
23/08/2025
அபுதாபியின் "31-வது செஸ் திருவிழாவில்" சாம்பியன் பட்டத்தை தட்டிய குவைத் வாழ் தமிழக மாணவனுக்கு பாராட்டுகள் குவிகிறது:
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகர் அபுதாபியில் நடந்த 31வது அபுதாபி சதுரங்க திருவிழா ஜூனியர் கிளாசிக்கல் போட்டிகள் ஆகஸ்ட் 15 முதல் ஆகஸ்ட் 21 வரை நடத்தப்பட்டன, ஜூனியர் பிரிவில் உலகம் முழுவதும் 80 நாடுகளைச் சேர்ந்த 315 சிறந்த சதுரங்க சாம்பியன் வீரர்கள் கலந்து கொண்டனர்.
இதில் குவைத்தில் வசிக்கின்ற இந்தியா, தமிழகம் சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த ரஞ்சித்குமார் , சாந்தி தம்பதிகளின் மகனான சிறுவன் மித்திலேஷ் ஜூனியர் பிரிவில் மூன்றாவது முறையாகப் பங்கேற்றுள்ளார். முன்னதாக 2023 ஆம் ஆண்டு 12-வயதுக்குட்பட்டோர் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தையும், கடந்த ஆண்டு 2024 ஆம் ஆண்டு 12-வயதுக்குட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கத்தையும் வென்றார்.
இந்நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான போட்டியில் கலந்து கொண்ட மித்திலேஷ் 9 இல் 8 மதிப்பெண்களுடன் போட்டியை முடித்தார், போட்டி முழுவதும் தோற்காமல் இருந்தார். இதன் விளைவாக ஜூனியர் சாம்பியனாக மித்திலேஷ் அறிவிக்கப்பட்டார். கூடுதலாக, இந்த போட்டியில் இருந்து அவர் 66.4 FIDE ELO புள்ளிகளைப் பெற்றார். மாணவன் மித்திலேஷ் Fahaheel கல்ப் இந்தியப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று வருகின்றார்.
இதன் விளைவாக, அவர் உலக அரங்கில் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், ஜூனியர் சாம்பியனாகவும் அறிவிக்கப்பட்டார். இதை தவிர மித்திலேஷ் ஏராளமான தேசிய மற்றும் சர்வதேச சதுரங்கப் போட்டிகளில் பங்கேற்று, பல தங்கப்பதக்கங்களையும் கோப்பைகளையும் வென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.