08/09/2025
"சூரியனும், விண்மீன்களும், நிலவும்,
நீ தேடிக்கொண்டிருந்த வெளிச்சமும்
உன் உள்ளிருந்தே சுடர்கிறது."
- ஹெர்மன் ஹெஸ்ஸே
தும்பி சிறார் மாத இதழின் 85வது இதழ் அச்சில் மலர்ந்து கைவந்து சேர்ந்திருக்கிறது. ஒரு சிறு குழந்தை தன் இதயத்தின் தன்மைகளைப் பற்றி எளிமையான வரிகளில் மென்மையாகச் சொல்லும் சித்திரக் கவிதையை உள்ளேந்தி வந்துள்ளது. மனித மனத்தின் ஆழமான உணர்வுகளை கறுப்பு-வெள்ளை மற்றும் மஞ்சள் வண்ணங்களுக்குள் அழகாய் விரிய வைக்கும் ஒரு சிறந்த படைப்பு. இதழை வாசிக்கும் ஒவ்வொரு குழந்தை மனதினுள்ளும் நேயத்தை விதைக்கும் என்று உளமார நம்புகிறோம்.
மேலும், இவ்விதழில் குழந்தைகள் வண்ணம் தீட்டி மகிழ தோழமை வித்யா பெனோவின் கோட்டோவியமும், பின்னட்டைப் பாடலாக நண்பர் ஆனந்த விநாயகத்தின் சிறார் பாடலும், அட்டைப்படமாக மோகன் தனிஷ்க்கின் ஒளிப்படமும் இடம்பெற்றுள்ளது பெரும் நிறைவைத் தருகிறது.
ஒரு சிறு முயற்சியாக குழந்தைகளின் கற்பனைகள் கிறுக்கல்களாக மாற, திறந்தவெளிப் பக்கங்களும் அமைந்துள்ளன. குழந்தைகளின் எச்சிறு கனவுப்படைப்பையும் பகிர்ந்தளித்து தும்பியின் சிறகுகள் வழி பறந்திட நண்பர்கள் அனைவரையும் வேண்டுகிறோம்.
வடிவமைப்பு: தியாகராஜன்
படைப்புகளை அனுப்ப / பேச:
தும்பி சிறார் மாத இதழ்,
அலமேலு விஜயன் இல்லம்,
சிங்காரவேலன் நகர்,
குருங்கபட்டி,
சிங்காரப்பேட்டை,
கிருஷ்ணகிரி - 635307
9843870059, [email protected]
நன்றியுடன்,
தும்பி