
01/05/2025
ஜாதி, ஆணாதிக்கங்கள் தொடரும் வரை சமையலறை உடைப்புகளும் தொடரும்!
பெண் விடுதலை, ஜாதி ஒழிப்பு ஆகிய நோக்கங்களை அடிப்படையாக வைத்து ஒன்றிய, மாநில அரசுகளுக்கும், மக்களுக்கும் 'திராவிடர் தளம்' பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளது. அந்தக் கோரிக்கைகள் குறித்து அரசு கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக 'சமையலறை உடைப்புப் போராட்ட'த்தை நடத்துவது என்றும் அறிவித்தது. அதற்காக கடந்த 2023 செப்டம்பர் முதல் 2025 மே 1 வரை பல வடிவங்களில் தொடர் பிரச்சாரங்களை நடத்தியது.
அந்தக் கோரிக்கைகளில் சில தமிழ்நாட்டு அரசின் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டு பட்ஜெட்களிலும் சில அறிவிப்புகள் வழியாகவும் செயலுக்கு வந்தன. அதாவது,
• விஸ்வகர்ம யோஜனா திட்டத்திற்கு எதிராக ‘கலைஞர் கைவினைத் திட்டம்.’
• பணிபுரியும் பெண்களுக்காக 17 சிப்காட் வளாகங்களில் ‘குழந்தைகள் காப்பகத் திட்டம்.’
• முதியோர்களைப் பராமரிக்க ‘அன்புச்சோலை’கள் திட்டம்.
• தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில், சென்னையில் இரண்டு ‘முதியோர் இல்லங்கள்.’
• உள்ளாட்சி அமைப்புகளின் வணிக வளாகங்களில் பட்டியல் ஜாதி மக்களுக்கும் உரிமை வழங்கும் ‘தாட்கோ வணிக வளாகத் திட்டம்.’
• பட்டியல் ஜாதி மக்கள் வாழும் பகுதிகளை காலனி என்று ஒதுக்குவதைத் தடுக்கும் அறிவிப்பு.
இவை அனைத்தும் திராவிடர் தளம் எழுப்பிய கோரிக்கைகள். எங்களைப் போல, மேலும் சில இயக்கங்களும் இந்தக் கோரிக்கைகளை எழுப்பியிருந்தன.
இருப்பினும், பாலின சமத்துவப் பார்வையில், முக்கியக் கோரிக்கையான ‘கலைஞர் பொதுச் சமையலறை’ போன்ற சில முக்கியக் கோரிக்கைகள் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காக, ‘பொதுச் சமையலறைகள் உருவாகட்டும்! வீட்டுக்கொரு சமையலறை எனும் முறை ஒழியட்டும்!’ எனும் முழக்கத்தை முன்வைத்து மே 1 ஆம் தேதி, திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பாக ‘சமையலறை உடைப்புப் போராட்டம்’ நடத்தத் திட்டமிடப்பட்டது.
பொது இடத்தில் சமையலறை போன்ற ஒரு வடிவத்தை உடைப்பது சட்டம் ஒழுங்கு சிக்கலாக மாறும் எனக்கூறி, சமையலறையை உடைப்பதற்கு அனுமதி மறுத்து, ஆர்ப்பாட்டத்திற்கு மட்டும் காவல்துறை அனுமதி வழங்கியது.
எனவே, தோழர்கள் அவரவர் வீடுகளில், அவரவர் பணத்தைக் கொண்டு அவரவரது எண்ணத்தின் அடிப்படையில் அடுப்பங்கரையை உருவாக்கினோம். அந்த வடிவத்தை, இன்று (01.05.2025) காலை அனைவரும் தங்களது வீடுகளில் உடைத்தெறிந்தனர். அதன் பிறகு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு காலை 10 மணியளவில் நடந்த கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.
திராவிடர் தளம் ஒருங்கிணைப்பாளர் சேவூர் தோழர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற, இந்த ஆர்ப்பாட்டத்தில், சமையலறைகளை உடைத்தெறிந்த பெருந்துறை பரிமளா, புவனா, அவிநாசி திவ்யா, பெதப்பம்பட்டி கவிதா, பல்லடம் தீபா, தாமரை, சுமதி, ரேவதி, கௌரி ஆகிய தோழர்கள் முன்னிலையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் பங்கேற்றனர்.
திராவிடர் கழக மாவட்டத் தலைவர் தோழர் யாழ்.ஆறுச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக மாநிலப் பொறுப்பாளர் தோழர் இல.அங்கக்குமார், மாவட்டப் பொறுப்பாளர் அகிலன், மாஸ்கோ நகர் இரமேஷ், ஆதித்தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் தோழர் அர.விடுதலைச்செல்வன், தமிழ்ப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் இளவேனில், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் பொறுப்பாளர் தோழர் ஜெய்.அப்துல்லா, நவீன மனிதர்கள் அமைப்பின் தலைவர் தோழர் பாரதி சுப்பராயன், சாக்கிய அருந்ததியர் சங்கப் பொறுப்பாளர் தோழர் தம்பி, மற்றும் காட்டாறு வெளியீடு தோழர் அதி அசுரன் ஆகியோர் பங்கேற்றுக் கருத்துரை வழங்கினார்கள்.
திராவிடர் தளம் தோழர்கள் திருப்பூர் பாலு, சண்முகம், பல்லடம் நாராயணமூர்த்தி, வடிவேல், மணிகண்டன், பெருந்துறை செந்தில் ஆகிய தோழர்கள் உரிய ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
ஜாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய தளங்களில் திராவிட மாடல் அரசு ஒவ்வொரு சட்டமன்றத் தொடரிலும், ஒவ்வொரு முற்போக்குத் திட்டங்களை அறிவிக்கிறது. இன்னும் பலவற்றைச் சாதிக்கத் தயாராக உள்ளது. அந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கான சமுதாயச் சூழலை உருவாக்குவதே, இன்றைய சமுதாய இயக்கங்களின் முக்கியக் கடமை. அதை திராவிடர் தளம் தொடர்ச்சியாகச் செய்து வருகிறது. அதன் ஒரு வடிவம் தான் இன்றைய ‘சமையல் உடைப்புப் போராட்டம்.’
ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு ஊர், ஒவ்வொரு ஊரிலும் சேரிகள், காலனிகள், ஊர் – சேரி எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு சமையலறை, ஒவ்வொரு சமையலறையிலும் மனைவி, மகள், சகோதரி போன்ற யாரோ ஒரு பெண் சமையலறை அடிமையாக இருப்பது என்ற இந்த சமுதாய அமைப்பு ஒழியும் வரை சமையலறை உடைப்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடக்கும். இன்று ஒரு தொடக்கம்.
பல மாதங்களாக இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகளைத் தெருத் தெருவாகப் பரப்புரை செய்த தோழர்களின் உழைப்புக்கும், மக்களின் ஆதரவுக்கும், தோழமை அமைப்புகளின் ஆதரவுக்கும், திராவிடர் தளத்தின் நன்றி. பரப்புரைகளும், போராட்டங்களும் தொடரும்.
- திராவிடர் தளம்
#திராவிடர்தளம்