
23/05/2025
பகவான் ரமண மகரிஷிகளின் அன்னை அழகம்மை சமாதி தினம் மஹா பூஜையாக ஒவ்வொரு ஆண்டும் ஸ்ரீ ரமணாச்ரமத்தில் அனுசரிக்கப்படுகின்றது. இவ்வாண்டு 21/5/2025 அன்று ஆச்ரமத்தில் அமைந்துள்ள மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தில் மஹா பூஜை சிறப்பாக நடைபெற்றது.
மகனின் திருக்கரத்தால் முக்தியடையும் பேறுபெற்ற அழகம்மையையின் சமாதி ஆலயமான மாத்ருபூதேச்வரர் ஆலயம் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
*** *** ***
பகவான் ரமண மகரிஷிகள் தமது 16 வயதில் இல்லம் துறந்து போனது அவரது தாயார் அழகம்மைக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது. தன்னோடு ஊருக்குத் திரும்பிவரும்படி மன்றாடினார். ரமண மகரிஷிகள் அன்னைக்கு பதிலை கீழ்க்கண்டவாறு பொதுப்படையாக எழுதிக் காண்பித்தார்:
“அவரவர் பிராரப்தப் பிரகாரம் அதற்கானவன் ஆங்காங்கிருந்தாட்டுவிப்பான். என்றும் நடவாதது என் முயற்சிக்கினும் நடவாது; நடப்பது என் தடை செய்யினும் நில்லாது. இதுவே திண்ணம். ஆகலின், மௌனமாயிருக்கை நன்று.”
சில வருடங்களுக்குப் பிறகு, அன்னை அழகம்மை, தம் இறுதிக் காலத்தில் மகனுடனேயே தங்க விழைந்தபோது அதற்கு மறுப்பேதும் கூறாமல் ஒப்புக் கொண்டார் பகவான்.
பகவான் ரமண மகரிஷிகள் உடல் நலிவுற்ற அன்னையின் அருகில் அமர்ந்து ஸ்ரீ பகவான் தமது வலக்கரத்தை அன்னையின் இதயத்திலும் இடது கையைச் சிரசிலும் பதித்த வண்ணம் தாயின் மனதை அமைதிப் படுத்தி, அன்னைக்கு முக்தியருளினார். ‘தாயார் காலமாகிவிட்டாரா’ என்று கேட்ட அன்பருக்கு ‘அன்னை அருணாசலத்தில் கலந்தாள்’ என்று அன்னை முக்தியடைந்ததை உறுதி செய்தார். அன்னை முக்தியடைந்த அந்நாள் (மே 19, 1922) வைகாசி கிருஷ்ணபக்ஷ நவமி.
அன்னையையின் உடலை மலையிலிருந்து கீழே கொணர்ந்து தற்போதுள்ள இடத்தில் அன்னையின் உடலை சமாதி வைத்தனர். பின்னர் ஒரு ஆலயத்தை நிர்மாணித்து, மாத்ருபூதேச்வரர் ஆலயம் என்ற பெயரில் நித்ய பூஜைகள் மற்றும் வேதகோஷங்களுடன் ஒரு மகத்தான ஆலயமாக இலங்கிக் கொண்டிருக்கின்றது. தற்போதைய ரமணாச்ரமமும் உருவானது. இந்நன்நாளில் அன்னை அழகம்மை மற்றும் அருணாசல ரமணரை வணங்கி அருள் பெறுவோம்.