06/10/2025
*பட்டீஸ்வரம் துர்க்கையம்மன்*
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள பட்டீஸ்வரத்தில் பழமை வாய்ந்த 6 அடி உயரம் கொண்ட துர்க்கையம்மன் கோவில் உள்ளது.
இங்குள்ள அம்மனை செவ்வாய் கிழமைகளில் எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிப்பட்டால் துன்பங்கள் விலகி, நன்மைகள் கிடைக்கும் என்பது பக்தர்களின் தீராத நம்பிக்கை
*தேவி வனம், சக்திவனம்*
அன்னை பராசக்தி கும்பகோணம் பட்டீஸ்வரம் தலத்தில் தவம் செய்த போது காமதேனு தன் மகள் பட்டியை தேவிக்கு துணையாக பணிவிடைகள் செய்ய அனுப்பியது. அப்போது பட்டியும் மணலில் லிங்கம் அமைத்து வழிபட்டதால் பட்டீஸ்வரம் என்ற பெயர் இத்தலத்திற்கு ஏற்பட்டது.
இத்தலத்தை நோக்கி சைவ செம்மல் திருஞானசம்பந்தர் நடந்து வந்த போது வெயில் கடுமையாக இருந்தது. இந்த வெம்மைக்கு மாற்றாக பட்டீஸ்வரர் முத்து பந்தலை தமது அடியார்க்கு அளித்த திருத்தலம் இதுவேயாகும்.
ஐந்து கோபுரங்களையுடைய சிவாலயமாக திகழந்தாலும் துர்க்கைதான் இத்தலத்தில் சிறப்புடன் விளங்குகிறாள். வடபுறவாயிலில் நுழைந்ததும் நமக்கு முதலில் காட்சியளிப்பது துர்காதேவிதான்.
*கோட்டை வாயில் துர்க்கை*
ஆறடி உயரத்தில் கம்பீரமாக நின்ற கோலத்தில் தனிக்கோயில் கொண்டு விளங்குகிறாள். இவ்வூரார், கோட்டை வாயில் துர்க்கை என்றே அழைக்கின்றனர். இத்துர்க்கையம்மன் மிகவும் சக்திவாய்ந்தவள்.
திருமணமாகாத ஆண்களும், பெண்களும், நோயினால் பீடிக்கப்பட்டவர்களும், குடும்ப துன்பத்தில் தவிப்பவர்களும் ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இக்கோயிலின் ஞான வாவியில் நீராடி அம்மனை வழிபட்டு குறை நீங்கி நலமடைவார்கள் நெய்விளக்கு எப்போழுதும் எரிந்து கொண்டே இருக்கும்.
இதனால் இக்கிழமைகளில் பக்தர் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. துர்க்கையம்மனின் உடம்பில் வேண்டுதலுக்குரிய மஞ்சள் கயிறுகளும், எலுமிச்சம் பழங்களும் ஏராளமாக இருக்கும். கோயிலில் நெய்விளக்கு எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும்.
இவ்வாலயத்தின் நந்திகள் இடப்புறம் அல்லது வலப்புறம் விலகியே இருக்கும்.
திருவலஞ்சுழியிலிருந்து பட்டீஸ்வரம் வந்த ஞானசம்பந்தருக்கு வழிவிட சொல்லி இறைவர் இட்ட கட்டளையால் நந்தி இவ்வாறுள்ளது.
செவ்வாய்க்கிழமைகளில் மாலை 3.00 – 4.30 ராகு காலத்தில் துர்க்கைக்கு ஒரு எலுமிச்சை பழத்தினை இரண்டாக நறுக்கி, சாரு பிழிந்து, விளக்கு போல் திருப்பி, நெய் ஊற்றி, அதன் பின்னரே 5 இழைகள் கொண்ட நூல் திரி போட்டு அதன் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து, விளக்கு ஏற்ற வேண்டும். குடும்பத்திர்க்காண, வேண்டுதல், பிரார்த்தனை நிறைவேறும்.