23/10/2022
ஒசூர் மாதேஷ்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் நகர்மன்ற கவுன்சிலராக இருப்பவர் மாதேஷ்வரன். திரைப்படங்கள் மற்றும் சீரியல் நாடகங்களில் நடித்து வரும் இவர் ஒசூர் முன்னாள் நகர்மன்றத் தலைவராகவும், திமுக நகரச் செயலாளராகவும் இருந்தவர். இந்நிலையில் ஒசூர் மாநகராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று பிற்பகல் நடைபெற்றது. அதில் 108 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்ட நிலையில் 2 தீர்மானங்களை கடுமையாக எதிர்த்த திமுக கவுன்சிலர் மாதேஷ்வரன் தீர்மானங்களை முழுமையாக படித்துப் பார்க்க கூட நேரம் தராமல் அதை நிறைவேற்றுகிறேன் என்று சொன்னால் என்ன அர்த்தம் என மேயரிடம் வினவினார்.ஒசூர் மாநகராட்சி
மேலும், ஒசூர் மாநகராட்சியில் மழைக்கால முன்னேற்பாடுகள் முறையாக மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டை முன் வைத்த திமுக கவுன்சிலர் மாதேஷ்வரன், மழைக்காலங்களில் குறைகள், கோரிக்கைகளை கூற யாரை தொடர்பு கொள்வது என மக்கள் தவிப்பதாகவும் சாடினார். மேலும், தங்களால் (கவுன்சிலர்களால்) தீர்மானங்களை புரிந்துகொள்ள முடியவில்லை என்பதால் தீர்மானத்தை எதிர்ப்பதாக கூறி மாமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தையே அதிர வைத்தார்.எதிர்ப்புக் கடிதம்
சொந்தக் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் தன்னை இவ்வளவு தூரம் கேள்விக்கணைகளால் வறுத்தெடுப்பார் என்பதை எதிர்பார்க்காத ஒசூர் மேயர் சத்யா விழிபிதுங்கி நின்றார். இதையடுத்து ஒசூர் மாநகராட்சி ஆணையர் உங்கள் எதிர்ப்பை எழுத்துப் பூர்வமாக கொடுக்குமாறு திமுக கவுன்சிலர் மாதேஷ்வரனிடம் கூறினார். தாம் அளிக்கக்கூடிய எழுத்துப் பூர்வமான எதிர்ப்புக் கடிதம் திமுக தலைமை வரை செல்லும் என்பதை அறிந்தும் மாதேஷ்வரன் தனது எதிர்ப்பு கடிதத்தை ஆணையரிடம் வழங்கினார்.
பாஜக அழைப்பு
ஏற்கனவே மாதேஷ்வரனுக்கு பல ஆஃபர்களை அள்ளிக்கொடுத்து பாஜக அழைப்பு விடுத்து வருவது கவனிக்கத்தக்கது. இதனிடையே சொந்தக் கட்சியை மேயருக்கு எதிராக அவர் மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பேசியது திமுக வட்டாரத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் நகர்மன்ற தலைவர், மேயர்களுக்கு எதிராக சொந்தக் கட்சியை சேர்ந்த கவுன்சிலர்கள் போர்க்கொடி உயர்த்தி வருவது குறிப்பிடத்தக்கது.