05/06/2025
அல்லாஹ் அல்லாதவர்களுக்குக் குர்பானிகொடுக்கலாமா?
அல்லாஹ்விற்காகக் குர்பானி கொடுப்பதைப் போன்றே அவ்லியாக்களின் பெயர்களைக் கூறி அவர்களுக்காகச் சிலர் குர்பானி கொடுக்கிறார்கள்.
இது அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் மாபாதகச் செயலாகும். குர்பானி என்பது தொழுகை நோன்பு ஹஜ் ஆகிய வணக்கங்களைப் போன்று ஒரு வணக்கமாகும். நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுப்பதை வணக்கம் என்று சொல்கிறார்கள்.
யார் தொழுகைக்குப் பின்னால் அறுத்தாரோ அவருடைய வணக்கம் பூர்த்தியாகி விட்டது. அவர் முஸ்லிம்களின் வழியைப் பின்பற்றியவர் ஆவார்.
அறிவிப்பவர் : பராஃ பின் ஆசிப் (ரலி)
நூல் : புகாரி (5545) முஸ்லிம் (3624)
பொதுவாக எந்த ஒரு வணக்கத்தையும் அல்லாஹ்வைத் தவிர மற்ற எவருக்கும் நிறைவேற்றக் கூடாது. அப்படிச் செய்தால் செய்பவர்கள் இணை வைத்தவர்களாகக் கருதப்படுவார்கள். குர்பானி உட்பட அனைத்து வணக்கத்தையும் அல்லாஹ்விற்கு மட்டும் செய்யும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
எனது தொழுகையும், எனது வழிபாடுகளும், எனது வாழ்வும், எனது மரணமும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே உரியவை. அவனுக்கு இணையாக யாருமில்லை. இவ்வாறே நான் ஏவப்பட்டுள்ளேன். கட்டுப்பட்டோரில் நான் முதன்மையானவன்” என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (6 : 162)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை (இரகசியமாகச்) சொன்னார்களா? என்று அலீ (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்டது. அலீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் (இரகசியமாகச்) சொல்லவில்லை. இதோ இந்த வாளுரையில் இருப்பதைத் தவிர என்று கூறிவிட்டு ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது.
அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணியை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கிறான், பூமியில் அடையாளச் சின்னங்களை திருடியவனை அல்லாஹ் சபிக்கிறான். தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கிறான். (மார்க்கத்தில் இல்லாத) புதுமைகளை (மார்க்கத்தின் பெயரால்) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கிறான்,
அறிவிப்பவர் : அபுத்துஃபைல் (ரலி). நூல் : முஸ்லிம் (3659)
அவ்லியாக்களுக்காகவோ அல்லது மகான்களுக்காகவோ அறுப்பது மட்டுமல்லாமல் அவ்வாறு அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை சாப்பிடுவதும் தடுக்கப்பட்டுவிட்டது.
(தாமாகச்) செத்தவை, (ஓட்டப்பட்ட) இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்பட்டவை ஆகியவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிபட்டவை, அடிபட்டவை, (மேலிருந்து) உருண்டு விழுந்தவை, கொம்பால் முட்டப்பட்டவை, வேட்டையாடும் பிராணிகள் கடித்தவை ஆகியவற்றில் (அவை இறக்கும் முன்) நீங்கள் (முறைப்படி) அறுத்தவற்றைத் தவிர (இவற்றில் செத்தவையும்), பலிபீடங்களில் அறுக்கப்பட்டவையும் (தடுக்கப்பட்டுள்ளன.) அம்புகள் மூலம் நீங்கள் குறி கேட்பதும் (தடுக்கப்பட்டுள்ளது.) இது பாவச் செயலாகும். இன்று இறைமறுப்பாளர்கள் உங்கள் மார்க்கத்(தை அழித்து விடலாம் என்ப)தில் நம்பிக்கையிழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். எனது அருட்கொடையை உங்களுக்கு நிறைவாக்கி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்குரிய மார்க்கமாகப் பொருந்திக் கொண்டேன். பாவச்செயல் செய்யும் எண்ணமின்றிப் பசியால் யாரேனும் நிர்ப்பந்திக்கப்பட்டால் அல்லாஹ் மன்னிப்புமிக்கவன்; நிகரிலா அன்பாளன்.. அல்குர்ஆன் (5 : 3)