
07/06/2025
😭😭😭 கண்ணீர் அஞ்சலி 😭😭😭
-------------------------------------------------------------------
ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை(96) வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
இவருக்கு இராஜலட்சுமி.என்ற மனைவியும், ஒரு மகன், மூன்று மகள்கள் உள்ளனர். கடந்த 1929ஆம் ஆண்டு பிறந்த ரத்தினம் பிள்ளை, 1959ஆம் ஆண்டு மருத்துவராக தனது பணியை துவங்கினார். அப்போது 2 ரூபாய்க்கு மருத்துவம் பார்த்து இறுதி வரை 10 ரூபாய் வரை மட்டுமே கட்டணம் வாங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் பத்து ரூபாயில் ஏழைகளுக்கு வைத்தியம் பார்த்து வந்த பத்து ரூபாய் டாக்டர் என பலதரப்பட்ட மக்களாலும் போற்றப்பட்ட டாக்டர் ரத்தினம் பிள்ளை வயது முப்பு காரணமாக இயற்கை எய்தினார். இவர், டாக்டர் டி.கே. சுவாமிநாதனின் தந்தையாவார். மனித நேய பண்பாளர் என்று பலராலும் அழைக்கப்படுபவர்.
டாக்டர் ரத்தினம் பிள்ளை 50 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மருத்துவ வசதி இல்லாத அக்காலங்களில் எவ்வளவு பெரிய நோயாக இருந்தாலும் குறைந்த செலவில் அதனை சரி செய்து விடக் கூடிய திறமை வாய்ந்த மருத்துவராக இருந்து வந்தார்.
மேலும், இவர் எப்படிப்பட்ட சிக்கலான பிரசவமாக இருந்தாலும் ஆபரேஷன் செய்யாமல் மகப்பேறு மருத்துவம் பார்த்து ஏராளமான கர்ப்பிணி பெண்களுக்கு சுகப்பிரசவம் செய்து மிகச்சிறந்த பெயரை இப்பகுதி மக்களிடையே பெற்றார்.
தொடர்ந்து இப்பகுதியில் ஏழை மக்களுக்கு பத்து ரூபாய் கட்டணம் மட்டுமே பெற்றுக் கொண்டு மருத்துவம் செய்து வந்த இவரை இப்பகுதி மக்கள் போற்றி வந்தனர்.
இந்தியா, சீனா போர் நடந்தபோது இந்திய அரசு போர் தளவாடங்கள் வாங்குவதற்கு போதுமான நிதி இல்லை. எனவே மக்கள் தங்களிடம் உள்ள பணம், நகை போன்றவற்றை அரசுக்கு கொடுத்து உதவுங்கள், 5 வருடம் கழித்து அவற்றைத் திருப்பி தந்துவிடுவதாக கூறிக் கேட்டுள்ளது. அப்போது தன் மகள்களின் திருமணத்துக்காக சேமித்து வைத்திருந்த 83 பவுன் தங்க நகையை மருத்துவர் ரத்தினம் பிள்ளை மத்திய அரசிடம் கொடுத்து, மீண்டும் மத்திய அரசு நகையை திரும்பி வழங்கியிருக்கிறது.
கொரோனா நேரத்தில் தனது கட்டடத்தில் இருந்த கடைகளுக்கு 3 மாத வாடகையை வியாபாரிகளிடம் வாங்காமல் மனித நேயத்துடன் நடந்துகொண்டார்.
இவரின் சமூக சேவையைப் பாராட்டி பல்வேறு சமூக நல அமைப்புகள் இவருக்கு மனிதநேய மருத்துவர் என்ற விருதுகளை வழங்கி கௌரவித்தனர். இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக டாக்டர் ரத்தினம் பிள்ளை இன்று இயற்கை எய்தினார் என்ற தகவல் கேட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏழைகளின் மருத்துவராக இருந்து, 65,000க்கும் மேற்பட்ட சுகப் பிரசவம் பார்த்த அவரது ஏராளமானோர் உடலுக்கு பலதரப்பட்ட மக்கள், உள்ளூர் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள் என ஏராளமானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
அவரது இறுதி ஊர்வலம் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் சீனிவாசபுரத்தில் உள்ள அவரது இல்லத்திலிருந்து தொடங்கி, நல்லடக்கம் நடைபெறவிருப்பதாகவும் குடும்பத்தினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.