17/10/2025
காலடிக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை தீர்வு
கே எ ஹமீட்
கிராமம் தோறும் மக்களோடு மக்களாக” எனும் தொனிப்பொருளில் மக்கள் காலடிக்கு சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றை தீர்க்கும் செயற்பாட்டின் முதற்கட்டமாக ஆலங்குளம் பிரதேச மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினைகள் தொடர்பான மக்கள் சந்திப்பு நிகழ்வு ஆலங்குளம் ஆயுர்வேத வைத்தியசாலை கூட்ட மண்டபத்தில் (17.10.2025) நடைபெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், அட்டாளைச்சேனை உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நஹீஜா முஸக்கிர், அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம்.றஸ்மி, ஆலங்குளம் மத்திய மருந்தக பொறுப்பதிகாரி வைத்தியர் எஸ்.எம்.முனாஸ், ஆலங்குளம் ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய பொறுப்பதிகாரி வைத்தியர் ஏ.எல்.ஹம்ஸாத், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் கௌரவ உறுப்பினர்களான ஏ.சி.நியாஸ், எஸ்.ஐ.றியாஸ், றகுமானியா வித்தியாலயத்தின் அதிபர் கே.எல்.முனாஸ், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் தொழினுட்ப உத்தியோகத்தர் எம்.ஐ.ஜவாத், றகுமானியா வித்தியாலயத்தின் அபிவிருத்திக் குழுவின் செயலாளர் ஏ.ஏ.பமீல், பாராளுமன்ற உறுப்பினரின் இணைப்பாளர் எம்.ஏ.அன்சார்(Rtd.Pr) மற்றும் ஆலங்குளம் பிரதேச முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
இதன்போது, ஆலங்குளம் றகுமானியா வித்தியாலயத்தின் வளத்தட்டுப்பாடுகள், ஆசிரியர் பற்றாக்குறை, சேதமடைந்துள்ள பாடசாலைக் கட்டிடங்கள், விளையாட்டு மைதான அபிவிருத்தி தொடர்பாகவும் றகுமானியா வித்தியாலய கட்டிடத்தில் தற்காலிகமாக இயங்கி வந்த ஆலங்குளம் ஆயுர்வேத வைத்தியசாலை ஆலங்குளத்தில் சுகாதாரத் திணைக்களத்தால் நிர்மானிக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் இடமாற்றம் செய்தல், ஆலங்குளம் பிரதேசத்தின் வீதிகள், வடிகான்கள், ஆலங்குள பல்தேவை கட்டிடத்தின் தொடர் வேலையை நிறைவு செய்தல், இடைநிறுத்தப்பட்ட அக்கரைப்பற்றிலிருந்து சம்புநகர் ஊடாக ஆலங்குளம் வரை பஸ் போக்குவரத்து சேவை ஆரம்பித்தல் போன்ற விடயங்கள் ஆலங்குள மக்களால் முன்வைக்கப்பட்டன.
இத்தேவைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள், அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் மற்றும் ஏனைய திணைக்கள தலைவர்களும் இணைந்து நிறைவேற்றுவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பையும், திணைக்களங்களின் தலைவர்களும், ஆலங்குளம் றகுமானியா வித்தியாலயம், ஆலங்குளம் ஆயுர்வேத வைத்தியசாலை, ஆலங்குளம் மத்திய மருந்தகம், ஆலங்குள பல்தேவைக் கட்டிடம், ஆலங்குளம் பிரதேசத்தில் அமைக்கப்பட்டு வரும் ஆடைத்தொழிற்சாலை கட்டிடம் என்பவற்றுக்கு விஜயம் மேற்கொண்டனர்.