11/06/2025
மறை நீர்
---------------
ஒரு காபி தயாரிக்க எவ்வளவு தண்ணீர் செலவாகும் சொல்லுங்க பாப்போம்
முக்கால் டம்ளர் பாலுக்கு கால் டம்ளர் தண்ணீர்..இவ்வளவு தானே..என்று நாம் அசால்ட்டாக பதில் சொல்கிறோம்.(மனசிற்குள்)
ஒரு டம்ளர் காபி தயாரிக்க 140 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது
என்கிறார்.
என்னது நூத்தி நாற்பது லிட்டர் தண்ணியா ? பிரின்டிங் மிஸ்டேக் எதுவும் இருக்கோ என்று மூக்குக்கண்ணாடியை துடைத்து விட்டுப்பார்த்தாலும் அதே தான் இருக்கு.
எப்படி ? காபி பயிராக ஆகும் தண்ணீர் செலவில் தொடங்கி காபி குடிச்ச டம்ளரை கழுவி ஊற்றும் தண்ணீர் வரை கணக்கீடு செய்தால் 140 லிட்டர் தண்ணீர் தேவைப்படும்.
இங்கே ஆரம்பித்த அதிர்ச்சி நூலைப்படித்து முடிக்கும் வரையிலும் தொடர்கிறது.
நாம் பயன்படுத்துகின்ற பொருட்கள் அனைத்திலும் மறைந்திருக்கும் நீர், மறை நீர்.
ஒரு கிலோ அரிசி உற்பத்தி செய்ய - 2500 லிட்டர்
ஒரு ஜீன்ஸ் பேண்ட் தயாரிக்க - 10000 லிட்டர்
ஒரு கார் தயாரிக்க - 4 லட்சம் லிட்டர்
ஒரு கிலோ தோலை பதனிட்டு செருப்பு தயாரிக்க - 17000 லிட்டர்
பருத்தி ஆடை ஒன்று தயாரிக்க -2495 லிட்டர்
ராக்கெட் தயாரிக்கும் பணக்கார நாட்டிற்கு ஒரு ஜட்டி தயாரிக்க தெரியாதா ?
அவர்கள் நாட்டில் கார் தயாரிக்க இடம் இல்லாமலா நம்ம நாட்டிற்கு வருகிறான் ?
இங்கே குறைந்த சம்பளத்திற்கு மனித உழைப்பு கிடைக்கும் என்பது மட்டும் அல்ல, இங்கே தண்ணீர் இலவசம்..எவ்வளவு தண்ணீரையும் இஷ்டம் போல பயன்படுத்தலாம் என்பதும் தான் பிரதான காரணம் என்ற மகத்தான உண்மையை சொல்கிறார் ஆசிரியர்.
தங்கள் நாட்டின் நீர்வளத்தை பாதுகாத்துக்கொண்டு, இந்தியா போன்ற வளரும் நாடுகளின் நீர் வளத்தை எப்படி கொள்ளையடிக்கிறார்கள் என்பதைப்படிக்கும் போது நெஞ்சு கொதிக்கிறது.
இந்த பூமி மனித இனத்திற்கு மட்டுமா சொந்தம் ? எல்லா உயிர்களுக்கும் தானே ? நம்மால் உற்பத்தி செய்ய இயலாத தண்ணீரை விற்பனை செய்யும் உரிமையை யார் கொடுத்தது என்ற கேள்வி மிகுந்த அர்த்தம் பொதிந்தது.
பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் தண்ணீரை உறிஞ்சி எடுக்க அனுமதி கொடுக்கப்படுகிறது. நெல்லையில் கோக்,பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணி நீரை எடுக்க அனுமதிக்கப்பட்டபோது, எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள், மறியல் போராட்டங்கள் நடத்தினோம். ஒரு பாச்சாவும் பலிக்கவில்லை. இருநூறு பேரும், முன்னூறு பேரும் போராடி எதுக்கு ?
உள்ளூர் மக்கள் பங்கேற்கவில்லையே ?
இப்போது ஒரு பாட்டில் 20 ரூபாய்க்கு விற்கிறான். ரயிலில் போகும்போது, சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டு மடக் மடக் கென்று குடித்து விட்டு, ஜன்னல் பக்கத்தில் உள்ள வலைப்பையில் தொங்கவிட்டு விட்டு சுகமாய் கண்ணயர்கிறோம். நம்ம ஊர் தண்ணீரில் ஏழு லிட்டர் எடுத்து அதை ஒரு லிட்டராக மாற்றி காசுக்கு விற்கும் கொடுமையை என்று உணரப்போகிறோம் ?
அடுத்து மழைக்காடுகள் குறித்து ..
காடு என்பதை மனிதன் உருவாக்க முடியும். இதை Forest என்று சொல்கிறோம். வனம் என்பது தன்னியல்பில் உயிர்கள் தோன்றிய காலத்திலிருந்து செழித்து வளர்ந்தது. இதை jungle என்று சொல்கிறார்கள். இதில் சூரிய ஒளியின் ஊடுருவல் இருக்காது. ஒருநாளும் மனிதனால் உருவாக்க முடியாதது வனம் என்று வித்தியாசப்படுத்திக்காட்டி வனாந்திரத்திற்குள் நம் கைப்பிடித்து அழைத்து செல்கிறார்.
இந்த வனம் தான் மழையை தருகிறது. அந்த வனத்தை நாம் அழித்துக்கொண்டிருக்கிறோம். எழுத்தாளர் கி.ரா.சொல்வார் : மனிதன் என்று கோடாரியை தூக்கி மரத்தை வீழ்த்த தொடங்கினானோ அன்றே, மழை என்ற குழந்தை நிலத்தில் இறங்கும் பச்சைப்படிகளை அகற்ற ஆரம்பித்து விட்டான்.
மரங்களை வெட்டி காகிதம் செய்து அதில் மரத்தை வெட்டாதே என எழுதும் மாபெரும் அறிவாளி சமூகம் தான் நாம் என்று கேலி செய்கிறார்.
மழைக்காடுகளை அழித்து, தேயிலை தோட்டங்களை உருவாக்கிய மனிதனுக்கு தெரியவில்லை, மழைக்காடுகள் மட்டுமே மழை தரும் என்ற உண்மை என்று ஓரிடத்தில் சொல்கிறார். வனத்தைப்பற்றிய அறிவோ,அக்கறையோ இல்லாத நம்மால் வனத்தைப்பாதுகாக்க முடியுமா ? வனத்தைப்பற்றி நன்கு அறிந்த பழங்குடியினரின் ஒத்துழைப்பின்றி இது சாத்தியமில்லை என்று கூறுகிறார்.
கென்யாவை சேர்ந்த வங்காரி மாத்தாய் என்ற பெண்மணியை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். 20 மில்லியன் மழை தரும் மரங்களை நட்டு சாதனை படைத்த இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. நாமோ, மேற்கு தொடர்ச்சி மலை வளங்களை அழித்து தேயிலை தோட்டங்களாக்கி, " பொன்னாரம், பூவாரம் ன்னு பாட்டு பாடிக்கொண்டிருக்கிறோம் " என்று வேதனைப்படுகிறார்.
இரு சக்கர வாகனம் விடும் புகை எவ்வளவு தூரம் போகும் ? என்றொரு கேள்வியை எழுப்பி, மூர்ச்சை போட்டு விடாதீர்கள்..இந்தப்புகை பாஸ்போர்ட்,விசா ஏதுமின்றி துருவப்பகுதி வரை போய் பனி மேல் படர்ந்து விடும். அதன் விளைவாய் பனி உருக வழி செய்து விடுகிறது என்று சொல்கிறார்.
தண்ணீருக்காக யுத்தம் வருமா ?
------------------------------------------
1997 ல் பொலிவியாவிற்கு உலக வங்கி இரண்டரை கோடி டாலர் கடன் கொடுத்தது. அதற்கு மாறாக, தண்ணீரை தனியார் மயமாக்க வேண்டும் என்று ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகிறது. அமெரிக்காவின் பெக்டெல் என்ற தனியார் நிறுவனம் தண்ணீரை தனியார் மயமாக்கி, விலையை தாறுமாறாக நிர்ணயம் செய்ய, மக்கள் கொதித்தெழ, பணம் கட்ட முடியாதவர்களின் தண்ணீர் இணைப்பை துண்டித்து விட்டது. ஆற்றில் இருந்து கிணற்றில் தண்ணீர் எடுக்க போனார்கள் மக்கள். அதற்கும் கட்டணம் வசூலித்தது .மக்கள் போராடினார்கள்.
துப்பாக்கி சூட்டில் 17 வயது சிறுவன் பலியானான். . இறுதியில், கடுமையான எதிர்ப்பின் காரணமாக வெளியேறியது அந்த நிறுவனம்.
இந்த பெக்டெல் நிறுவனம் தான் திருப்பூரில் சில ஆண்டுகளுக்கு முன் குடிதண்ணீர் வழங்கும் உரிமையை பெற்றது என்ற உண்மையையும் சேர்த்து சொல்லி, பேரபாயம் நம் நாட்டையும் சூழ்ந்துள்ளது என்று விளக்குகிறார்.
நீர் மேலாண்மையில் பழந்தமிழர்கள் எப்படி சிறந்து விளங்கினார்கள் என்பதை பட்டியல் இடுகிறார். நீர் சுழற்சி பற்றி உருத்திரங்கண்ணனார்
பட்டினப்பாலை யில் சொல்வதை மேற்கோள் காட்டி சொல்லும்போது வியப்பின் உச்சிக்கே செல்கிறோம்.
திருச்சிராப்பள்ளி உய்யன்கொண்டான் வாய்க்கால், எட்டிசாத்தன் என்ற இருப்பைக்குடி கிழவன் என பல சுவாரசியமான தகவல்கள் நிறைய.
இறுதியாக, Dayzero பட்டியலில் இந்தியாவும் இருக்கிறது என்கிறார்.
அது என்ன Dayzero ?
நம் ஊரில் உள்ள அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிப்போய், குடிக்கக்கூட தண்ணீர் இல்லாமல் போய்விட்டால், அந்த நிலைக்குப்பெயர் தான் dayzero .
இந்த நிலையை சந்தித்த முதல் நகரம் தென்னாப்பிரிக்காவின் கேப் டவுண். ஒரு மனிதன் ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில ஆண்டுகளில் பெங்களூரு நகரம் dayzero ஆகும் வாய்ப்பு உள்ளதாக ஐநா அறிவித்துள்ளதாம்.
(நாக்கு வறண்டு போய் ஒரு பாட்டில் தண்ணீரை குடித்துக்கொண்டேன்)
இந்த பிரச்னைகளுக்கு தீர்வுகளையும் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் கோ.லீலா.
இவர் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் உதவி செயற்பொறியாளர்.
திருக்குறள், சிறுபஞ்சமூலம், புறநானூறு என்று சங்க இலக்கிய மேற்கோள்களை பொருத்தமாய் காட்டி எழுதியுள்ளவிதம் பாராட்டத்தக்கது.
இந்த நூலை கல்லூரி மாணவர்களுக்கு பாடமாய் வைக்கலாம்.
நூலை வாசித்து முடிக்கும்போது, மனதில் ஒருவித அச்சம் படர்கிறது.
அதே சமயம் அவர் சொல்லும் சின்னச்சின்ன தீர்வுகள் நம்பிக்கையையும் தருகிறது.