
28/08/2024
தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்பூட்டும் பேச்சுக்களுக்காக
தண்டிக்கப்படாத பிரதமர்
- மனித உரிமை கண்காணிப்பகம்.
____________________.
நரேந்திர மோடி 2024 தேர்தல் பிரச்சாரத்தில் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளை அடிக்கடி பயன்படுத்தியதாக சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
"மோடியின் இந்து பெரும்பான்மை பாரதீய ஜனதா கட்சியின் தலைமையானது, ஜூன் 9-ஆம் தேதி தொடங்கிய தனது தொடர்ச்சியான மூன்றாவது பதவிக் காலத்தை வெல்வதற்கான பிரச்சாரத்தின் போது, ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்கு எதிராக பாகுபாடு, விரோதம் மற்றும் வன்முறையைத் தூண்டும் அறிக்கைகளை மீண்டும் மீண்டும் வெளியிட்டது" என்று மனித உரிமை கண்காணிப்பகம் (ஹெச் ஆர் டபிள்யு ) கடந்த ஆகஸ்டு 14ம் தேதி தெரிவித்துள்ளது.
இந்தியப் பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்கள் முஸ்லிம்கள் மற்றும் பிற சிறுபான்மை குழுக்களுக்கு எதிரான பிரச்சார உரைகளில் அப்பட்டமான பொய்யான கூற்றுகளை வெளியிட்டனர்,” என்று மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய இயக்குநர் எலைன் பியர்சன் கூறியுள்ளார்.
"மோடி நிர்வாகத்தின் கீழ் சிறுபான்மையினருக்கு எதிரான ஒரு தசாப்தகால தாக்குதல்கள் மற்றும் பாகுபாடுகளுக்கு மத்தியில், இந்த எரிச்சலூட்டும் பேச்சுக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பிறருக்கு எதிரான துஷ்பிரயோகங்களை மேலும் இயல்பாக்கியுள்ளன," என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகு மோடியின் அனைத்து 173 பிரச்சார உரைகளையும் ஆய்வு செய்ததாக கூறும் மனித உரிமைகள் கண்காணிப்பகம், "வாக்குகளைப் பெறுவதற்கு
வகுப்பு உணர்வுகளை
பிரச்சாரமாக்குவதை இந்த நடத்தை விதி தடை செய்கிறது." எனரகிறது.
மேலும், குறைந்தபட்சம் 110 உரைகளில், மோடி , அரசியல்ரீதியாக எதிர்கட்சியினரை குறைமதிப்பிற்கு உட்படுத்த இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளை வெளிப்படையாக பேசினார்.
எதிர்க்கட்சிகள் முஸ்லிம் உரிமைகளை மட்டுமே ஊக்குவிப்பதாகவும், தவறான தகவல் மூலம் பெரும்பான்மை இந்து சமூகத்தினரிடையே அச்சத்தை வளர்ப்பதாகவும் மோடி
கூறினார் என்கிறது கண்காணிப்பகம்.
"பிரச்சாரத்தின் போது,
எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் நம்பிக்கை, வழிபாட்டுத் தலங்கள், செல்வம், நிலம், அவர்கள் சமூகத்தைச் சேர்ந்த சிறுமிகள் மற்றும் பெண்களின் பாதுகாப்புக்கு - முஸ்லிம்களால் அச்சுறுத்தல் ஏற்படும் என்ற பொய்யான குற்றச்சாட்டுகள் மூலம் இந்துக்கள் மத்தியில் மோடி தொடர்ந்து அச்சத்தை ஏற்படுத்தினார்” மனித உரிமை கண்காணிப்பகம் செய்தியாளர்களுக்கான
அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பரவலாக கண்டனம் செய்யப்பட்ட ஒரு உரையில், மோடி முஸ்லிம்களை ஊடுருவுபவர்கள் என்று கூறினார் மற்றும் மற்ற சமூகங்களை விட முஸ்லிம்களுக்கு அதிக குழந்தைகள் இருப்பதாகக் கூறினார், இந்துக்கள்-சுமார் 80 சதவீத மக்கள்-இந்தியாவில் சிறுபான்மையினராக மாறிவிடுவார்கள் என்ற அச்சத்தை எழுப்பினார்.
மே 14 அன்று ஜார்கண்டின் கோடெர்மாவில் மோடி ஆற்றிய உரையில், “எங்கள் கடவுள் சிலைகள் அழிக்கப்படுகின்றன என்றும், இந்த ஊடுருவல்காரர்கள் (முஸ்லீம்கள்) எங்கள் சகோதரிகள் மற்றும் மகள்களின் பாதுகாப்பை அச்சுறுத்தியுள்ளனர்” என்றும் கூறினார்.
மே 17 அன்று உத்தரபிரதேசத்தின் பாரபங்கியில் ஆற்றிய உரையில், அயோத்தியில் இடிக்கப்பட்ட வரலாற்று பாபர் மசூதியின் மீது சர்ச்சைக்குரிய வகையில் கட்டப்பட்ட புதிதாக திறக்கப்பட்ட ராமர் கோவிலுக்கு அரசியல் எதிர்க்கட்சிகள் தீங்கு விளைவிக்கும் என்று தவறான கூற்றுக்களை கூறினார். எதிர்க்கட்சி கூட்டணி ஆட்சிக்கு வந்தால், மீண்டும் ராம் லல்லாவை (இந்துக் கடவுளான குழந்தை ராமர்) கூடாரத்திற்கு அனுப்பிவிட்டு, கோவிலின் மீது புல்டோசரை ஓட்டிவிடுவார்கள் என்றும் கூறியிருந்தார்.
மே 7 அன்று, மத்தியப் பிரதேசத்தின் தாரில் ஒரு உரையில், "எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி விளையாட்டுகளில் கூட முஸ்லிம்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறது. எனவே, மதத்தின் அடிப்படையில் யார் இந்திய கிரிக்கெட் அணியை உருவாக்குவார்கள் என்று காங்கிரஸ் முடிவு செய்யும் ” என்று பொய்யாகக் கூறியிருந்தார் மோடி.
பாஜக வெறுப்புப் பேச்சு மற்றும் தேர்தல் ஆணையம் அதைத் தீர்க்கத் தவறியதால்,
எதிர்க் கட்சிகள் இந்து மதத்தை நாட்டிலிருந்து துடைத்தழிக்க நினைக்கின்றன என்று பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் கூறினார்.
குஜராத் மாநிலம் ஜூனாகத்தில் மே 2ம் தேதி ஆற்றிய உரையில் அவர், "காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலில் ஜனநாயகத்திற்காக போட்டியிடவில்லை, ஆனால் அது இந்த தேர்தலில் ராமருக்கு எதிராக போராடுகிறது. … நான் உங்களிடம் கேட்க விரும்புகிறேன், ராமர் தோற்றால், யார் வெற்றி பெறுவார்கள்? ... 500 ஆண்டுகளுக்கு முன்பு முகலாயர்கள் ராமர் கோவிலை அழிக்க வழிவகுத்ததும், நமது சோம்நாத் கோவிலை இடிக்க வழிவகுத்ததும் இதே சிந்தனைதான்" என்றார்
தெலுங்கானா மாநிலம் மஹ்பூப்நகரில் மே 10-ம் தேதி பிரச்சார உரையில் அவர், “காங்கிரஸ் தங்கள் சொந்த நாட்டில் இந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்ற விரும்புகிறது. இதற்காகத்தான் அவர்கள் ஓட்டு ஜிஹாத்துக்கு ( முஸ்லிம் வாக்குகள்) அழைப்பு விடுக்கிறார்களா? " என்றார்.
மேலும், தலித்துகள், ஆதிவாசிகள் மற்றும் பிற குழுக்களுக்கு அரசியல் சாசனம் உத்தரவாதம் அளித்துள்ள சலுகைகளை பறித்து, முஸ்லிம்களுக்கு வழங்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக மோடி பொய்யாக கூறினார். காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், பிற சமூகத்தினரின் சொத்துக்களையும், செல்வத்தையும் பறித்து, முஸ்லிம்களுக்கு மறுபங்கீடு செய்துவிடும் என்றும் அவர் ஆதாரமின்றி பேசினார்.
மத்தியப் பிரதேசத்தின் தார் நகரில் மே 7 அன்று அவர் ஆற்றிய உரையில், “காங்கிரஸுக்கு அதன் வழி இருந்தால் ( ஆட்சிக்கு வந்தால்) இந்தியாவில் வாழ்வதற்கான முதல் உரிமை அதன் வாக்கு வங்கிக்கு (முஸ்லிம்களுக்கு) சொந்தமானது என்று அது சொல்லும். … மதத்தின் அடிப்படையில் அரசாங்க ஒப்பந்தங்களில் கூட காங்கிரஸ் ஒதுக்கீடு வழங்கும்" என்றார் என்று கூறும் மனித உரிமை கண்காணிப்பகம்,
உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் ஆதித்யநாத், அசாம் முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா மற்றும் முன்னாள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சர் அனுராக் தாக்கூர் உட்பட பல பாஜக தலைவர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்களைத் தூண்டும் உரைகளை நிகழ்த்தினர். இந்து மக்களிடையே வெறுப்பையும் பாதுகாப்பின்மையையும் தூண்டினர்" என்றும் அது கூறியுள்ளது.
இந்தியாவின் ஜனநாயக, மதச்சார்பற்ற மற்றும் பன்முகத்தன்மை தரங்களை சுட்டிக்காட்டி, முஸ்லிம்களுக்கு எதிரான சார்பு குற்றச்சாட்டுகளை மோடி நிராகரித்துள்ளார். பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த பேட்டியில், அவர் தனது கட்சி மற்றும் அதனுடன் இணைந்த குழுக்களைப் பற்றி, “நாங்கள் முஸ்லிம்களுக்கு எதிரானவர்கள் அல்ல. அது எங்கள் களம் அல்ல." என்றார். பிரச்சாரத்தின் போது முஸ்லீம்களுக்கு எதிரான பேச்சுக்கள் பற்றி கேட்டபோது, அவர், “நான் இந்து-முஸ்லிம் பற்றி பேச ஆரம்பிக்கும் நாளில், ( அரசியல் செய்யும் நாளில்) நான் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவனாக இருப்பேன். நான் இந்து-முஸ்லிம் அரசியல் செய்ய மாட்டேன். அதுதான் என் தீர்மானம்.” என்றார்.
மோடியின் பிஜேபி அரசாங்கம் 2014 இல் முதன்முதலில் பதவியேற்றதிலிருந்து, அதன் பாரபட்சமான கொள்கைகளும், பாஜக தலைவர்களின் முஸ்லிம் விரோத பேச்சுகளும் இந்து தேசியவாத வன்முறையைத் தூண்டிவிட்டன. இதற்கு காரணமானவர்கள் மீது போதிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் தவறிவிட்டனர், மேலும் முறைகேடுகளை தூண்டும் வகையில் தண்டனையில்லா கலாச்சாரத்தை வளர்த்து வருகின்றனர். அதே சமயம், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிராக அதிகாரிகள் பெரும்பலும் செயல்பட்டனர் மற்றும் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட வழக்குகள் மூலம் அரசாங்கத்தை விமர்சிப்பவர்களை துன்புறுத்த முற்படுகின்றனர்.
சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையில் இந்தியா ஒரு அங்கமாக உள்ளது. இந்த உடன்படிக்கை பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டுகின்ற
தேசிய, இன அல்லது மத வெறுப்புக்கு ஆதரவளிப்பதைத் தடுக்கிறது.
அரசாங்க அதிகாரிகளும், அரசாங்க அதிகாரத்தை திறம்பட பயன்படுத்துபவர்களும், எந்தவொரு தனிநபர் அல்லது சமூகக் குழுவிற்கும் பாகுபாடு, விரோதம் அல்லது வன்முறையை ஆதரிக்கும் பேச்சில் ஈடுபடாமல் இருக்க கடமைப்பட்டுள்ளனர்.
அரசாங்க அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் மற்றவர்களை பாரபட்சமான நடத்தையில் ஈடுபடுவதைத் தடுக்க குரல் கொடுக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
இந்த மீறல்களுக்கு பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையம் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என்று மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
மோடி அரசாங்கத்தின் நடவடிக்கைகள் சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் இந்தியாவின் கடமைகளை மீறியுள்ளன, இது இனம், சமூக்ழக்குழு அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாட்டைத் தடைசெய்கிறது மற்றும் அனைவருக்கும் சட்டத்தின் சமமான பாதுகாப்பை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சாட்டியுள்ளது.
மத மற்றும் பிற சிறுபான்மை மக்களைப் பாதுகாக்கவும், அவர்களுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறைக்கு காரணமானவர்களை முழுமையாகவும் நியாயமாகவும் தண்டிக்க அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
" பன்முகத்தன்மை மற்றும் ஜனநாயகத்தின் தாயாக நாங்கள் இருக்கிறோம் என்ற
இந்திய அரசாங்கத்தின்
கூற்றுக்கள் சிறுபான்மையினருக்கு எதிரான அதன் தவறான நடவடிக்கைகளின் மூலம் வெற்றுத்தனமாக உள்ளன. புதிய மோடி அரசாங்கம் அதன் பாரபட்சமான கொள்கைகளை மாற்றியமைக்க வேண்டும், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதிப்படுத்த வேண்டும்." என்கிறார் பியர்சன்
தேர்தல் பிரச்சார காலத்தில் இருந்து முஸ்லிம்கள் மற்றும் பிற மத சிறுபான்மையினருக்கு எதிராக இந்து கும்பல் மற்றும் பிறரின் தாக்குதல்கள் தொடர்கின்றன என்றும் மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.