17/10/2025
*இனி ஆளே வரத் தேவையில்லை* *ஆனாலும் ரிஜிஸ்டரேசன் நடக்கும்* *எப்படி? பத்திரப்பதிவு துறையில்* *புது மாற்றம் வரப் போகிறது*
தமிழக பத்திரப்பதிவுத் துறையில் மிகப் பெரும் புரட்சியாக நிலம், வீடு உள்ளிட்டவற்றை பத்திரப்பதிவு செய்யும் போது, நேர விரயம் உள்ளிட்டவற்றை தவிர்க்கும் வகையில், "ஆளில்லா பதிவு" (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், பொதுமக்கள் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் நிலம், வீடு உள்ளிட்ட சொத்துக்களை வாங்கும் போது, பத்திரப் பதிவுத் துறை மூலம் பதிவு செய்யப்படுகிறது.
மேலும் ஏற்கனவே இருக்கும் வீடுகள் நிலங்கள் உள்ளிட்ட அசையா சொத்துக்களும் பத்திரப் பதிவுத் துறை மூலம் ஒரு நபரிடம் இருந்து மற்றொருவருக்கு மாற்றப்படுகிறது.
பின்னர் அது வருவாய் துறை சார்ந்த ஆவணங்களில் பதியப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாகவே தமிழகத்தில், ஆவணப் பதிவு மோசடி, போலி ஆவணம், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட நடவடிக்கைகளால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.
பத்திரப்பதிவு முறை இதை அடுத்து போலி ஆவணப் பதிவு உள்ளிட்டவற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் பத்திரப் பதிவின் போது அசல் உரிமை மூல ஆவணத்தை தாக்கல் செய்யும் சட்ட மசோதா தமிழ்நாடு சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.
இதேபோல், பத்திரப்பதிவுத் துறையில் பெரிய மாற்றமாக தமிழகத்தில் சொத்துக்களை வாங்குவதிலும் விற்பதிலும் உள்ள சிக்கல்களை குறைத்து, பதிவு துறையில் ஒரு மாபெரும் மாற்றத்தை கொண்டு வர "ஆளில்லா பதிவு" (Presenceless Registration) முறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இதன் மூலம், சொத்து வாங்குபவர்களும் விற்பவர்களும், குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் மனைகள் தொடர்பான முதலாவது விற்பனையில், சார்பதிவாளர் அலுவலகங்களை நேரில் சென்று அணுகாமலேயே ஆன்லைன் மூலம் பதிவு செய்ய முடியும்.
ஆளில்லா பதிவு இதுவரை வாங்குபவர், விற்பவர் மற்றும் சாட்சிகள் நேரில் வந்து கைரேகை வைத்து, புகைப்படம் எடுத்து, ஆவணங்களில் கையெழுத்திடுவது கட்டாயமாக இருந்தது.
ஆனால் புதிய முறையில், ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு, கைரேகை மற்றும் கருவிழி ஸ்கேனிங் போன்ற உயர் தொழில்நுட்ப பாதுகாப்பு அம்சங்கள் பயன்படுத்தப்படும்.
பில்டர்கள் மற்றும் டெவலப்பர்கள், அரசு வழங்கும் பிரத்யேக மென்பொருள் மூலமாக வாங்குபவரின் விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றம் செய்வார்கள்.
சார்பதிவாளர், ஆன்லைனில் விண்ணப்பத்தை சரிபார்த்து, பதிவுக்கு ஒப்புதல் அளிப்பார்.
தமிழ்நாடு டிஜிட்டல் இந்த முறையின் மூலம், 582 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஏற்படும் மக்கள் நெரிசல் குறையும், பொதுமக்கள் நேரத்தையும் பயணச் செலவையும் மிச்சப்படுத்தலாம்.
இடைத்தரகர்களின் தலையீடு குறைந்து, வெளிப்படையான நிர்வாகம் உருவாகும் என்பது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
முதற்கட்டமாக, இந்த வசதி விருப்பத்தின் பேரிலேயே வழங்கப்பட்டு, பின்னர் படிப்படியாக கட்டாயமாக்கப்படும்.
மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெற்றிகரமாக செயல்பட்ட முறைகளை தமிழக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சொத்து பதிவுசெய்யும் திட்டம்
இதற்கு முன்பு, அடமான பத்திரங்கள் (MOD), இரசீது பத்திரங்கள் மற்றும் குறுகிய கால குத்தகை ஒப்பந்தங்கள் போன்றவற்றில் ஆளில்லா பதிவு முறையை அறிமுகப்படுத்தியிருந்தனர், ஆனால் அது கட்டாயமில்லாததால் தற்போது சுமார் 30,000 பத்திரங்கள் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்யப்படுகின்றன.
இத்திட்டத்தின் மூலம் பல நன்மைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.
இது, ஆண்டுக்கு சுமார் 36 லட்சம் ஆவணங்கள் பதிவாகும் அளவில், தமிழகத்தில் மிகப்பெரிய டிஜிட்டல் மாற்றமாக அமையும்.
பொதுமக்களுக்கு இது நேரம், பணம், மற்றும் சிரமங்களை மிச்சப்படுத்தும் ஒரு புதிய வசதியாக இருக்கும்.
சொத்து பதிவு ஆனால், பாதுகாப்பு தொடர்பான சில கவலைகளும் உள்ளன.
மாநிலத்தில் போலி ஆவணங்கள் மூலம் சொத்து அபகரிப்பு, மோசடி பதிவுகள் அதிகரித்து வரும் நிலையில், நேரடி சரிபார்ப்பு இல்லாமல் ஆன்லைனில் பதிவு செய்வது கூடுதல் மோசடிகளுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது.
இருப்பினும், கைரேகை மற்றும் கருவிழி போன்ற பயோமெட்ரிக் சரிபார்ப்புகள் இதை தடுக்க உதவும் என அதிகாரிகள் நம்புகின்றனர்.
மொத்தத்தில், "ஆளில்லா பதிவு" முறை, தமிழகத்தில் சொத்து பதிவு முறையை முன்னணி டிஜிட்டல் மாற்றமாக மாற்றும் திட்டமாக இருக்கிறது.
இது பொதுமக்களுக்கு பெரும் வசதியை அளிக்கும் மட்டுமல்ல, அலுவலக நடைமுறைகளில் நேரத்தைச் சேமித்து, அரசு நிர்வாகத்தை வெளிப்படையாகவும் விரைவாகவும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.