04/05/2024
சமரசம் இல்லா பொதுவுடைமை போராளி போர்க்குடி அகமுடையார் வழித்தோன்றல் மலேயா கணபதி அவர்களின் 75 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று...!!!
-----------------------------------------------------------------
தஞ்சாவூர், தம்பிக்கோட்டை கிராமத்தில் 1912 ஆம் ஆண்டு பழந்தமிழ்க்குடியான அகமுடையார் பேரினத்தில் பிறந்தார் எஸ்.ஏ.கணபதி எனும் மலேயா கணபதி, இவருக்கு பத்து வயதாக இருக்கும் போது சிங்கப்பூருக்கு வந்தார். தம் தொடக்கக் கல்வியை சிங்கப்பூரில் பெற்றார். இளம் வயதிலேயே அரசியலிலும் தீவிர ஈடுபாடு காட்டினார்...!!!
ஜப்பானியர் காலத்தின் போதுதான் இந்திய தேசிய விடுதலைக்காக நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மலாயாவுக்கு வந்து INA எனும் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். அப்போது சிங்கப்பூரில் இயங்கி வந்த ஆசாத் ஹிந்த் சர்க்கார் தற்காலிக சுதந்திர அரசாங்கத்தை இந்திய தேசிய ராணுவத்தினர் (Indian National Army) நடத்தி வந்தனர். அதில் எஸ். ஏ. கணபதி ஓர் அதிகாரியாகவும், பயிற்றுநராகவும் சேவை செய்தார். மேலும் மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் Malaya Communist Party (MCP) கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்த “முன்னணி” இதழின் ஆசிரியராகவும் பணி புரிந்தார்...!!!
இந்தக் கால கட்டத்தில் அகில மலாயா பொதுத் தொழிலாளர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தச் சங்கம் பின்னர் அகில மலாயா தொழிலாளர் சம்மேளனம் என பெயர் மாற்றம் கண்டது. ஜவர்ஹலால் நேருவின் தலைமையில் புதுடில்லியில் நடைபெற்ற ஆசிய நாடுகளுக்கு இடையிலான நட்புறவு மாநாட்டில் மலாயாப் பேராளர்களில் ஒருவராக எஸ். ஏ. கணபதி கலந்து கொண்டார். 1948 ஆம் ஆண்டு மலாயாவின் அனைத்து இனங்களின் விடுதலைப் படையில் இணைந்தார்...!!!
எஸ்.ஏ. கணபதியினால் வழிநடத்தப்பட்ட அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் மலாயாவின் உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளுக்காகவும், மலாயாவின் அரசியல் விடுதலைக்காகவும் பெரும் போராட்டங்களை நடத்தியது. மலேயா கணபதி ஊக்கமுடையவராகவும், செயல்பாட்டுத்திறன் மிக்கவராகவும் இருந்தார். இந்தப் பண்புகளே அவரை மலாயாவின் வலிமை மிக்க அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைமை பொறுப்புக்கு கொண்டு சென்றது...!!!
1900களில் மலாயா ரப்பர் தோட்டங்களில் வேலை செய்த தொழிலாளர்களில் 92 விழுக்காட்டினர் தென்னிந்தியாவில் இருந்து வந்தவர்கள். 1928 ஆம் ஆண்டு முதல் 1937 வரை ரப்பர் தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 50 காசு தரப்பட்டது. அந்தக் காலகட்டத்தில் அந்தச் சம்பளமும் குறைக்கப்பட்டு 40 காசாகக் கொடுக்கப் பட்டது. அதனால் பிரச்னைகள் ஏற்பட்டன. அதற்கு தீர்வு காண 1939 ஜனவரி முதல் தேதியில் இருந்து பழைய 50 காசு சம்பளத்தைக் கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் ஒப்புக் கொண்டன. சீனத் தொழிலாளர்களுக்கு நாள் சம்பளமாக 60 காசில் இருந்து 70 காசு வரை கொடுக்கத் தோட்ட நிர்வாகங்கள் முன் வந்தன. சீனத் தொழிலாளர்களுக்கும் இந்தியத் தொழிலாளர்களுக்கும் இடையிலேயே பாரபட்சம் காட்டப்பட்டது. ஒரே அளவுள்ள வேலை. ஆனால், ஏற்றத் தாழ்வான சம்பள முறை. இதைக் கண்டித்து சிலாங்கூர், கிள்ளானில் வாழ்ந்த இந்தியர்கள் கிள்ளான் வட்டார இந்தியத் தொழிற்சங்கத்தை உருவாக்கினார்கள்...!!!
மலாயாவில் பல வேலை மறியல் போராட்டங்களை அகில மலாயா தொழிற்சங்க சம்மேளனம் முன் நின்று நடத்தி வந்தது. அதனால், 1946இல் மலாயா, சிங்கப்பூர் பெருநிலங்களில் இயங்கிய தொழிற்சங்கங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்தது. தொழிற்சங்கங்க பதிவிற்காகத் தொழிற்சங்க சம்மேளனம் (Federation of Trade Union) இரண்டு ஆண்டுகள் காத்திருந்தது. இருப்பினும், தொழிற்சங்க சம்மேளனம் பதிவு செய்ய அனுமதிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது...!!!
பிரித்தானிய அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் இறங்கிய மலாயா கம்யூனிஸ்டு கட்சியின் உறுப்பினர்கள் காட்டிற்குள் ஓடி மறைந்தனர். மலேயா கணபதி பத்து ஆராங் நகரத்திற்கு அருகில் இருந்த வாட்டர்பால் தோட்டத்தில் கைது செய்யப்பட்டார். சட்டத்திற்குப் புறம்பாக ஒரு துப்பாக்கி, ஆறு சுற்றுத் துப்பாக்கிக் குண்டுகளையும் வைத்திருந்தார் என்று கணபதியின் மீது குற்றம் சாட்டப்பட்டது...!!!
கோலாலம்பூர் நீதிமன்றம் கணபதிக்கு மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது. இந்தியா, பிரிட்டன் ஆகிய நாடுகளின் தொழிற்சங்க இயக்கங்கள் மற்றும் உலகத் தொழிலாளர் சம்மேளனம் (World Federation of Trade Unions) எஸ். ஏ. கணபதிக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. மரணதண்டனை நிறைவேற்றப்படக்கூடாது என்றும் கேட்டுக் கொண்டன ஆனால் அது பயனளிக்கவில்லை...!!!
இவ்வாறு தனது வாழ்நாள் முழுவதும் தொழிலாளர்களின் உரிமைக்காக போராடி தூக்கிலிடப்பட்ட எம் மாவீரர் மலேயா கணபதி எனும் தம்பிக்கோட்டை கணபதி அவர்களின் நினைவு நாளில் வீரவணக்கம் செலுத்துவதில் அகமுடையார் வரலாறு மீட்புகுழு பெருமிதம் கொள்கிறது...!!!
இவண் : அகமுடையார் வரலாறு மீட்புகுழு