05/02/2026
ஜெ.பானு ஹாருன்-சிறுகதை
பாசக்கார பிள்ளை அபி...
அபி இன்னிக்கு இங்கே நம்மை பார்க்க வரானாம்...காலைலேயே எனக்கு கால் பண்ணி சொன்னான்...
அருண் மகிழ்ச்சி கொப்பளிக்க மனைவி மதியிடம் சொன்னார்
அப்பாடி...எத்தனை வருஷம் ஆச்சு...அவனை பார்த்து...ஏழெட்டு வருஷம் இருக்குமா...கல்யாணத்துக்கும் பத்திரிகை அனுப்பியிருந்தானே....
நம்மாலதான் அத்தனை தூரம் போக முடியல...
பாம்பே போயிட்டு திரும்பறது சரியாக வராதுன்னு நீங்க தான் கிளம்பல...
இப்ப என்ன அவனேதான் ஒய்ஃபை அழைச்சுட்டு இங்கே நம்மை பார்க்க வரானே....
சாப்பிடற மாதிரி வரச்சொன்னீங்களோ...
சொன்னேன்...அதுக்கு அவன் என்ன சொன்னான் தெரியுமோ...
அவனுக்கு சின்னதிலேர்ந்தே நா சமைச்சா ரொம்ப பிடிக்கும்...உடனே சரிப்பான்னு சொல்லியிருப்பான்....
சந்தோஷப்பட்டாள் மதி
அவருடைய வேலை காரணமாகவும்,குழந்தைகளின் படிப்பிற்காகவும் கிராமத்தைவிட்டு டவுனில் ஒரு வாடகை வீட்டிற்கு குடிபெயர்ந்தபோது அபிஜித் குடும்பமும் பக்கத்து வீட்டிற்கு குடி வந்திருந்தது....
முதல்நாளிலிருந்தே அவர்களும்,இவர்களும் நெருங்கிய,பரஸ்பரம் மரியாதைக்குரிய நல்ல நட்பாகிப்போயினர்
கடைசி பையன் துருதுரு அபி இவர்கள் வீட்டு செல்லக்குட்டியாகிப் போனான்
அவர்கள் மும்பையைச் சேர்ந்த மராத்தி குடும்பம்
பல வருடங்களுக்குப்பின் இவர்களுடைய பையன்,பெண் திருமணமாகி வேலை நிமித்தமாக அவரவர் வெளியூர்களுக்கு பயணமாகிவிட...
இவர்களும் பூர்வீக கிராமத்து வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்
அதுபோலவே அவர்களும் பெரிய பையனை அவன் குடும்பத்துடன் இங்கிருக்கும் தொழிலில் விட்டுவிட்டு...சின்னவனான அபியுடன் சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர்...எப்போதாவது ஊர் வரும்போது இரண்டு குடும்பத்தினரும் சந்தித்துக் கொள்வார்கள்...
இப்போதும் அப்படி ஒரு சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது...
சரி,ஒன்றரை கிலோ சிக்கன் கொண்டு வரச்சொல்லுங்கோ...அவனுக்கு சிக்கன் பிரியாணி ,ஆனியன் ரைத்தா,அவித்த முட்டை, தக்காளி பேரிச்சம்பழம் ஸ்வீட் பச்சடி பண்ணிடறேன்....
என்றாள்....
கல்யாணமாகி முதன்முதலாக குழந்தை மனைவியை அழைச்சிட்டு வரானே...சந்தோஷமாக இருந்தது.
அதெல்லாம் நீ ஒன்னும் பண்ண வேண்டாமாம்...
அவனோட ஒய்ஃப் நல்லாவே சமைப்பாளாம்...இன்னிக்கு நீ ரெஸ்ட் எடுக்கணுமாம்...அவனோட அண்ணன் வீட்லயிருந்து இவனோட மனைவியை சமைக்கவிட்டு எடுத்துட்டு வந்து நம்மை சாப்பிட வைக்கப் போறானாம்....இதே மெனுவைத்தான் அவனும் சொன்னான்...தட்ட முடியலை...சரின்னுட்டேன்...இன்னிக்கு நீ சமையலறையிலிருந்து ஒதுங்கி ரெஸ்ட் எடுத்துக்கோ...சிரித்தார்
குழந்தை அப்படியா சொன்னான்...
சற்று நேரம் மோவாயில் கை வைத்தபடி மலைத்துப் போனவள்,
அதெப்படி...நம்ம வீட்டுக்கு வர பிள்ளைகளுக்கு நா ஒன்னுமே கொடுத்தனுப்பாமே...
இருங்க...கொஞ்சம் பாயசமாவது பண்ணி வெக்கறேன்....என்று சமையலறையில் பரபரப்பாகிப் போனாள்
சொன்னது போலவே,அபியும் அவன் மனைவியும் பைக்கில் வந்து கேரியருடன் இறங்கியபோது...
என்னடாப்பா இதெல்லாம்...வேலை மெனக்கெட்ட வேலை...என்ற இவரிடம் அவனுடைய மனைவி குனிந்து கால்களைத் தொட்டு ஆசி வாங்கிக் கொண்டாள்...
விருந்துக்கு வரச்சொன்னால் கையில் விருந்தையே பார்சலாக கொண்டு வந்தவன் இவன் ஒருத்தன்தான் எனக்கு...
என்று ஆர்ப்பரித்த மனதையும்,கண்களில் ஆனந்தமாக பொங்கின ஈர உணர்வையும் தனக்குள் அடக்கிக் கொண்டு அபியின் கைகளை பற்றி வாங்க...ரெண்டு பேரும் உள்ளே வாங்க...என்று
இருவரையும் வரவேற்றாள் மதி
இரண்டு வெந்நிற கோப்பைகளில் பாயாசம் மணக்க மணக்க அவர்களுக்கு தண்ணீருடன் சேர்த்து டைனிங் டேபிளில் காத்திருந்தது...
அபி மனைவியிடம் ஹிந்தியில் சொன்னான்
'சொன்னேனில்லையா...அம்மா எப்பவுமே இப்படித்தான்...'