
09/10/2025
வரலாற்றுச் சிறப்புமிக்க ஐ.நா. சுற்றுலாத் துறைப் பொதுக் கூட்டம், உலக TOURISE உச்சிமாநாட்டையும் நடாத்த தயாராகும் சவூதி!
எழுத்து- காலித் ரிஸ்வான்
வருகின்ற நவம்பர் மாதம் 7ம் திகதி முதல் 11 வரை சவூதி அரேபியா, ஐக்கிய நாடுகள் சபையின் உலக சுற்றுலா அமைப்பின் (UNWTO) பொதுக்குழுக் கூட்டத்தை ரியாத் நகரில் நாடாத்த தயாராகி வருகிறது.
உலக சுற்றுலா அமைப்பு பொன் விழாக்காணும் இவ்வாண்டில் இக்கூட்டம் சவூதி அரேபியாவில் நடாத்தப்படுவதானது ஒரு சிறப்புக்குரிய விடயமாக கருதப்படுகிறது. இந்தப் பொதுக் கூட்டமானது “எதிர்காலத்தை மீண்டும் வரையருக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு மயப்படுத்தப்பட்ட சுற்றுலா” என்ற கருப்பொருள் தாங்கி நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வு, உலக அளவில் சுற்றுலா துறையில் செயற்கை நுண்ணறிவு (AI) எவ்வாறு புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது என்பதைக் கண்டறிந்து, புத்துணர்வு வாய்ந்த சுற்றுலாத் தளங்கள் முதல் நிலைத்திருக்கக்கூடிய பயண அனுபவங்கள் வரை அனைத்து அம்சங்களையும் ஆராயவுள்ளது.
இந்நிகழ்வில் 160க்கும் மேலான நாடுகள் பங்குபற்றவுள்ளதோடு சர்வதேச அமைப்புகள், தொழில்துறை வல்லுனர்கள் மற்றும் துறைசார் நிபுணர்களும் உலகளாவிய சுற்றுலாத் துறையின் அடுத்த கட்டத்தை வடிவமைக்க கைகோர்க்கவுள்ளனர். இந்த கூட்டத்தில் கொள்கைசார் கலந்துரையாடல்கள், செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் புதிய கண்டுபிடிப்புக்கள், மற்றும் சுற்றுலாவை மேலும் இணக்கமானதும் எதிர்காலத்திற்குத் தயாரானதுமானதாக்கும் நோக்கத்துடன் நடக்கும் முக்கிய தீர்மானமிக்க அமர்வுகளும் இடம்பெறவுள்ளன.
சவூதி அரேபியாவின் சுற்றுலாத் துறை அமைச்சர் அஹமத் அல்-கதீப் அவர்கள் இந் நிகழ்வு தொடர்பாக கூறியதாவது: “இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வை உலக நாடுகளுக்காக நடத்துவதில் சவூதி அரேபியா பெருமைப்படுகிறது. இது சுற்றுலாத் துறை தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் ஒத்துழைப்பிற்கான மையமாக சவூதி அரேபியாவின் மீதான சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது,” என்று அவர் குறிப்பிட்டார். மேலும் கூறுகையில்: “நாடுகள் சுற்றுலாத் துறையில் இணைந்து செயல்படும் முறையை மறுபரிசீலனை செய்வதும், வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மைக்கான இயக்க சக்தியாக சுற்றுலாத் துறையின் பங்கினை வலுப்படுத்துவதும் எமது நோக்கமாகவுள்ளது.” எனவும் குறிப்பிட்டார்.
சவூதி அரேபியாவின் விஷன் 2030 திட்டத்தின் முக்கிய தூணாக விளங்கும் அதன் சுற்றுலாத் துறை வளர்ச்சியும் இந்நிகழ்வில் முக்கியமாக பேசப்படும் அம்சமாக இருக்கும். சவூதி மிக வேகமாக உலக சுற்றுலாத் துறையில் ஒரு சக்திவாய்ந்த மையமாக உருவெடுத்துள்ளது, புதுமை மற்றும் முதலீடு இணைந்தால், சுற்றுலாத் துறையை துரித பொருளாதார வளர்ச்சிக்கும் கலாச்சார பரிமாற்றத்திற்கும் ஊக்கமாக மாற்ற முடியும் என்பதை சவூதி அரேபியா எடுத்துக்காட்டுகிறது.
இந்த நிகழ்வு நடைபெறவிருக்கும் வாரம், புதிய ஐ.நா. சுற்றுலாத் துறை பொதுச்செயலாளர் தேர்வு, குழு அமர்வுகள், மேலும் சுற்றுலாத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாட்டை மையப்படுத்திய கருப்பொருள் அமர்வுகள் போன்ற முக்கிய நிகழ்வுகளால் நிரம்பியதாக இருக்கும்.
பொதுக் கூட்டத்தினைத் தொடர்ந்து, நவம்பர் 11 முதல் 13 வரை உலகில் முதல் முறையாக நடைபெறும் TOURISE உச்சிமாநாட்டை சவூதி அரேபியா, ரியாத் நகரில் நடாத்த உள்ளது. இந்தப் புதிய உலகளாவிய மன்றத்தில், அரச அதிகாரிகள், தனியார் துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்கள் ஒரே இடத்தில் இணைத்து, நாளைய சுற்றுலாத் துறையை வடிவமைக்கும் சவால்கள் மற்றும் வாய்ப்புகளைப் பற்றிய கலந்துரையாடல்களை நடாத்தவுள்ளனர்.
நிலைத்தன்மை வாய்ந்த, அனைவரும் பங்குகொள்ளும் வகையிலான, தொழில்நுட்பமயமான சுற்றுலாத் துறையின் எதிர்காலத்திற்கான தெளிவான ஒரு திட்டத்தை உருவாக்குவதே இந்த TOURISE உச்சிமாநாட்டின் நோக்கமாகும். இந்த இலக்கு, தங்களின் சுற்றுலாத் துறையினை மீண்டும் உயிர்ப்பிக்கவும் நவீனமயப்படுத்தவும் முயலும் இலங்கை உள்ளிட்ட பல நாடுகளின் பொதுவான நோக்கமாகவும் உள்ளது.
இந்த இரண்டு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளை தொடர்ச்சியாக நடத்துவதன் மூலம், சவூதி அரேபியா சுற்றலா ஒத்துழைப்பு மற்றும் புத்தாக்கம் ஆகிய துறைகளில் உலகளாவிய முன்னணித் தலைமையாக தன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. இதன் மூலம், அடுத்த 50 ஆண்டுகளுக்கான சுற்றுலாத் துறையின் புதிய யுகத்திற்கான தளத்தை அமைக்கிறது.