26/10/2025
ஆட்டநாயகனும் நானே.. தொடர்நாயகனும் நானே.. வாய்சவடால் நபர்களுக்கு பதிலடி கொடுத்த ரோஹித்
இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் ரோஹித் சர்மா, டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளிலிருந்து ஓய்வு, ஒருநாள் கேப்டன் பதவியிலிருந்து நீக்கம், ஃபார்ம் அவுட் எனப் பல்வேறு கடுமையான விமர்சனங்களுக்கு மத்தியில் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்றார்.
அங்கு சிறப்பாக ரன் குவித்து, ரோஹித் சர்மா கதை முடிந்தது என சொன்னவர்களுக்கு தனது பேட்டால் பதிலடி கொடுத்துள்ளார்.
சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகச் சனிக்கிழமை நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில், கடைசி வரை நின்று, சதம் விளாசி இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். இந்தப் போட்டியில் 125 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 121 ரன்கள் குவித்த ரோஹித் சர்மா, ஆட்ட நாயகன் விருதை வென்றதோடு, தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடியதற்காக தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடருக்கு முன் இனி இந்திய ஒருநாள் அணியில் ரோஹித்துக்கு இடம் கிடைக்குமா? அணியில் இருந்து நீக்கப்படுவாரா? என ரோஹித் சர்மா மீது சந்தேகம் இருந்த நிலையில் தொடரின் முடிவில் தொடர் நாயகன் விருதை வென்று இருக்கிறார்.
ரோஹித் கிளாசிக் ஆட்டம்
சிட்னியில் நடந்த மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா நிர்ணயித்த 237 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு, ரோஹித் சர்மா முதுகெலும்பாக விளங்கினார். அவரது இந்த அற்புதமான இன்னிங்ஸின் மூலம், அவர் தனது 50வது சர்வதேச சதத்தைப் பதிவு செய்தார்.
இதில் 12 சதங்கள் டெஸ்டிலும், 33 சதங்கள் ஒருநாள் போட்டியிலும், 5 சதங்கள் டி20 போட்டியிலும் அடங்கும். இதன் மூலம், மூன்று விதமான கிரிக்கெட் வடிவங்களிலும் 5 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த ஒரே வீரர் என்ற உலக சாதனையை அவர் படைத்துள்ளார்.
இது ஒருநாள் போட்டிகளில் அவரது 33வது சதமாகும். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவர் அடிக்கும் 9வது சதம் இது. இதன் மூலம், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய வீரர்களில் அதிக சதம் அடித்த சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்தார். மேலும், ஆஸ்திரேலிய மண்ணில் அந்நிய அணி வீரராக அவர் அடிக்கும் 6வது சதம் இதுவாகும். இதன் மூலம், 32 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் அடித்திருந்த விராட் கோலியின் சாதனையை அவர் முறியடித்தார்.
தொடர் முழுவதும் ஆதிக்கம்
இந்தத் தொடரில் ஒரு சதம் மற்றும் ஒரு அரைசதம் உட்பட, மூன்று போட்டிகளில் 101 என்ற அபார சராசரியுடன் 202 ரன்கள் குவித்த ரோஹித்தின் ஆட்டம்காரணமாகவே அவருக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
தனது ஆட்டம் குறித்துப் பேசிய ரோஹித் சர்மா, "ஆஸ்திரேலியாவில் இதுபோன்றுதான் சவால்கள் இருக்கும். இங்குள்ள பந்துவீச்சாளர்கள் தரமானவர்கள், அதனால் எளிதாக இருக்காது. களச்சூழலையும், ஆட்டத்தின் போக்கையும் புரிந்துகொண்டு சிறப்பாகச் செயல்பட வேண்டும். இந்தத் தொடரில் எப்படி விளையாட வேண்டும் என்பதில் நான் மனதளவில் நம்பிக்கையுடன் இருந்தேன். தொடரை வெல்ல முடியாவிட்டாலும், பல நேர்மறையான விஷயங்களுடன் திரும்புவோம்" என்றார்.
இளம் வீரர்களுக்கு வழிகாட்டுவது குறித்துப் பேசிய அவர், "சரியான செய்தியை இளம் வீரர்களிடம் கொண்டு சேர்ப்பது இப்போது எங்கள் வேலை. அவர்கள் மிகவும் திறமையானவர்கள். கிரிக்கெட்டின் அடிப்படைகளை நான் இன்னும் நம்புகிறேன். அதை இந்த வீரர்களுக்குக் கடத்த வேண்டும் என நான் நினைக்கிறேன்" என்றார்.
பெர்த்தில் 8 ரன்களிலும், அடிலெய்டில் 73 ரன்களிலும் ஆட்டமிழந்திருந்த ரோஹித், சிட்னியில் 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் சதமடித்து, அழுத்தத்தை எப்படி கையாள்வது என்பதை மீண்டும் நிரூபித்தார். விராட் கோலியுடன் (74* ரன்கள்) இணைந்து அவர் அமைத்த 168 ரன்கள் பார்ட்னர்ஷிப், இந்திய அணியின் வெற்றியை உறுதி செய்தது.
ஆஸ்திரேலியாவில், குறிப்பாகச் சிட்னியில் விளையாடுவதை நான் விரும்புகிறேன். இது ஒரு சிறந்த மைதானம், சிறந்த ரசிகர்கள், அருமையான ஆடுகளம். நான் செய்வதை நான் விரும்புகிறேன். அதைத் தொடர்ந்து செய்வேன் என நம்புகிறேன்" என்று கூறி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார் ரோஹித். இந்தத் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் இழந்தாலும், ரோஹித் சர்மாவின் இந்த அபாரமான ஆட்டமும், எழுச்சியும் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலையும், நம்பிக்கையையும் அளித்துள்ளது.