
26/01/2025
காரைக்குடி : காரைக்குடி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு அமைச்சர் பெரிய கருப்பன் அரசு சார்பில் ரூ.5 லட்சம், சொந்த நிதி ரூ.2 லட்சம், முன்னாள் காங்., எம்.எல்.ஏ. கே.ஆர். ராமசாமி வழங்கிய ரூ.2 லட்சம் என மொத்தமாக ரூ.9 லட்சத்தை வழங்கினார். தலைமை ஆசிரியர் உட்பட இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா பத்தரசன்கோட்டையை சேர்ந்தவர் கைலாசம் மகன் சக்தி சோமையா 14. காரைக்குடி அருகே சாக்கோட்டை பொய்யாவயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படித்தார்.
நேற்று முன்தினம் கம்ப்யூட்டர் அறையில் கம்ப்யூட்டருக்கு மின் இணைப்பு கொடுக்கும் போது மின்சாரம் தாக்கி இறந்தார். மாணவரின் தந்தை கைலாசம் கடந்த ஆண்டு தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். தாய் வளர்மதி மற்றும் மூன்று சகோதரிகள் உள்ளனர்.
இறந்த மாணவரின் உடல் காரைக்குடி அரசு மருத்துவமனையில் உடற் கூறாய்வுக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழக முதல்வர் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ. 5 லட்சம் அறிவிக்கப்பட்டது. மாணவனின் இறப்புக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்று மாணவரின் உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கலெக்டர் ஆஷா அஜித், மாங்குடி எம்.எல்.ஏ., பா.ஜ., முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா., முன்னாள் எம்.எல்.ஏ., கே.ஆர். ராமசாமி, சிவகங்கை எம்.எல்.ஏ., செந்தில்நாதன் உள்ளிட்டோர் மாணவனின் தாய்க்கு ஆறுதல் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு வந்த அமைச்சர் பெரிய கருப்பன், முதல்வரின் இரங்கல் கடிதத்தை வாசித்து, அரசின் ரூ. 5 லட்சம் நிதிக்கான காசோலை தனது சொந்த நிதி ரூ. 2 லட்சம், கே.ஆர்.ராமசாமி வழங்கிய ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.9 லட்சத்தை வழங்கினார்.
அதனை வாங்க மாணவரின் தாயார், உறவினர்கள் மறுத்ததோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, அமைச்சரும், கலெக்டரும் அரசு வேலை வாய்ப்பு வழங்குவது குறித்து உறுதி அளித்ததை தொடர்ந்து நிதியை பெற்றுக்கொண்டனர். பின்னர் மாணவரின் உடலை பெற்றுக்கொண்டனர்.
தலைமையாசிரியர், ஆசிரியர் சஸ்பெண்ட்
மாணவனின் இறப்பு தொடர்பாக தலைமையாசிரியர் கணேசன், ஆசிரியர் பாண்டி முருகன் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப் பட்டுள்ளனர்.