23/07/2025
விடுமுறைக்கு திருவனந்தபுரம் ஏர்போர்ட் வழியாக ஊருக்கு வருவது மறக்க முடியாத பல நினைவுகள் கலந்த மகிழ்ச்சி நிறைந்தது. எத்தனை முறை வந்தாலும் ஒவ்வொரு முறையும் கிடைக்கும் அனுபவங்கள் புதிதாக தானிருக்கிறது.
திருநெல்வேலி , கடையநல்லூர் , தூத்துக்குடி போன்ற ஊர் மக்களுக்கு இந்த ஏர்போர்ட் தான் வசதியானது. மேலும் மற்ற ஏர்போர்ட்களை காட்டிலும் கஸ்டம்ஸ் கொஞ்சம் பிரீயாக இருக்கும்.
நீர்நிலைகள் மற்றும் மரங்களுக்கிடையே அமைந்திருக்கும் வீடுகள் , இரவில் மின்மினி பூச்சிகள் போல எரியும் ஒளிவிளக்குகள் , அதிகாலை நேர அமைதியான சாலைகள் என மேகத்திலிருந்து காணுகையில், கவிதை , சிற்பம், ஓவியத்தின் நீட்சிப்போல கடவுளின் சொந்த தேசம் அழகாயிருக்கும்.
கட்டிடங்களுக்குள்ளோ மரங்களுக்குள்ளோ புகுந்துவிடுமோ என அச்சப்படும் வகையில் தாழப்பறக்கும் விமானம் , சட்டென ஒடுத்தளத்தில் தன் சக்கரங்களை உருள விட்டு இறக்கைகளை விரித்து பயணிகளை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் கொண்டுச்சேர்த்த மகிழ்ச்சியில் பொறுமையாக வாசலை நோக்கி செல்லும்.
நான்கைந்து மணிநேரம் பொறுமையாக அமர்ந்திருக்கும் பயணிகள், விமானம் லேண்டானதுமே ஸ்டாண்டாகி ( Stand) விடுவார்கள். விமானத்தின் வேகம் குறைகையில் ஹேண்ட் லக்கேஜ்களை எடுக்க பயணிகளின் வேகம் கூடும்.
ப்ளீஸ் சார் , கொஞ்சம் உட்காருங்க என கெஞ்சும் விமான பணிப்பெண்களை பார்க்கவே பரிதாபமாக இருக்கும்!!
லக்கேஜ்களை எடுத்து விட்டு ரேஷன் கடையில் நிற்பதுப் போல நெருக்கியடித்துக் கொண்டு நின்றால் தான் பயணம் முழுமையடைந்த திருப்தி கிட்டும். வாசல்கள் திறந்தால் தானே வெளியேற முடியும் !!
Thank you sir , Have a nice day ! Bye என கூறி வழியனுப்பி வைக்கும் விமான பணிப்பெண்களுக்கு ஒரு bye சொல்லிவிட்டு வெளியே வந்து இம்மிகிரேஷனில் போட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு, பாஸ்போர்ட்டை வாங்கிவிட்டு வெளியே வந்தால் ,சீல் அடித்திருக்கிறதா ? என ஒருவர் சோதித்து நம்மை சோதிப்பார். என்னத்த சொல்ல !!
ஸ்கேனிங் முடிஞ்சி வெளியே வந்து ட்ராலி எடுத்து பெட்டி வரும் கன்வேயர் பெல்ட்க்கு போனால் , நம்மோட பெட்டியை தவிர மற்றவர்கள் பெட்டி சீக்கிரம் வரும். இரண்டு பெட்டிகள் இருந்தால் , ஒரு பெட்டி வந்துவிட்டு மற்றொரு பெட்டி ஆடியசைந்து வரும். இதுவும் நம்மை சோதிக்குதே !!
லக்கேஜை எடுத்து ட்ராலியை தள்ளிட்டு வருகையில் , இவனை பிடிக்கவா வேண்டாமா என கழுகு பார்வை பார்க்கும் கஸ்டம்ஸ் அதிகாரியை, வடிவேலு போல பார்த்தும் பார்க்காமலும் கடந்து விட்டால் பாதி நிம்மதி !!
50 மீட்டர் தொலைவிலிருக்கும் கதவிற்கு பின்னாலுள்ள கட்டுப்பாடற்ற சுதந்திர உலகில் பிரவேசிக்க கால்கள் வேகமாக நடைப்போடும். அந்தக் கதவு திறந்து வெகுநாட்களுக்கு பிறகு சொந்தங்களை காணும் உணர்வை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும்.
வாப்பா , உம்மா , மனைவி, பிள்ளைகள் , சகோதர சகோதரிகள் என யார் வந்தாலும் அவர்களின் முதல் பார்வையும் ஸ்பரிசமும் தெய்வீக உணர்வை கொடுக்கும்.
வெளியே வந்ததும் நம் கையிலிருந்து லக்கேஜ் வண்டியை வேறு யாராவது தள்ளிக்கொண்டு போய்விடுவார்கள். நம் விடுமுறை அங்கே தொடங்கிவிடும்.
காருக்குள் லக்கேஜ்களை அடைத்து விட்டு , ஊர் பாடு வூட்டு பாடு கொஞ்சம் பேசி முடித்ததும் அசதியில் கண்கள் சொக்கினாலும் கேரள சாலைகளின் அதிகாலை அழகும், போக்குவரத்து நெருக்கடியும் தூக்கத்திற்கு சம்மதிப்பதில்லை..
புலராத அதிகாலை வாசத்தோடு மீன் வாசமும் பூவின் வாசமும் கலந்து கமழும் சுகந்தம் என கேரள சாலைகள் முழுவதும் புதிய வாசம் வீசிக்கொண்டே இருக்கும்.