Citizen Media Network

Citizen Media Network நம் சமூகத்திற்கான பயணம்
நடுநிலையான பாதை
(1)

உலகில் இடம்பெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் மக்களுக்கு அறியப்ப்டுத்துவதோடு ,மக்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் குழப்பங்களையும் தீர்க்கும்வரைபோராடும் மக்கள் வேந்தன் உங்கள் #சிடிஸின்_ மீடியா

 #புல்வாமாவில் பாதாம் அறுவடை பணிகள் தீவிரம்காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதாம் அறுவடைப் பருவம் தீவிரமடைந்துள்ளது. விவசா...
11/08/2026

#புல்வாமாவில் பாதாம்
அறுவடை பணிகள் தீவிரம்

காஷ்மீரின் புல்வாமா பகுதியில் பாதாம் அறுவடைப் பருவம் தீவிரமடைந்துள்ளது. விவசாயிகள் மரங்களை உலுக்கி பாதாம்களை அறுவடை செய்வதுடன், புதிதாக சேகரிக்கப்பட்ட பாதாம்களை தோட்டங்களிலேயே உலர்த்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

பாதாம் உற்பத்தி இப்பகுதி விவசாயிகளின் முக்கியமான வாழ்வாதார நடவடிக்கைகளில் ஒன்றாக காணப்படுகின்ற நிலையில், அறுவடைப் பருவத்தில் தோட்டங்களில் பணிகள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

📷 The Times of India

 #கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அநீதி: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு- அரச ச...
10/08/2026

#கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் பெண் சுகாதார உதவியாளர்களுக்கு அநீதி: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு- அரச சுற்றுநிருபத்தை மீறி கடமையேற்க விடாமல் தடுத்ததாக சட்டத்தரணிகள் குற்றச்சாட்டு

நூருல் ஹுதா உமர்

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலைக்கு சுகாதார உதவியாளர்களாக புதிதாக உள்வாங்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்கள், தங்களது கடமைகளை பொறுப்பேற்கச் சென்றபோது உரிய சீருடையில் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்வைத்து கடமையேற்க விடாமல் தடுக்கப்பட்டதுடன், வரவு புத்தகத்தில் கையொப்பமிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் சுகாதார உதவியாளர்கள் சார்பில் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ருடானி சாஹீர் ஆகியோரின் பிரசன்னத்துடன் திங்கட்கிழமை (10) இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம், 2026 ஆகஸ்ட் 6ஆம் திகதி கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமைகளை பொறுப்பேற்பதற்காக சமூகமளித்த சுகாதார உதவியாளர்கள், தங்களுக்குரிய சீருடையில் வருகை தரவில்லை என்ற காரணத்தைக் கூறி வைத்தியசாலை நிர்வாகத்தினரால் கடமையேற்க விடாமல் தடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.

அத்துடன், வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் உள்ளிட்ட வைத்திய அதிகாரிகள், மேற்பார்வை அதிகாரிகள் மற்றும் நிர்வாக உத்தியோகத்தர்களால் குறித்த உத்தியோகத்தர்கள் கடமைகளை பொறுப்பேற்பதிலிருந்தும், வரவு புத்தகத்தில் கையொப்பமிடுவதிலிருந்தும் தடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், ஆகஸ்ட் 9 மற்றும் 10ஆம் திகதிகளில் குறித்த பெண் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலை வளாகத்துக்குள் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்காகச் சென்றபோதும், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தனியான அறையில் வைக்கப்பட்டதாகவும், வரவு புத்தகத்தில் கையொப்பமிடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் சட்டத்தரணி குற்றஞ்சாட்டினார்.

இந்த விவகாரம் தீவிரமடைந்த நிலையில், பாதிக்கப்பட்ட சுகாதார உதவியாளர்கள் தங்களை நேரடியாக அணுகி சட்ட உதவியை கோரியதாகவும், அதன் அடிப்படையில் தானும் சிரேஷ்ட சட்டத்தரணி ருடானி சாஹீரும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் டாக்டர் ஸ்ரீசங்கர் மற்றும் வைத்திய அதிகாரி டாக்டர் ரஜீந்தர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரடியாக சந்தித்து நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் எம்.எம்.எம். முஅஸ்ஸம் தெரிவித்தார்.

வைத்தியசாலை மட்டத்தில் உள்ளக பொறிமுறையின் ஊடாக இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்ப்பதற்கான வாய்ப்புகள் தொடர்பிலும் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டதாகவும், எனினும் அவ்வாறான முறையில் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான போதுமான பொறிமுறை இல்லை என்பது கலந்துரையாடலின் பின்னர் தமக்குத் தெளிவானதாகவும் அவர் கூறினார்.

அதிகாரிகள், சுகாதார உதவியாளர்களின் ஆடை தொடர்பில் குறிப்பிட்ட சுற்றுநிருபம் இருப்பதாகவும், அதனை அவர்கள் கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியதாகவும் சட்டத்தரணி தெரிவித்தார்.

எனினும், 2019 ஜூன் 26ஆம் திகதி பொது நிர்வாக அமைச்சினால் வெளியிடப்பட்ட பொது நிர்வாக சுற்றுநிருபம் 13/2019 தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்றதாக அவர் குறிப்பிட்டார்.

குறித்த சுற்றுநிருபத்தின் உப பிரிவு 4இல், மத ரீதியான ஆடை ஒழுங்குகளைப் பின்பற்றும் அரச உத்தியோகத்தர்கள், தங்களது மத அடையாளத்தைப் பேணுவதற்காக மேலதிக ஆடையொன்றைப் பயன்படுத்த முடியும் எனவும், அதேவேளை முகம் முழுமையாகத் தென்படும் வகையில் அவர்களைத் தெளிவாக அடையாளம் காணக்கூடியதாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளதாக சட்டத்தரணி சுட்டிக்காட்டினார்.

இதன்படி, குறித்த பெண் உத்தியோகத்தர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சுகாதார உதவியாளர்களுக்கான சீருடையில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல், அதற்கு மேலதிகமாக தங்களது மத அடையாளத்தைப் பேணுவதற்குத் தேவையான ஆடை ஒழுங்கை மேற்கொள்ள முடியும் எனவும் அவர் விளக்கினார்.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றுநிருபம் நடைமுறையில் இருக்கும்போது, அதனை மீறி சுகாதார உதவியாளர்களை கடமையேற்க விடாமல் தடுப்பது தொடர்பில் தீவிரமான கேள்விகள் எழுவதாகவும் சட்டத்தரணி எம்.எம்.எம். முஅஸ்ஸம் தெரிவித்தார்.

இந்த விவகாரத்தில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர், பிரதி பணிப்பாளர், ஒழுக்காற்றுப் பொறுப்புடைய வைத்திய அதிகாரி டாக்டர் ரஜீந்தர், சுகாதார உதவியாளர்களுக்கான மேற்பார்வை அதிகாரிகள் உள்ளிட்ட நிர்வாகத்தினர் தொடர்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதனையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்கள் சார்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய அலுவலகத்தில் 05 முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைப்பாடு தொடர்பில் எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவித்தல்கள் அனுப்பப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்தனர்.

நாட்டின் சட்டம், நீதி, ஒழுங்கு மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும் நிறுவனங்கள் மீது தங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருப்பதாகத் தெரிவித்த சட்டத்தரணிகள், பாதிக்கப்பட்ட பெண் உத்தியோகத்தர்களுக்கு உரிய நீதி கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டனர்.

“பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கும் வகையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் இந்த விடயத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வீரியத்துடனும் வினைத்திறனுடனும் செயற்படும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது” என அவர்கள் தெரிவித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்கும் வகையில், இவ்விடயம் தொடர்பாக நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் மனுவைத் தாக்கல் செய்வதற்கான முதற்கட்ட ஏற்பாடுகளும் பாதிக்கப்பட்ட தரப்பின் சார்பில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் வைத்தியசாலை நிர்வாகத்தின் பதில் அல்லது விளக்கம் கோர ஊடகவியலாளர்கள் முற்வேளையில் அதற்கான வாய்ப்பை வைத்தியசாலை நிர்வாகம் வழங்க முன்வரவில்லை.

 #திரப்பனே மக்களுக்கு அமெரிக்க குடும்பத்தின் உதவியுடன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்!திரப்பனே பிரதேச மக்களின் நீண்டகால ...
10/08/2026

#திரப்பனே மக்களுக்கு அமெரிக்க
குடும்பத்தின் உதவியுடன் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்!

திரப்பனே பிரதேச மக்களின் நீண்டகால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வாக, அமெரிக்காவில் வசிக்கும் குடும்பமொன்றின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

நேற்று (09) திரப்பனே பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வில், இராணுவத் தளபதி மேஜர் ஜெனரல் நிலந்த பிரேமரத்ன தலைமையில் இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் திறந்து வைக்கப்பட்டது.

மறைந்த வைத்தியர் கென்னத் கிம் அவர்களின் நினைவாக, அவரது மனைவியான அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியர் சஞ்சீவனி குணசிங்க கிம் உள்ளிட்ட குடும்பத்தினரின் நிதிப் பங்களிப்புடன் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்காக சுமார் ரூ. 26.5 இலட்சம் (ரூ.2,649,087.79) நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், இலங்கை இராணுவ வீரர்களின் தொழிலாளர் பங்களிப்புடன் திட்டம் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் திரப்பனே சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 1,300 குடும்பங்களுக்கும், 4,000 இற்கும் மேற்பட்ட மக்களுக்கும் சுத்தமான குடிநீரை வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வில் கருத்து தெரிவித்த வைத்தியர் சஞ்சீவனி குணசிங்க கிம், தனது கணவர் இலங்கையை மிகவும் நேசித்ததாகவும், இந்தத் திட்டத்தின் மூலம் குழந்தைகளுக்கான சிறந்த எதிர்காலத்தை உருவாக்க உதவ முடிவது மகிழ்ச்சியளிப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், “சுத்தமான நீர் தங்கத்தைவிடவும் பெறுமதியானது” என அவர் குறிப்பிட்டதுடன், திட்டத்தை ஒருங்கிணைத்த இராணுவத் தளபதி உள்ளிட்ட அனைவருக்கும் தனது நன்றியையும் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மகா சங்கத்தினர், அநுராதபுர மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, திரப்பனே பிரதேச செயலாளர் கே.பி.கே.எல்.பி. மதுவந்தி உள்ளிட்ட அரச அதிகாரிகள், இராணுவ அதிகாரிகள் மற்றும் பிரதேச மக்கள் கலந்துகொண்டனர்.

 #சேதமடைந்த பங்கதெனிய – ஆனமடுவ வீதியின் பள்ளம பகுதி திருத்தபணிகள் ஆரம்பம்- ரூ. 150 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீட...
10/08/2026

#சேதமடைந்த பங்கதெனிய – ஆனமடுவ
வீதியின் பள்ளம பகுதி திருத்த
பணிகள் ஆரம்பம்
- ரூ. 150 மில்லியனுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு

டிட்வா அனர்த்த நிலைமை காரணமாக சேதமடைந்து முற்றாக உடைந்துபோன பங்கதெனிய – ஆனமடுவ வீதியின் பகுதிகளைச் சீரமைக்கும் திட்டத்தின் கீழ், பள்ளம பிரதேசத்தில் வீதியைத் திருத்தும் பணிகள் இன்று (10) முற்பகல் ஆரம்பிக்கப்பட்டன.

வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான இத்திட்டத்திற்காக ரூ. 150 மில்லியனுக்கும் அதிகமான தொகை ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அனர்த்த நிலைமையால் வீதிக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்குப் பாதுகாப்பான மற்றும் இலகுவான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதே இதன் நோக்கமாகும்.

புத்தளம் மாவட்ட அபிவிருத்திக் குழுக் தலைவரும், பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சருமான பேராசிரியர் சந்தன அபயரத்ன தலைமையில் இத்திருத்தப் பணிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கயான் ஜனக்க உள்ளிட்ட பிரதேச மக்கள் பிரதிநிதிகள், பள்ளம பிரதேச செயலாளர் மற்றும் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பங்கதெனிய – ஆனமடுவ வீதியானது பிரதேச மக்களின் தினசரி போக்குவரத்துக்கும், அப்பகுதியின் பொருளாதார மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கும் மிக முக்கியமானதொரு வீதியாகும்.

இதனால், அனர்த்தனால் சேதமடைந்த பகுதிகளை உடனடியாகத் திருத்துவதன் ஊடாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்துச் சிரமங்களைக் குறைக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.

 #சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட  மூவர் இலங்கைக்குசிவப்பு எச்சரிக்கை (Red Notice) ...
10/08/2026

#சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டிருந்த
பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட
மூவர் இலங்கைக்கு

சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உள்ளிட்ட மூவர் மலேசியாவில் இருந்து இன்று (10) மாலை விமானம் மூலம் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று, மலேசிய பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்புடன் மேற்கொண்ட நடவடிக்கையின் போது பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபர் 41 வயதுடைய ரத்மலானை பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் பேராதனை மற்றும் திஸ்ஸமஹாராம பகுதிகளிலும் தற்காலிகமாக வசித்து வந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

2014ஆம் ஆண்டு பேராதனை பொலிஸ் பிரிவில் துப்பாக்கியை காட்டி ஒருவரை கடத்திச் சென்று தாக்கி படுகாயம் ஏற்படுத்தியமை மற்றும் 2016ஆம் ஆண்டு அதே பொலிஸ் பிரிவில் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பான இரண்டு வழக்குகளில் குறித்த சந்தேகநபர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வழக்குகளுக்காக நீதிமன்றத்தில் முன்னிலையாகாத காரணத்தால் அவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 2003ஆம் ஆண்டு கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற பணக் கொள்ளை சம்பவம் தொடர்பிலும், 2007ஆம் ஆண்டு கைக்குண்டு ஒன்றை வைத்திருந்தமை தொடர்பிலும் அவர் முன்னதாக கைது செய்யப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரதான சந்தேகநபர் மலேசியாவில் கைது செய்யப்பட்டபோது அவருடன் இருந்த 35 வயதுடைய ரத்மலானை பகுதியைச் சேர்ந்த ஒருவரும், 31 வயதுடைய கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், அவர்களிடம் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனை மற்றும் நேரடி கண்காணிப்பின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மருதமுனையின்பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக இளைஞர்களுடன்  கலந்துரையாடியது சமூக நீதிக் கட்சி.(மருதமுனை செய்தியாளர் றாசிக்  ந...
10/08/2026

மருதமுனையின்
பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக இளைஞர்களுடன் கலந்துரையாடியது
சமூக நீதிக் கட்சி.

(மருதமுனை செய்தியாளர் றாசிக் நபாயிஸ்)

அரசியலுக்கு அப்பால் சமூக நலன் கருதி மருதமுனையில் காணப்படும் பொதுப் பிரச்சினைகள் தொடர்பாக சமூக நீதிக் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும்
மருதமுனை இளைஞர்கள் சிலருடன்
கலந்துரையாடல் ஒன்றை சமூக நீதிக் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் நேற்று (09) மருதமுனை கிறீன் லீப் ரெஸ்ருரண்டில் மேற்கொண்டார்கள்.

இக்கலந்துரையாடலை தலைமை தாங்கி நடத்தினார்
சமூக நீதிக் கட்சியின் தலைவரும் தெஹிவளை மாநகர சபையின் உறுப்பினருமான
அர்கம் முனீர் அவர்கள் இதன் போது அவர் தனது உரையில்
சமூக நீதிக் கட்சி இளைஞர்களுக்கான கட்சியல்ல சகலரையும் பிரதிநிதிப்படுத்தும் ஒரு கட்சியாகும்.

மக்களிடம் காணப்படும் பிரச்சினைகள் பேசு பொருளாக இருக்காமல் அதனை அரசியல் மயப்படுத்தி தீர்வுகாண வேண்டும். இதற்கு எங்களது கட்சியின் உதவியும் ஒத்தாசையும் என்றும் இருக்கும். அந்த வகையில் மருதமுனைக் கிராமத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும் குறிப்பாக கடலரிப்பு மற்றும் மேட்டுவட்டைப் பிரச்சினைகள் கவனத்தில் கொள்ளப்பட்டு தீர்வுகள் காணப்பட வேண்டும். இதற்காக அனுபவசாலிகளை இணைத்து பயணிப்பதன் ஊடாக எமக்கு ஏற்படும் எல்லா விதமான பிரச்சினைகளையும் சுமூகமாக தீர்க்க முடியும்.

அதனைத் தொடர்ந்து பொது பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடல்கள் செய்யப்பட்டதுடன் வரும் காலங்களில் சமூக நீதிக் கட்சியுடன் இணைந்து பயணிக்க தாங்கள் ரெடியாக இருப்பதாக கலந்து கொண்ட இளைஞர்கள் சிலர் கருத்து தெரிவித்தார்கள்.

இக்கலந்துரையாடலில்
சமூக நீதிக் கட்சியின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ரஷாத் அஹமட், பொருளாளர் சட்டத்தரணி இல்ஹாம் ஹசனலி, தேசிய ஒருங்கிணைப்பாளர் இர்பான் பன்னா, டிஜிட்டல் ஊடக செயலாளர் ஸப்ரீன் அஹமட், உறுப்பினர் சஜித் போன்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

 #வடக்கு,கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை!மேலதிக விபரங்களுக்கு ⬇️https://www.citizen...
10/08/2026

#வடக்கு,கிழக்கு மாகாண ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்கு முன்னுரிமை!

மேலதிக விபரங்களுக்கு ⬇️
https://www.citizenmedia.lk/2026/08/blog-post_10.html

“ #முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை கூடியதுபோதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து ச...
10/08/2026

“ #முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை கூடியது

போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து சபையின் கவனம்

போதைப்பொருள் அச்சுறுத்தல் தற்போது வெறும் தனிப்பட்ட தொடர்புகளுக்கு அப்பால் சென்று, பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பு முழுவதையும் கடுமையான அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அத்துடன் நின்றுவிடாமல் அந்த நிலைமை அதிகரித்து வருகின்றமை குறித்து கவனம் செலுத்தி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்கு மரண தண்டனை வழங்குவது குறித்து“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டுச் சபையில் கவனம் செலுத்தப்பட்டது.

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபை இன்று (10) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் கூடியபோதே இது குறித்துக் கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்படும் எல்லையற்ற செல்வத்துடன் தொடர்புடைய குற்றவியல் சூழலானது தற்போது பொருளாதாரத்திற்கும், சுற்றுலாத்துறைக்கும், சமூக ஒழுக்க நெறிக் கட்டமைப்புக்கும் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாகவும், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் குற்றங்கள் தொடர்பில் அஞ்சும் சமூகத்தை உருவாக்குவதற்காக, கடுமையான விதிகளைச் செயற்படுத்த வேண்டிய அவசியமும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையில் கலந்துரையாடப்பட்டது.

முழு சமூக கட்டமைப்பையும் வீழ்ச்சியடையச் செய்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரைப் பலிகொண்டிருக்கும் போதைப்பொருள் பேரழிவை முற்றாக ஒழிப்பதற்காக நாட்டில் நடைமுறைச் செயற்பாடும், வேகமான கருத்தியல் மாற்றமும் ஏற்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக மதத் தலைவர்கள், பெற்றோர்கள் மற்றும் சமூக அமைப்புகளின் தீவிர பங்களிப்பை அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்த தேசியப் பேரழிவின் ஆழத்தை உணர்ந்து, நிறுவன கட்டமைப்பினுள் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றம் குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

போதைப்பொருள் கட்டுப்பாடு மற்றும் பிணை வழங்கும் முறைமை தொடர்பான சட்டத் திருத்தங்கள் ஏற்கனவே வரைவின் இறுதிக் கட்டத்தில் இருப்பதாகவும், அது விரைவாக வர்த்தமானியில் வெளியிடப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

போதைப்பொருள் வழக்குகள் தாமதமாவதற்குக் காரணமான அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகளை வழங்கும் செயற்பாடுகளை குறிப்பிடத்தக்க அளவில் விரைவுபடுத்தி உள்ளதாகவும், கடந்த ஜூலை மாதத்தில் மாத்திரம் 6,414 அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

அரச பகுப்பாய்வாளர் அறிக்கைகள் தாமதமானதன் காரணமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நபர்களுக்குரிய சட்ட நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவதற்காக, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவுகளுக்கேற்ப (5 கிராமுக்குக் குறைவு, 10 கிராமுக்குக் குறைவு போன்றவாறு) குறிப்பிட்ட தரவு வகைப்படுத்தலைச் சமர்ப்பிக்குமாறும், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலை ஆகியவற்றுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி, அறிக்கைகள் கிடைத்தவுடன் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு முறையான செயற்பாடு ஒன்றைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் திறனை மேம்படுத்துவதற்கும் அதன் வசதிகளை விரிவுபடுத்துவதற்கும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி இதன்போது கேட்டறிந்ததுடன், ஊழியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக கடற்படையின் உதவி பெறப்படுகின்றது என்றும் குறிப்பிடப்பட்டது. பாதுகாப்புக் கேமரா தொகுதியைப் பொருத்துவதற்குத் தேவையான நிதியை ஒதுக்கீடு செய்யுமாறும் ஜனாதிபதி இதன்போது பணிப்புரை விடுத்தார்.

சிறைச்சாலைகளில் தற்பொழுது உள்ள நிலைமை குறித்து இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டதுடன், நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேனை, குருவிட்ட ஆகிய சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் ஏற்பட்ட அமைதியின்மையால் ஏற்பட்ட சொத்து சேதம் 255 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் என தெரியவந்துள்ளது.

சிறைக்கைதிகள் வன்முறையாக நடந்து கொள்வதைக் குறைப்பதற்காக, அதிகளவில் மனநல மருத்துவர்களின் சேவையைப் பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

மேலும், 2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வுச் சட்டத்தின் திருத்த வரைபை விரைவாக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும், சட்டவரைவுத் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களைத் தவிர்ப்பதற்காக ஓய்வுபெற்ற அனுபவமிக்க அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் இணைத்து செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

பாடசாலைக் கட்டமைப்பில் போதைப்பொருள் பரவலைத் தடுப்பதற்காக, கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளால் கூட்டாகச் செயல்படுத்தப்படும் 'மிதுரு பாடசாலை' வேலைத்திட்டத்தின் முன்னேற்றமும் இங்கு மீளாய்வு செய்யப்பட்டதுடன். மாணவர்களின் ஆளுமை வளர்ச்சி தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், போதைப்பொருள் பயன்படுத்தும் பிள்ளைகளைக் கண்டறிதல் மற்றும் அவர்களுக்கு வழிகாட்டுவதில் ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆலோசகர்களுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டது.

அதிக போதைப்பொருள் அபாயம் மற்றும் அதிக மக்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, சிறப்புத் திட்டங்களைச் செயல்படுத்துமாறு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.

மேலும், சர்வதேசப் பாடசாலைகளில் கல்வி கற்கும் பிள்ளைகளிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது என்பதும் இங்கு தெரியவந்ததுடன், தேசிய செயற்பாடு சபை இது குறித்து விசேட கவனம் செலுத்தியது.

பிள்ளை போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதா என்பதைப் பெற்றோர்கள் தனிப்பட்ட முறையில் பரிசோதித்துக் கொள்ளும் வகையில் போதைப்பொருள் பரிசோதனைக் கருவிகளை மருந்தகங்கள் மூலம் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது என்றும், பெற்றோர்கள் தமது பிள்ளைகள் குறித்து கவனத்துடன் இருப்பதன் முக்கியத்துவமும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

இணையம் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக போதைப்பொருட்களை ஊக்குவிக்கும் குழுக்கள் குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், போதைப்பொருளுக்கு எதிரான கருத்துக்களைச் சமூகமயமாக்குவதற்குச் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சு, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை, புனர்வாழ்வுப் பணியகம், இலங்கை பொலிஸ், முப்படையினர், சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம், சிறைச்சாலைகள் திணைக்களம், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, சமூக சேவைகள் திணைக்களம் மற்றும் “சமூக சக்தி” வேலைத்திட்டம் ஆகியவை இணைந்து போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், ஆரம்ப கட்டத்திலேயே இனங்காணுதல், புனர்வாழ்வளித்தல், சட்டத் திருத்தம் மற்றும் நிறுவன மாற்றங்களை மேற்கொள்ளுதல், மீண்டும் போதைப்பொருளுக்கு அடிமையாவதைத் தடுத்தல், தொடர் கண்காணிப்பு, திட்டமிடல் ஒழுங்குபடுத்தல், மீளாய்வு செய்தல் மற்றும் அறிக்கையிடல் ஆகிய திருத்தப்பட்ட 06 வழிமுறைகளின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பல்தரப்பு தேசிய மூலோபாயத் திட்டத்தின்படி, நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்களின் முன்னேற்றமும் இதன்போது மீளாய்வு செய்யப்பட்டது.

அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க வண. நாரம்பனாவே ஆனந்த தேரர், ராமஞ்ஞ மகா நிகாயவின் அனுநாயக்க வண. வலேபொட குணசிறி தேரர், வண. குப்பியாவத்தே போதானந்த தேரர் ஆகியோர் உட்பட மகா சங்கத்தினர், அருட்தந்தை ஜூட் பெர்னார்ட், ஸ்ரீ வேலு சுரேஷ் சர்மா குருக்கள், முத்துசாமி அழகேசன் குருக்கள், ஷேக் முகமது அர்கம் நூராமித் மௌலவி உள்ளிட்ட மதத் தலைவர்கள், பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் செயலாளர் ஆயேஷா ஜினசேன உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய மற்றும் பாதுகாப்புப் பிரிவு சிரேஷ்ட அதிகாரிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 #இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகி நிந்தவூருக்கு பெருமை சேர்த்த முகைதீன்பாவா முகம்மது சைபுல்லாஹ்..நிந்தவூர் – 04ம் பிரிவ...
10/08/2026

#இலங்கை நிர்வாக சேவைக்கு தெரிவாகி நிந்தவூருக்கு பெருமை சேர்த்த முகைதீன்பாவா முகம்மது சைபுல்லாஹ்..

நிந்தவூர் – 04ம் பிரிவைச் சேர்ந்த முகைதீன்பாவா முகம்மது சைபுல்லாஹ் அவர்கள் இலங்கை நிர்வாக சேவைக்கு (SLAS) தெரிவு செய்யப்பட்டு, தற்போது லாகுகல பிரதேச செயலகத்தில் உதவி பிரதேச செயலாளராக தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

2026.08.07 அன்று நடைபெற்ற கடமையேற்பு நிகழ்வில், லாகுகல பிரதேச செயலாளர் மற்றும் அக்கரைப்பற்று உதவி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

சைபுல்லாஹ் அவர்கள் இதற்கு முன்னர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சுகாதார முகாமைத்துவ சேவை உத்தியோகத்தராக பணியாற்றியுள்ளார். 2006ஆம் ஆண்டு அம்பாறை பொது வைத்தியசாலையில் தனது அரச சேவையை ஆரம்பித்த இவர், பின்னர் கல்முனை, கம்பளை மற்றும் அக்கரைப்பற்று வைத்தியசாலைகளிலும் பணியாற்றியுள்ளார்.

தனது ஆரம்பக் கல்வியை நிந்தவூர் அல்-மதீனா வித்தியாலயத்திலும், இடைநிலைக் கல்வியை நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலையிலும், உயர்கல்வியை கல்முனை சாஹிரா கல்லூரி மற்றும் கம்பளை சாஹிரா கல்லூரியிலும் பெற்றுள்ளார்.

சிறுபராயம் முதலே சமூகத்தில் உயர்ந்த பொறுப்புகளை வகிக்க வேண்டும் என்ற கனவைக் கொண்டிருந்த சைபுல்லாஹ் அவர்கள், சமூக நலனுக்காகப் பணியாற்றுவதுடன், நெறிமுறையும் பொறுப்புணர்வும் கொண்ட சிறந்த தலைமுறையை உருவாக்குவதும் தனது நோக்கமாகக் கொண்டுள்ளார்.

சைபுல்லாஹ் அவர்கள் நிந்தவூர் – 04ம் பிரிவைச் சேர்ந்த M.Y. முகைதீன்பாவா மற்றும் M.L. குழந்தையும்மா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வராவார்.

மேலும், இவர் நிந்தவூரின் மற்றுமொரு இலங்கை நிர்வாக சேவை அதிகாரியான M.B.M. சுபியான் அவர்களின் உடன்பிறந்த சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத் துறையில் தனது அரச சேவையை ஆரம்பித்து, தற்போது இலங்கை நிர்வாக சேவையின் ஊடாக நிர்வாகப் பொறுப்பை ஏற்றுள்ள சைபுல்லாஹ் அவர்களின் இந்த முன்னேற்றம் நிந்தவூர் மக்களுக்கு பெருமைக்குரிய விடயமாகும்.

“ #பனை வாழ்வின் விருட்சம் - நாட்டின் சுபீட்சம்“ வவுனியா தேசிய கண்காட்சி! “பனை வாழ்வின் விருட்சம் - நாட்டின் சுபீட்சம்“ எ...
10/08/2026

“ #பனை வாழ்வின் விருட்சம் - நாட்டின் சுபீட்சம்“ வவுனியா தேசிய கண்காட்சி!

“பனை வாழ்வின் விருட்சம் - நாட்டின் சுபீட்சம்“ எனும் தொனிப்பொருளில் வவுனியா மாநகரசபை மண்டபத்தில் ஏற்பாடு செய்துள்ள தேசிய கண்காட்சியின் இரண்டாம் நாளான நேற்று முன்தினம் (08) பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் கலந்து கொண்டார்.

இக்கண்காட்சியில் பல்வேறு பனைசார் உற்பத்திபொருள்களின் காட்சிப்படுத்தல் மற்றும் விற்பனைகளும் இடம்பெறுவதுடன் பனை வளம் தொடர்பான ஆராய்ச்சி செயற்றிட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Address

106 APC Road Ninthavur 6
Ampara

Alerts

Be the first to know and let us send you an email when Citizen Media Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Citizen Media Network:

Shortcuts

Share