30/10/2025
கிருத்துவர்களும் முன்னோர் வழிபாடும், கிருத்துவத்தில் தமிழர் பண்பாடும்.
புதுச்சேரியில் கல்லறைத் திருவிழா
புதுவைப் பகுதியில் கிருத்துவ மதத்தினர் கனிசமான அளவு வசித்து வருகின்றனர். அவர்கள் பல்வேறு விதமான தமிழ்ப் பண்பாட்டுச் சடங்குகளைத் தம் வாழ்க்கையின் பல்வேறு கட்டங்களில் கடைப்பிடிக்கின்றனர். தமிழ்ப் பண்பாட்டின் தாக்கத்தால், இறப்பின் பொழுது அவர்களால் கடைப் பிடிக்கப்படும் சடங்குகளையும், இறந்தவர்களுக்காகக் கொண்டாடப்படும் கல்லறைத் திருவிழாவைப் பற்றியும் அவர்களால் முன்னோருக்கு செய்யப்படும் 'வணக்கம்' பற்றியும் இந்தக் கட்டுரை எடுத்துரைக்கிறது. இந்தக் கட்டுரையில் கிருத்துவர்கள் என்பவர்கள் புதுவைப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் வசித்துவரும் உரோமன் கத்தோலிக்கர் களையே குறிக்கின்றது.
கிருத்துவர்களின் மரணச் சடங்குகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
1. மத அடிப்படையில் செய்யப்படும் சடங்குகள்
2. தமிழ்ப்பண்பாட்டின் தாக்கத்தால் செய்யப்படும் சடங்குகள்
இறந்தவருக்கு மத அடிப்படையில் செய்யப்படும் சடங்குகள்:
கிருத்துவர் ஒருவர் இறந்துவிட்டால் அவர் சார்ந்த தேவாலயத்திற்குத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. அந்த மரணம் பற்றிய செய்தி, தகவல் பதிவேட்டில் பதிவு செய்யப்படுகிறது. மரணம் சம்பவித்த வீட்டிற்கு, தேவாலயத்திலிருந்து ஒரு சிலுவையும், இரண்டு மெழுகுவத்தி நிலைகளும், மற்றும் வீட்டிற்கு வெளியே கட்டுவதற்குக் கறுப்பு நிறத்தில் சிலுவை வரையப்பட்ட துணியும் கொடுக்கப்படுகிறது. பின்பு மரணச்செய்தி தேவாலயத்தில் மணி அடிப்பதன் மூலம் ஊருக்குத் தெரிவிக்கப்படுகிறது.
மணி அடிக்கப்படும் முறையிலேயே இறந்தவர் ஆணா, பெண்ணா அல்லது குழந்தையா என்பது தெரிந்துவிடும். அதாவது குழந்தைகளுக்கு மூன்று முறையும், (மூன்று தடவை மணி ஓசைகள்), பெண்களுக்கு நான்கு முறையும், ஆண்களுக்கு ஐந்துமுறையும் கன்னிகாஸ்திரிகளுக்கும், பாதிரியார்களுக்கும் ஆறு முறையும் இவர்களுக்கும் மேல் நிலையில் உள்ளவர்களுக்கு ஏழுமுறையும் மணி அடிக்கப்படுகிறது. (மணி அடித்து மரணத்தைத் தெரிவிக்கும் முறை தற்பொழுது கிராமப் பகுதிகளில் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. நகர் பகுதிகளில் இறந்தவரின் உடல் தேவாலயத்திற்குக் கொண்டுவரப்படும்பொழுது மேலே குறிப்பிட்டுள்ளபடி மணி அடிக்கப்படுகிறது).
இறந்தவரது வீட்டில், அவரது உடல் படுக்க வைக்கப்பட்டு, அவரது தலைப்பக்கம் சிலுவையுடன் ஏற்றப்பட்ட மெழுவத்தியும் வைக்கப்படுகின்றன. இறந்தவரது கைகளில் ஜெபமாலை கொடுக்கப்படுகிறது. சில குடும்பங்களில் இறந்தவரின் கைகளில் பைபிளைக் வைக்கும் வழக்கமும் உண்டு. பின்பு உறவினர்கள், இறந்தவர் நல்ல நிலையை அடைய வேண்டும் என்று ஜெபம் செய்கின்றனர்.
இறந்தவரின் உடல், அடக்கத்திற்காகப் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு மீண்டும் மேலே குறிப்பிட்ட அதே முறைப்படி தேவாலயத்தின் மணி அடிக்கப்படுகிறது. இந்த முறை தேவாலயத்திலிருந்து பாதிரியார் மரணம் அடைந்தவரின் வீட்டிற்கு ஜெபம் செய்யப் புறப்படுவதை அறிவிப்பதற்காகவே மணி அடிக்கப்படுகிறது.
தேவாலயத்திலிருந்து மரணம் அடைந்தவரின் வீட்டிற்குச் செல்லும் பாதிரியார், அங்கே இறந்தவர்களுக்காகச் சிறப்பு ஜெபம் செய்து, இறந்தவரின் உடல் மீது புனித நீர் தெளிக்கின்றார். பின்பு இறந்தவரின் உடல் சவப்பெட்டியில் வண்டியில் வைத்து எடுத்துச் செல்லப்படுகிறது. (இறந்தவரின் உடல் எடுத்துச் செல்லப்படும் வண்டி கறுப்பு அல்லது வெள்ளை நிறத்தில் இருக்கும். வெள்ளை நிற வண்டி திருமணமாகாவர்களுக்கும், கறுப்பு வண்டி திருமணமானவர்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது). சில நேரங்களில், வீட்டில் இருந்து உடல் தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்படும் வரை, பாதிரியார் இறுதி ஊர்வலத்தில் இறந்தவருக்காக ஜெபித்துக் கொண்டே வருவார். பெரும்பாலான நேரங்களில் இறந்தவரின் வீட்டில் சிறப்பு ஜெபம் முடிந்தபின்பு பாதிரியார் தேவாலயத்திற்குச் சென்று விடுவார்.
இறுதி ஊர்வலம் தேவாலயத்தைச் சென்று அடைந்தவுடன், தேவாலயத்திற்கு வெளியே வண்டி நிறுத்தப்பட்டு, சவப்பெட்டி தேவாலயத்தின் உள்ளே நடுச்சாலையில் வைக்கப்படுகிறது. பின்பு திருப்பலிபூசை நடத்தப்படுகிறது.. திருப்பலிபூசையில் இறந்தவர்களின் உறவினர்கள், ஆண்கள், பெண்களும் கலந்து கொள்கிறார்கள். பூசையின் முடிவில் பாதிரியார் புனித தீர்த்தத்தை இறந்தவரின் உடலின் மீது தெளிக்கின்றார். பூசை முடிந்தவுடன் சவப்பெட்டி மீண்டும் சவ வண்டியில் வைத்துக் கல்லறை, வரை எடுத்துச் செல்லப்படுகிறது.
கல்லறையில் சவப்பெட்டி இறக்கப்பட்டு, புதைகுழிக் கருகில் எடுத்துச் செல்லப்படுகிறது. அங்கே அவர் அணிந்து இருக்கும் விலையுயர்ந்த அணிகலன்களைக் கழற்றிய பின்பு சவப்பெட்டி, மேல் பலகையால், ஆணி அடித்து அல்லது கொக்கிமூலம் மூடப்படுகிறது.பின்பு சவப்பெட்டி புதைக்குழியில் இறக்கப்படுகிறது. இறந்தவருக்குத் திருப்பலி பூசை செய்த பாதிரியார் முதலில் சவப்பெட்டியின் மீது மண் போட மற்றவர்கள் அவரைத் தொடர்ந்து மண் போடுகிறார்கள். புதைக்குழி மூடப்பட்டுப் பின்பு அப்பகுதி மேடாக்கப்பட்டு அதன்மீது மலர்வளையம் மற்றும் மெழுகுவத்தி ஏற்றி வைக்கப்படுகிறது.
இறந்தவருக்கான பதினாறாம் நாள் காரியத்திற்காக உறவினர்களுக்குப் பத்திரிக்கை மூலமாகத் தகவல் அனுப்பப்படுகிறது. உறவினர்கள் அனைவரும் அன்று தேவாலயத்திற்குச் சென்று, இறந்தவருக்காக நடைபெறும் சிறப்புப் பிரார்த்தனையில் கலந்து கொள்கிறார்கள். இத்துடன் இறந்தவருக்காக மத அடிப்படையில் செய்யப்படும் சடங்குகள் முடிவுக்கு வருகின்றன.
இறந்தவருக்குத் தமிழ் பண்பாட்டின் தாக்கத்தால் செய்யப்படும் சடங்குகள்:
இறந்த கிருத்துவருக்கு, தமிழ்ப் பண்பாட்டின் தாக்கத்தால் செய்யப்படும் சடங்குகளை மூன்று வகையாகப் பிரிக்கலாம்.
1.உடல் எடுக்கப்படும் போது செய்யப்படும் சடங்குகள்;
2. பால் தெளித்தலின் போது செய்யப்படும் சடங்குகள்;
3. கருமாதி சார்ந்த சடங்குகள்.
உடல் எடுக்கப்படும்போது செய்யப்படும் சடங்குகள்:
இறந்தவரின் உடலுக்கு நாம் முன்பே குறிப்பிட்ட மத சடங்குகளுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள சடங்குகளும் செய்யப்படுகின்றன.
உடலைக் கழுவுதல்:
கிருத்துவர் ஒருவர் இறந்தவுடன், சிலரது குடும்பங்களில் அவரது உடலை உடனடியாகக் குளிப்பாட்டிப் படுக்க வைக்கிறார்கள். அனால் பெரும்பாலானவர்கள் உடல் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் குளிப்பாட்டுகிறார்கள். நகர்ப் புறத்தைச் சார்ந்தவர்கள் உடலைக் குளிப்பாட்டுவதற்கு வீட்டிலிருந்தே தண்ணீர் எடுத்து வருகிறார்கள்.
கிராமப்பகுதியில் இருப்பவர்கள் பொதுக் கிணற்றிலிருந்து தண்ணீரை எடுத்து வருகிறார்கள். பெண்கள் ஒற்றைப்படையில் (மூன்று, ஐந்து, ஏழு ) சென்று கிணற்றிலிருந்து தண்ணீர் எடுத்துக் குளித்து, பின் மேளதாளத்துடன் குடங்களில் தண்ணீர் கொண்டு வருகிறார்கள். தண்ணீர் குடங்களுடன் கூடவே கோடி (புடவை) எடுத்து வரப்படுகிறது. இறந்துவர் ஆணாக இருந்தால், அவரது மனைவிக்கு அவரது தாய் வீட்டிலிருந்து கோடி எடுத்து வரப்படுகிறது. பின்பு அந்தத் தண்ணீரால் இறந்தவரின் உடல் குளிப்பாட்டப்படுகிறது. இறந்தவர் திருமணமான ஆணாக இருந்தால் அவரது மனைவியும், பெண்ணாக இருந்தால் அவரது கணவரும் சேர்ந்து குளிப்பாட்டப் படுகிறார்கள்.
நெய்ப்பந்தம் பிடித்தல்:
இறந்தவரைக் குளிப்பாட்டும்போது, இறந்தவருடைய பேரன்கள் நெய்ப்பந்தம் பிடிப்பார்கள். நெய்ப்பந்தம் பிடிப்பதென்பது ஒரு குச்சியில் துணியைச் சுற்றி அதை நெய்யில் நனைத்து பற்றவைத்து பிடித்துக் கொண்டிருப்பது. தற்பொழுது கிருத்துவர்கள் யாரும் நெய்ப்பந்தம் பிடிப்பதில்லை. அதற்குப் பதிலாக மெழுகுவத்தி பிடிக்கும் வழக்கம் மேற்கொள்ளப் படுகின்றது.
மங்கல நாண் நீக்குதல்:
கணவர் இறந்துவிட்டால் அவரது மனைவியைக் குளிப்பாட்டியபின், தலைநிறையப் பூவைத்து, நெற்றி நிறையக் க்குங்குமம் வைத்து, கைகளில் வளையல்கள் அணிவிக்கப் படுகிறது. பின்பு அங்கிருக்கும் பெண்கள் இறந்த ஆணின் கைகளில் வெற்றிலைபாக்கு, வாழைப்பழம் கொடுத்து, இறந்தவரது மனைவியின் பின் கழுத்திலிருக்கும் தாலியை நீக்குகிறார்கள். பின்பு அந்தப் பெண்ணின், பொட்டை அழித்துப் பூவை எடுத்துவிட்டு, வளையல்களை உடைத்து விடுகிறார்கள்.
பலிப்பொருள் கட்டுதல்:
குளிப்பாட்டிய உடலைச் சவப்பெட்டியில் வைத்து, பின் சவ வண்டியில் வைக்கிறார்கள். சனிக்கிழமையன்று ஒருவர் இறந்துவிட்டால் அவர் உடல் எடுத்துச் செல்லப்படும் சவவண்டியில் ஒரு கோழிக்குஞ்சு கட்டி எடுத்துச் செல்லப் படுகிறது. "சனிப்பிணம் துணை தேடும்" என்ற பழமொழிக்கு இணங்க இந்தப் பலிப் பொருள் எடுத்துச் செல்லப்படுகிறது.
கருவுற்ற பெண்களுக்கான சடங்கு:
இறந்தவர் கர்ப்பமுற்ற பெண்ணாக இருந்தால், வயிற்றிலிருக்கும் குழந்தையை நீக்கும் சடங்கு செய்யப்படுகிறது. ஊரில் உள்ள மருத்துவச்சி, ஒரு கத்தியைக் கொண்டு கருவுற்ற பெண்ணின் வயிற்றைக் கீறி குழந்தையை வெளியே எடுத்து, தூக்கிப் பிடிக்கிறார். குழந்தை வெளி உலகத்தைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இப்படிச் செய்யப்படுகிறது. பின்பு அந்த இறந்த குழந்தையைத் தாயின் பக்கத்திலேயே வைத்துச் சவப் பெட்டியை மூடிவிடுகின்றனர்.
சம்பந்தி சாப்பாடு:
இறந்தவரது உடல் அவர் வீட்டிலிருந்து கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படும் வரை, அவரது வீட்டில் எதுவும் சமைப்பதில்லை. உடல் அடக்கம் செய்யப்பட்ட பிறகு, இறந்தவரின் குடும்பத்திற்குச் சம்பந்தி முறையில் இருப்போர், அந்தக் குடும்பத்திற்குச் சமையல் செய்து உணவிடுவர்.
பால் தெளித்தலின் பொழுது செய்யப்படும் சடங்குகள்:
இறந்த மூன்றாம் நாள் பால் தெளிக்கும் சடங்கு செய்யப்படுகிறது. அன்று பால் மற்றும் தண்ணீர் கல்லறைக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன. அங்குப் புதைத்த இடத்தின் மேடான பகுதியில் தண்ணீர் விட்டு மெழுகப்படுகிறது. பின்பு மெழுகுவத்தி ஏற்றி வைக்கப்பட்டு, இறந்தவரின் தலைபாகம் இருக்கும் இடத்தில் சிறிய குழி செய்து பால் உற்றப்படுகிறது. ஜெபம் செய்யப்படுகிறது. உலகில் பால் மணத்துடன் (பிறந்து) வந்து பால் மனத்துடன் மனிதன் செல்லவேண்டும் (இறப்பு) என்பதற்காக இந்தச் சடங்கு செய்யப்படுகிறது.
கருமாதி சார்ந்த சடங்குகள்:
பதினாறாம் நாள் கருமாதி சடங்கிற்காக உறவினர்களுக்கு அழைப்பிதழ் மூலம் தகவல் அனுப்பப்படுகிறது. அழைப்பிதழின் ஒரு பக்கத்தில் இயேசு படமும், மற்றொரு பக்கத்தில் கருமாதி பற்றிய செய்தியும் இருக்கும்.
கருமாதிக்கு முந்தைய நாள் இரவு, இறந்தவரின் வீட்டில் "நடப்புச் சடங்கு" நடைபெறுகிறது. அன்று இறந்தவருக்குப் பிடித்தமான அனைத்துப் பலகாரங்களையும் படையலுக்குத் தயார் செய்கிறார்கள். இறந்தவரின் குடும்பத்திற்குச் சம்மந்தி உறவுமுறையில் உள்ளவர்கள், பலவிதமான பலகாரங்களையும் கொண்டு வருகிறார்கள்.
நடப்புச் சடங்கின் போது இறந்தவருடைய புகைப்படத்தை நன்கு அலங்கரித்து, அதற்குப் பக்கத்தில் மெழுவத்தி ஏற்றிவைத்து, படத்திற்கு முன் பலகாரங்களை வைத்து வணங்குகிறார்கள்.
கருமாதி அன்று இறந்தவரின் உறவினர்கள் அனைவரும், தேவாலயத்திற்குச் சென்று, அன்று நடைபெறும் சிறப்பு வழி பாட்டில் கலந்து கொள்ளுகிறார்கள். பின்பு உறவினர்கள், இறந்தவரின் வீட்டிற்கோ அல்லது பொதுவாக ஓர் இடத்தில் (கல்யான மண்டபம் போன்ற இடத்தில்) கூடுகின்றனர். அங்குத் "தலை கட்டுதல்" சடங்கு செய்யப்படுகிறது. தலைகட்டுதல் என்பது ஒரு துண்டை, தலைப்பாகை போல் செய்து தலைமீது வைப்பது. அப்பொழுது இறந்தவரின் பங்காளிகளுக்குப் புதுத்துணிகள் வழங்கப்படுகிறது. அன்று உறவினர்களுக்கு மதிய உணவு அங்கேயே ஏற்பாடு செய்யப்படுகிறது. ஏழைகளுக்கும் அன்னதானம் வழங்கப் படுகிறது.
கசப்பு தலை மூழ்குதல்
இறந்தவரின் பங்காளிகள் கருமாதிக்கு அடுத்த நாள், இந் எண்ணெய் தேய்த்து குளிக்கின்றனர். அன்று மதியம் அனைவரும் அசைவ உணவை உட்கொள்கின்றனர். அன்றிலிருந்து இயல்பு வாழ்க்கை திரும்புகிறது.
கல்லறைத் திருவிழா
கல்லறைத் திருவிழா என்பது கிருத்துவர்கள் இறந்தவர்களுக்காக நடத்தப்படும் விழாவாகும். இது நவம்பர் மாதம் இரண்டாம் தேதி உலகில் உள்ள அனைத்துக் கிருத்துவர்களாலும் கொண்டாடப்படுகிறது.
கிருத்துவர்கள் சொர்க்கம், நரகம் உத்திரிகிரஸ்தலம் (purgatory) என்ற மூன்று நிலைகளில் (stages) மற்றும் நம்பிக்கை கொண்டுள்ளனர். கிருத்துவர்கள் இறந்துவிட்டால் அவர்கள் நல்லது செய்து இருப்பின் சொர்க்கத்தையும், தீமை செய்து இருப்பின் நரகத்தையும் அடைவார்கள் என அவர்கள் நம்புகின்றனர். நல்லவற்றுடன் கூட ஒரு சில தீமைகள் செய்திருப்பின் இறந்தவர்கள் சொர்க்க்திற்கும் நரகத்திற்கும் இடைப்பட்ட உத்திரிக்கிர ஸ்தலம் நிலையில் சொர்க்கத்தை அடையக் காத்துக் கொண்டிருப்பர். அப்படிப்பட்ட நிலை யிலிருப்பவர்களுக்காக அவர்கள் சொர்க்கத்தை அடைய ஜெபிப்பதே கல்லறைத் திருவிழாவின் அடிப்படை நோக்க மாகும். நல்ல நிலையை அடைந்த தம் முன்னோர்கள் தம் குடும்பத்தை நல் வழிப்படுத்துவர் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
கல்லறைத் திருவிழாவிற்கு முன்பு கல்லறை சுத்தம் செய்யப்படுகிறது. வெள்ளை அடிக்கப்படுகிறது.
கல்லறைத் திருவிழாவன்று காலை தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகின்றது. இறந்த கிருத்துவர்கள் நல்ல நிலையை அடைய அவர்களுடைய உறவினர்கள் சிறப்பு ஜெபங்களை ஜெபிக்கின்றனர். பூசை முடிந்தவுடன் பாதிரியார், தான் கல்லறைக்கு வரும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை அறிவிக்கின்றார். (கல்லறையில், பூசைக்காகப் பாதிரியார் வழக்கமாகக் காலையிலோ அல்லது மாலையிலோ வருவார்).
இறந்தவர்களின் உறவினர்கள் அனைவரும் அந்த நேரத்தில் கல்லறைக்கு வருகின்றனர். கல்லறைமீது அவர்கள் பூக்களால் அலங்கரிக்கின்றனர். மெழுகுவத்தி ஏற்றி வைத்து வணங்குகின்றனர். ஒரு சிலர் இறந்தவர்களுக்குப் பிடித்தமான உணவு பலகாரங்களையும் வைத்து வணங்குகின்றனர்.
தேவாலயத்தின் பாதிரியார் குறிப்பிட்ட நேரத்தில் சிறப்புப் பூசைக்காகக், கல்லறைக்கு வருகின்றார். பிறகு அவர் ஒவ்வொரு கல்லறையாகத் தீர்த்தத்தால் மந்திரிக்கின்றார். அடுத்து, சாம்பரானி புகைகாட்டிச் சிறப்பு ஜெயம் சொல்கிறார். பின்பு இறந்தவரது உறவினர்கள் ஏழைகளுக்கு உணவு மற்றும் பணம் கொடுக்கின்றனர். மேலும் அன்றைய தினத்தில், ஒரு சில குடும்பத்தில் வடை பாயாசத்துடன் உணவு சமைத்து இறந்தவரின் படத்தின் முன் வைத்து வணங்குகிறார்கள். மேற்கண்ட சடங்கு முறைகளே கல்லறைத் திருவிழாவன்று புதுவை மாநிலக் கிருத்துவ மக்களால் செயல்படுத்தப் படுகின்றது. இச்சடங்குகளை ஆய்வுக் கண்கொண்டு பார்க்கும் பொழுது முன்னோர் வழிபாட்டுக் கூறுகளின் எச்சங்களாக இவை இருப்பதை அறியமுடிகிறது.
ஆதிமனிதன் தன் இனக்குழுவை நல்வழியில் நடத்திச் செல்வதற்கு மறைந்த முன்னோரின் வழிகாட்டுதலையே பெரிதும் நம்பியிருந்தான். வாழ்க்கைப் போராட்டத்தில் அவனுடைய முன்னோரின் வழிகாட்டுதல் அவனுக்கு மிகவும் தேவையாக இருந்தது. மரணத்திற்கு முன் வலிமையுடையவனாக போற்றப்படுபவன் மரணம் அடைந்தபின் மிக வலிமையுடைய மிகவும் சக்திவாய்ந்த ஆவியுருவை அடைவதாக நம்பினான். இந்தப் பயமும் நம்பிக்கையுமே முன்னோர் வழிபாட்டுக்கு அடிப்படையாக அமைந்தது.
இவ்வாறு ஒரு காலத்தில் ஓர் இனக்குழுவிற்கே பொதுவானதாக இருந்த முன்னோரை வழிபடும் முறை பிற்காலத்தில் தன் குடும்பம் சார்ந்த சந்ததியினர்க்கே உரியதாக மாறியது. ஒரு குடும்பத்தில் இறந்தவருடைய ஆன்மா, அவருடைய சந்ததியினரை நல்வழிப்படுத்துவதாகவும். அவர்களுக்கு உதவுவதாகவும், நம்பப்படுகிறது. அதே ஆன்மா. அவருக்கும் தீமை செய்தவர்களை, செய்பவர்களை தண்டிக்கக்கூடியது என்று நம்பப்படுகிறது. இதனாலேயே இறந்தவர்களைப் பற்றிய பய உணர்ச்சி மனிதனுக்கு உள்ளது. இறந்தவர்களை வழிபடுவதன் மூலம் அவர்களுடைய ஆசியையும், அவர்களுடைய நல்வழிகாட்டுதலையும் பெற முடியும் என்றும் தம்மை அல்லது தம் சந்ததியினரைக் கெடுதலிலிருந்து தம் முன்னோர் தம்மைக் காப்பாற்றுவர் என்று நம்பினர். இந்த நம்பிக்கையே அவனை தம் முன்னோரை வழிபடத் தூண்டியிருக்க வேண்டும்.
கிருத்துவமும் முன்னோர் வழிபாடும்:
கிருத்துவ மத அடிப்படையில் இறந்தவர்களை வழிபடும் முறை என்பது இல்லை. இறந்தவர்களுக்குக் கல்லறைத் திருவிழாவன்று, அவருடைய உறவினர்கள் "வணக்கம்" செலுத்தவேண்டும். அவர்களைப் பொருத்தவரை வணக்கம் செலுத்துவதென்பது இறந்தவர்களை நினைவு கூர்வது., இறந்தவர்கள் நல்ல நிலையை அடைய ஜெபம் செய்வது இறந்தவர்கள் நல்ல நிலையை அடைந்தபின், அவர்கள் நம்மை வழிநடத்துவார்கள், என்ற அடிப்படையில் இறந்தவர்களுக்கு "வணக்கம்" செலுத்தப்படுகிறது.
கிருத்துவர்களும் முன்னோர் வழிபாடும்:
கிருத்துவ மதம், இறந்தவர்களுக்கு 'வணக்கம்' மட்டுமே செலுத்தவேண்டும் என்று சொல்கிறது. என்றாலும் கிருத்துவர்கள் தமிழ்ப் பண்பாட்டின் தாக்கத்தால் இறந்தவர்களுக்கு 'வணக்கம்' செலுத்துவதோடு நின்று விடாமல் அவர்களை வழிபடவும் செய்கிறார்கள். கிருத்துவர்கள் தங்கள் முன்னோருக்கு வணக்கம் செலுத்தவதில் வழிபாட்டுக் கூறுகள் இருப்பினும், அவர்கள் யாரும் முன்னோரை வழிபடுவதாக ஒப்புக்கொள்வதில்லை. ஆனால் அவர்கள் வணக்கம் செலுத்தும் முறையில் கீழ்க்கண்ட வழிபாட்டுச் சடங்குகள் காணப் படுகின்றன. அவர்கள் இறந்தவர்களின் புகைப்படத்திற்கு அருகில் மெழுகு ஏற்றி வைத்து வணங்குகிறார்கள். இறந்தவர்கள் தம் சந்ததியினரை நல்வழிபடுத்துவதையே நம்புகிறார்கள். இறந்தவர் உயிரோடு இருந்த பொழுது தன் குடும்பத்தை எப்படி நல்வழிபடுத்தினாரோ, உதவினாரோ அதைப்போலவே அவர் இறந்த பின்பும் அதே செயலைச் செய்துகொண்டிருப்பதாக நம்புகிறார்கள்.
நடப்புச் சடங்கின் போது இறந்தவரின் புகைப்படத்திற்கு அருகில் இறந்தவருக்குப் பிடித்தமான உணவுப் பண்டங்களை வைத்துப் படைக்கும் பொழுதும், கல்லறைத் திருவிழாவின் பொழுது அன்றைய தினத்தில் இறந்தவரின் புகைப்படத்திற்கு அருகில் உணவுப் பொருட்களை வைத்துப் படைத்து இறந்தவரின் ஆசியை வேண்டுவது குடும்பங்களில் இன்றுவரை காணப்படுகிறது. பல கிருத்துவக்
எனவே கல்லறைத் திருவிழா சடங்குகள் அனைத்தும் புதுவைக் கிருத்துவச் சமூக பண்பாட்டு அடிப்படையில் வணக்கம் செலுத்துகின்ற நிகழ்ச்சி என்று கூறப்பட்டாலும், அவை முன்னோர் வழிபாட்டுக் கூறுகளே என்று உறுதியாகக் கூறலாம்.
நூல்: புதுவை நாட்டுப்புறவியல்
கட்டுரை: க. திருமுருகன்
Order on WhatsApp: 097860 68908
Website: www.heritager.in