27/09/2025
நாளை மாவீரர் பகத்சிங் பிறந்தநாள் 28 செப்டம்பர்.
மாவீரர் பகத்சிங் சமாதியைத் தேடி பாக்கிஸ்தான் எல்லைக்குப் பயணம்.
22/09/2025 திங்கள் கிழமை டெல்லியில் இருந்து பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் செல்லும் விரைவு ரயில் மூலம் அதி காலை பெரோஸ்பூர் கண்டோன்மென்ட் சென்று அங்கிருந்து விடிந்தவுடன் சரியாக 16 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பாக்கிஸ்தான் எல்லைக்கு சென்று விட்டால் பகத்சிங் ராஜகுரு சுகதேவ் ஆகிய மூன்று மாவீரர்கள் இந்திய விடுதலை நெருப்பை பற்றவைத்து தூக்கு கயிற்றின் மூலம் துயில் கொண்டுள்ள இடத்தை அடைந்து விடலாம்.
ஆனால் சட்லஜ் நதிக்கரையில் ஏற்பட்ட பேரும் வெள்ளத்தால் எல்லை மூடப்பட்டுவிட்டது. ராணுவ வாகனங்கள் மட்டுமே எல்லைக்கு செல்லும் என்ற நிலையில் உள்ளூர் இளைஞர் ஒருவரை அழைத்துக்கொண்டு மாவீரர்களின் நினைவிடத்தை அடைந்து பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பிறந்த மண்ணில் இருந்து சென்று என்னுடைய வீர வணக்கத்தை செலுத்தினேன்.
23/09/2024 செவ்வாய்க்கிழமை அன்று பசும்பொன் தேவரும் நேதாஜி அவர்களும் தங்கள் வாழ்நாள் எல்லாம் போற்றி வணங்கிய இம்மூன்று வீர தியாகிகளின் நினைவிடத்தை நம் மெட்ராஸ் ரெஜிமென்ட்டை சேர்ந்த தமிழக வீரர்கள் பாதுகாத்து வருகிறார்கள் என்பதை நேரில் சென்ற போது பார்த்ததில் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.
தேச பிரிவினையின் போது இம்மூவர் சமாதியும் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விட்டது. வெறும் ஒரு கிலோ மீட்டர் எல்லைக்காக நமது நாடு 13 கிராமங்களை பாகிஸ்தானுக்கு வழங்கி இந்த நிலத்தை மீண்டும் பெற்று சமாதி உருவாக்கி பராமரித்து அதற்கு தேவையான ராணுவ பாதுகாப்பை வழங்கி வருகிறது என்ற விபரத்தை மதுரையை சேர்ந்த ராணுவ வீரர் அன்பு தெரிவித்தார்.
வெற்றி வேல் வீர வேல் முழக்கத்தோடு எல்லையை காத்து நிற்கும் நம் தமிழக ராணுவ வீரர்களுக்கும் ஒரு வணக்கத்தை தெரிவித்து விடைபெற்றேன்.
கமுதி. வே. மாயகிருஷ்ணன்.
ஆப்பநாடு வரலாற்று ஆய்வு குழு.
பெரோஸ்பூர் கண்டோன்மெண்ட்.
பஞ்சாப்.