31/07/2024
புகைப்படம் எடுத்துவிட்டு இவர் அருகாமையில் வந்ததும் என்னமா போர் தண்ணீயா? நல்லாயிருக்குமா மா? என்று பேச்சு கொடுத்து இடைமறித்தேன்
நல்லா இருக்குமா? குடிச்சி பாருயா, பதநீர் மாதிரி ருசிக்கும் இந்தா குடிச்சிபாரு என்று ஒரு குட்டி குடத்தை முகத்தெதிரே நீட்டினார்
சரி கொடுங்கமா தாகமா தான் இருக்கு" என்று குடத்தை வாங்கி கடகடவென குடிக்க ஆரம்பித்ததும் குடம் ஒரு நிமிடத்தில் காலியானது
அந்நீரில் நீரின் குளிர்ச்சி கூடுதல், நீரின் மணம் கூடுதல், நீரின் சுவை கூடுதல்
அன்று சிறு வயதில் மாந்தோப்பு கிணற்றில் குடித்த அதே நீரின் சுவையை நினைத்து மனம் பின்னோடியது
சட்டையெல்லாம் வழிந்தோடிய நீரை துடைத்தபடியே முனிசிபாலிடி தண்ணீலா குடிக்க மாட்டிங்களாமா? என்றதும்
அதெல்லா குடிக்க மாட்ட ஐயா, அது அந்த முக்குக்கு போனா புடிச்சிட்டு வரலா ஆனா எனக்கு போர் தண்ணீ தான் பிடிக்கும்யா, முனிசிபாலிடி தண்ணீல மருந்து வாட வரும், நா சின்ன புள்ளையில இருந்து போர் தண்ணீ தான் குடிக்குறயா, பழகிடுச்சு, போர் தண்ணீ குடிக்கறதால ஒன்னும் வராது ஐயா, சுத்தமான பூமிதாய் நீர், உடம்புக்கு ஒன்னும் பண்ணாது, ரெண்டு வாய் குடிச்சாலும் தண்ணீ குடிச்ச மாதிரி இருக்கும், பசியே எடுக்காது, குடிச்ச தண்ணீ உடம்புல தண்ணீ ஒட்டும் ஐயா என்றார்
கொஞ்சம் இருங்கமா என்று அவரை இடைமறித்து பையின் இருபக்கத்தில் சொருகி வைத்திருந்த இரு காலி தண்ணீர் பாட்டில்களை எடுத்து ஓடிச்சென்று அருகிலிருந்த மோட்டர் சுவிட்சை போட்டு அதில் நிறைந்தொழுகும் வரை நீர் பிடித்து குப்பிகளால் இறுக்க மூடிக்கொண்டு நிமிரும் போது
எதுவும் பேசாமல் என்னை பார்த்து சிரித்தபடி நின்றுக் கொண்டிருந்தார்
அந்த சிரிப்பின் அர்த்தம் என்ன என்பதை நான் கையில் வைத்திருந்த இரு கார்ப்பரேட் தண்ணீர் பாட்டில்கள் மொழிபெயர்த்தது
என்னமா சிரிக்குறீங்க? புரியுதுமா, நானும் கிராமாத்தான் தான் மா, நானும் கினத்து தண்ணீ குடிச்சி வளர்ந்தவன் தான், ஆனா என்ன பன்றது வேகமான காலம், எல்லா மாறிப்போச்சு மா என்றதும்
சிரித்தார்!
நம்ம ஊர் தண்ணீய ஒரு தடவ குடிச்சிட்டா போதும் அவ்வளவு தான் அது அவங்கள விடாது, இங்கண்ணு இல்ல எங்க போனாலும் சரி முடிஞ்ச அளவு போர் தண்ணீ குடிங்க ஐயா, இல்லணா அத காய்ச்சி குடிங்க, ஒரு நோய் வராது, எனக்கு 82 வயசு எனக்கு நினைவு தெரிஞ்ச காலத்துலயிருந்த இந்த தண்ணீய தான் குடிக்குற, ஒரு நோய் வந்ததில்ல, புள்ளகுட்டிகளுக்கும் கொடுங்க, பூமிதாய் கொடுக்கற இரத்தம் உடம்புக்கு ஒரு துரோகம் வராது, இந்த தண்ணீல மட்டும் தான் ஒரு கலப்படமும் பண்ண முடியாது, நம்பி குடிக்கலாம், சரி நிக்க முடியல வரட்டுமா ஐயா பாத்து போயிட்டுவா ஐயா என்று என்னை தொட்டு ஆசிர்வதித்துவிட்டு அத்தேவதை தள்ளாடியபடி நடந்து சென்று தெருவின் இடம் பக்கம் திரும்பி எனது கண்களிருந்து முழுவதுமாய் மறைந்தது
செய்வதறியாமல் இரு நிமிடங்கள் அங்கு நின்றுவிட்டு நானும் அங்கிருந்து நகர்ந்தேன்
மீண்டும் அவ்வழி போகும் போதெல்லாம் அச்சுவையான நீரை பருகுவதுண்டு
அதன் பிறகு நகரங்களிலும் தேடிப்பிடித்து போர் நீரை பருகுவதுண்டு
ஆனால் அங்கே அந்த தேவதை அளித்த அந்த நீரின் சுவையையும் தன்மையும் நகரின் எந்த நீராலும் கொடுக்க முடியவில்லை
காரணம் அக்கிராமத்திலிருந்த மண்வளமும், மனிதமனமும்
"நீர் இன்று ஒரு பெரும் உலக வியாபாரமானது"
கிணற்று நீர், ஓடை நீர், ஊற்று நீர், சுனை நீர் என்று உட்கொண்டு நூறாண்டுகள் காலம் நோய்யின்றி வாழ்ந்த காட்டிய நமது சித்தர் நாட்டில்
நீங்கள் கையில் வைத்திருக்கும் எங்கள் நிறுவன நீர் பாட்டில் தான் இச்சமூகத்தில் உங்கள் தகுதியையும், ஆரோக்கியத்தையும் தீர்மானிக்கும் என்கிறான்
இன்றைய கார்ப்பரேட்.