03/12/2025
திருப்பரங்குன்றம் கோவில் விவகாரத்தில் திமுகவினரை திக்குமுக்காட செய்த ராம.ரவிக்குமார்! யார்?
மதுரை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கிறது திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம். இந்த வழக்கை தொடர்ந்து உத்தரவு பெற்றவர் ராம.ரவிக்குமார். யார் இவர்? இவரது பின்னணி என்ன? என்பது குறித்து பார்க்கலாம் .
அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக திருப்பரங்குன்றம் கருதப்படுகிறது. இங்கு மலை அடிவாரத்தில் குடி கொண்டிருக்கிறார் முருகப்பெருமான். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் இங்கு தீபத்திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அந்த வகையில் இந்த ஆண்டும் கார்த்திகை தீபத் திருவிழா திருப்பரங்குன்றம் கோவிலில் கடந்த 25ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. டிசம்பர் நான்காம் தேதி வரை இந்த திருவிழா பத்து நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவை முன்னிட்டு எட்டாம் நாளில் பட்டாபிஷேகமும் ஒன்பதாவது நாளில் தீபத் திருவிழாவும் நடைபெறும்.
கார்த்திகை தீபத் திருவிழாவின் போது கடந்த சில ஆண்டுகளாக திருப்பரங்குன்றம் கோவிலில் உள்ள உச்சி பிள்ளையார் கோவில் தீப தூணில் தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் என்பவர் கோவில் உச்சியில் உள்ள தீப தூணில்தான் தீபம் ஏற்ற வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மலையில் நேரடியாக சென்று ஆய்வு செய்ததோடு உச்சியில் உள்ள தீப தூணில் தீபம் ஏற்ற உத்தரவிட்டார்.
தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகளும் நடைபெற்ற நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி மலை உச்சியில் தீபம் ஏற்ற காவல்துறை மறுப்பு தெரிவித்ததோடு 144 உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பாஜகவினர் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்த விவகாரத்திற்கு முக்கிய காரணம் ராம ரவிக்குமார். அவர்தான் மலை உச்சியில் தீபம் ஏற்ற அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தவர். யார் இந்த ரவிக்குமார்? என்பது குறித்து பார்க்கலாம். தமிழகத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நில ஆக்கிரமிப்பு வழிபாட்டு முறைகள் ஆகியவை தொடர்பாக நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தவர் தான் மதுரையைச் சேர்ந்த ராம.ரவிக்குமார்.
அர்ச்சகர்களுக்கு தட்டில் காணிக்கை இடும் விவகாரம், திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் சொத்து மீட்பு, ஆகம விதிகள் மீறப்பட்டதாக வழக்கு, சிலைகள் மாயமான வழக்கு என பல்வேறு வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்து இருக்கிறார். இந்து தமிழர் கட்சி என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார். இதற்கு முன்னதாக இந்து மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தவர்தான் ராம ரவிக்குமார்.
தமிழக முழுவதும் ஆலயங்கள் தொடர்பாக போராட்டங்களில் ஈடுபட்டு சிறை சென்றவர். இதற்கிடையே இந்து மக்கள் கட்சியிலிருந்து பிரிந்தவர் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்து தமிழர் கட்சி என்ற அமைப்பை நடத்தி வருகிறார். இந்து முன்னணி, பாஜக உள்ளிட்ட பல்வேறு அமைப்பின் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர். திருப்பரங்குன்றம் மலை விவகாரம் மட்டுமல்லாது, திண்டுக்கல் மலைக்கோட்டையில் அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இவர் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.