26/06/2025
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் நாடாளுமன்ற உறுப்பினராக தொடர்ந்து பதவி வகிப்பதற்கான தகுதியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனு மீதான விசாரணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று ஆரம்பித்தது.
அபிநவ நிவஹல் பெரமுனவின் தலைவர் ஓஷல ஹெரத் இந்த மனுவை தாக்கல் செய்தார்.
அவர் நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அரசாங்க மருத்துவ அதிகாரியாக பணியாற்றும் போது பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுவை சமர்ப்பித்ததாகக் கூறுகிறார்.
அரசுப் பணியில் இருந்து முதலில் விலகாமல் வேட்புமனுக்களை சமர்ப்பிப்பது நாடாளுமன்றத் தேர்தல் சட்டத்தின் விதிகளை மீறுவதாக ஹெரத் வாதிடுகிறார்.
இந்த வழக்கு நீதியரசர்களான மாயாதுன்னே கொரியா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.
மனுதாரர் சார்பாக முன்னிலையான வழக்கறிஞர் என்.கே. அசோக்பரன், நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் ஒரு பொது அதிகாரியாக இருப்பதால், அவர் நாடாளுமன்றுக்குக்கு தேர்ந்தெடுக்கப்படவோ, பதவிவகிக்கவோ அல்லது வாக்களிக்கவோ அரசியலமைப்பு ரீதியாக தகுதியற்றவர் என்று சமர்ப்பித்தார்.
அரசியலமைப்பின் 66(இ) பிரிவை மேற்கோள் காட்டி, நாடாளுமன்ற உறுப்பினரின் பதவி வறிதாகிவிட்டது என்று வாதிட்டார்.
நீதிமன்றம் இறுதித் தீர்ப்பை வழங்கும் வரை நாடாளுமன்ற உறுப்பினர் செயல்படுவதைத் தடுக்க இடைக்கால நிவாரணத்தையும் அவர் கோரினார்.
அரசு தரப்பில் முன்னிலையான மேலதிக மன்றாடியார் நாயகம் சுமதி தர்மவர்தன பிசி, எம்.பி. ராமநாதன் இன்னும் ஒரு பொது அதிகாரியாகக் கருதப்படுகிறார் என்பதை உறுதிப்படுத்தினார்.
அரசியலமைப்பு தாக்கங்கள் குறித்து அவர் கவலை தெரிவித்தார்.
பிரிவு 55(3) இன் படி, பொது அதிகாரிகள் மீதான ஒழுங்கு அதிகாரம் பொது சேவை ஆணைக்குழுவிடம் (PSC) உள்ளது என்பதை எடுத்துக்காட்டினார்.
இருப்பினும், பிரிவு 55(5) இன் கீழ், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு PSC மீது மேற்பார்வை அதிகாரம் உள்ளது.
இது ஒரு தெளிவான மோதலுக்கு வழிவகுக்கிறது என்று அரசு சமர்ப்பித்தது.
ஏனெனில் இடைநீக்கத்திற்கு உள்ளான எம்.பி. ராமநாதன் இப்போது தனது சொந்த ஒழுங்கு நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான அமைப்பின் மேற்பார்வையில் உள்ளார்.
எம்.பி. ராமநாதனைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர்களின் சமர்ப்பிப்புகளுக்காக வழக்கு ஜூலை 2, 2025 வரை ஒத்திவைக்கப்பட்டது.