21/06/2024
மாஞ்சோலை சூழல் சுற்றுலா எஸ்டேட் மக்களை வெளியேற்றவா? | Invisible struggles in Manjolai | UrumiTV
"மாஞ்சோலை" அதிக மழை பொழியும் இடமாக இருப்பதால் மழைச்சோலை என்றும் அழைக்கலாம்.
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு விஸ்வநாத நாயக்கர் நிர்வாகத்தில் 72 பாளையங்கள் இருந்தன. அதில் ஒரு பகுதியை சிங்கம்பட்டி பாளையக்காரர் நிர்வகித்தார்.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்த்தாண்டவர்மாவுக்கும், எட்டு வீட்டுப் பிள்ளைமாருக்கும் ஏற்பட்ட சண்டையில் மார்த்தாண்ட வர்மாவுக்கு உதவி செய்ய சென்ற சிங்கம்பட்டி ஜமீனின் மகன் மரணமடைந்தார்.
அந்த உதவிக்காக மார்த்தாண்ட வர்மா இன்றைய தமிழ்நாடு கேரளா எல்லைப்பகுதியில் இருக்கும் வனப்பகுதியை சிங்கம்பட்டி ஜமீனுக்கு எழுதிக்கொடுத்தார். அந்தக் காடுகளை குச்சி ஒடிக்கப் பயன்படுத்திக்கொண்டனர்.
இந்நிலையில் சென்னை அண்ணாசாலை தற்போது DMS இருக்குமிடத்தில் Newington College செயல்பட்டு வந்தது. அதில் பாளையக்காரர்கள், ஜமீன்தாரர்களின் குழந்தைகள் படித்து வந்தனர். அதனால் அதனை Minor Bungalow என்றும் அழைப்பார்கள். அக்கல்லுரியின் முதல்வர் Clement De la Haye தனது மனைவியுடன் படுக்கையறையில் தூங்கிக் கொண்டிருக்கும் போது 15 October 1919 அன்று நள்ளிரவில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் 16 வயது சிங்கம்பட்டி ஜமீனும் , 18 வயது கடம்பூர் ஜமீனும் சிக்கிக் கொண்டனர். அந்த வழக்கு மும்பை நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கில் இருந்து விடுபட அதிகம் செலவானதால், மாஞ்சோலை காட்டுப்பகுதியை The Bombay Burmah Trading Corporation Limited நிறுவனத்திற்கு சிங்கம்பட்டி ஜமீன் 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்தார் .
அப்பகுதியில் காடுகளை அழித்து தேயிலை, காபி, ஏலக்காய், மிளகு பயிரிட்டது பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனம்.
தற்போது மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ள மாஞ்சோலை தேயிலைத் தோட்டங்கள் அமைந்துள்ள பகுதிக்கு (ஜமீன் சிங்கம்பட்டி கிராமம், பகுதி 2, சர்வே எண் 251) திருவிதாங்கூர் சமஸ்தானம் முதலே யாரிடமும் பட்டா கிடையாது.
1929 இல் போடப்பட்ட ஒப்பந்தப்படி 2028 வரை மாஞ்சோலை தேயிலைத் தோட்டப் பகுதிகளை தொடர்ந்து அனுபவித்துக் கொள்ளலாம்.
2028 வரை ஒப்பந்த காலம் இருந்தாலும் 2024ஆம் ஆண்டிலேயே தேயிலை உற்பத்தியை நிறுத்துகிறது பிபிடிசிஎல் நிர்வாகம். அவசர அவசரமாக விருப்ப ஓய்வு கொடுக்கிறது.
இரத்தம் உறிஞ்சும் அட்டைக்கடியிலும், கொட்டும் மழையிலுமாக போராட்டமே வாழ்க்கையாகிப்போன எஸ்டேட் மக்கள் இப்போது போராடுவதற்கும் தெம்பற்று தேம்பி நிற்கின்றனர்.
1998ஆம் ஆண்டு அன்றைய தென்காசி நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக மாஞ்சோலை வந்த புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தேயிலைத் தோட்டத் தொழிலாளர் பிரச்சனைகளை கேட்டு சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தார். தமிழ் மாநிலக் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உடன் இணைந்து புதிய தமிழகம் கட்சி 23.07.1999 அன்று திருநெல்வேலியில் நடத்திய பேரணியில் காவல்துறையின் தடியடியால் தாமிரபரணி ஆற்று நீரில் மூழ்கடித்து 17 பேர் கொல்லப்பட்டனர்.
அதன் பின்னர் அடிப்படை ஊதியம் 33 ரூபாய், தினக்கூலி 53 ரூபாய் என்பது 150 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
2024 ஆம் ஆண்டு தற்போது மாஞ்சோலை தோட்டத்தொழிலாளர்களின் தினக்கூலி 453 ரூபாய் தான்.
1929இல் காடுகளாக இருந்த பகுதியை சீரமைத்து தேயிலைத் தோட்டங்களாக மாற்றியவர்கள் அன்றைய ஒருங்கிணைந்த நெல்லை ஜில்லா தொழிலாளர்கள். தேவேந்திரகுல வேளாளர், அருந்ததியர், ஆதி திராவிடர், நாடார், மறவர், வண்ணார், ஆசாரி, பிள்ளை, கேரளாவின் ஈழவர், பணிக்கர், மாப்பிள்ளை கிறிஸ்தவர், நாயர் என்று அனைத்து சாதி சார்ந்தும், இந்து, கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று அனைத்து மதம் சார்ந்தும் தொழிலாளர்கள் நிறைந்த மாஞ்சோலை ஒரு சமத்துவப் பூங்காவாகவே திகழ்ந்தது.
இப்போது, அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், கோயில், சர்ச், மசூதி வழிபாட்டுத்தலங்கள், தபால் நிலையம், போக்குவரத்து வசதிகள், குடியிருப்புகள், முன்னோர்களின் நினைவிடங்கள் என்ன ஆகுமென்று தெரியவில்லை.
இடத்தைக் காலிசெய்ய சொல்லிவிட்டார்கள், நான்கைந்து தலைமுறைகளாக தேயிலைத் தோட்டத்தை மட்டுமே நம்பி வாழ்ந்தவர்களுக்கு வேறு வேலைகள் தெரியாது.
மலைப்பகுதியில் வாழ்ந்தவர்களுக்கு சமவெளிப் பகுதியின் தட்பவெப்ப நிலை ஒத்துக்கொள்ள வேண்டும்.
அதனால்தான், தொழிற்சங்க உரிமைகளை வழங்காத, தொழிலாளர் நல சட்டங்களை பின்பற்றாத பிபிடிசிஎல் தனியார் நிறுவனத்தோடு அரசே பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான உரிய ஓய்வூதிய பணபலன்களை அரசே பெற்றுத்தர வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தேயிலைத் தோட்டத்தொழிலாளர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.
வெளியேற விரும்புகிற தொழிலாளர்களுக்கு குறைந்தபட்சம் 10 லட்சம் பிபிடிசிஎல் நிறுவனம் ஓய்வுபலனாக வழங்க வேண்டும்.
விரும்பிய இடத்தில், கல்வி, தொழில், வேலை வாய்ப்பு வசதிகளோடு அரசே குடியிருப்பு வசதியை செய்து தர வேண்டும்.
மலைப்பகுதியை விட்டு வெளியேற விரும்பாத தொழிலாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலையின் சூழலுக்கு உகந்த பயிர்களைப் பயிரிட்டு வாழ நினைத்தால் அவர்களை அனுமதித்து குடும்பத்திற்கு 5 ஏக்கர் நிலம் வழங்கவேண்டும்.
அரசு ஆணைப்படியும், நீதிமன்ற உத்தரவுப் படியும் மாஞ்சோலை மலைப்பகுதியின் சுற்றுச்சூழல் நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைக்கு மீட்கப்பட வேண்டும். அதற்கு தேவையான நிதியை ஒதுக்கி, திட்டம் வகுத்து, அங்கேயே வாழ நினைக்கும் தோட்டத் தொழிலாளர்களை வனத்துறையினருடன் தகுதிக்கேற்ப இணைத்து பூர்வகுடி மக்களின் பங்கேற்புடன் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
தொழிலாளர் நலன் காத்து, மக்களுடன் இணைந்த மாஞ்சோலை பல்லுயிர் சூழல் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டுமென்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது. நிறைவேற்றுமா அரசு?
நன்றி - கப்பிகுளம் ஜெ.பிரபாகர் முகநூல் பதிவு
, TV, , Urumi channel, உறுமி டிவி, உருமி டிவி, உறுமி காட்சி ஊடகம்.