25/03/2022
இரண்டு நாளாக இணையத்தை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது காசியை சேர்ந்த சுவாமி சிவானந்தர் பத்மஸ்ரீ விருது பெற்ற நிகழ்வு..பல லட்சக் கணக்கான மக்கள் அந்த வீடியோவை கண்ணீர் மல்க பகிர்கிறார்கள்..யாருக்கும் அந்த உணர்வை,அதற்கும் மேல் வெளிப்படுத்த தெரியவில்லை என்றே நினைக்கிறேன்.
125 வயதை அடைந்திருக்கும் ஒரு முதியவர் நடந்து வந்து,சபையின் முன்பு பிரதமர் மோடி அமர்ந்திருக்கும் திசையை நோக்கி விழுந்து வணங்கினார்.தன்னை விட 53 வயது பெரியவர்,நிறை வாழ்வின் எதார்த்த அளவீடுகளை கடந்த ஒரு நபர்,தன் முன்னால் இப்படி வணங்குவதைக் கண்டு,மோடியும் அதே போல தலை தாழ்ந்து சிவானந்தரை வணங்கினார்..
ஆனால்,சிவானந்தர் அதையெல்லாம் எதிர்பார்த்து செய்தது போல இல்லை.ஒரு கடமையைச் செய்து முடித்தது போல அங்கிருந்து நகர்ந்து விருதை வாங்கப் போகும் பாதைக்கு நேரேவும் அதே போல வணங்கினார்,ஜனாதிபதிக்கு அருகே வந்ததும் அதே போல வணங்கினார்.
ஜனாதிபதி வழக்கமான நடைமுறைகளை உடைத்து அவரே வந்து சிவானந்தரை கைதூக்கிவிட்டார்.அதையும் அவர் எதிர்பார்க்கவில்லை,விருதைப் பெற்றுக் கொண்டு மீண்டும் பிரதமரிடம் சென்று முன்பைப் போல வணங்கி அந்த அரங்கை விட்டு வெளியேறினார்..
சுவாமி சிவானந்தரிடம் எந்த சலனமும்,குழப்பமும் இல்லை.தனது 125 வயதில் நெற்றி நிறைய நாமத்துடன்,கழுத்தில் துளசி மாலையுடனும் சாதாரண வேஷ்டி,ஜிப்பாவுடன் வந்து அந்த அரங்கினையே உறைய வைத்ததில்லாமல் மொத்த இந்தியாவையும் அதிர வைத்துவிட்டார்.இதற்கு எப்படிப்பட்ட உணர்ச்சியை வெளிப்படுத்துவது என்றே தெரியவில்லை.
தர்மத்தை காக்கும் ஒரு பேரரசனுக்கும்,அந்த அவைக்கும் தர வேண்டிய மரியாதை என சுவாமி சிவானந்தர் நினைத்து செய்தது போலவே இருந்தது.ஒரு மகானுக்கு தர வேண்டிய மரியாதையை,அதே அவையில் பேரரசன் வழங்கியது போலவே பிரதமர் மோடியும் பதிலாகத் தந்தார்.
வெறும் யோகா மாஸ்டர் மட்டுமல்ல சுவாமி சிவானந்தர்.அவருக்கு பத்மஸ்ரீ வழங்கப்பட்டதே 'யோகா - தியானம் - சேவை' இது மூன்றையும் கைவிடாமல் வாழ்வியல் முறையாக வைத்திருப்பதாலே.அவருடைய உச்சபட்ச பக்தியின் ஒரு சிறு அங்கம் யோகக்கலையும்..
அவர் மிகப்பெரிய வைணவர்,தீவிர சைவ உணவு பழக்கத்தை கடைபிடிக்கிறார்,அதையே பாரதத்தின் இளைஞர்களுக்கும் வலியுறுத்துகிறார்.எந்த சூழலிலும் தைரியமாக இருப்பதும்,சைவ உணவை கடைபிடிப்பதும் அவசியம் என்று போதிக்கிறார்.சைவம் என்றால் அவர் பால்,எண்ணெய் பொருட்களை கூட விலக்குகிறார்.தீவிரமான உணவுகட்டுப்பாட்டை மோட்சத்துக்கான திறவுகோலாக காட்டுகிறார் சிவானந்தர்.
உடைக்கப்படாத இந்தியாவில்,இன்றைய பங்களாதேஷாகவும் அன்றைய கிழக்கு வங்கமாகவும் இருந்த பகுதியில் சில்ஹெட் மாவட்டத்தில் 1896 வது வருடம் பிறந்தவர் சிவானந்தர்.தன் ஆறு வயதிற்குள்ளேயே தந்தை,தாயை இழந்தார்.பின் மேற்கு வங்கத்தில் உள்ள நபத்வீப் ஆசிரமத்தில் சுவாமி ஓம்காரனந்தா கோஸ்வாமியால் வளர்க்கப்படுகிறார்..
கௌடிய வைஷ்ணவமான,சைதன்ய மகாபிரபு வழியை பெரும்பாலும் கோஸ்வாமிகளே வங்காளம்,கலிங்கம் முழுக்க பரப்பினார்கள்.ஜாதி பிளவுகளை திருத்தியும்,தீவிரமான பக்தி மற்றும் யோகசாதன வழிமுறையையும் போதித்தார்கள்.
கௌடிய வைஷ்ணவ பாரம்பரியத்தில் இருந்தே 'பக்தி - யோகா - உணவுக்கட்டுப்பாடு - சேவை' இவற்றை பிரதானமாக முன்னிறுத்தி இந்த நிலையை அடைந்துள்ளார் சுவாமி சிவானந்தர்.50 வருடத்துக்கும் மேலே,600 க்கும் மேலே தொழுநோயாளிகளுக்கு சேவை செய்துள்ளார் சிவானந்தர்.
தெய்வாம்சம் பொருந்தியவர்களாக நோயாளிகளையும்,பலஹீனமானவர்களையும் கண்டார் சிவானந்தர்.அவர்களுக்கு சேவை செய்வதும் பக்தியின் ஒரு அங்கம் என்பதை உள்வாங்கிக் கொண்டார்.அவர்களுக்கு உணவு,போர்வை,கொசுவலை,பழங்கள்,சமையல் பொருட்கள் உட்பட தன்னால் முடிந்ததை இடைவெளி இன்றியும் எந்த பிரதிபலன் எதிர்பாராமலும் செய்துள்ளார்.
காலையில் ஒரு மணி நேரம் நடைப் பயிற்சி,அடுத்த ஒரு மணி நேரம் யோகா,அடுத்த ஒரு மணி நேரம் பூஜை என்று தனது ஒவ்வொரு நாளையும் துவங்குகிறார் சிவானந்தர்.எந்த சூழலிலும் தனது உணவுப்பழக்கத்தையும்,இந்த நடைமுறைகளையும் அவர் கைவிடவில்லை.இதையே அவர் பிறருக்கும் அறிவுரையாகத் தருகிறார்.
"தனது குறைவான தேவைகளின் வழியே ஒரு காலத்தில் மக்கள் மனநிறைவுடன் இருந்தனர்.ஆனால்,அதீத தேவையும் அதை அடைய வழியும் உள்ள காலத்தில்,மக்கள் மகிழ்ச்சியற்றவர்கள் ஆகிவிட்டார்கள்.அவர்களுடைய ஆத்மசுத்தி பாழ்பட்டு,நேர்மையற்றவர்களாகவும்,ஆரோக்கியமற்றவர்களாகவும் மாறுகிறார்கள்.இந்த மாற்றத்தை என் கண் முன்னால் காண்கிறேன்,அதைக்கண்டு என் நெஞ்சம் பதறுகிறது" என சுவாமி சிவானந்தர் பேசியிருக்கிறார்..
யோகாவை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும்..இது வெறுமனே உடற்பயிற்சியில்லை,மனநிலைக்கு ஆரோக்கியத்தை வழங்கும் அகப்பயிற்சி..இன்று உலகம் முழுக்க யோகக்கலைக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்த மோடி அரசால் எனக்கு 'பத்மஸ்ரீ'வழங்கப்பட்டதை பெருமையாகக் கருதுகிறேன் என பேட்டி கொடுத்துள்ளார்..
அதுமட்டுமல்ல,கோவிட் தடுப்பூசியை பற்றி எல்லோரும் வதந்தியை பரவவிட்ட போது,அதை தான் போட்டுக் கொண்டு பிறருக்கும் முன்னுதாரணமாக இருந்து, மக்களிடம் பிரச்சாரம் செய்துள்ளார் சிவானந்தர்.
உண்மையில் சுவாமி சிவானந்தர் வெறுமனே யோகா ஆசிரியர் அல்ல.பாரதத்தில் பக்தி,சம்பிரதாயம்,சேவை ஆகியவற்றின் செழித்த நவீன அடையாளம் ஆவார்..எல்லா ஹிந்துக்களும் ஏதோ ஒரு சம்பிரதாயத்தை உளப்பூர்வமாக ஏற்று, அதன்படி முக்தியை நோக்கி நடைபோட வேண்டுமென தன் வாழ்வையே செய்தியாக்கி பிரச்சாரம் செய்கிறார்..
இவரைப் போன்ற மகான்களை தேடித்தேடி கௌரவிக்கும் மோடி அரசு இங்கே நிலைத்திருக்கட்டும்..அதுவே பாரதத்தாயினை 'ஈன்ற பொழுதின் பெரிதுவக்க வைக்கும்' நிகழ்வாக இருக்கும்..