல், நத்தம், வேடசந்தூர் ஆகிய 6 தாலுகாக்கள் இருந்தன.
முதல் கலெக்டராக மாதவன்நம்பியார் இருந்தார். துவக்கத்தில் அண்ணா மாவட்டமாக இருந்த திண்டுக்கல் 1986 மார்ச் 27 ல் காயிதேமில்லத் ஆகவும், 1996 ல் மன்னர் திருமலை ஆகவும் பெயர் மாற்றியது. 1997 ஜூலையில் இருந்து திண்டுக்கல் மாவட்டமாக அழைக்கப்படுகிறது.
#அமைப்பு: திண்டுக்கல் கடல் மட்டத்தில் இருந்து 280.11 மீ உயரத்தில் உள்ளது. மொத்தம் 6,266.64 சதுர கி.மீ., பரப்பில் விவசாய நிலம் 2,47,619 எக்டேர். காடுகள் 1,28,923 எக்டேர். தரிசு நிலங்கள் 36,210 எக்டேர். மேய்ச்சல் நிலம் 6,946 எக்டேர். உள்ளது.
மாவட்டத்தில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, உருது, சவுராஷ்டிரம், கன்னடம் பேசும் மக்களும் வசிக்கின்றனர்.
#நிர்வாகம்: 1886 நவ.,1 ல் உதயமான திண்டுக்கல் நகராட்சி, 2014 பிப்.,19 முதல் மாநகராட்சியாக மாறியது. 1996 ஜன.,2 ல் பழநியில் இருந்து பிரிந்து ஒட்டன்சத்திரம் தனி தாலுகாவானது. 2007 அக்.,31 ல் திண்டுக்கல்லில் இருந்து பிரிந்து ஆத்தூர் தனி தாலுகாவானது. 2014 பிப்.,12 ல் திண்டுக்கல் தாலுகா கிழக்கு, மேற்கு என, 2 ஆக பிரிக்கப்பட்டன. தற்போது 9 தாலுகாக்கள் உள்ளன.
#மலைக்கோட்டை: 350 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கோட்டை இன்றும் அழியாத நினைவு சின்னமாக கம்பீரமாக நிலைத்து நிற்கிறது. மலைக்கோட்டை ஏறினால் கடற்காற்றை அனுபவித்தது போன்று இருக்கும்.
#சிறுமலை: இது திண்டுக்கல்லில் இருந்து 25 கி.மீ., தூரத்தில் உள்ளது. தரைமட்டத்தில் இருந்து 1,500 மீட்டர் உயரத்தில் உள்ளது. மூலிகை காற்றை சுவாசித்தபடியே அடிவாரத்தில் இருந்து 30 நிமிடங்களில் சிறுமலையை அடையலாம்.
#கொடைக்கானல்: மலைகளின் இளவரசியான கொடைக்கானல் கடல் மட்டத்தில் இருந்து 7,000 அடிக்கு மேல் உள்ளது. வானிலை ஆராய்ச்சி நிலையம் உள்ளது.
ஆண்டுதோறும் கோடை விழா கொண்டாப்படுகிறது. சில்வர் காஸ்கேட், பிரையண்ட் பூங்கா, டம் டம் பால்ஸ், தொப்பிதூக்கி பாறை, பேரிஜம் லேக்,வெள்ளிநீர் வீழ்ச்சி, கொடைக்கானல் ஏரி, குணாகுகை போன்றவை ரசிக்கும் பகுதிகளாக உள்ளன.