Cine rocket

Cine rocket 🎬🚀 Welcome to "CiniRocket: Exploring the Cinematic Cosmos"! 🚀🎬
🌟 Greetings, cinephiles
(2)

காதல் நெஞ்சங்களில் வாழும் கல்யாண்குமார்!https://cinirocket.com/rare-photo-of-kalyan-kumar/பேசும் படம் :காதலின் ஆழத்தை உண...
28/07/2025

காதல் நெஞ்சங்களில் வாழும் கல்யாண்குமார்!
https://cinirocket.com/rare-photo-of-kalyan-kumar/

பேசும் படம் :

காதலின் ஆழத்தை உணர்த்தும் விதமாக உருவாக்கப்பட்ட ஸ்ரீதரின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம், ‘நெஞ்சம் மறப்பதில்லை’ உள்ளிட்ட படங்களில் அந்தக் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்தவர் கல்யாண்குமார்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன், என்.டி.ராமாராவ், மது ஆகியோருடன் கல்யாண்குமார்.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்தபோது அனைவரும் எடுத்துக்கொண்ட குழு புகைப்படம்.

- நன்றி: முகநூல் பதிவு

#நடிகர்திலகம் #சிவாஜிகணேசன் #என்டிஆர்ராவ் #மது #கல்யாண்குமார் #ஸ்ரீதர் #நெஞ்சில்ஓர்ஆலயம் #நெஞ்சம்மறப்பதில்லை #தமிழ்திரைப்படவரலாறு #காலத்தையெதிர்த்தசினிமா

தனுஷ் - பலவீனங்களை பலங்களாக மாற்றிய கலைஞன்!https://thaaii.com/2025/07/28/actor-danush-bday-spl-article/தமிழ் சினிமாவில் ...
28/07/2025

தனுஷ் - பலவீனங்களை பலங்களாக மாற்றிய கலைஞன்!
https://thaaii.com/2025/07/28/actor-danush-bday-spl-article/

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத அடையாளமாக மாறி, இந்திய சினிமாவில் உற்று கவனிக்கக் கூடிய ஆளுமையாக உருவெடுத்து, சர்வதேச சினிமாவில் தடம் பதித்திருக்கிறார் நடிகர் தனுஷ்.

பென்சில் மாதிரி இல்லையில்லை... பென்சிலில் கோடு போட்ட மாதிரி இருக்கும் ஒல்லிப் பிச்சானாக இருக்கும் தனுஷின் சாதனை ஏன் பேசப்பட வேண்டும்?

ஒரு நடிகர் என்றால் உடல் எடையைக் கூட்டி, குறைத்து கதாபாத்திரத் தன்மைக்கு ஏற்ப மாற வேண்டும். ஆனால், தனுஷிடம் அந்த அம்சத்தை மட்டும் எதிர்பார்க்கவே முடியாது. அப்படி இருக்கையில் தனுஷ் எப்படித் தனித்துவக் கலைஞனாக மதிப்பிடப்படுகிறார்?

பள்ளிப் படிப்பையே முடிக்காத 16 வயதில் 'துள்ளுவதோ இளமை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார் தனுஷ்.

2002-ம் ஆண்டு வெளியான இப்படம் தமிழ் சினிமாவில் சலனத்தை ஏற்படுத்தியது. பேசாப் பொருளைச் சற்று அதிகமாகவே பேசத் துணிந்தது.

டீனேஜ் இளைஞனின் பாலியல் கிளர்ச்சி, சுயக் கட்டுப்பாடு இல்லாத பாலியல் விழைவு, தோழியுடன் எல்லை மீறல், குறித்து விடலைப் பருவத்துக்கே உரிய உடல் மொழியில் தனுஷ் வெளிப்படுத்தினார்.

ஒழுக்கத்தைப் பின்பற்றுவதின் அவசியம் குறித்தும் இடித்துரைக்காமல் எடுத்துரைத்தார். வழக்கமான படங்களில் இருந்து 'துள்ளுவதோ இளமை' சற்று மாறுபட்டு இருப்பதாகப் பாராட்டு குவிந்தது.

ஆனால், அந்த மரியாதையும், மதிப்பும் தனுஷுக்கு மருந்துக்கும் கிடைக்கவில்லை. சொல்லப்போனால் அவர் கண்டுகொள்ளப்படவே இல்லை. அதற்காக அவர் கவலைப்படவில்லை. முடங்கிப் போகவில்லை.

தனுஷ் விருப்பப்பட்டு சினிமாவுக்குள் வரவில்லை. அது ஒரு தற்செயல் விபத்து என்றுகூட கூறலாம். அப்பா, அண்ணன் மூலம் தனுஷின் சினிமாவுக்கு வந்த தனுஷ் ஆரம்பத்தில் தடுமாறினார். ஆனால், அடுத்தடுத்துத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொண்டார்.

ஒடுக்கப்பட்ட மக்களின் பிரதிநிதி!

தெரிந்தோ தெரியாமலோ 'துள்ளுவதோ இளமை', 'புதுப்பேட்டை', 'மரியான்' என நிறைய படங்களில் மீனவக் குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், பெரும்பாலான படங்களில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை அல்லது விளிம்புநிலை சமூகத்தைச் சார்ந்த இளைஞராகவே தனுஷ் நடித்துள்ளார்.

'காதல் கொண்டேன்' படத்தில் நடித்த தனுஷை யார் இந்த இளைஞன்? என்று தமிழ் சினிமா திரும்பியும் விரும்பியும் பார்த்தது. ஏனெனில், இரண்டாவது படத்திலேயே எதிர் நாயகனாக நடிப்பது அவ்வளவு சுலபமல்ல.

ஆனாலும், தனுஷ் எனும் நடிகனை ஏற்றுக்கொண்டதற்குக் காரணம் புறக்கணிப்பின் வலியை, தாழ்வு மனப்பான்மையில் உழலும் தவிப்பை, இட ஒதுக்கீட்டில் இன்ஜினீயரிங் சீட் கிடைத்த மாணவனின் திறமையை, கெட்டுப்போன சாப்பாடாக இருந்தாலும் அதையே அப்படியே அள்ளி விழுங்கிய வறுமையின் நிழலை அப்படியே பிரதிபலித்தார் தனுஷ்.

தனுஷ் இன்ஜினீயரிங் கல்லூரியில் சேரும் முதல் நாள் ஒரு ஆட்டோக்காரனிடம் அடிவாங்கி அவமானப்பட்டு, வியர்க்க விறுவிறுக்க கல்லூரி வகுப்புக்குள் நுழைகிறார். பாடம் நடத்தும் பேராசிரியரிடம் அனுமதிக் கடிதம் கொடுக்கிறார்.

''ஸ்டூடண்ட்டா.. நீ'' என்று ஏளனத்துடன் கேட்கும் அவர், ''ஏதாவது ஒரு கோட்டாவுல உள்ளே நுழைஞ்சிடுறானுங்க... இவங்க கூடல்லாம் தாலியறுக்கணும்னு என் தலையில எழுதியிருக்கு'' என்று அலுத்துக்கொள்கிறார்.

இரவில் பகுதி நேரமாக சர்வர் வேலை செய்துவிட்டு பகலில் வகுப்பில் தூங்கி விடுகிறார் தனுஷ். ''அப்போது 2 நாள் ப்ரபரேஷன் .. 6 புக் ரெஃபரன்ஸ் எடுத்து இந்தக் கணக்கைப் போடுறேன்.

இந்த பிராப்ளம் புரியலைன்னா அடுத்த நாளும் சொல்லித் தர்றேன்'' என்று பேராசிரியர் ஒருவர் ஏகப்பட்ட பில்டப் கொடுக்கிறார். அப்போது தூங்கிக்கொண்டிருக்கும் தனுஷின் முகத்தில் டஸ்ட்டரைத் தூக்கி எறிகிறார்.

''ஃப்ரீயா சீட்டு, ஃப்ரீயா சாப்பாடு.. தின்னுட்டு இங்கே வந்து தூங்குவீங்க. வெட்கமா இல்லை... ப்ராப்ளம்... படிக்காவது தெரியுமா? உனக்கு தெரியாதுன்னு தெரியும். இதை முன்னே பின்னே பார்த்திருக்கியா? நீ எதுக்குமே லாயக்கில்லை.. தொடப்பக்கட்டை மாதிரியாவது நில்லு'' என்று அவமானப்படுத்துகிறார்.

தனுஷ் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அந்தச் சிக்கலான, புதிர் மிகுந்த கணக்கை சத்தமில்லாமல் போட்டு முடித்துவிட்டு மறுபடியும் அமைதியாகத் தூங்குவார்.

நீட் தேர்வு ரத்து என்ற கோரிக்கையும், மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசிக்கு இட ஒதுக்கீடு குறித்த வழக்கும் நடந்து கொண்டிருக்கும் தருணம் இது.

கோட்டாவில் வந்தால் கோட்டுவா விடத்தான் லாயக்கா? அதுதான் பொதுப் புத்தி என்றால் அதன் மீது கல்லெறிந்து கோட்டாவில் வரும் மாணவன் முட்டாள் இல்லை, அவன் ஜீனியஸ்தான் என்பதை தன் சத்தமில்லாமல் உணர்த்தி இருப்பார் தனுஷ்.

'புதுப்பேட்டை', 'பொல்லாதவன்', 'யாரடி நீ மோகினி', 'குட்டி', 'தேவதையைக் கண்டேன்', 'ஆடுகளம்', 'தொடரி', 'வடசென்னை', 'அசுரன்', ‘கர்ணன்’ என பெரும்பாலான படங்களில் விளிம்புநிலைச் சமூகத்தைச் சார்ந்த இளைஞனாகவே தனுஷ் நடித்துள்ளார் என்பதை ரீவைண்ட் செய்து அறிந்துகொள்ளலாம்.

பலவீனங்களை பலங்களாக மாற்றிய கலைஞன்

நிறைய தாதா சினிமாக்களுக்கு மத்தியில் வந்த 'புதுப்பேட்டை' 2006-ம் ஆண்டில் வெளியானபோது கொண்டாடப்படவில்லை.

இப்போது தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும்போதெல்லாம் தோளில் தூக்கி வைத்து ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள். நெட்டிசன்கள் ட்ரெண்ட் செய்கிறார்கள்.

தனுஷின் ஒல்லிப் பிச்சான் உடல்வாகு ரவுடிக்கான தோற்றத்தை முன்னிறுத்தவில்லை என்பது பெரும்குறையாகச் சொல்லப்பட்டது. படத்தின் வெற்றியைத் தடுத்த காரணி இதுதான் என்று விவாதிக்கப்பட்டது.

ஆனால், அதே உடல்வாகுதான் இன்று தனுஷை பள்ளிக்கூட மாணவனாக நடித்தால் ஏற்க வைக்கிறது. மீசை எடுத்தால் ஸ்கூல் பையன், தாடி வெச்சா ரவுடி என நம்பகத்தன்மையுள்ள நடிப்பாக சிலாகிக்கப்படுகிறது.

சிவாஜி, கமல், விக்ரம் போன்ற முன்னோடிக் கலைஞர்களைப் போல தனுஷால் எடையைக் கூட்டவோ, குறைக்கவோ முடியாதுதான்.

ஆனால், கதாபாத்திரத்துக்கான பரிமாணத்தை மிகச் சாதாரணமாக நடிப்பில் கடத்திவிடக்கூடிய அசாத்திய திறமை தனுஷுக்கு இருக்கிறது என்பது நிதர்சனம்.

'மரியான்' படத்தில் சூடான் தீவிரவாதிகளிடம் சிக்கியபோதும், பணிபுரியும் நிறுவனத்திடம் நிலைமையைச் சொல்லிப் பணம் கேட்காமல் காதலி பனிமலரிடம் தொலைபேசியில் கசிந்துருகி முத்தம் கொடுத்து நடிப்பால் இதயத்தில் இடம் பிடிக்கிறார் தனுஷ்.

'பொல்லாதவன்' படத்தில், அப்பாவை மருத்துவமனையில் அனுமதித்த வேளையில், அங்கு வரும் ரவுடிகளிடம் பேசும்போது கண்ணில் கோபம் தெறிக்க, ‘போட்றா பார்க்கலாம்' என்று டேனியல் பாலாஜியிடம் நடிப்பால் மிரட்டிய தனுஷை அவ்வளவு சீக்கிரம் கடந்து செல்ல முடியாது.

'3' படத்தில் கழுத்துக்குக் கீழே கத்தியை வைத்துக்கொண்டு தற்கொலை செய்துகொள்ள முடியாமல் கலங்கி அழுது நம் கண்களிலும் நீர் திரள வைத்தார்.

'வடசென்னை' படத்தில் துரோகத்துக்கும் விசுவாசத்துக்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசத்தை நடிப்பில் நிறுத்தி அன்பு ராஜனாக மாறும் படிநிலையில் பக்குவமான, தேர்ந்த நடிப்பைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.

அசுரனில் மூத்த மகனுக்காக ஊரார் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டு, தளர்வாக நடக்கும் காட்சி மிக முக்கியமானது.

நெல்லை புழுதிமண்ணின் நடுத்தர வயதுத் தகப்பனை அப்படியே கண்முன் நிறுத்தி நடிப்பின் உச்சம் தொட்ட தனுஷை வாழ்த்தாமல் இருக்க முடியுமா?.

உறவுச் சிக்கல், உளச் சிக்கலைப் பூரணமாக வெளிப்படுத்தும் குணாளன்

தனுஷின் ஆரம்பக் காலப் படங்களில் இருந்து இப்போதுவரை ரவுடி அல்லது வன்முறையாளர், உளச் சிக்கல் கொண்ட இளைஞர், உறவுச் சிக்கலை எதிர்கொள்ளும் இளைஞர் என்ற 3 குணாம்சங்கள் அவரை விட்டு விலகாமல் பற்றிக்கொண்டே வருகின்றன

'காதல் கொண்டேன்' படத்தில் புறக்கணிப்பாலும், ஆதரவற்ற நிலையிலும் தன் திறமையை வெளிப்படுத்தாமல் உளச் சிக்கலில் ஆட்பட்டுத் தவிக்கும் வினோத், திவ்யா மூலம் தன் அடையாளத்தை அறிந்துகொள்கிறார்.

அதன் மூலம் அவர் மீதான பொசசிவ்னெஸ் காரணமாக அந்த உறவைக் கைவிட முடியாமல், ஒருதலைக் காதலால் திவ்யாவைக் கடத்துகிறார்.

'மயக்கம் என்ன' கார்த்திக், தான் மிகப் பெரிதாக நினைத்த புகைப்படக் கலைஞர் தனக்கு வாய்ப்பு தராமல் அவமானப்படுத்தும்போதும், தனது புகைப்படத்தை அவர் புகைப்படமாகக் காட்டி விருது வென்றபோதும் விரக்தியின் விளிம்புக்குச் சென்று உளச் சிக்கலுக்கு ஆளாகிறார். உடனிருக்கும் மனைவி யாமினியின் கரு கலையவும் காரணமாகிறார்.

'3' படத்தின் ராம் காதல் திருமணமாகக் கைகூடிய நிலையில், 'பைபோலர் டிஸ் ஆர்டர்’பிரச்சினையால் அவதிப்பட்டு மரணத்தின் வாசனையை நுகர்ந்து தன்னைப் பலிகொடுக்கிறார்.

இப்படி தொடர்ந்து மனநலப் பிரச்சினையுள்ள கதாபாத்திரங்களில் நடிப்பது சுலபமில்லை. அதனால் வரும் விமர்சனங்களைப் பொருட்படுத்தாமல் தனுஷ் கதாபாத்திரத்தின் தன்மையை உணர்தல், கதாபாத்திர மனநிலையைப் பிரதிபலித்தல், பாத்திரத்துக்கு ஏற்ப உருமாறுதல், தோற்ற வெளிப்பாடு, உடல்மொழி வெளிப்பாடு, வசன உச்சரிப்பு என அத்தனை அம்சங்களிலும் தன்னை நிரூபித்தார்.

உறவுச் சிக்கலை எதிர்கொள்ளத் தெரியாதவரா தனுஷ்?

அப்படி ஒரே அடியாகச் சொல்லிவிட முடியாது.

'காதல் கொண்டேன்' திரைப்படத்தின் காட்சியின் மூலம் இதனை விளக்கலாம்.

திவ்யா வீட்டுக்கு குரூப் ஸ்டடிக்கு வரும் வினோத் திடீரென்று கதவைத் தாழிடுகிறான். புரியாமல் சின்னதாய் கலவரத்துடன் பார்க்கிறாள் திவ்யா.

மெத்தையில் ஓடி ஆடி விளையாடி குளிர்பானங்கள், ஸ்நாக்ஸ் என ரவுண்டு கட்டி முடித்து பாத்ரூம் போய் களைத்துப் படுத்து உறங்குகிறான் வினோத்.

உண்மையில் வினோத்துக்கு என்னதான் தேவை? மறுநாள் காலையில் அதை அவரே சொல்கிறார்.

''உனக்கு ஏதாவது பிரச்சினையா?'' என்று திவ்யா கேட்கிறாள்.

''இல்லையே நான் சந்தோஷமா இருக்கேன். நீதான் என் கூடவே இருக்கியே'' என்று சொல்கிறான்.

சட்டை இல்லாமல் அருகில் தூங்கும் வினோத்தை மடியில் கிடத்தி தலை வருடுகிறாள் திவ்யா. அப்போதே வினோத்தின் கண்ணீரில் கெட்டது கரைந்து போய்கிறது.

''எனக்கு இது போதும்டா. உன் கூட இருக்கணும். அவ்ளோதான். நீ புரிஞ்சுக்கிட்டா போதும். கூடவே இருந்தால்போதும், நாய்க்குட்டி போல இருக்கேன். ஒரு மூலையில இருந்துக்கிறேன். கேட்டதெல்லாம் கொண்டு வர்றேன். நீ ஆதியை லவ் பண்றதா நினைக்குற? அதெல்லாம் இல்லடா. உன்னை ஹாஸ்பிடல்ல சேர்த்தது நன்றிக்கடன். அதுக்கு தேங்க்ஸ் சொல்லிடு. அதைப் போய் லவ் பண்றதா நினைக்குற மக்கு. நமக்குள்ள இருக்குறதுதான் லவ். எனக்கு ஒண்ணுன்னா துடிச்சுப் போற பாரு. அதான் லவ்'' என்பான் வினோத்.

'புதுப்பேட்டை'யில் தன் நண்பன் மணியின் தங்கை திருமணத்துக்குத் தாலி எடுத்துக்கொடுத்து ஆசிர்வாதம் செய்ய வந்தவன், தானே தாலி கட்டுகிறான். அங்கே கொக்கி குமாருக்கு எந்த உறுத்தலும் இல்லை.

'மயக்கம் என்ன' படத்தில் நண்பன் சுந்தர் ஒருதலையாகக் காதலிக்கும் பெண் யாமினி. அவர் கார்த்திக்கைக் காதலிப்பது தெரியவர, சிறிய தடுமாற்றத்துக்குப் பிறகு கார்த்திக்கும் காதலிக்கிறார். இதில் இருவருக்கும் எந்தக் குற்ற உணர்ச்சியும் இல்லை.

நண்பன் சுந்தர் கார்த்திக்கின் தங்கையைத் திருமணம் செய்துகொள்கிறார். இந்தத் தலைமுறை உறவுச் சிக்கலை எவ்வளவு சர்வ சாதாரணமாகக் கடக்கிறது என்பதை இதில் உணர முடிகிறது.

'ஆடுகளம்' படத்தில் குரு மீது கொண்ட விசுவாசம் காரணமாக பேட்டைக்காரனின் அழுக்கு முகத்தை அப்படியே தனக்குள் பொத்திவைத்துக் கொள்கிறான் கருப்பு.

அப்பாவைப் போன்ற அவரை அசிங்கப்படுத்துவதில், அவமானப்படுத்துவதில் கருப்புவுக்கு துளியும் உடன்பாடு இல்லை. அதனாலேயே அந்த உணமையை அப்படியே பூட்டிவைத்துக்கொண்டு காதலியுடன் வெளியூர் செல்கிறான்.

இப்படி உறவுச் சிக்கல் கொண்ட கதாபாத்திரங்களில் தன் தேர்ந்த நடிப்பை தனுஷ் வழங்கியுள்ளார்.

வசன உச்சரிப்பு, நகைச்சுவையில் அப்ளாஸ் அள்ளும் நடிகன்

தனுஷின் வசன உச்சரிப்பும் படத்துக்குப் படம் மெருகேறி இருப்பதைக் காணலாம். 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் பெண்களை ஆண்கள் ஃபாலோ செய்வது, காதலிக்க வைப்பது குறித்து ஐந்து நிமிடம் மூச்சு விடாமல் பேசுவார் தனுஷ். அது கொஞ்சம் பெண்களை டீஸ் செய்வது போல இருக்கும்.

ஆனால், அதே பாணியில் 'வேலையில்லா பட்டதாரி' படத்தில் வில்லனிடம் மூச்சு விடாமல் இன்ஜினீயரிங் படித்து வேலை கிடைக்காமல் இருக்கும் மாணவர்களின் வலிகளைப் பதிவு செய்வார்.

ரஜினி ஸ்டைலில் தனுஷ் பேசி இருந்தாலும் அது பரவலான வரவேற்பைப் பெற்றது.

நகைச்சுவையில் தனுஷ் தன் முழுத் திறமையைப் பல படங்களில் நிரூபித்துள்ளார். 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் தம்பியுடனான காட்சிகள், 'குட்டி' படத்தில் ஸ்ரேயாவின் காதலனாக அர்ஜுன் (சமீர்) குழுவினரிடம் பேசுவது,

'யாரடி நீ மோகினி' படத்தில் கிராமத்துக் காட்சிகள், 'உத்தமபுத்திரன்' படத்தில் விவேக்குடன் இணைந்து ஜெனிலியாவின் மாமா குடும்பத்தை ஏமாற்றுவது, 'மாரி' படத்தில் ரோபோ ஷங்கர், ‘கல்லூரி’ வினோத்தைச் சதாய்ப்பது என அந்தப் பட்டியல் பெரிது.

தனுஷ் மாரியா? அசுரனா?

'திருடா திருடி', 'வேலையில்லா பட்டதாரி' படங்களின் அவுட்லைன் ஒரே மாதிரிதான் இருக்கும். முதல் பாதி முழுக்க சேட்டை செய்யும் இளைஞன், இரண்டாம் பாதி முழுக்க பெற்றோரின் சொல்படி நல்ல பிள்ளையாய் நடக்கும் பையன்.

கிட்டத்தட்ட இது ரஜினி ஃபார்முலாவாக இருந்தாலும் வணிக வெற்றிக்காக தன்னை ஒரு என்டர்டெயினராகத் தக்க வைத்துக்கொள்வதற்காக தனுஷ் இதுபோன்ற கமர்ஷியல் படங்களில் நடித்து வருகிறார்.

'தேவதையைக் கண்டேன்', 'திருவிளையாடல் ஆரம்பம்', 'படிக்காதவன்', 'மாப்பிள்ளை', 'உத்தமபுத்திரன்', 'குட்டி', 'வேங்கை', 'வேலையில்லா பட்டதாரி', 'அனேகன்', 'மாரி', 'கொடி', 'மாரி 2', 'பட்டாஸ்', 'எனை நோக்கிப் பாயும் தோட்டா' எனப் பல படங்கள் இதில் அடக்கம்.

அதேசமயம் கமர்ஷியல் கல்லா கட்டுவதே குறிக்கோள் என்று தனுஷ் தன் சினிமா வாழ்க்கையை வடிவமைத்துக் கொள்ளவில்லை.

'புதுப்பேட்டை', 'அது ஒரு கனாக்காலம்', 'ஆடுகளம்', 'ஷமிதாப்', 'மயக்கம் என்ன', '3', 'மரியான்', 'வடசென்னை', 'அசுரன்' என அதிகப் படங்களில் பரிசோதனை முயற்சிகளுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்ட தனுஷின் கலைத் தாகத்தையும் கவனிக்க வேண்டும்.

இன்னும் நுட்பமாக தமிழ் சினிமாவின் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், காலந்தோறும் இரு வகையான நடிகர்களே மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். அவர்களையே ரசிகர்கள் கொண்டாடியும் போற்றியும் வருகின்றனர்.

மக்களின் பொழுதுபோக்குக்கு உத்தரவாதம் கொடுக்கும் மாஸ் என்டர்டெயினர் ஒரு வகை. பரிசோதனை முயற்சிகளுக்கான களத்தில் தன்னை நிரூபித்து, காலத்தால் மறக்க முடியாத படங்களைக் கொடுக்கும் ஃபெர்பார்மர் மற்றொரு வகை.

தியாகராஜ பாகவதர் - பி.யு.சின்னப்பா, எம்ஜிஆர் - சிவாஜி, ரஜினிகாந்த் - கமல்ஹாசன் என்று நடிகர்களை இப்படி வரிசைப்படுத்தலாம். ஆனால், அதற்கடுத்த தலைமுறையில் மக்கள் மனதை வென்ற நடிகர்களான விஜய்யும் அஜித்தும் மாஸ் நடிகர்களாகவே வலம் வருகின்றனர்.

இவர்களைத் தொடர்ந்து ஃபெர்பார்மர், என்டர்டெயினர் என இரண்டும் சேர்ந்த கலவையாக தன் இருப்பைப் பதிவு செய்து தமிழ் சினிமாவில் தனித்துவ இடங்களைப் பிடித்த நடிகராக தனுஷைக் குறிப்பிட முடியும்.

அப்படி என்றால் தனுஷ் மாரியா? அசுரனா? என்று கேட்டால் ஃபெர்பார்மர், என்டர்டெயினர் என்ற டபுள் ரோல்களிலும் அவர் அசத்துகிறார் என்பதே மறுக்க முடியாத உண்மை.

வழக்கமான ரவுடி சினிமாவா மாரி?

இத்தனைக்கும் மாரி வழக்கமான ரவுடி சினிமா இல்லை. பொதுவாக ரவுடி, தாதா, கேங்ஸ்டர் என்றால் அளவாகப் பேசுபவர்களாக, கண் அசைத்தால் காரியத்தை முடிக்கும் அடிப்பொடிகள் வைத்திருப்பவர்களாகவே இருப்பர். ஆனால், மாரி அப்படியல்ல. கெத்தாகத் திரிந்தாலும் அடிப்பொடிகளாக இருக்கும் ரோபோ ஷங்கரும், கல்லூரி வினோத்தும் அவரைக் கலாய்க்க அனுமதிப்பார்.

''போற வர்றவனை அடிக்குற பெயிண்ட் அடிக்கமாட்டியா? ஆட்டோவை வாய்ல ஓட்டினா பத்தாது. ஸ்டார்ட் பண்ணி ஓட்டணும்'', ''அந்தப் பொண்ணுக்கு கரெக்ட் நீ இல்லைன்னு எங்களுக்குத் தெரியுது. அந்த பவுடர் மூஞ்சிக்கு தெரியலையே.'' என்று இஷ்டத்துக்கும் ரோபோ ஷங்கர் கலாய்த்தாலும் அதை ஒரு எல்லை வரை அனுமதிக்கும் மாரி, உடனே தன் மீதான மரியாதைக்குப் பங்கம் வராமல் பார்த்துக் கொள்வார்.

தன் மீதான பயத்தை ஏரியா மக்களிடம் விதைத்துக்கொண்டே இருப்பார். அதே சமயம் சின்னக் குழந்தைகளின் பலூன்களை உடைப்பது, இவ்ளோ டிவி இருக்குது. ஒரு டிவில கூட ஏன் இந்தியா ஜெயிக்கலை? என இம்சை கூட்டுவது, ஏன்டா பீர் விலையை ஏத்துறாங்க என்று காண்டாவது, ஆட்டோ ஓட்டுநர் ஆனதும் அருகில் இருப்பவர்களையும் ஆட்டோவில் அள்ளிப்போட்டுக்கொண்டு பணம் கறப்பது என ஜாலியாக சேட்டை செய்யும் தாதாவை அதற்கு முன் பார்த்ததில்லை.

கூட்டு உழைப்பின் அசுரன்

28-வது வயதில் 'ஆடுகளம்' படத்துக்காக சிறந்த தேசிய விருது பெற்ற நடிகர், 'காக்காமுட்டை', 'விசாரணை' படங்களின் இணை தயாரிப்பாளராகப் பங்கு பெற்றார். அந்தப் படங்களும் தேசிய விருதுகள் பெற்று தனுஷுக்கும் வெற்றிமாறன், மணிகண்டனுக்கும் பெருமை சேர்த்தன.

'ப.பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராகவும் ஒரு ஃபீல் குட் கமர்ஷியல் படத்தைக் கொடுத்து இயக்குநர் வரிசையிலும் அழுத்தமாக இடம் பிடித்துள்ளார்.

'3' படத்தில்தான் அனிருத் ஆச்சர்ய வரவாக, இசையமைப்பாளராக அறிமுகம் ஆனார். அவரின் இசையில் 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் உலக அளவில் ஹிட்டானது. இன்று தமிழ் சினிமாவில் கவன ஈர்ப்பு மிகுந்த இசையமைப்பாளராக அனிருத் உள்ளார்.

அதே படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கு 'எதிர்நீச்சல்', 'காக்கிசட்டை' படங்களைத் தயாரித்துக் கொடுத்து கமர்ஷியல் நாயகனாக தனித் தடம் பதிக்க வைத்தார்.

விஜய் சேதுபதியின் நடிப்பில் 'நானும் ரவுடிதான்' படத்தைத் தயாரித்ததன் மூலம் அடுத்த தலைமுறை நடிகர்களையும் அரவணைத்தார்.

'பரட்டை என்கிற அழகு சுந்தரம்' படத்தின் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய வேல்ராஜ் தனுஷ் - வெற்றிமாறன் படங்களில் ஆஸ்தான ஒளிப்பதிவாளராக மாற, அவர் இயக்கத்தில் 'வேலையில்லா பட்டதாரி', 'தங்கமகன்' படங்களில் நடித்தார் தனுஷ்.

தன்னைச் செதுக்கிய செல்வராகவன், வெற்றிமாறன் படங்களில் தொடர்ந்து அடுத்தடுத்து நடிக்க உள்ளார். 'திருடா திருடி', 'சீடன்' படங்களை இயக்கிய சுப்பிரமணிய சிவாவை 'வடசென்னை', 'அசுரன்' எனத் தன் படங்களில் தொடர்ந்து நடிகராகப் பயன்படுத்தி வருகிறார்.

தனுஷ் சொல்லும் செய்தி

36 வயதில் 40க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்கள், 28-வது வயதில் தேசிய விருது, 'ராஞ்சனா', 'ஷமிதாப்' என இரு இந்திப் படங்கள் மூலம் இந்திய சினிமாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர்,

'தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபகிர்' எனும் பிரெஞ்சு படத்தின் மூலம் சர்வதேச சினிமாவுக்குள்ளும் தன் ஆற்றலை வெளிக்கொணர்ந்தவர் தனுஷ். இதை அவர் நடிக்க வந்த 20 ஆண்டுகள் சாத்தியப்படுத்தி இருப்பதும் கவனிக்கத்தக்கது.

நினைக்காதது வேணும்னா நடக்காம இருக்கலாம். ஆனால் நினைக்கிறது கண்டிப்பா நடந்தே தீரும் - இது 'மரியான்' படத்தின் வசனம்.

தனுஷின் சினிமா கெரியர் சொல்லும் அழுத்தமான செய்தி இதுதான். பள்ளிக்காலத்தில் செஃப் எனும் சமையல் கலை நிபுணராக மாறுவதில் ஆர்வம் இருப்பதாகச் சொன்ன தனுஷ்தான் இன்று சர்வதேச சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்து அசாத்திய திறமையால் விழிகளை வியக்க வைக்கிறார்.

உன் திறமை மீது நம்பிக்கை வை. நடக்கும் என்று நம்பி கடினமாக உழை. நீ நினைப்பது நடந்தே தீரும். இதுவே தனுஷ் நடிகர்களுக்கும் ஏன் சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் சொல்லும் செய்தியாக உள்ளது.

மாரி செல்வராஜின் 'கர்ணன்', கார்த்திக் சுப்புராஜின் 'ஜெகமே தந்திரம்', ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் அக்‌ஷய் குமாருடன் நடிக்கும் 'அத்ரங்கி ரே' எனும் பாலிவுட் படம், அடுத்தடுத்து செல்வராகவன், வெற்றிமாறன் படங்கள் என தனுஷின் கால்ஷீட் நிரம்பி வழிகிறது.

37 வயதில் ஓர் ஆளுமையாக தன்னை நிறுவிக்கொண்ட தனுஷ் இன்னும் அரை நூற்றாண்டு ஆனாலும் தமிழ் சினிமாவின், இந்திய சினிமாவின் முகமாகவும் முகவரியாகவும் இருக்க இந்தப் பிறந்த நாளில் அவரை மனதார வாழ்த்துவோம்!

- க. நாகப்பன்

நன்றி : இந்து தமிழ் திசை

#தேவதையைக்_கண்டேன் #திருவிளையாடல்ஆரம்பம் #படிக்காதவன் #மாப்பிள்ளை #உத்தமபுத்திரன் #குட்டி #வேங்கை #வேலையில்லாபட்டதாரி #அனேகன் #மாரி #கொடி #மாரி2 #பட்டாஸ் #எனைநோக்கிப்பாயும்தோட்டா #தனுஷ் #நடிகர்தனுஷ் #குபேரா #தமிழ்சினிமா #தனுஷ்

32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்!https://cinirocket.com/script-of-a-v-meiyyappachettiar/ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய 'ச...
28/07/2025

32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்!
https://cinirocket.com/script-of-a-v-meiyyappachettiar/

ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய 'சபாபதி' படத்தில் கதாநாயகனாக நடித்த டி.ஆர்.ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய்.

கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய்.

- 30.3.1972 - குமுதம் இதழில் வெளியான ஏ.வி.மெய்யச் செட்டியார் எழுதிய வாழ்க்கை அனுபவத் தொடரிலிருந்து...

#ஏவிமெய்யப்பச்செட்டியார் #சபாபதி #டி.ஆர்.ராமச்சந்திரன் #தமிழ்திரைப்படவரலாறு #கிளாசிக்தமிழ்சினிமா

‘முரட்டுக்காளை’ - ரயில் சண்டை காட்சி படமான விதம்!மனம் திறக்கும் ரஜினிhttps://cinirocket.com/interview-of-rajini-kanth/தம...
28/07/2025

‘முரட்டுக்காளை’ - ரயில் சண்டை காட்சி படமான விதம்!
மனம் திறக்கும் ரஜினி
https://cinirocket.com/interview-of-rajini-kanth/

தமிழ்த் திரை உலக வரலாற்றில் வசூல் சாதனை படைத்த படம் 'முரட்டுக்காளை'. சிவாஜி, கமல் உள்ளிட்ட உச்ச நட்சத்திரங்களை சினிமாவில் அறிமுகம் செய்த ஏவிஎம் நிறுவனம் தயாரித்த படம்.

பல ஆண்டுகள் படத் தயாரிப்பை நிறுத்தி வைத்திருந்த ஏவிஎம், நீண்ட இடைவெளிக்குப் பிறகு 80-களில் இந்தப் படம் மூலம் மீண்டும் தயாரிப்பில் இறங்கியது.

ரஜினிகாந்த் ஹீரோ. ரதி, சுமலதா, சுருளிராஜன், தேங்காய் சீனிவாசன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

கதாநாயகன் வேடங்களில் கலக்கி வந்த ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர், முரட்டுக்காளையில் தான் முதன்முதலாக வில்லன் வேடத்தில் தோன்றினார்.

எஸ்.பி.முத்துராமன் இயக்கிய இந்தப் படத்துக்கு இசை இளையராஜா.

இந்தப் படத்தில், கிளைமாக்சுக்கு முன்னதாக இடம்பெறும் ரயில் சண்டைக் காட்சி அன்றைய காலகட்டத்தில் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்தக் காட்சி படமாக்கப்பட்ட விதம் குறித்து ரஜினிகாந்த் தெரிவித்த தகவல்.

"சுமார் 12 ஆண்டுகளுக்கு பின்னர், முரட்டுக்காளை திரைப்படத்தின் மூலமாக ஏ.வி.எம் நிறுவனம் சினிமா உலகில் ரீ-என்ட்ரி கொடுத்தனர்.

படத்தை பிரம்மாண்டமாக எடுக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். படத்தில் ஒரு ரயில் சண்டைக் காட்சி இடம்பெற்றது.

அந்த சண்டைக் காட்சியைப் பெரிய அளவில் எடுக்க வேண்டும் என்பது ஏவிஎம்மின் திட்டம். வெளிநாடு அல்லது பாலிவுட்டில் இருந்து ஸ்டண்ட் மாஸ்டர்களை அழைத்து வர வேண்டும் என்று ஏ.வி.எம் நிறுவனத்தினர் நினைத்தனர்.

ஆனால், ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினத்திற்கும், எஸ்.பி. முத்துராமனுக்கும் இதில் உடன்பாடு கிடையாது.

முழு படத்தின் சண்டைக் காட்சிகளையும் நாம் செய்து விட்டு, ஒரே ஒரு சண்டைக் காட்சிக்கு மட்டும் வெளியே இருந்து ஆட்களை அழைத்து வந்தால் நமக்கு அவமானமாக இருக்கும் என்று இருவரும் கருதினர்.

இதனை ஒரு சவாலாக ஏற்று ஜூடோ ரத்தினம் செய்யலாம் என்று முடிவு செய்தார் இயக்குநர்.

இப்போது இருப்பது போல் அப்போது, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ், ரோப் வசதிகள் எதுவும் இல்லை. இருந்தும் உயிரைப் பணயம் வைத்து அந்த சண்டைக் காட்சியை ஓடும் ரயிலில் படமாக்கினோம்.

தமிழ் சினிமா சண்டைப் பயிற்சியாளர்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்று நிரூபிக்கும் வகையில் அந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது" என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

இது குறித்து சில கூடுதல் தகவல்கள்:

செங்கோட்டையில் இருந்து கேரளா செல்லும் ரயில் பாதையில் இந்த சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. படம் ஆரம்பிக்கும்போது உயிருடன் இருந்த தயாரிப்பாளர் மெய்யப்ப செட்டியார், படம் ரிலீஸ் ஆகும் போது அமரர் ஆகி இருந்தார்.

- பாப்பாங்குளம் பாரதி.

#முரட்டுக்காளை #சிவாஜி #கமல் #ஏவிஎம் #ரஜினிகாந்த் #ரதி #சுமலதா #சுருளிராஜன் #தேங்காய்_சீனிவாசன் #ஜூடோ_ரத்தினம் #மெய்யப்ப_செட்டியார்

ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் சித்ராவின் குரல்!https://thaaii.com/2025/07/26/singer-chithra-bday-spl-article/எனக்கு மிகவ...
26/07/2025

ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் சித்ராவின் குரல்!
https://thaaii.com/2025/07/26/singer-chithra-bday-spl-article/

எனக்கு மிகவும் பிடித்த பெண் குரல் பாடகி சித்ரா உடையதுதான். அந்தக் குரலின் இனிமை ஒவ்வொரு ஆன்மாவின் அடியாழத்தைத் தொடும் ஆற்றல் படைத்தது.

இடைவெளியே இல்லாமல் நீண்ட காலமாக உச்சத்தில் இருக்கும் ஒரே பெண் பாடகி சித்ராதான். 6 தேசிய விருதுகளைப் பெற்ற ஒரே இந்தியப் பெண் பாடகியும் அவர்தான்..

1985 - பாடறியேன் படிப்பறியேன் (சிந்து பைரவி)
1986 - கண்ணா வருவாயா (மனதில் உறுதி வேண்டும்)
1987 - புத்தம் புது ஓலை வரும் (வேதம் புதிது)
1988 - நின்னுக்கோரி வர்ணம் (அக்னி நட்சத்திரம்)
1989 - ஓ ப்ரியா ப்ரியா (இதயத்தைத் திருடாதே)
1990 - சின்னப் பொண்ணுதான் வெட்கப்படுது (வைகாசி பொறந்தாச்சு)
1991 - தூளியிலே ஆடவந்த (சின்னத்தம்பி)
1992 - ருக்குமணி ருக்குமணி (ரோஜா)
1993 - அஞ்சலி அஞ்சலி (டூயட்)
1994 - தென்கிழக்குச் சீமையிலே (கிழக்குச் சீமையிலே)
1995 - கண்ணாளனே (பம்பாய்)
1996 - மலர்களே மலர்களே (லவ் பேர்ட்ஸ்)
1997 - ஊ லலல்லா ஊ லலல்லா (மின்சாரக் கனவு)
1998 - உன் மார்பில் விழி மூடித் தூங்குகிறேன் (நினைத்தேன் வந்தாய்)
1999 - தீண்டாய் மெய் தீண்டாய் (என் சுவாசக் காற்றே)
2000 - எங்கே எனது கவிதை (கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன்')
2001 - நீதான் என் தேசிய கீதம் (பார்த்தாலே பரவசம்)
2002 - கரிசக் காட்டுப்பூவே (ராஜா)
2003 - இதுதானா இதுதானா (சாமி)
2004 - ஒவ்வொரு பூக்களுமே (ஆட்டோகிராப்)
2006 - வருகிறாய்.. (அன்பே ஆருயிரே)
2008 - இதயம் இடம் மாறியதே (ஜோதா அக்பர்)
2009 - யாரோ யாருக்குள் இங்கு யாரோ (சென்னை 28)
2010 - நான் போகிறேன் மேலே மேலே( நாணயம்)
2011 - சந்திக்காத கண்களில் (180)
2014 - மௌனம் பேசும் (அமர காவியம்)
2015 - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை (ஓ காதல் கண்மணி)
2016 - கொஞ்சிப் பேசிட வேணாம் (சேதுபதி)

என்று அவருடைய உயரம் எந்தக் காலகட்டத்திலும் மாறவேயில்லை.

எல்லாம் சரியாக இருக்க வேண்டும் என்பதற்கான அவருடைய மெனக்கெடல் அனைத்துத் துறைகளிலும் இருப்பவர்கள் கற்க வேண்டிய பாடம்.

பாடல் பதிவு, பாடல் பதிவுக்கான ஒத்திகை, சர்வதேச இசைக் கச்சேரி, உள்ளூர்க் கச்சேரி, தொலைக்காட்சி நிகழ்ச்சி, நேர்காணல், போட்டியாளர்களுக்குக் கற்றுத் தரும்போது பாடுதல் என்று எந்த விதமான பேதத்தையும் அவரிடம் நான் கண்டதில்லை.

சுதி விலகாமல், தாளம் பிசகாமல் ஸ்வரக் கட்டின் கம்பீரம் குலையாமல் பிரவாகித்துக் கொண்டேயிருக்கும் சங்கீத நதி அவர்.

காது, மூக்கு, தொண்டை நிபுணர் தொண்டை வலிக்காகத் திறக்கச் சொன்னால் கூட அவர் சுதி விலகாமல்தான் வாய் திறப்பார்.

ஜானகி, எஸ்பிபி, ஜேசுதாஸ், மலேசியா, ஜெயச்சந்திரன், ஜென்சி ஆகியோர் ராஜா பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

சுஜாதா, ஹரிஹரன், ஷாகுல் ஹமீது, சங்கர் மகாதேவன், சாதனா சர்கம், உன்னி கிருஷ்ணன், உன்னி மேனன், சின்மயி , ஸ்ரீனிவாஸ், கார்த்திக், நரேஷ் அய்யர், மால்குடி சுபா, அனுபமா, உதித் நாராயணண், சுக்வீந்தர் சிங், எம்.ஜி. ஸ்ரீ குமார், சித் ஸ்ரீராம் ஆகியோர் ரஹ்மான் பள்ளியைச் சேர்ந்தவர்கள்.

மனோ, சித்ரா, ஸ்வர்ணலதா ஆகிய மூவரையும் இரண்டு பள்ளிகளின் கலவை என்று குறிப்பிடலாம். அதுவும் சித்ராவிடம் இருவரின் குணாதிசயங்கள் கூட உண்டு ஆம் அவர்தான் நிஜமான 'இளையமான்'.

ஜானகியம்மா கம்பீரமானவர். சித்ரா பணிவானவர். இளையராஜா, எஸ்பிபி, ஜேசுதாஸ், ஜானகியம்மா ஆகியோர் முன்னிலையில் அவர் காட்டுகிற பணிவு அலாதியானது. தன்னைவிட இளையவர் எனினும் அவர் மனதளவில் ரஹ்மான் மீது வைத்திருப்பதும் குரு மரியாதைதான்.

ஒட்டுமொத்தமாக அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரஹ்மான் இசையில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடிய ஒரே பெண் பாடகி சித்ராதான்.

தனிப்பட்ட வாழ்க்கையில் ஆயிரம் துயரங்கள் இருந்தாலும், அந்தத் துயரங்களை நினைவு கூர்வதற்கான சூழல்களை விஜய் டிவி வலிந்து உருவாக்கினாலும் தேவையில்லாத மிகை உணர்ச்சியை அவர் பொதுவெளியில் வெளிப்படுத்தியதில்லை.

சித்ரா கலையை மலினப்படுத்தாத அபூர்வமான கலைஞர். உண்மையில் தொலைக்காட்சி பாடல் நிகழ்ச்சிகளில் அவரளவிற்குச் சிறந்த ஆசிரியர் வேறு யாருமில்லை..

அவர் குரலை மட்டும் தனியாகக் கேட்டால் இந்த வயது வரை அது அன்பில் பெருகி வழியும் காதலியின் குரல்தான். ஆனால் தொலைக்காட்சியில் காண்கிறபோது என்னையறியாமல் வாய் 'சித்ராம்மா' என்று அழைத்து விடும்..

'சித்ராம்மாவிற்கும்' 'சித்ராவுக்கும்' நடுவே ஊஞ்சலாடும் அந்தக் குரலில்தான் என் தனிமையின் பொழுதுகள் நகர்ந்திருக்கின்றன.

எம் தாத்தாக்களுக்கு சுசீலா, தகப்பனுக்கும் தாய்மாமன்களுக்கும் எஸ்.ஜானகி எனில், எமக்கு சித்ராதான்.

ஸ்ரேயா கோஷல் வந்து கரங்களைப் பிடித்திழுத்து பொழுதெல்லாம் மயக்கினாலும் மனம் சித்ராம்மாவின் முந்தானையைப் பற்றிக் கொண்டு ஒரு சிறுவனாக மாறிவிடுவதை இன்றுவரை தவிர்க்கவே முடியவில்லை.

லவ் யூ சித்ராம்மா !!!

- நன்றி: மானசீகன் முகநூல்

#சித்ரா #மனோ #ஸ்வர்ணலதா #ஜானகி #எஸ்பிபி #ஜேசுதாஸ் #மலேசியா #ஜெயச்சந்திரன் #ஜென்சி #சுஜாதா #ஹரிஹரன் #ஷாகுல்_ஹமீது #சங்கர்_மகாதேவன் #சாதனா_சர்கம் #உன்னிகிருஷ்ணன் #உன்னிமேனன் #சின்மயி #ஸ்ரீனிவாஸ் #கார்த்திக் #நரேஷ் #மால்குடி_சுபா #அனுபமா #உதித்_நாராயணண் #சுக்வீந்தர்சிங் #எம்ஜி_ஸ்ரீகுமார் #சித்_ஸ்ரீராம் #ரஹ்மான்

வடிவேலு, பகத் பாசில் இருவரில் யார் ‘மாயமான்’?https://cinirocket.com/maareesan-review/சில நடிகர்கள் திரையில் தோன்றினாலே ப...
26/07/2025

வடிவேலு, பகத் பாசில் இருவரில் யார் ‘மாயமான்’?
https://cinirocket.com/maareesan-review/

சில நடிகர்கள் திரையில் தோன்றினாலே போதும், ரசிகர்கள் கொண்டாட்டமாகி விடுவார்கள். சிலரது ‘காம்பினேஷன்’ அந்த மாயாஜாலத்தை நிகழ்த்தும். குறிப்பாக, நகைச்சுவை நடிகர்களுடன் சில நாயகர்கள் இணைகிறபோது அது நிகழும்.

கவுண்டமணி உடன் சத்யராஜ், கார்த்திக், பிரபு, அர்ஜுன் போன்றோர் இணைந்து நடித்தபோது அது நிகழ்ந்திருக்கிறது. அதற்கடுத்த தலைமுறையிலும் கூட, இதுபோன்ற சில காமெடியன் – ஹீரோ ‘காம்பினேஷன்’கள் உண்டு.

கமர்ஷியல் படங்களாக அமையாவிட்டாலும், சில திரைப்படங்களில் அதுபோன்ற கொண்டாட்டத்தை சில ‘காம்பினேஷன்கள்’ நிகழ்த்தும்.

அந்த வரிசையில், ‘மாமன்னன்’ படத்தில் எதிரும் புதிருமாகப் பகத் பாசில் உடன் வடிவேலு தோன்றிய காட்சிகள் தியேட்டரில் ஆரவாரத்தைப் பெற்றன. இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்தால் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கின.

அந்த எதிர்பார்ப்புக்கான பரிசைத் தந்திருக்கிறது ஆர்.பி.சௌத்ரி தயாரிப்பில், சுதீஷ் சங்கர் இயக்கத்தில், கிருஷ்ணமூர்த்தி எழுத்தாக்கத்தில், யுவன்சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாக்கப்பட்ட ‘மாரீசன்’.

இப்படம் தரும் திரையனுபவம் எத்தகையது?

‘மாரீசன்’ கதை!

திருட வேண்டும் என்று தோன்றும்போது சில இடங்களில், சில நபர்களிடத்தில் ‘வேலையை’க் காட்டுபவர் தயாளன் (பகத் பாசில்).

பாளையங்கோட்டை சிறையில் இருந்து விடுதலையான கையோடு நாகர்கோவில் செல்லும் அவர், அங்கு ஒரு மோட்டார் பைக்கை திருடிக்கொண்டு ‘நகர் உலா’ வருகிறார்.

ஒரு வீட்டைப் பார்த்ததும், அதனுள் திருட நுழைகிறார். அங்கு ஒரு அறையில் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் இருக்கும் ஒரு நடுத்தர வயது மனிதரைக் காண்கிறார்.

தயாளன் ஒரு திருடன் என்று தெரிந்ததும் அந்த நபரின் முகத்தில் நம்பிக்கை தெரிகிறது. ‘என்னை இங்கிருந்து கூட்டிட்டு போப்பா’ என்கிறார் அந்த நபர். அதற்காகப் பணம் தருவதாகச் சொல்கிறார்.

அவரை அழைத்துக்கொண்டு வெளியே வருகிறார் தயாளன். ஒரு ஏடிஎம்மில் பணம் எடுக்க முயற்சிக்கும்போது, அந்த நபரின் கணக்கில் லட்சக்கணக்கில் பணம் இருப்பதை அறிகிறார். அதனை லவட்ட முடிவு செய்கிறார்.

அந்த நபரின் பெயர் வேலாயுதம் பிள்ளை (வடிவேலு). தனக்கு அல்சைமர்ஸ் எனும் ‘மறதி நோய்’ இருப்பதாகவும், தன்னை முழுதாக மறந்துவிடுவதற்கு முன்பாகச் சில கடமைகளைச் செய்ய வேண்டுமெனவும் கூறுகிறார்.

திருவண்ணாமலையில் இருக்கும் நண்பர் சாரியைப் பார்த்துவிட்டு, பாலக்காட்டில் இருக்கும் மகளைக் காணச் செல்ல வேண்டும் என்கிறார்.

‘நானே உங்களை அந்த இடத்திற்கு கூட்டிட்டு போறேன். இந்த மறதி நோயோட நீங்க எப்படி சமாளிப்பீங்க’ என்று வேலாயுதத்தை பைக்கில் ஏற்றிக்கொண்டு பயணிக்கத் தொடங்குகிறார் தயாளன்.

வழியில் ஏதேனும் ஒரு இடத்தில் அவரது ‘ஏடிஎம்’ பின் எண்ணை தெரிந்துகொண்டு, பணத்தை ‘அபேஸ்’ செய்வதுதான் அவரது திட்டம்.

அதேநேரத்தில், நாகர்கோவிலில் பைக் திருடிய நபரைத் தேடும் பணியில் ஒரு போலீஸ் தனிப்படை ஈடுபடுத்தப்படுகிறது.

அதற்கான காரணம் என்ன? வேலாயுதத்தின் பின்னணி என்ன? மறதி நோயால் அவதிப்படும் அவரைத் தயாளன் ஏமாற்றினாரா? அவர்களை போலீசாரால் பிடிக்க முடிந்ததா என்று சொல்கிறது ‘மாரீசன்’னின் மீதி.

‘கலக்கல்’ நடிப்பு!

ராமாயணக் கதையில் வரும் ‘மாயமான்’ பாத்திரத்தின் பெயர் மாரீசன் என்பது நாம் அறிந்ததே. இந்தப் படத்தில் ‘மாயமான்’ ஆகத் தென்படுவது வடிவேலுவா? பகத் பாசிலா? இந்த கேள்விதான் படத்தின் யுஎஸ்பி.

முதல் பாதியில் பகத்தின் பக்கம் திரும்புகிற நமது கவனம், இரண்டாம் பாதியில் முழுக்க வடிவேலு பாத்திரம் நோக்கிச் செல்கிறது. அந்த மாயாஜாலத்தை கனகச்சிதமாக நிகழ்த்தியிருக்கிறார் எழுத்தாக்கம் செய்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி.

அதேநேரத்தில், முன்பாதியில் இரண்டு ‘மகா’ நடிகர்களின் பயணம் ’ஓகே’ எனும் திரையனுபவத்தையே தருகிறது. பெரியளவுக்கு ‘தியேட்டர் மொமண்ட்’கள் இல்லை.

இரண்டாம் பாதியில் ஒரு பிளாஷ்பேக் வந்து போகிறது. அதில், கதையின் மையக்கரு தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனாலும், அது நம்மில் தாக்கத்தை ஏற்படுத்தப் போதுமானதாக இல்லை.

திரைக்கதையில் சில விஷயங்களைக் காட்டாமல் தவிர்த்திருக்கும் இயக்குனர் – திரைக்கதையாசிரியர் கூட்டணி, இரண்டாம் பாதியிலும் கூட அவற்றை முழுமையாக விளக்கவில்லை. அது இப்படத்திலுள்ள பெருங்குறை.

அது ‘சஸ்பென்ஸை’ உடைத்துவிடும் என்று அவர்கள் கருதியிருக்கலாம். ஆனாலும், அதனால் பெரிதாகப் பலன் விளையவில்லை என்பதே உண்மை.

‘பயணப் படம்’ என்ற வகைமையில் பல காட்சிகள் இதில் இருக்கின்றன. அவற்றுக்கு நியாயம் சேர்க்கிறது கலைச்செல்வன் சிவாஜியின் ஒளிப்பதிவு. கேமிரா நகர்வுகள் சில இடங்களில் கதையை நகர்த்துவதாகவும் இருக்கின்றன.

ஸ்ரீஜித் சாரங்கின் படத்தொகுப்பு காட்சிகளைச் சீரான வேகத்தில் நகர்த்தியிருக்கிறது. இரண்டாம் பாதியில் சில காட்சிகள் ‘வழக்கமானதாக’த் தெரிவதைத் தவிர்த்திருக்கலாம்.

‘பங்கலான்’னின் தயாரிப்பு வடிவமைப்பு இப்படத்திற்குப் பலம் சேர்த்திருக்கிறது. ‘நேட்டிவிட்டி’ என்று சொல்லும்படியான சித்தரிப்பு காட்சியாக்கத்தில் இல்லை என்றபோதும், ‘யதார்த்தம்’ என்று சொல்லும்படியான பின்னணியை ஏற்படுத்தியிருக்கிறது அவரது உழைப்பு.

யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் சட்டென்று மனதோடு ஒட்டிக் கொள்கின்றன. காட்சிகளின் தன்மைக்கு ஏற்றபடி பின்னணி இசை தர வேண்டும் என்பதிலும் நிறையவே மெனக்கெட்டிருக்கிறார்.

இதுபோக டிஐ, விஎஃப்எக்ஸ் போன்ற பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

கண்களை உறுத்தாத அளவுக்கு ஆடை வடிவமைப்பு அமைக்கப்பட்டுள்ளது. ஒப்பனையில் ‘அதீதம்’ தெரியாவிட்டாலும், வடிவேலு திரையில் தென்படும் சில ஷாட்களில் கொஞ்சம் ‘செயற்கைத்தனம்’ எட்டிப் பார்க்கிறது.

பகத் பாசில், வடிவேலு இருவருமே ‘கலக்கலாக’ நடித்திருக்கின்றனர். வடிவேலு சீரியசாக தோன்றுவதை ஈடுகட்டுகிற வகையில் பகத் ஆங்காங்கே ‘காமெடி’ செய்திருக்கிறார். அது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அதேநேரத்தில், இருவரும் முழுநீள நகைச்சுவை படத்தைத் தருவார்களோ என்று மிகச்சில ரசிகர்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்பைப் பொய்த்துப் போகச் செய்திருக்கிறது இப்படம்.

இதில் கோவை சரளா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட சிலர் வருகின்றனர். ஆனால் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் மறைந்துவிடுகின்றனர். அதனைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம்.

விவேக் பிரசன்னா, சித்தாரா ஆகியோர் கூடுதலாகச் சில காட்சிகளைப் பெற்றாலும், அவை நம்மை வசீகரிப்பதாக இல்லை.

‘மாரீசன்’ படத்தில் புதுமையான கதை என்று எதுவும் கிடையாது.

சமூகத்தில் நிலவுகிற ஒரு பிரச்சனையை எடுத்துக்கொண்டு, அதனைக் கொஞ்சம் வித்தியாசமான முறையில் திரையில் சொல்ல முயன்றிருக்கின்றனர். அதில் வெற்றியும் பெற்றிருக்கின்றனர்.

கொஞ்சம் முயன்றிருந்தால், இரண்டாம் பாதியில் இன்னும் பல மடங்கு ‘வீரியத்தை’ச் சேர்த்திருக்கலாம். அதனைத் தவற விட்டிருப்பது வருத்தம் தரும் விஷயம்.

‘வழக்கத்திற்கு மாறான படம் வேண்டும்’ என்பவர்களை ‘மாரீசன்’ திருப்திப்படுத்தலாம். அதேநேரத்தில், வடிவேலு – பகத் பாசில் ‘காம்போ’ கலக்கலான அனுபவத்தைத் தரும் என்று தியேட்டருக்கு வந்தவர்களை லேசான அளவில் ஏமாற்றியிருக்கிறது இப்படம். ‘சுமாரான’ திரையனுபவத்தைத் தந்து அனுப்பி வைத்திருக்கிறது.

- உதயசங்கரன் பாடகலிங்கம்

#மாரீசன் #மாரீசன்விமர்சனம் #பகத்பாசில் #வடிவேலு #ஆர்பிசௌத்ரி #சுதீஷ்சங்கர் #யுவன் #விவேக் #பிரசன்னா #சித்தாரா

Address

Tamizhagam

Alerts

Be the first to know and let us send you an email when Cine rocket posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share