Mahimai TV

Mahimai TV Tamil Christian TV Channel

14/09/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 14

அப்பொழுது அவர்கள் அவரை நோக்கி: தேவனுக்கேற்ற கிரியைகளை நடப்பிக்கும்படி நாங்கள் என்ன செய்யவேண்டும் என்றார்கள். இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது என்றார் (யோவா. 6:28-29).

“மனுஷகுலமும் நற்கிரியைகளும்”

இரட்சிக்கபட்டாலென்ன, இரட்சிக்கப்படாவிட்டாலென்ன இயற்கையாகவே தம்முடைய இரட்சிப்புக்கு தாம் ஏதாவது செய்யவேண்டுமென்கிற விருப்பம் மனுஷகுலத்திற்கு உண்டு. இந்த நிலைப்பாடு சுயாதீனத்தின் அடிப்படையில் உருவானது; மனுஷனுடைய வீழ்ச்சிக்குப்பின்பு (ஆவியில் மரித்தபின்பு), அவன் தேவனை நம்பியிருப்பதைத் தவிர்த்து, தன்னைத்தான் நம்பியிருப்பதைத் தெரிந்துகொண்டான். ஆவியில் மரணம் சம்பவித்த காலந்தொட்டு (தேவனைவிட்டு விலகிய காலந்தொட்டு), தேவநீதி அவனுக்குக் கிடைக்காமற்போனதன் நிமித்தம் சுயநீதியை நாடுவதைத்தவிர, வேறெந்த வழியும் அவனுக்கு இருக்கவில்லை; சுயமே அவனுடைய வல்லமையின் ஆதாரமாயிருந்தது; ஆனபடியினால், அவன் சுயபலத்தை விரும்புகிறானேயன்றித் தேவபலத்தை ஏற்றுக்கொள்ள விரும்புவதில்லை.

சுயநீதி அவனை நியாயப்பிரமாணத்திற்குள் இழுத்துச்சென்றதன் நிமித்தம் கிரியைகளைச் செய்வதற்கு அவன் பிரியமாக இருக்கிறான். சுயநீதியை அகற்றிப் பிரமாணங்களைத் தவிர்த்து, கிரியைகளை நம்பியிராமல் தேவனைமட்டும் விசுவாசிப்பது என்பது மனுஷபலத்தினால் முடியாத காரியமாகும். அவனுடைய சுயநீதியில் இரண்டுவிதமான சாபக்கேடுகள் உண்டு. சுயநீதியில் தங்கியிருப்போர் தாம் நீதிமான்களென நினைத்து, மற்றவர்களை அற்பமாக எண்ணுகிறார்கள் (லூக். 18:9) ; ஆனால், கிறிஸ்து “....என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக்கூடாது” (யோவா. 15:5) எனவும், “மிகவும் அற்பமான காரியமுதலாய் உங்களால் செய்யக்கூடாதிருக்க, மற்றவைகளுக்காக நீங்கள் கவலைப்படுகிறதென்ன?” (லூக். 12:26) எனவும் கூறியிருக்கிறார்.

இப்படியிருக்க, இஸ்ரவேலிய புத்திரர்கள் தாம் ஏதாவது செய்யவேண்டும் என்பதில் பிடிவாதமாயிருந்தார்கள்; ஆனால், கிறிஸ்துவோ அவர்கள் கிருபையைத் தவிர்த்துக் கிரியைகளின்மூலம் தேவனிடத்தில் வரமுடியாது என்பதனை அவர்களுக்குப் பிரதியுத்தரமாக “.....அவர் அனுப்பினவரை நீங்கள் விசுவாசிப்பதே தேவனுக்கேற்ற கிரியையாயிருக்கிறது” என வலியுறுத்தினார் (யோவா. 6:29); அப்படியாயின், கிரியைகள் தேவையில்லை எனக் கூறுகிறோமோ? இல்லவேயில்லை, அவைகள் இரட்சிக்கப்பட்டோருக்காக ஏற்கனவே பரிசுத்த ஆவியானவரினால் நியமிக்கப்பட்டிருக்கிறது (எபேசி. 2:10; பிலி. 1:5, 2:13). பொருத்தமான விசுவாசம், பொருத்தமான கிரியைகளை அதிகரிக்கச்செய்யும்; கிரியைகள் இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கும் (யாக். 2:20). ஆகையால், நாம் விசுவாசத்தின்மூலம் பெற்ற நீதியைப் பாதுகாப்பதற்குத் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, கிறிஸ்துவைப் பின்பற்றுவோமாக; இதுவே தேவனுடைய வழியாகும் (லூக். 9:23).

14/09/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 13

நானும் இவரை அறியாதிருந்தேன்; ஆனாலும் ஜலத்தினால் ஞானஸ்நானங்கொடுக்கும்படி என்னை அனுப்பினவர்; ஆவியானவர் இறங்கி யார்மேல் தங்குவதை நீ காண்பாயோ, அவரே பரிசுத்த ஆவியினால் ஞானஸ்நானங்கொடுக்கிறவரென்று எனக்குச் சொல்லியிருந்தார் (யோவா. 1:33).

“பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம்”

பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம் இயேசுகிறிஸ்துவினாலேயே கொடுக்கப்படும் என்று யோவான்ஸ்நானன் சொல்லியிருந்தும், இயேசுகிறிஸ்துவின் 33½ வருஷகால ஊழியத்தின்போது, அவர் ஒருவரையும் பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானத்துக்கு வழிநடத்தவில்லை என்பது வெளிப்படையாயிருக்கிறது. பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம், கிறிஸ்து, சிலுவையில் நிறைவேற்றியதன் நேரடிப் பலாபலனாகும். அப்படியாயின் அவர் எதற்காக அவருடைய ஊழியத்தின்போது ஒருவருக்கும் பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம் கொடுக்கவில்லை என்ற கேள்வி, கிறிஸ்தவர் களால் எழுப்பப்படுகிறது. ஆம், அதற்குக் காரணம், அவர் சிலுவைக்குப் போகும்வரையும் மனுஷனுடைய பாவத்தின் கடன்கள் செலுத்தப்படவில்லை; இதனிமித்தமே, நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யோவான் 14:20ல் “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே (இதன் பொருள் அவர் சிலுவைக்குச் சென்றபின்பே) நீங்கள் அறிவீர்கள்” எனக் கூறியிருந்தார். பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானத்தைப்பற்றியே யோவான் 14:20ல் இயேசுகிறிஸ்து சொல்லியிருந்தார். அப்போஸ்தலர் 1:4ல் “அன்றியும், அவர் அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது, அவர்களை நோக்கி: யோவான் ஜலத்தினாலே ஞானஸ்நானங்கொடுத்தான்; நீங்கள் சில நாளுக்குள்ளே பரிசுத்த ஆவியினாலே ஞானஸ்நானம் பெறுவீர்கள்” எனக் கூறப்பட்டிருக்கிறது. அவர்களுடனே கூடிவந்திருக்கும்போது என்பதன் பொருள், அவர் பிதாவினிடத்திற்கு ஏறிப்போன காலத்தைப்பற்றிக் குறிப்பிடுகிறது; இந்தக் காலம் அநேகமாக அந்த 500க்கு மேற்பட்டோர் கூடின காலமாகும் (Iகொரி. 15:6). மேலும் ஆண்டவர் அப்போஸ்தலர் 1:5ல் “ஆகையால் நீங்கள் எருசலேமை விட்டுப்போகாமல் என்னிடத்தில் கேள்விப்பட்ட பிதாவின் வாக்குத்தத்தம் நிறைவேறக் காத்திருங்கள் என்று கட்டளையிட்டார்” எனக் கூறப்பட்டிருக்கிறது.

ஆனபடியினால், நாம் கவனமாயிருந்து ஒளி வரும்பொழுது அதனைப் பெற்றுக்கொள்ளவேண்டும்; பெற்றுக்கொள்ளாதிருந்தால், அந்த ஒளி திருப்பி எடுத்துக்கொள்ளப்படும். “என்னிடத்தில் (பரிசுத்த ஆவியைப்பற்றிக்) கேள்விப்பட்டது” என்ன என்பதனைப்பற்றி யோவான் 7:37-39, 14:12-17, 26, 15:26, 16:7-15 ஆகிய வேதவாக்கியங்களில் அறியக்கூடியதாயிருக்கிறது. “பிதாவின் வாக்குத்தத்தத்தை” லூக்கா. 24:49 லும், அப்போஸ்தலர் நடபடிகள் 1:5லும் சொல்லப்பட்டிருக்கிறது. ஒரு பாவிக்கு இரட்சிப்பு எவ்வளவு வல்லமையுள்ளதாயிருக்கிறதோ, அப்படியே ஒரு விசுவாசிக்கும் பரிசுத்த ஆவிக்குள் ஞானஸ்நானம் வல்லமையுள்ளதாயிருக்கிறது என்பதனை நாம் மறந்துவிடக்கூடாது.

12/09/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 12

ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது (யோவா. 1:1).

“வார்த்தை தேவனாயிருந்தது”

யோவான் முதலாம் அதிகாரத்தில், தேவனுடைய முழுவேதவார்த்தைகளின் சுருக்கத்தொகுப்பு நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. முதலாவதாக, இங்கு சொல்லப்பட்டிருக்கும் வேதவாக்கியம் இயேசு ஒரு ஜீவவார்த்தையென்றும், எழுதப்பட்ட வார்த்தையென்றும் சொல்லப்பட்டிருக்கிறது; இதன்மூலம், வேதாகமம் முழுவதும் ஏதோ ஒரு வழியில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவைப்பற்றிய கதையையே சொல்கிறது என்பதனை நாம் சந்தேகத்திற்கிடமின்றி அறிந்திருக்கவேண்டும்.

மேலும், யோவான் 1:14ல் “அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நமக்குள்ளே வாசம்பண்ணினார்...” எனச் சொல்லப்பட்டிருக்கிறது; இதன் பொருள், அந்த வார்த்தை மாம்சமாகி, இயேசு என்ற நாமத்துடன் இந்த உலகத்திற்குள் ஒரு குறிக்கப்பட்ட நோக்கத்திற்காகவே வந்தார் என்பது அறிவிக்கப்படுகிறது; இதுபற்றித் தேவதூதன் காபிரியேல் மரியாளுக்குப் பிரஸ்தாபிக்கையில்: “.....அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக; ஏனெனில் அவர் தமது ஜனங்களின் பாவங்களை நீக்கி அவர்களை இரட்சிப்பார் என்றான்” (மத். 1:21); தாம் செய்யவேண்டியது எதுவோ அதனைச் செய்வதற்காகவே தேவன் மனுஷனாக வந்தார்; இதற்காகவே மனுஷ உருவத்தைப் பெற்றார்; சிருஷ்டிகர் சிருஷ்டியாக வந்தார்; இது கற்ப னைக்கு அப்பாற்பட்டது; ஆனால், அது நடந்தது. யோவான் 1:29ல் “...இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்துதீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி” எனச் சொல்லப்பட்டிருக்கிறது; யோவான் “தேவ ஆட்டுக்குட்டி” எனக் கூறாமல் “யூதா கோத்திரத்துச் சிங்கம்” எனச் சொல்லியிருக்கலாமே? எனப் பலர் நினைப்பதுண்டு; ஆனால், பரிசுத்த ஆவியானவர் இயேசுவை “தேவ ஆட்டுக்குட்டி” எனக் குறிப்பிடுமாறு ஒரு காரணத்திற்காகவும், ஒரு நோக்கத்திற்காகவுமே அப்படிச் சொல்லியிருந்தார்.

பழைய ஏற்பாட்டுக் காலத்தில் பலியாகக் கொடுக்கப்பட்ட கோடிக்கணக்கான ஆடுகள் கிறிஸ்துவைப் பிரதிபலித்ததுமட்டுமல்ல, அவரே பரிபூரணமான பலியாகவும் இருக்கிறார் என்பதனை ஏசாயா 53:6-7ல் “நாமெல்லாரும் ஆடுகளைப்போல வழிதப்பித்திரிந்து, அவனவன் தன்தன் வழியிலே போனோம்; கர்த்தரோ நம்மெல்லாருடைய அக்கிரமத்தையும் அவர்மேல் விழப்பண்ணினார். அவர் நெருக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் இருந்தார், ஆனாலும் தம்முடைய வாயை அவர் திறக்கவில்லை; அடிக்கப்படும்படி கொண்டுபோகப்படுகிற ஒரு ஆட்டுக்குட்டியைப்போலவும், தன்னை மயிர்கத்தரிக்கிறவனுக்கு முன்பாகச் சத்தமிடாதிருக்கிற ஆட்டைப்போலவும், அவர் தம்முடைய வாயைத் திறவாதிருந்தார்” எனச் சொல்லப்பட்டிருக்கிறது. கல்வாரி எப்பொழுதும் அவருக்கு முன்பாகவே இருந்தது (மத். 1:21, 16:21; மாற். 8:31; லூக். 9:22; யோவா. 1:29); ஏனென்றால், அவருடைய தூதுப்பணி எப்பொழுதும் வீழ்ந்துபோன ஆதாமின் புத்திரர்களை அந்தப் பாவத்திலிருந்து விடுதலை செய்வதேயாகும்; அதனையே அவர் சிலுவையில் நிறைவேற்றினார் (யோவா. 19:30).

11/09/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 11

அவர்களை நோக்கி: மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே என்றார் (லூக். 24:44).

“என்னைக்குறித்தே எல்லாம் எழுதியிருக்கிறது”

கிலேயோப்பாவும் லூக்காவும் இயேசுகிறிஸ்து உயிர்த்தெழுந்த அன்று (வாரத்தின் முதலாம் நாளன்று) மாலை எருசலேமுக்கு எட்டுமைல் தூரமான எம்மா என்னும் கிராமத்திற்குப் போனார்கள். இயேசுவும் அவர்களோடுபோய், அவர்களுடைய சம்பாஷணையில் பங்குபற்றியிருந்தார்; ஆனால், அவர்கள் அவரை இயேசு என்று அறியவில்லை. அவர்களுடைய சம்பாஷணையைக் கேட்ட ஆண்டவர் “.....அவர்களை நோக்கி: தீர்க்கதரிசிகள் சொன்ன யாவையும் விசுவாசிக்கிறதற்குப் புத்தியில்லாத மந்த இருதயமுள்ளவர்களே, கிறிஸ்து இவ்விதமாகப் பாடுபடவும், தமது மகிமை யில் பிரவேசிக்கவும் வேண்டியதில்லையா என்று சொல்லி, மோசே முதலிய சகல தீர்க்கதரிசிகளும் எழுதின வேதவாக்கியங்களெல்லாவற்றிலும் தம்மைக்குறித்துச் சொல்லியவைகளை அவர்களுக்கு விபரித்துக் காண்பித்தார்” (லூக். 24:25-27); மேலும், இருவரையும் நோக்கி: “மோசேயின் நியாயப்பிரமாணத்திலும் தீர்க்கதரிசிகளின் ஆகமங்களிலும் சங்கீதங்களிலும் என்னைக்குறித்து எழுதியிருக்கிறவைகளெல்லாம் நிறைவேறவேண்டியதென்று, நான் உங்களோடிருந்தபோது உங்களுக்குச் சொல்லிக்கொண்டு வந்த விசேஷங்கள் இவைகளே என்றார். அப்பொழுது வேதவாக்கியங்களை அறிந்துகொள்ளும்படி அவர்களுடைய மனதை அவர் திறந்து அவர்களை நோக்கி: எழுதியிருக்கிறபடி, கிறிஸ்து பாடுபடவும், மூன்றாம்நாளில் மரித்தோரிலிருந்து எழுந்திருக்கவும் வேண்டியதாயிருந்தது” என்றார் (லூக். 24:44-46).

பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட யாவும் ஏதோ ஒரு வழியில் இயேசுகிறிஸ்துவைப்பற்றியும், அவர் சிலுவையில் நிறைவேற்றப் போவதைப்பற்றியும் சொல்லப்பட்டிருந்தது (எபி. 6:1; 10:1; கொலோ. 2:16-17). இந்த உண்மையை நாம் அறியாதிருந்தால், தேவனுடைய வார்த்தைகளை அறியவேண்டிய பிரகாரம் அறியமுடியாது. எல்லா விளக்கத்திற்கும் புரிந்துணர்வுக்கும், சிலுவையில் அறையப்பட்ட இயேசுகிறிஸ்துவே திறப்பாயிருக்கிறார்.

10/09/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 10

பின்னும் கர்த்தர் சீமோனே, சீமோனே, இதோ, கோதுமையைச் சுளகினால் புடைக்கிறதுபோலச் சாத்தான் உங்களைப் புடைக்கிறதற்கு உத்தரவு கேட்டுக்கொண்டான். நானோ உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு உனக்காக வேண்டிக்கொண்டேன்; நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து என்றார் (லூக். 22:31-32).
“உன் விசுவாசம் ஒழிந்துபோகாதபடிக்கு”

இந்த வேதவாக்கியத்தை உற்றுநோக்குகையில் ஒரு கணப்பொழுதில் ஆவிக்குரிய உலகத்தைக் காணக்கூடியதாயிருக்கிறது. யோபுவுக்கும் இதே மாதிரியான விண்ணப்பத்தை சாத்தான் மேற்கொண்டதை நாம் நினைவுகூரவேண்டியதாயிருக்கிறது. சாத்தானின் சோதனை நம்முடைய இருதயத்திலுள்ள மோசமானதை வெளியேகொண்டு வருகிறது; ஆனால், தேவனுடைய சோதனையோ எப்பொழுதும் நல்லதையே கொண்டுவருகிறது; ஆனால், தேவன் சாத்தானையே சோதனையின் கருவியாக அடிக்கடி பாவிக்கிறார். அந்தச் சோதனையிலிருந்து வெற்றிபெறப் பரிசுத்தவான்கள் தங்களுடைய பரிசுத்தத்தையல்ல, தேவனுடைய பரிசுத்தத்தை நாடவேண்டும் என்பதே தேவனுடைய எதிர்பார்ப்பாயிருக்கிறது. சாத்தானுடைய தாக்குதல் எந்தக் கோணத்தில் வந்தாலும் அது விசுவாசத்திற்கெதிராகவே நடத்தப்படுகிறது; ஏனெனில், விசுவாசம் வீழ்ந்தால் எல்லாம் விழுந்தது.

ஆயினும் நம்முடைய ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து பேதுருவுக்காக வேண்டிக்கொள்கையில் “நீ குணப்பட்டபின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து” எனக் கூறியிருப்பதைப் பார்க்கும்பொழுது, பேதுரு மறுபடியும் இரட்சிப்பை நாடவேண்டும் என்பதுபோலத்தென்படுகிறது: அப்படியல்ல, அவன் சரியான பாதையை அறிந்து அதனை நம்பி, சுயத்தை நாடாமல் ஆண்டவரில் முற்றுமுழுவதுமாகத் தங்கியிருக்கவேண்டும் என்பதும், அதற்குப் பிறகே சகோதரரை ஸ்திரப்படுத்தமுடியும் என்பதும் இங்கு உறுதிப்படுத்தப்படுகிறது.

இப்படியிருக்க, பேதுரு ஆண்டவரை நிராகரிக்கும்போது விசுவாசத்தில் வீழ்ந்துபோனானா? என்ற கேள்வி இயற்கையாகவே எழும்புகிறது; அப்படியல்ல, ஆம், அவன் நிராகரிக்குமாறு கடுமையாகச் சோதிக்கப்பட்டான்; ஆயினும் அவன் விசுவாசத்தில் தவறியிருந்தானானால் மீண்டும் ஆண்டவரிடம் திரும்பி வந்திருக்கமாட்டான். அவன் இயேசுவிடம் திரும்பி வந்தான்; வந்ததும் முற்றுமுழுவதுமாக மன்னிக்கப்பட்டான். அவன் மோசமான பாவத்தைச் செய்தான்; ஆனால் அவரைவிட்டு விலகும் எண்ணத்திற்கு அவன் இடங்கொடுக்கவில்லை. ஆண்டவருடைய ஜெபம் கேட்கப்பட்டது; அவர் அவனுக்காக அவனுடைய விசுவாசம் ஒழிந்துபோகாதபடி வேண்டிக்கொண்டாரே. விசுவாசம் ஒரு மகா வல்லமையுள்ள சக்தியாயிருக்கிறது. நம்முடைய இருதயத்தில் பரிசுத்த ஆவியானவர் ஏற்றிவைத்த அந்த உன்னதமான தீபத்தை அவ்வளவு இலகுவாக அணைக்கமுடியாது; நாம் வேண்டுமானால் அதனை அணைக்கலாம்; ஆனால், அது அவ்வளவு இலகுவான காரியமல்ல.

09/09/2026

The Crossway Ministries

அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 9

பின்பு அவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: இடறல்கள் வராமல்போவது கூடாதகாரியம், ஆகிலும் அவைகள் எவனால் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! அவன் இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும் (லூக். 17:1-2).

“இடறல்கள் வராமற்போவது கூடாத காரியம்”

இந்த உபதேசம் ஐசுவரியவான் எரிநரகத்தில் உழலுவதைச் சுட்டிக்காட்டிய பின்பு (லூக். 16:19-31), உடனடியாகவே கொடுக்கப்பட்டிருக்கிறதை நாம் காணக்கூடியதாயிருக்கிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு எதிராக எழும்பும் எதிர்ப்பு, அநேகமாகக் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றுகிறவர்களிடமிருந்தே வருகிறது; கிறிஸ்துவின் சிலுவையே இந்த இடறலுக்கு முக்கியகாரணமாகும்; கிறிஸ்துவின் சிலுவையை நிராகரிப்பவர்களில் பெரும்பான்மையானோர், கிறிஸ்துவின் சிலுவையை ஏற்றுக்கொள்பவர்களை எதிர்க்கிறார்கள்; ஆபேல் காயீனோடு இந்த இடறல் ஆரம்பமானது; இன்றும் தொடர்கிறது. கிறிஸ்துவின் சிலுவையை நிராகரிக்கிறவன் கிறிஸ்துவை நிராகரிக்கிறான்; எவன் அத்தகைய செயல்களில் ஈடுபடுகிறானோ, அவனுக்கு நியாயத்தீர்ப்பு உத்தரவாதம் செய்யப்பட்டிருக்கிறது; கிறிஸ்துவின் சிலுவையை நிராகரிப்பவர்கள் யாவருக்கும் நியாயத்தீர்ப்பு தயாராயிருக்கிறது.

“இந்தச் சிறுவரில் ஒருவனுக்கு இடறலுண்டாக்குகிறதைப் பார்க்கிலும், அவனுடைய கழுத்தில் ஏந்திரக்கல் கட்டப்பட்டு, அவன் சமுத்திரத்தில் தள்ளுண்டுபோவது அவனுக்கு நலமாயிருக்கும்” என்று தேவனுடைய வார்த்தை உறுதிப்படுத்துகிறது. “சிறுவரில்” என்பது சிறுகுழந்தைகளைப்பற்றி அல்ல, விசுவாசிகளைப்பற்றியே சொல்லப்படுகிறது. அவர்கள் மனத்தாழ்மையை தரித்திருக்கிறபடியினால், கர்த்தர் தங்களைப் பாதுகாப்பதற்கு அனுமதித்திருக்கிறார்கள்; அவர்கள் தங்களுடைய பார்வைக்குச் சிறியவர்களாக இருக்கிறார்கள்; அப்படியே இடறல்களை ஏற்படுத்துபவர்களுக்கும் அவர்கள் சிறியவர்களாகவும், அற்பர்களாகவும் தோற்றமளிக்கிறார்கள்; ஆனால், கர்த்தருடைய பார்வைக்கோ அவர்கள் மிகவும் அருமையாகவும், அவருடைய கண்மணிபோலவும் (சகரி. 2:8) இருக்கிறபடியினால், அவர்கள் நிமிடந்தோறும் அவரால் உன்னிப்பாகக் கவனிக்கப்படுகிறார்கள் (யோபு 7:17-18; சங். 8:4; எபி. 2:6).

08/09/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 8

அப்பொழுது நீ பாக்கியவானாயிருப்பாய்; அவர்கள் உனக்குப் பதில் செய்யமாட்டார்கள்; நீதிமான்களின் உயிர்த்தெழுதலில் உனக்குப் பதில் செய்யப்படும் என்றார் (லூக். 14:14).

“நீதிமான்களின் உயிர்த்தெழுதல்”

வெகுசீக்கிரத்தில் அடுத்த யாத்திரை ஒன்று வரப்போகிறது. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இதனை “நீதிமான்களின் உயிர்த்தெழுதல்” (லூக். 14:14) என்றும், பவுல் அப்போஸ்தலர் இதனை “மேன்மையான உயிர்த்தெழுதல்” (எபி. 11:35) என்றும், யோவான் இதனை “முதலாம் உயிர்த்தெழுதல்” (வெளி. 20:5) என்றும், பரிசுத்த ஆவியானவர் இதனை “ஆனந்த பாக்கியம்” (தீத்து 2:13) என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த ஆனந்த பாக்கியம் எந்த நிமிஷத்திலும் ஏற்படலாம்; இதற்கு எவ்விதமான தீர்க்கதரிசனமும் நிறைவேறவேண்டியதில்லை; அப்பொழுது இந்தப் பூமியில் மரித்துப்போன பரிசுத்தவான்கள் ஒவ்வொருவனையும் தேவனாகிய கர்த்தர் மண்ணிலிருந்து எழுப்புவார்; இதுபற்றி யோவான் 5:28-29ல் “இதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக் குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங் காலம் வரும்; அப்பொழுது, நன்மைசெய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமைசெய்தவர்கள் ஆக்கினையை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. மேலும் தானியேல் 12:2ல் “பூமியின் தூளிலே நித்திரைபண்ணுகிறவர்களாகிய அநேகரில் சிலர் நித்தியஜீவனுக்கும், சிலர் நித்திய நிந்தைக்கும் இகழ்ச்சிக்கும் விழித்து எழுந்திருப்பார்கள்” எனவும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த வேதவாக்கியத்தின் ஆவிக்குரிய பொருளைக் கிறிஸ்தவர்கள் அறிந்திருப்பது நல்லது; அதெப்படியென்றால், யோவான் 5:28ஐக் கேட்டுக்கொண்டிருந்த மதத்தலைவர்கள் வாயடைத்துப் போனார்கள்; ஆம், இன்றும் இதனைக் கேட்டவுடன் அநேகமான மதத்தலைவர்கள் வாயடைத்துப் போவார்கள். “பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்” என்பதன் ஆவிக்குரிய பொருள், நித்தியஜீவனுக்கு உயிர்த்தெழுவதையும் நித்தியநிந்தைக்கும், இகழ்ச்சிக்கும் உயிர்த்தெழுதலைப்பற்றியும் ஆண்டவர் குறிப்பிடுகிறார்; ஆம், கிறிஸ்துவே ஜீவனுக்கும் மரணத்திற்கும் ஆண்டவர் என்பதனை இந்த வேதவாக்கியம் வலியுறுத்துகிறது.

ஜீவனுக்கு உயிர்த்தெழுபவர்களின் ஒவ்வொரு சிறு துணுக்குகளும் எங்கிருக்கிறது என்பதனையும் தேவன் அறிவார்; அவை எல்லாவற்றையும் இணைத்து, மகிமையான சரீரத்தைத் தேவன் உருவாக்குவார்; அந்தச் சரீரத்திற்குள் தற்பொழுது கிறிஸ்துவோடு இருக்கிற ஆவியும் ஆத்துமாவும் இணைந்துகொள்ளும். பவுல் அப்போஸ்தலர் இதுபற்றிப் பிரஸ்தாபிக்கையில்: “அதற்குத் தேவன் தமது சித்தத்தின்படியே மேனியைக் கொடுக்கிறார்; விதை வகைகள் ஒவ்வொன்றிற்கும் அததற்கேற்ற மேனியையே கொடுக்கிறார்” (Iகொரி. 15:38) எனச் சொல்லியிருக்கிறார்.

முதலாவது உயிர்த்தெழுதலில் தேவனுடைய ஒவ்வொரு பரிசுத்தவான்களும் பங்குபற்றுவார்கள்; இயேசுகிறிஸ்து தன்னுடைய உயிர்த்தெழுதல்மூலம் இதனை உத்தரவாதம் செய்திருக்கிறார். இப்படியிருக்க, பூமியில் கிறிஸ்துவுக்குள் உயிரோடு இருக்கும் ஒவ்வொரு பரிசுத்தவான்களும் இந்த மகிமையான உயிர்த்தெழுதலில் பங்குபற்றுவார்கள்; இதுபற்றிப் பவுல் அப்போஸ்தலர் Iதெசலோனிக்கேயர் 4:15-17ல் தெளிவாகக் கூறியிருக்கிறார்.
இழுத்துக்கொள்ளுதலும் (Rapture) , உயிர்த்தெழுதலும் (Resurrection) ஒரே சம்பவத்தைப்பற்றியே சொல்கிறது. பரிசுத்தவான்கள் இழுத்துக்கொள்ளப்படும்பொழுது கர்த்தராகிய ஆண்டவர் பூமிக்கு வரமாட்டார்; அது இரண்டாம் வருகையின்போதே சம்பவிக்கும். முதல் வருகையின்போது காணாமற்போன இஸ்ரவேலியர்களுக்காக வந்தார் (மத் 15:24); இழுத்துக்கொள்ளும்போது சகல பரிசுத்தவான்களுக்காக வருவார் (Iதெச. 4:16-17); இரண்டாம் வருகையின்போது சகல பரிசுத்தவான்களோடும் வருவார் (வெளி. 19:14; அப். 1:11).

இப்படியிருக்க, உயிர்த்தெழுந்த பரிசுத்தவான்களுடைய மகிமை வேறுபட்டிருக்கும்; ஆம், சில பரிசுத்தவான்கள் மற்றவர்களைவிட அதிகமாகத் தேவனுக்காக வாழ்ந்தவர்கள்; அநேகர் கிறிஸ்துவுக்காகத் தன் ஜீவனையே கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் பெற்றுக்கொண்ட இந்த மகிமை எப்பொழுதும் அவர்களுடனேகூட இருக்கும்; இதுபற்றிப் பவுல் அப்போஸ்தலர் Iகொரிந்தியர் 15:41-43ல் தெளிவாகக் கூறியிருக்கிறார். இங்கு அவர் வெளிப்படையாகச் சிலருடைய மகிமை மற்றவர்களுடைய மகிமையைவிட அதிகமாயிருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கிறார்; இதற்குக் காரணம் அவர்கள் தேவனுக்கு உண்மையாயிருந்தார்கள். இதனையே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து “அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன்; உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி” (மத். 25:23) எனக் கூறியிருக்கிறார்.

07/09/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 7

அப்பொழுது ஒருவன் அவரை நோக்கி: ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ என்று கேட்டான்; அதற்கு அவர்: இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள், அநேகர் உட்பிரவேசிக்க வகைதேடினாலும் அவர்களாலே கூடாமற்போகும் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (லூக். 13:23-24).

“இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்”

கர்த்தராகிய ஆண்டவர் பல்வேறுவிதமான உவமைகளையும் உதாரணங்களையும் எடுத்து, இப்பொழுதுதான் கூறியிருந்தார். இந்த உவமைகள் உதாரணங்கள் எல்லாவற்றிலும் மிகச் சிலரே இரட்சிக்கப்படுவார்களென்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
உண்மையில் லூக்கா 13:23ல் ஒருவன் “ஆண்டவரே, இரட்சிக்கப்படுகிறவர்கள் சிலபேர்தானோ” என்று அவன் கேட்ட மிகமுக்கியமான கேள்வியைப் புறக்கணித்த ஆண்டவர், அந்தக் கேள்வியைச் சாதகமாகப் பயன்படுத்தி, ஊக்கமான ஒரு வேண்டுகோளைத் தன்னைச் சுற்றியிருக்கும் யாவருக்கும் அறிவித்திருந்தார்.

அதென்னவென்றால், “இடுக்கமான வாசல்வழியாய் உட்பிரவேசிக்கப் பிரயாசப்படுங்கள்”; அந்த வாசல்வழியாகவே தேவனுடைய ராஜ்யத்திற்குள் நுழையமுடியும் என்றார்; ஆனால், அந்த வழியைத் தேவன் இடுக்கமாக்கவில்லை; மனுஷனே இடுக்கமாக்கினான்; தேவனுடைய வழியை மனுஷன் பின்பற்றாதபடியினால் அந்த வழி இடுக்கமானது; இதுபற்றி ஆண்டவர் லூக்கா 13:25-28ல் “வீட்டெஜமான் எழுந்து, கதவைப் பூட்டின பின்பு, நீங்கள் வெளியே நின்று ஆண்டவரே, ஆண்டவரே, எங்களுக்குத் திறக்கவேண்டுமென்று சொல்லிக் கதவைத் தட்டும்போது, அவர் பிரதியுத்தரமாக: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன் என்று உங்களுக்குச் சொல்லுவார். அப்பொழுது நீங்கள்: உம்முடைய சமுகத்தில் போஜனபானம்பண்ணினோமே, நீர் எங்கள் வீதிகளில் போதகம்பண்ணினீரே என்று சொல்லுவீர்கள். ஆனாலும் அவர்: நீங்கள் எவ்விடத்தாரோ, உங்களை அறியேன், அக்கிரமக்காரராகிய நீங்களெல்லாரும் என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று சொல்வார் என்று உங் ளுக்குச் சொல்லுகிறேன் . நீங்கள் ஆபிரகாமையும் ஈசாக்கையும் யாக்கோபையும் சகல தீர்க்கதரிசிகளையும் தேவனுடைய ராஜ்யத்திலிருக்கிறவர்களாகவும், உங்களையோ புறம்பே தள்ளப்பட்டவர்களாகவும் காணும்போது உங்களுக்கு அழுகையும் பற்கடிப்பும் அங்கே உண்டாயிருக்கும்” என்று கூறியிருந்தார். கதவு பூட்டப்பட்ட பின்பு ஜனங்கள் தாமதமாய் மனந்திரும்புகிறார்கள், தாமதமாய் விசுவாசிக்கிறார்கள், தங்களுடைய பாவத்துக்குத் தாமதமாய் மனம் வருந்துகிறார்கள், தாமதமாய்த் தேவனிடம் மன்னிப்புக்கோருகிறார்கள், தாமதமாய் ஜெபம்பண்ணுகிறார்கள்; என்ன பிரயோஜனம்? இதே மாதிரி மலைப்பிரசங்கத்தின்போது மத்தேயு 7:22-23லும் சொல்லப்பட்டிருக்கிறது.

தேவனுடைய சிருஷ்டியைப் பொறுத்தளவில், பூமியே அவிசுவாசத்தினால் நிறைந்துபோயிருக்கிறது; அவிசுவாசம் நரகத்தில் இல்லை. லூக்கா 13:24-28ல் சொல்லப்பட்டிருக்கும் வேதவாக்கியங்கள், மரணத்துக்குப் பின்பு இரட்சிப்பு உண்டு, மனந்திரும்புதல் உண்டு என்ற சிந்தனையைத் தவிடுபொடியாக்குகிறது. அநேகர் மதத்தோடு சம்பந்தப்பட்ட கேள்விகளைக்கேட்டு, தாங்கள் மதப்பற்றுள்ளவர்கள் என்று தங்களைப் பெருமைப்படுத்திக்கொள்கிறார்கள்; அவர்கள் கிறிஸ்துவோடு ஏதோ ஒரு தொடர்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் (லூக். 13:26); ஆயினும், அவர்களுக்கும் பரலோகம் பூட்டப்படுகிறது. பரலோகத்தின் கதவு பூட்டப்பட்டால், நரகத்தின் கதவு விரிவாகத் திறக்கப்படுகிறது. அங்கு பற்கடிப்பும் நம்பிக்கையற்ற அழுகையும், தவறுக்காக மனம்வருந்துதலும், மனக்கசப்பும் வேதனையும் உண்டாயிருக்கும்; ஆயினும் எல்லா இடத்திலும் கிறிஸ்துவின் சிலுவையின் உபதேசம் தற்போதைய சிந்தனைக்கு முரணாயிருக்கிறது.

ஒரே ஒரு வழியின்மூலம்தான் இரட்சிப்பைப் பெறமுடியும்; இயேசுகிறிஸ்துவிலும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் விசுவாசத்தை வெளிப்படுத்துவதன்மூலமே அது சாத்தியமாகும் (யோவா. 3:16, 14:6).

லூக்கா 13ம் அதிகாரத்தைப் பார்க்கும்பொழுது, முதலாவதாகக் கலிலேயருடைய இரத்தம் பலிகளோடே சேர்க்கப்பட்டதையும், இரண்டாவதாகச் சீலோவாமிலே கோபுரம் விழுந்து 18 பேரைக் கொன்றதையும், மூன்றாவதாகத் தோட்டத்தில் நாட்டப்பட்ட அத்திமரத்தைப்பற்றிய உவமையையும், நான்காவதாகத் தேவனுடைய ராஜ்யம் கடுகுவிதைக்கு ஒப்பாயிருக்கிறது என்ற உவமையையும், ஐந்தாவதாகத் தேவனுடைய ராஜ்யம் புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது என்ற உவமையையும் நாம் கவனத்திற்கு எடுத்துக்கொள்ளவேண்டும்.

07/09/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 6

இப்படி அவன் பேசுகையில், ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது; அவர்கள் அந்த மேகத்துக்குள் பிரவேசிக்கையில் சீஷர்கள் பயந்தார்கள். அப்பொழுது: இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாயிற்று (லூக். 9:34-35).

“இவர் என்னுடைய நேசகுமாரன், இவருக்குச் செவிகொடுங்கள்”

லூக்கா 9:33 ல் பேதுருவின் பேச்சுக்குப் பதில், இந்த மேகமாகும். இஸ்ரவேலிய புத்திரர்களை வனாந்தரத்தில் வழிகாட்டிய மேகமே (யாத். 40:34-38) அவர்கள்மேல் இப்பொழுது நிழலிட்ட மேகமாகும். பேதுருவினால் ஆலோசனையாகச் சொல்லப்பட்ட கூடாரத்தைவிட இந்த மேகம் வித்தியாசமாயிருந்தது. சீஷர்கள் பயப்பட்டனர்; ஆனால், இயேசு பயப்படவில்லை என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும்.

கிறிஸ்துவின் மறுரூபம் அவருடைய மகிமையைப் பிரகாசித்தது; மகிமை அவர்மேல் அல்ல, அவருக்குள்ளிருந்து அவருடைய வஸ்திரத்தினூடாகப் பிரகாசித்தது. மோசேயும் எலியாவும் அவருக்கு முன்பாகத் தோன்றும்போது, மோசே நியாயப்பிரமாணத்தையும் எலியா கிருபையையும் பிரதிபலித்தார்கள். அவர்கள் இருவரும் இயேசுவுடன் சம்பாஷித்தார்கள் என்பது ஆச்சரியத்தைக் கொடுக்கும் செய்தியல்லவா? மோசே 1500 வருடங்களுக்கு முன்பு இறந்தான்; எலியாவோ மரணத்தைக் காணாமல் பரலோகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டான். இவர்கள் இருவரும் அவர் எருசலேமில் நிறைவேற்றப்போகிற மரணத்தைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தார்கள் எனச் சொல்லப்படுகிறது (லூக். 9:31); ஆம், பரலோகத்தின் பேச்சு அவருடைய மரணத்தைப்பற்றியதாக இருந்தபடியினால், மனுஷகுலத்தின் பேச்சும் அவருடைய மரணத்தைப்பற்றியதாகவே இருக்கவேண்டும். மறுரூபத்தையும் அவர்களுடைய சம்பாஷணைகளையும் அவதானித்த பேதுரு “.....மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்” (மத். 17:4). அவன், தான் பேசுகிறது இன்னதென்று தெரியாமல் பேசினான்; உடனடியாக அவனுக்குக் கிடைத்த பதில், நம்மெல்லோருக்கும் எச்சரிக்கையாக அமைகிறது.

அதெப்படியெனில், நம்மில் தலைசிறந்த பரிசுத்தவான் எவனையும் அவரோடு சமன்படுத்தமுடியாது என்பது தெளிவாகிறது; ஆனால், பூமியில் அவரை மற்ற மனிதர்களுடன் தாராளமாகச் சமன்படுத்துகிறார்கள். இத்தகைய சமன்பாடு அவர்களுடைய இரட்சிப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. அப்படியானால் பரிசுத்த வான்களிடத்தில் செய்யும் ஜெபம், மரியாளுக்குச் செய்யும் ஜெபம் ஆகியவற்றில் ஏதாவது பிரயோசனமுண்டோ என்பதனைக் கத்தோலிக்க நண்பர்கள் தீவிரமாக ஆலோசனை செய்யவேண்டியது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது; பரமபிதாவின் சுருக்கமான கட்டளை “இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்” (மத். 17:5) என்பதேயாகும்; வேறெதற்கும் செவிகொடுப்பவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான்!

05/09/2026

The Crossway Ministries
அநுதினமும் சிலுவையைச் சுமப்போம்

செப்டம்பர் 5

பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால், அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன் (லூக். 9:23).

“சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன்”

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருவன் தன்னைப் பின்பற்றுவதாயிருந்தால், மூன்று நிபந்தனைகளை அவன் கைக்கொள்ளவேண்டும் என்று கட்டளையாகக் கொடுத்திருக்கிறார். இந்தக் கட்டளைகளை ஒருவன் செய்யமுடியாவிட்டால், அவன் தனக்குச் சீஷனாக இருக்கமுடியாது என லூக்கா 14:27ல் வலியுறுத்தியிருப்பதிலிருந்து லூக்கா 9:23இன் முக்கியத்துவம் தெளிவாக்கப்பட்டிருக்கிறது. அவர் கொடுத்த அந்த மூன்று நிபந்தனைகளையும் அதன் தாற்பரியத்தையும் சற்று விபரமாகப் பார்ப்போம்.

முதலாவதாக: ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைப் பின்பற்றுகிறவன் தன்னைத்தான் வெறுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது; பலர் நினைப்பதுபோலத் தன்னைத்தான் வெறுப்பதற்குத் துறவறத்தைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று இங்கு சொல்லப்படவில்லை என்பதனை நாம் தெளிவாக அறிந்திருக்கவேண்டும்; துறவறம் என்பதன் பொருள், சந்தோஷத்தையும் ஆறுதலையும் தரக்கூடிய சகலத்தையும் நிராகரிப்பதாகும். சிலர் தமக்கு சிலவற்றைக் கடுமையாக்குவதன்மூலம் தாம் ஒருவிதப் பரிசுத்தத்தை அடைவதாக நம்புகிறார்கள்; அப்படி எதுவும் சம்பவிப்பதில்லை; ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து ஒருவன் தன்னுடைய சுயபலத்தையும், மாம்சபலத்தையும் நிராகரிப்பதைப்பற்றியே இங்கு குறிப்பிட்டிருக்கிறார்.

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட ஒருவன் மாம்சபலத்தில் தங்கியிருக்கவேண்டியதில்லை; ஏனென்றால், “அவருக்குள் நீங்கள் பரிபூரணமுள்ளவர்களாயிருக்கிறீர்கள்” (கொலோ. 2:10) என்றே சொல்லப்பட்டிருக்கிறது. தேவனுடைய பிள்ளைகளுக்கு மாம்சமே மிகப்பெரிய தடையாயிருக்கிறது; ஆனால், ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவோடு சிலுவையில் அறையப்பட்ட ஒருவன், அவன் கிறிஸ்துவுக்குள் இருப்பதனால், தன்னுடைய மாம்சத்தையும் அதின் ஆசை இச்சைகளையும் சிலுவையில் அறைந்திருக்கிறான் (கலா. 5:24). கிறிஸ்து சிலுவையில் நிறைவேற்றிய பலாபலன்களைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம் செய்யப்பட்டதை விசுவாசிக்கவேண்டியது தவிர்க்கமுடியாததாக இருக்கிறது; ஆனபடியினால்த்தான் விசுவாசத்தின் குறிக்கோள் எப்பொழுதும் கிறிஸ்துவின் சிலுவையில் இருக்கவேண்டும் என்பதனை நாம் அறிந்திருக்கவேண்டும்.

இரண்டாவதாக: “சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு”, என்ற இந்த நிபந்தனை, “தன்னைத்தான் வெறுக்கவேண்டும்” என்ற நிபந்தனை எப்படித் தவறாக அர்த்தங்கொள்ளப்பட்டதோ அப்படியே இதுவும் தவறாக அர்த்தங்கொள்ளப்படுகிறது; பலர் தம்முடைய துன்பத்தைச் சிலுவை பிரதிபலிக்கிறது என்று நினைக்கிறார்கள்; ஆனால், கிறிஸ்துவின் துன்பத்தைப்பற்றியும், அவர் சிலுவையில் மரித்ததனால் ஏற்பட்ட பலாபலன்களைப்பற்றியுமே இங்கு சொல்லப்பட்டிருக்கிறது. அந்தப் பலாபலன்கள் யாவும் மனுஷ வீழ்ச்சியின்போது ஆதாமினால் சாத்தானிடம் கையளிக்கப்பட்டவைகளாகும் (லூக். 4:6); இதனையே நம்முடைய ஆண்டவர் “தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக்கொண்டு” எனச் சொல்லியிருக்கிறார். அநேகர் நினைப்பதற்கு இது எதிர்மாறாயிருக்கிறது. “சிலுவையை எடுத்துக்கொண்டு” என்ற சொற்றொடர், நாம் கர்த்தரிடத்திலிருந்து பெறும் யாவும் சிலுவைமூலமாகவே நமக்குக் கிடைக்கிறது என்பதனைத் தெளிவாக உணர்த்துகிறது.

மூன்றாவதாக: “அநுதினமும்” என்ற சொற்றொடர்மூலம் நம்முடைய விசுவாசம் அநுதினமும் புதுப்பிக்கப்படவேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டிருக்கிறது. பழைய ஏற்பாட்டில் சொல்லப்பட்ட மன்னாவை இங்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். ஒவ்வொரு நாளும் வனாந்தரத்தில் புதிது புதிதாக இஸ்ரவேலியர்களுக்கு மன்னா கொடுக்கப்பட்டது; அந்தந்த நாளுக்குக் கொடுக்கப்பட்ட மன்னாவையே இஸ்ரவேலியர்கள் புசிக்கவேண்டும்; நாளைய மன்னாவுக்குக் கர்த்தரை நம்பியிருக்கவேண்டும். இப்படியிருக்க, நம்முடைய விசுவாசம் அநுதினமும் நினைவு கூரப்பட்டு, புதுப்பிக்கப்படவேண்டிய காரணம் நம்முடைய சத்துருக்களான மாம்சம், உலகம், பிசாசு ஆகியன மறுபடியும் தலைதூக்காதபடிக்குப் பரிசுத்த ஆவியானவர் இவைகளுக்கு எதிராக வல்லமையாகச் செயற்பட்டு, நம்மை வழிநடத்துவதற்கு உதவியாயிருக்கும்.

இப்படியிருக்க, நாம் ஒவ்வொருநாளும் எடுக்கும் சகல தீர்மானங்களும் கிறிஸ்துவை நோக்கியே எடுக்கப்படவேண்டும். இதன் பொருள் இயேசுகிறிஸ்துவையும், அவர் சிலுவையில் நிறைவேற்றியதையும் தொடர்ச்சியாக விசுவாசிக்கவேண்டும்; நம்முடைய ஒருமித்த நோக்கு: எந்தக் காலத்திலும் இயேசுகிறிஸ்துவிலும், விசுவாசத்தின் குறிக்கோள்: அவர் சிலுவையில் நிறைவேற்றியதிலும் நங்கூரமிடப்பட்டிருக்கவேண்டும்.

Address

498E, Thomson Building
Vallioor
627117

Alerts

Be the first to know and let us send you an email when Mahimai TV posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mahimai TV:

Shortcuts

Share

Category