05/01/2024
பரமக்குடியில் 33 ஆண்டுகளுக்கு பின் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
பரமக்குடி செய்திகள் : Paramakudi
பரமக்குடியில் போக்குவரத்து போலீஸ் பிரிவு துவக்கப்பட்டு 33 ஆண்டுகளுக்குப் பிறகு புதிய போக்குவரத்து போலீஸ்ஸ்டேஷன் கட்டி திறக்கப்பட்டுள்ளது.ராமேஸ்வரத்திலிருந்து 1989ல் டிராபிக் போலீசார் பரமக்குடிக்கு வந்து பணி செய்தனர்.
பின் 1991 முதல் பரமக்குடியில் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷன் வாடகை கட்டடத்தில் பல்வேறு இடங்களில் செயல்பட்டது.பரமக்குடி நகராட்சி 36 வார்டுகளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு போக்குவரத்தை முறைப்படுத்த போக்குவரத்து இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 15க்கும் மேற்பட்ட போலீசார் பணியாற்றும் நிலையில் நிரந்தர கட்டடம் இல்லாமல் இருந்தது.இது குறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக 2019ல் ரூ.67.71 லட்சம் மதிப்பில் கட்டடம் கட்ட நிதி ஒதுக்கி பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று முதல்வர் ஸ்டாலின் காணொலி மூலம் திறந்தார்.பரமக்குடியில் டி.ஐ.ஜி., துரை திறந்து வைத்தார். எம்.எல்.ஏ., முருகேசன் குத்து விளக்கேற்றினார். எஸ்.பி., தங்கதுரை, ஏ.டி.எஸ்.பி., கள் காந்தி, அருண் முன்னிலை வகித்தனர்.டி.எஸ்.பி., சபரிநாதன், நகராட்சி தலைவர் சேது கருணாநிதி, வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். போக்குவரத்து இன்ஸ்பெக்டர் செந்தில் சுரேஷ் நன்றி கூறினார்.