
09/08/2025
அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது.. பாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் திடீர் அறிவிப்பு
மாமல்லபுரத்தில் அன்புமணி நடத்திய பொதுக்குழு செல்லாது என முரளி சங்கர் அறிவித்துள்ளார்.
பாமக இளைஞரணி தலைவராக முகுந்தன் நியமிக்கப்படுவதாக ராமதால் கடந்தாண்டு அறிவித்தார். பாமக தொண்டர்கள் இருந்த மேடை முன்பே அன்புமணி ராமதாஸ் மீதான கோபத்தை நேரடியாகவே காட்டினார். இவை அரசியல் தளத்தில் பேசுபொருளானது. அப்போதிலிருந்தே ராமதாஸூக்கும், அன்புமணிக்கும் இடையே மோதல் போக்கு ஆரம்பித்துவிட்டது. அதன் பின்னர் கட்சியில் இருந்து அன்புமணிக்கு ஆதரவாக இருந்த நிர்வாகிகளை நீக்கம் செய்து ராமதாஸ் புதிய நிர்வாகிகளை நியமித்து தனது ஆதரவாளர்களை திரட்டினார்.
ராமதாஸ் தொடர் குற்றச்சாட்டு
அதனைத்தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி மீது தொடர் குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார். தனது வீட்டில் ஒட்டு கேட்பு கருவி இருந்தது. அதை வைத்ததும் அன்புமணி தான். தந்தை பேசுவதை ஒட்டு கேட்கும் மகனை நான் எங்கும் பார்த்தது இல்லை. என் வியர்வையில் வளர்ந்த கட்சி பாமக என்றும் கடுமையான வார்த்தைகளால் அன்புமணியை தாக்கி பேசினார். ராமதாஸ் குற்றச்சாட்டுக்கெல்லாம் அமைதியாக இருந்த அன்புமணி, ராமதாஸையே கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார் அன்புமணி. அதைத்தொடர்ந்து அன்புமணி பொதுக்குழு கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்து ராமதாஸ் நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
அன்புமணி தலைமையில் பொதுக்குழு கூட்டம்
இந்த சூழலில் அன்புமணி தலைமையில் இன்று மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட நான்தான் தலைவர் என்று அன்புமணி அதிரடியாக அறிவித்தார். மேலும், கட்சி நிர்வாகிகளும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தக் கூட்டத்தில் திமுக அரசுக்கு எதிராகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மேலும் 2026 பாமக தலைவர் அன்புமணி என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பேசிய அன்புமணி, நமது வழிகாட்டி சமூகநீதி காவலர் ராமதாஸ் தான். அவரது கனவுகள், லட்சியங்களை நாம் நிறைவேற்றுவோம் எனக் கூறினார்.
ராமதாஸ் விரைவில் அறிவிப்பார்
இந்நிலையில், மாமல்லபுரத்தில் அன்புமணி நடத்திய பொதுக்கூட்டம் செல்லாது எனபாமக பொதுச்செயலாளர் முரளி சங்கர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ராமதாஸை விட அப்படி என்ன பதவி ஆசை வந்துவிட்டது. அவரை விட பதவிதான் அன்புமணிக்கு முக்கியமாக இருக்கிறது. நீதிமன்றத்தில் பொதுக்குழு நடத்த அனுமதியும் தரவில்லை, தடையும் விதிக்கவில்லை. அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டாக்டர் ராமதாஸ் அறிவிப்பார் என முரளி சங்கர் தெரிவித்தார்.
பொதுக்குழு செல்லாது
மேலும் பேசிய அவர், கட்சியில் இருக்கும் முன்னாள் எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் அன்புமணியிடம் எடுத்து கூறி இருந்தால் இந்த மோதல் வந்திருக்காது. தந்தையையும், மகனையும் தைலாபுரத்தில் இருக்க சொல்லி 3 நாட்கள் கழித்து கேட்டிருந்தால் இந்த பிரச்னைக்கு தீர்வு கிடைத்திருக்கும். மே 28ஆம் தேதியோடு அன்புமணியின் பதவிக்காலம் முடிந்துவிட்டது. அன்புமணி நடத்திய பொதுக்குழு கூட்டம் நிச்சயம் செல்லாது என தெரிவித்துள்ளார்.