05/08/2025
ராஜபாளையம் மாணவர் தயாவிஷ்ணு குமரன் அவர்களுக்கு வாழ்த்துகள்.
==================================
நிதி ஆயோக் புத்தாக்கப் படைப்பாற்றல் போட்டியில் தேர்வான ராஜபாளையம் மாணவரின் கண்டுபிடிப்பு
மத்திய அரசின் நிதி ஆயோக் நடத்திய புத்தாக்கப் படைப்பாற்றல் போட்டியில் 44 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில், தலை சிறந்த 150 படைப்புக ளில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த பள்ளி மாணவரின் மருத்துவக் கண்டுபிடிப்பு இடம்பெற்றுள்ளது.
ராஜாபளையம் ஸ்ரீ ரமணா அகாடமி சீனியர் செகண்ட்ரி சிபிஎஸ்சி பள்ளியில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர் தயாவிஷ்ணு குமரன் (16). இவரது மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்பு மத்திய அரசின் நிதி ஆயோக் மூலம் சிறந்த படைப்பாக ஏற்கப்பட்டு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாணவர் தயாவிஷ்ணுகுமரன் கூறுகையில், மத்திய அரசு நிதி ஆயோக் மூலம் அடல் இன்னோவிஷன் மிஷன் என்ற இளைஞர்களுக் கான புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இதில், நாடு முழுவதும் பல்வேறு புதிய படைப்புகள் தேர்வு செய்யப்படும்.
அந்த வகையில், நான் வடிவமைத்த ஸ்மார்ட் சிஸ்டம் ஃபார் அட்வான்ஸ்ட் ஹெல்த்கேர் என்ற கண்டுபிடிப்பு, நாடு முழுவதும் 44 ஆயிரம் பேர் பங்கேற்றதில் தலைசிறந்த 150 படைப்புகளில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் சிஸ்டம் ஃபார் அட்வான்ஸ்ட் ஹெல்த்கேர் என்பது முதியோர், ஊரகப் பகுதிகளில் வசிப்பவர்கள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மக்களுக்கு தரமான மருத்துவ சேவையை எளிதாகவும் குறைந்த செலவில் பெறும் வகையில் உருவாக்கப்பட்ட ஒரு புத்தாக்கத் திட்டமாகும்.
இத்திட்டம், உடல்நிலை தரவுகளை கண்காணிக்கும் சென்சார் அடிப்படையிலான ஹார்ட்வேர் மற்றும் மொபைல் செயலியை இணைத்து செயல் படுகிறது. இதன் மூலம் இதயத் துடிப்பு, உடல் வெப்பநிலை, நுரையீரல் திறனை கண்காணிக்க முடிகிறது. சேகரிக்கப்பட்ட தரவுகள் ஏ.ஐ. (செயற் கை நுண்ணறிவு) மூலம் பகுப்பாய்வு செய்யப்பட்டு எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பின் முக்கிய அம்சம் மன அழுத்தத்தைக் கண்டறியும் திறன் ஆகும். இது கல்வானிக் ஸ்கின் ரெஸ்பான்ஸ் சென்சார்களால் செயல்படுகிறது.
இது தற்கொலை முயற்சியை முன்கூட்டியே அறிந்து ஜிஎஸ்எம் மற்றும் ஜிபிஎஸ் வழியாக குடும்பத்தினருக்கும் அருகிலுள்ள காவல் நிலையத்துக் கும் தகவலை அனுப்பும். மேலும் ஏ.ஐ. உதவியுடன் நோயாளியுடன் உரையாடி அவரை சமாதானப்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள முடியும்.
இதனுடன் இணைக்கப்பட்டுள்ள வரும் முன் காப்போம் மொபைல் செயலியில் உடற்பயிற்சி கண்காணிப்பு, ரத்த தான பதிவு, இணையம் இல்லாவிட்டாலும் அருகிலுள்ள மருத்துவரை தேடும் வசதி, அறிகுறிகள் அடிப்படையில் நோய்கள் குறித்து ஆலோசனை பெறுதல் போன்ற அம்சங்கள் உள்ளன.
இந்த படைப்புக்காக தேசிய அளவில் நடைபெற்ற சிபிஎஸ்சி தேசிய அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசும், ரூ.5 ஆயிரம் ரொக்க பரிசும் வென்றுள்ளேன். இப்போட்டி ஹரியானாவில் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. சிபிஎஸ்சி இயக்குநரால் இப்பரிசு வழங்கப்பட்டது.
அதோடு, மத்திய அரசு நிதி ஆயோக் மூலம் அடல் இன்னோவிஷன் மிஷன் என்ற இளைஞர்களுக்கான புத்தாக்கம் மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் திட்டத்தில் தேசிய அளவில் 44 ஆயிரம் பேர் பங்கேற்று தங்களது படைப்புளை சமர்ப்பித்ததில், தலை சிறந்த 150 புத்தாக்கப் படைப்புகள் கடந்த வாரம் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. அதில் எனது கண்டுபிடிப்பும் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இத்தகவலை அனுப்பிய நண்பர் திரு.கார்த்திகேயன் அவர்களுக்கு நன்றி.