18/01/2022
நட்பினருக்கு ஓர் சிரம் தாழ்ந்த வேண்டுகோள்!
______________________________________
கடந்த பிப்ரவரி 2000 ஆம் ஆண்டு புது எழுத்து
சிறுபத்திரிகையின் முதல் இதழ் வெளிவந்தது. 2018 வரை வந்த இதழ்கள் அனைத்தையும் எண்ணிமப் பிரதிகளாக மாற்றி இலவசமாகத் தரவிறக்கம் செய்யும் வகையில் இணையத்தில் பதிவேற்றம் செய்ய முடிவெடுத்துள்ளது.
பலரிடம் அச்சுப்பிரதிகளாக சேர்ந்துள்ள புது எழுத்து இதழ்களில் பெரும்பாலானவை அதன் ஆசிரியர்/பதிப்பாளரான மனோன்மணி ( Manonmani Murugan ) யிடம் இல்லை :(
பேராசிரியர் வீ.அரசு அவர்கள் புது எழுத்து இதழ்களைப் பெற்று கொழும்பு தேசிய நூலகத்தில் சேர்ப்பித்தார். எம்.டி.எம் ( Meenakshipuram Deivakumar Muthukumaraswamy ) புது எழுத்து இதழ்களை எண்ணிமப் பிரதிகளாக மாற்றும்படி சில வருடங்களுக்கு முன் ஆலோசனை தந்தார். கைவசமிருந்த இதழ்கள் அவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. பலர் பலசமயங்களில் பழைய இதழ்களைக் கேட்டபோதெல்லாம் நெஞ்சடைத்தது.
எத்தனை எத்தனை கவிதைகள்,கவிஞர்கள், எழுத்தாளர்களின் படைப்புகள் வந்தன. நகுலனின் மஞ்சள் நிறப் பூனைக்குட்டி புது எழுத்து இதழில்தான் முதலில் வெளியானது
மொழிபெயர்ப்பிற்கென்றே ஒரு காத்திரமான இணைப்பிதழை ஒவ்வொரு முறையும் தந்தது. மார்க்வெஸின் " முன் கூறப்பட்ட சாவின் சரித்திரத்தை" அசதா மொழிபெயர்ப்பில் முழுநாவலும் சுருக்கமின்றி ஒரிதழில் வந்தது
ஜோஸ் சரமாகோவின் " அறியப்படாத தீவின் கதை" கவிஞர் ஆனந்த்தின் ( Anandh Krishna ) மொழிபெயர்ப்பில் முழுதுமாக ஓரிதழில் வெளிவந்தது. மொழிபெயர்ப்புக் கவிதைகள்,கதைகள், கட்டுரைகள்,நேர்காணல்கள் இன்னும் சொல்ல/எழுத ஏராளம் ஏராளம் வந்தன.
தமிழின் நவீன படைப்பிலக்கியத்தில் ஒரு ஓரம் நின்று தன்னால் முடிந்ததை நிறைவாகச் செய்தது. கவிஞர் சி.மணி, கோபிகிருஷ்ணன்,நகுலன்,மா.அரங்கநாதன் ஆகியோருக்கு சிறப்பிதழ்களையும் கொண்டு வந்தது.
தமிழ்ச் சிறுபத்திரிகைக்கென தமிழ்ப் பல்கலைகழகம் நிறுவிய ரூபாய் ஒன்னரை லட்சம் விருதுத் தொகையை 2010ல் பெற்று இதழ் வரப்பெற்ற பெருங்கடனை அடைத்தது.
வேர்கள் ராமலிங்கமும்( Ramalingam Muthukumarasamy ) மணல்வீடு ஹரிகிருஷ்ணனும்( Mu Harikrishnan ) பரிசல் வழங்கி கெளரவித்தனர்.
தமிழின் முக்கிய கவிதைத் தொகுப்புகளையும் சில புத்தகங்களையும் புது எழுத்து பதிப்பித்தது.
வரலாறு தொல்லியலில் இரண்டு நாள் கருத்தரங்குகள் இரண்டினை தமிழகத். தொல்லியல் கழகத்துடன் இணைந்து 2006,2016 ஆம் ஆண்டுகளில் நடத்தியது.
தன் சக்திக்கு மீறிய பாரத்தை எழுத்தாளர்கள் ஜீ.முருகன் ஸ்ரீநேசன், சாகிப்கிரான் ( Shahibkiran Thakkai ) சுதீர் செந்தில். ( Sudheer Sendhil ), தேவேந்திர பூபதி ( Devendhira Poopathy Bhaskarasethupathy )ஆகியோரின் துணையோடு அநாயசமாக பல இன்னல்களைத் தாண்டியது.
புது எழுத்து இதழ் மீளவும் மே.1ம் தேதி வரவுள்ளது.
இதுநாள்வரை வந்த அனைத்து புது எழுத்து இதழ்களையும் எண்ணிமப் பிரதிகளாக்கி பொதுவெளியில் இலவசமாகக் கிடைக்கச் செய்வதற்கான பணியை மேற்கொண்டுள்ளது.
இதழ் வைத்திருப்போர் இப்பணிக்காக அனுப்பித் தாருங்கள் பணி முடிந்ததும் பத்திரமாகத் திருப்பித் தரப்படும்.
உதவுவோர் பாதம் என் தலைமேலே!
மனோன்மணி புது எழுத்து,
[email protected]
9842647101