09/07/2025
1980 ஆம் ஆண்டு வெளியாகி ப்ளாக் பஸ்டர் ஹிட்டடித்த ஒரு தலை ராகம் திரைப்படம்…
காதல் தோல்வி படத்தை ரசிகர்கள் கொண்டாடும் ட்ரெண்ட்டை இந்த படம் உருவாக்கியது.
தமிழ் சினிமாவில் கிளாசிக் காதல் கதைகளில் ஒரு தலை ராகம் படத்துக்கு தனியொரு இடமுண்டு. டி. ராஜேந்தரின் அறிமுக படமாக அமைந்த இந்த படத்தை ஈ.எம். இப்ராஹிம் இயக்கியிருப்பார்.
ஷங்கர் ராஜா என்ற கதாபாத்திரத்தில் ஷங்கரும், சுபத்ரா என்ற கதாப்பாத்திரத்தில் ரூபாவும் வாழ்ந்திருப்பார்கள்.
ரவீந்தர், சந்திரசேகர், தியாகு உள்பட பலரும் நடித்திருப்பார்கள். டி.ஆர். உஷா (பின்னாளில் டி ஆரின் மனைவியானார்), ஆகியோர் நடித்தது.
ராஜேந்தரும் கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
ஒருதலைராகம் படம் 1980 ஆம் ஆண்டு தமிழகம் முழுக்க 30 தியேட்டர்களுக்குள்ளாகவே வெளியானது.
1980-ம் ஆண்டு மே 2-ம் தேதி வெளியான இந்தத் திரைப்படத்தை சமகால தலைமுறையினர் ஒருவேளை பார்த்தால் ``ஏம்ப்பா... ஒருத்தன்… ஒரு பொண்ணுகிட்ட `ஐ லவ் யூ’ன்னு சொல்லாம தவிக்கறதையா ரெண்டரை மணி நேர படமா எடுத்திருக்காங்க?” என்று ஆச்சர்யப்பட நேரிடலாம்.
ஆம். 80-களின் காலகட்டம் அவ்வாறுதான் இருந்தது. ``உன் பெயர் என்ன?” என்று சக மாணவியிடம் கேட்பதற்கே தயங்கித் தயங்கி வருடக்கணக்காக நாள்களை ஓட்டியவர்கள் உண்டு.
படத்தின் தயாரிப்பாளரில் இருந்து, இயக்குநர், இசையமைப்பாளர், நடிகர், நடிகைகள் என எல்லோருமே ஏறக்குறைய புதுமுகங்கள்.
சரி போய்த்தான் பார்ப்போமே என்று அன்று தியேட்டருக்குள் நுழைந்தவர்களுக்குத் தெரியாது, தங்களுக்கு ஒரு புது அனுபவம் கிட்டப்போகிறது என்று.
படம் ஆரம்பித்து சில நிமிடங்களிலேயே இது ஒரு புதுமாதிரியான படம் எனப் புரிந்து கொண்டார்கள்.
ஒரு தலை ராகத்தின் மூலமாக சிறுநகரம் சார்ந்த கல்லூரியை முதன்முதலாக தமிழ் சினிமா அச்சு அசலாகப் படம் பிடித்திருந்தது.
இந்தப் படம் முதலில் வசீகரித்தது கல்லூரி மாணவர்களை. ’நம்ம காலேஜ அப்படியே எடுத்துருக்காண்டா’ என கூட்டம் கூட்டமாகச் சென்று பார்த்தார்கள்.
பின்னர் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் என எல்லோரையும் தியேட்டர்களுக்கு வரவழைத்தது. திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றி.
பெரிய ஊர்களில் 200 நாட்களைக் கடந்து ஓடியது.
தொலைக்காட்சி இல்லாத, அதிகம் பேர் பத்திரிக்கை படிக்காத அந்த நாட்களில் திரைப்படங்கள் மூலமே பல வார்த்தைகள் கிராமம் மற்றும் சிற்றூர் பகுதிகளில் உள்ளே வந்தன.
அப்படிப் பார்த்தால் கல்லூரி மாணவர்களிடையே சகஜமாகப் புழங்கும் மச்சி, மாமூ போன்ற வார்த்தைகள் இந்தப் படத்தின் மூலமாகவே கிராமப்புறங்களில் கூட நுழைந்தன.
காதலியைத் தொடாமல், பேசாமல் காதலன் காதலித்த முதல் படம் இதுதான்.
காதலி, குடும்பச்சூழல் மற்றும் அவள் சந்தித்த ஆண்களின் மீதான வெறுப்பு காரணமாக காதலிக்க மறுக்கிறாள்.
உற்சாக உருவாய் வளையவந்த காதலன் மனதுடைந்து நோய் வாய்ப்படுகிறான். காதலி மனம்மாறும் தறுவாயில் இறந்து விடுகிறான்.
இந்தப் படத்தில் இருந்துதான் நாயகனுக்கு அவன் சமவயதிலேயே ஒரு நண்பர் கூட்டம், அதில் ஒரு காமெடியன், இறுக்கமான மனதுடையவன் ஒருவன் மற்றும் ஜாலியான இருவர் என்ற ஃபார்முலாவும் தமிழ் சினிமாவுக்குக் கிடைத்தது.
ஒருதலை ராகத்தின் கதை, கதை நடக்கும் களம் போலவே இன்னொரு ஆச்சரியம் கொடுத்தது அந்தப் படத்தின் பாடல்கள்.
அப்போது ஓரளவு வசதியான ஆட்கள் மட்டுமே டேப் ரிக்கார்டர் வைத்திருப்பார்கள்.
எனவே ஒரு பாடல் நன்றாக இருக்கிறதென்றால் இப்போது போல எல்லோரும் நினைத்த உடன் கேட்டுவிட முடியாது.
வானொலியில் எப்போதாவது ஒலிபரப்பினால்தான் உண்டு. தியேட்டருக்குச் சென்றுதான் கேட்க முடியும்.
எனவே ஒரு தலை ராகத்தின் பாடல்களைக் கேட்க மக்கள் திரும்பத் திரும்ப தியேட்டருக்கு சென்று படம் பார்த்தார்கள். கல்லூரி மாணவர்களைப் பற்றிச் சொல்லவே வேண்டாம்.
’மன்மதன் ரட்சிக்கணும் இந்த மன்மதக் காளைகளை’,‘வாசமில்லா மலரிது வசந்தத்தை தேடுது’, ’கொக்கரக்கோழி கூவுற வேளை’, ‘இது குழந்தை பாடும் தாலாட்டு’, ’கடவுள் வாழும் கோவிலிலே’, ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’, ‘என் கதை முடியும் நேரமிது’ என அனைத்துப் பாடல்களும் மாஸ் ஹிட்.
’நான் ஒரு ராசியில்லா ராஜா’ பாடலை டி.எம்.எஸ் பாடினார். அதன்பின், ’தனக்கு வாய்ப்பே இல்லை. அப்பாடல் சென்டிமெண்டலாக என்னைப் பாதித்து விட்டது’ என பல பேட்டிகளில் சொல்லியிருக்கிறார்.
மேலும் அப்போது டி.டி.கே. மற்றும் சோனி கம்பெனிகளின் கேசட் மட்டும்தான் கிடைக்கும். அவற்றின் விலை அதிகம்.
தியேட்டர் பால்கனி டிக்கட் மூன்று ரூபாய்க்குள் இருந்த காலத்தில் அந்த கேசட்டுகளின் விலை 45 ரூபாய் என்றால் அதைப் புரிந்து கொள்ளலாம்.
90களின் ஆரம்பத்தில் 10 ரூபாய்க்கு கேசட் கிடைக்க ஆரம்பித்த உடன் மக்கள் அதிகமாக வாங்கத் துவங்கினார்கள்.
அந்தச் சமயத்தில் எந்த ஹாஸ்டல் ரூமுக்குள் நுழைந்தாலும் ஒரு பாடல் கேசட் நிச்சயம் இருக்கும். அது ஒருதலைராகம் படத்தின் கேசட்.
அதனுடன் காம்போவாக இரயில் பயணங்களிலும் சேர்ந்து பதியப்பட்டிருக்கும்.
10 ஆண்டுகள் முன் வந்த ஒரு படத்தின் பாடலுக்கு இப்படி ஒரு ரசிகர் கூட்டமா என்று நினைத்ததுண்டு. ஆனால், இன்று வரை அந்தப் படத்தின் பாடல்களுக்கு மவுசு இருந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்தப் படத்தின் இயக்குநர் டி ராஜேந்தர்தான் என்பதை தன் அடுத்தடுத்த படங்களில் அவர் நிரூபித்துவிட்டார். தொடர்ந்து குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் கல்லூரி சார் படங்கள் தமிழில் வெளிவர ஒருதலை ராகம் ஒரு காரணமாக அமைந்தது.
இந்தப் படத்தின் ஒளிப்பதிவு ராபர்ட் –ராஜசேகரன். இவர்கள் அடுத்த ஆண்டிலேயே குறைந்த முதலீட்டில் பாலைவனச் சோலை படத்தை எடுத்து அதை மிகப்பெரும் வெற்றிப் படமாக்கினார்கள்.
1980களில் சிறுநகர கல்லூரி எப்படி இருக்கும்.. மாணவர்கள் என்ன மாதிரி ஆடை அணிவார்கள்.. அவர்கள் கையில் என்னென்ன உபகரணங்கள் இருக்கும் எனத் தெரிந்து கொள்ள வேண்டுமானால் ஒரு தலை ராகம் படத்தைப் பாருங்கள்.
கூடுதலாக காதலிக்க அத்தனை தகுதிகள் இருந்தும், காதலைச் சொல்ல முடியாமல், அதைச் சொன்னாலும் ஏற்க மறுக்கும் ஒரு பெண்ணை காதலித்தவனின் வலியையும் தெரிந்து கொள்ளலாம்.
நாயகனின் கொண்டாட்டம் மற்றும் துயரம் ஆகிய சூழல்களே காட்சிகளின் பின்னணியாக அமைந்திருந்ததால் நாயகிக்கு ஒரு பாடல்கூட இல்லை.
மாயவரத்தில், கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த காலத்தின்போது ரயில் பயணத்தில் டி.ஆர் தானே பாடல்களை இயற்றி, மெட்டமைத்து பாடுவது வழக்கமாம். ரயிலுள்ள சக மாணவர்கள், இதர பயணிகள் இவரின் பாடல்களையும் அடுக்கு மொழி பேச்சுக்களையும் மிகவும் ரசிப்பார்களாம்.
`கூடையில கருவாடு.,கூந்தலிலே பூக்காடு” போன்ற பாடல்கள் அப்போது உதயமானவைதான். அவற்றை மெருகேற்றி படத்தில் உபயோகித்துக்கொண்டார் டி.ஆர்.
காதல் சோகம் நிறைந்திருக்கும் படம் என்றாலும் இந்தத் திரைப்படம் அந்தக் காலத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் ஆக அமைந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்களைச் சொல்லலாம்.
ஒன்று, இது அப்போதைய கல்லூரி சூழலையும் மாணவர்களின் தோற்றங்களையும் அசலாகப் பிரதிபலித்தது.
எதார்த்தத்துக்கு நெருக்கமான கல்லூரி மாணவர்களின் தோற்றங்களை திரையில் பார்த்தவுடன் அப்போதைய இளைய தலைமுறையினர் அதனை வெகுவாக வரவேற்றனர்.
இரண்டாவது, இதன் பாடல்கள். `ஒரு தலை ராகம்’ வெளியாகி சில தினங்களுக்கு இந்தப் படம் சரியாக ஓடவில்லை.
ஆனால், இதன் பாடல்கள் மிகுந்த புகழையும் வரவேற்பையும் அடைந்தவுடன் அதன் காரணமாகவே திரைப்படமும் மகத்தான வெற்றியை பெற்றது என்பது செய்தி.
ரயில் பயணத்தின் துணையாய் அவள் வந்தாள், உயிர் பயணத்தின் முடிவாய் அவள் நின்றாள் என்ற பாடல் வரிகளினூடே கிளைமாக்ஸ் அமைக்கப்பட்டிருக்கும்.
எப்போது தொலைக்காட்சியில் ஒளிபரப்பானாலும் ரசிக்கத் தூண்டும் ஒரு திரைப்படம்.!!
(Copied shared post 🏣)