16/07/2025
இது உங்களில் யாருக்காவது புரியுதா மக்களே??
1. தமிழனுக்கு மதம் கிடையாது. ஆனால் மரபு உண்டு. மரபு என்றால் என்ன?
"எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே"
- நன்னூல்.
அதாவது அறிவுடையோர் எந்தப் பொருளை எந்தச் சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி வழங்குதல் மரபாகும் என்பதே இதன் பொருள். எனில் அறிவுடையோராக நம் தெய்வப்புலவன் "திருவள்ளுவரை" இந்த பதிவுக்கு குத்தகைக்கு எடுத்துக்குவோம்.
“அதாவது தெய்வப்புலவர் திருவள்ளுவர் என்ன சொல்றாருனா???”
"பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்"
அதாவது இறைவனின் திருவடிகளைச் சேர்ந்தவர்களே பிறவியாகியப் பெருங்கடலைக் கடப்பார்கள். சேராதவர்களால் கடக்க இயலாது என்கிறார். எனில் திருவள்ளுவர் சொல்வதே மரபு. ஆக,
“இறைவனின் திருவடிகளைத் தொழுவதே மரபு”
2. சாதி கிடையாது குடிதான் உண்டு. சாதினா என்ன?
இதற்கும் நாம் துணைக்கு திருவள்ளுவரை எடுத்துக்குவோம்.
"அடுக்கிய கோடி பெறினும் குடிப்பிறந்தார்
குன்றுவ செய்தல் இலர்"
– திருக்குறள்.
பொருள் : பல கோடிப் பொருளைப் பெறுவதாக இருந்தாலும் உயர்குடியில் பிறந்தவர் தம் குடியின் சிறப்புக் குன்றுவதற்கு காரணமான குற்றங்களைச் செய்வதில்லை. இக்குறளில் திருவள்ளுவர் கூறும் பிறப்பால் வரும் குடி (குடிப்பிறப்பு) எனப்படுவது யாது? இதை முத்தமிழ் மூதாட்டியான ஔவையார் கூறுகையில்,
“நீர் அளவே ஆகுமாம் நீர் ஆம்பல்; தான் கற்ற நூல் அளவே ஆகுமாம் நுண் அறிவு – மேலைத் தவத்து அளவே ஆகுமாம் தான் பெற்ற செல்வம் குலத்து அளவே ஆகும் குணம்”
– ஔவையார்.
பொருள் : அல்லிப்பூவானது நீரின் அளவு எவ்வளவு இருக்கிறதோ அவ்வளவே வளரும். நாம் கற்ற நூல்களின் அளவே நம் அறிவு இருக்கும். முற்பிறப்பில் நாம் செய்த புண்ய கார்யங்களின் அளவே நாம் இப்போது அனுபவிக்கும் செல்வம். நமது குணமானது நாம் தோன்றிய குலத்தின் அளவே இருக்கும். இங்கே முத்தமிழ் மூதாட்டியான ஔவையார் குறிப்பிடும் குலம் யாது???
“நலத்தின்கண் நாரின்மை தோன்றின் அவனைக்
குலத்தின்கண் ஐயப் படும்”
– திருக்குறள்.
கலைஞர் உரை : என்னதான் அழகும் புகழும் உடையவனாக இருந்தாலும் அன்பு எனும் ஒரு பண்பு இல்லாதவனாக இருந்தால் அவன் பிறந்த குலத்தையே சந்தேகிக்க வேண்டிய நிலை ஏற்படும். இங்கே திருவள்ளுவரும் முத்தமிழ் மூதாட்டியும் குறிப்பிடும் குலமும், குடியும் எதுவென்று வேறுபடுத்திக் காட்டிவிட்டு இதிலிருந்து சாதி எவ்வாறு வேறுபடுகிறது என்பதை நீங்களே சொல்லுங்க. இரண்டும் ஒன்றாகத் தோன்றினால் நான் பொறுப்பில்லை.
3. இறைவன் கிடையாது. தெய்வம் மட்டுமே உண்டு.
நான் மேலே கூறிய முதல் கேள்விக்குப் பதிலாக திருவள்ளுவர் ஏற்கனவே “இறைவன் உண்டு” என்று "பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார்" என்ற குறளில் "இறைவன்" என்று பச்சையாக கூறிய பின்னரும் இதற்கு விளக்கம் எழுத வேண்டுமா என்ன?🤔 இதுபோன்ற அறிவு மிகுதியால் எழும் கேள்விகளைக் கண்டு ஆச்சரியமாகத்தான் உள்ளது.!
- பா இந்துவன்.