04/07/2026
வாணியம்பாடி பாலாற்றில் கழிவுநீர் கலப்பு. நிலத்தடி நீர் மாசடைந்து விவசாய கிணறுகளில் நுரை. விவசாயிகள் வேதனை.
வாணியம்பாடி, ஜூலை.3- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே சென்னாம்பேட்டை - ஜாப்ராபாத் பகுதிகளை இணைக்கும் பாலாற்றின் தடுப்பணை பகுதியில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
ஜாப்ராபாத் ஊராட்சியில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நேரடியாக பாலாற்றில் கலப்பதுடன், சட்டவிரோத மணல் கொள்ளையால் உருவான ஆழமான பள்ளங்களில் கழிவுநீர் தேங்கி நிற்பதாகவும், அப்பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகரித்துள்ளதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதன் விளைவாக சென்னாம்பேட்டை பகுதியில் உள்ள விவசாய நிலங்களின் கிணறுகளில் தண்ணீர் இறைக்கும் போது நுரை பொங்கி துர்நாற்றம் வீசுவதாகவும், இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே, பாலாற்றில் தேங்கியுள்ள கழிவுநீரை உடனடியாக அகற்றவும், கழிவுநீர் நேரடியாக பாலாற்றில் கலப்பதை தடுக்கவும், குப்பைகளை அகற்றி பாலாற்றை சீரமைக்கவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.